Search This Blog

5.11.08

கீதையைப்பற்றி ரஜினிகாந்த் கருத்து மிகச் சரியானதே!






முட்டாள்களின் உளறல் என்று கீதையைப்பற்றி அறிஞர் அம்பேத்கர் விமர்சனம் செய்ததுண்டு. கீதையின் வருணாசிரம தர்மத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நூல் வெளியிட வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார் தந்தை பெரியார். அதனை நிறைவேற்றிய பெருமை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு உண்டு.

அந்தக் கீதையிலே ஒரு வாசகம்: கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்பதாகும்.

பழுத்த ஆன்மிகவாதியான நடிகர் ரஜினிகாந்த் இதுபற்றி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்:

கீதையின் இந்தக் கூற்று தவறு. மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கே அது பொருந்தும் என்பது நீண்ட யோசனைக்குப் பிறகே எனக்குப் புரிந்தது.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்! என்பதை வெளிநாடுகளில் பின்பற்றுகின்றனர். அதனால் எனது இரசிகர்கள் கடமையைச் செய்து, அதன் பலனை அடையவேண்டும் (தினமலர், 4.11.2008, பக்கம் 2) என்று கூறியிருக்கிறார்.

இந்து மதத்தின் பெயரில் கடை விரித்திருக்கும் சில அநாமதேயங்கள் இதுபற்றி எச்சரித்துள்ளன. ரஜினிகாந்த் வீட்டுமுன் மறியல் செய்வார்களாம்.

எது எதற்கெல்லாமோ கருத்துரிமை பேசும் பார்ப்பனக் கூட்டம், ரஜினி சொன்ன இந்தக் கருத்தினை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பேர்வழிகளைக் கண்டிக்குமா? என்று தெரியவில்லை.

கடமையைச் செய் - பலனை எதிர்பாராதே! என்பது மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கே அது பொருந்தும் - என்று ரஜினிகாந்த் சொல்லியிருப்பது மிகவும் சரியான தெளிவான கருத்தே!

சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம்

குணகர்ம விபாசக:

தஸ்ய கர்த்தாரமபி மாம்

வித்தய் கர்த்தார மவ்யயம்

(கீதை அத்தியாம் 4: சுலோகம் 13).


நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதரும உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது என்று கிருஷ்ணன் கூறியுள்ளதாக கீதை கூறுகிறது.

இந்த நான்கு வருண படைப்பில் பிராமணன் என்று கூறப்படும் பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன். இந்த உலகம் பிராமணர் களுக்காகவே பிரம்மாவால் படைக்கப்பட்டது.

சூத்திரன் யார் என்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய் பவன். வைதிகமாக இருந்தாலும், லவுகிகமாக இருந்தாலும், மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் என்கிறது மனுதர்மம் (அத்தியாம் 9: சுலோகம் 311)

பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை யடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டனை உண்டு என்று அதே மனுதர்மம் கூறுகிறது (அத்தியாயம் 8: சுலோகம் 379).

இதற்கு எல்லாம் மூலம் கிருஷ்ணனால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் கீதையாகும்.

சூத்திரனுக்குக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார் (மனுதர்மம் அத்தியாயம் 6: சுலோகம் 413).

இந்த இடத்தில்தான், ரஜினிகாந்த் கூறிய கருத்தினை உரைத்துப் பார்க்கவேண்டும். வருணாசிரம அமைப்பில் பார்ப்பானுக்கு உயர் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சூத்திரர்களை கூலி கொடுத்தோ, கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம்.

அந்தச் சூத்திரன் வருணாசிரம தர்மப்படி கடமையைச் செய்யவேண்டும் - பலனை எதிர்பார்க்கக் கூடாது! கூலியும் கேட்கக் கூடாது. ஏனெனில், கூலி கொடுத்தோ கொடுக்காமலோ தான் சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாமே!

இதைத்தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்காக கீதையின் வாசகம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

உழைக்கவேண்டும், ஊதியம் கேட்கக்கூடாது; பாடுபடவேண்டும், அதற்குரிய பலனை எதிர்பார்க்கக் கூடாது! அப்படி கேட்டால், அது பகவானின் கட்டளைக்கும், ஏற்பாட்டுக்கும் எதிரானது.

நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து ஆழமானது. எதிர்ப்பைக் கண்டு அவர் பின்வாங்கிடக் கூடாது; உண்மையின் பக்கம் அவர் நிற்க நாமும் துணை நிற்போம்!

---------------- நன்றி : 5-12-2008 "விடுதலை" தலையங்கம்

0 comments: