Search This Blog

9.11.08

ஆரியத்துக்கு எதிர்ச் சொல் திராவிடம்


இலட்சியம் வளர்ந்த வரலாறு



உரிமை முழக்கத்தில் உயிர் துறந்த வீரன்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு, திராவிடர் என்ற உரிமை முழக்கம் கிளம்பிற்று. ஆனால், அந்த முழுக்கம் மாளிகைவாசிகளின் தொடர்பினால் கெட்டுவிட்டது. இந்த நாடு திராவிட நாடு - இங்குள்ள நாம் திராவிடர் - என்ற முழக்கத்தை மக்கள் மன்றத்திலே தமது கடைசி மூச்சு இருக்கும் வரை செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவர் துவக்கிய அந்த அரிய இயக்கத்தினால் உண்டான வேகத்தை, உண்மையான விடுதலைக்குப் பயன் படுத்திக் கொள்ளாமல், அரண்மனைகளிலே வீற்றுக் கொண்டு அரசியலை நடத்தி வந்த சீமான்கள், பட்டம் பதவிகளுக்கு இந்த வேகத்தைப் பயன்படுத்திக் கொண்டதுடன், தங்களுடைய முழுத் திறமையும், காங்கிரசைக் குறை கூறவும், அதே நேரத்தில் பிரிட்டிஷாருக்குத் துதி பாடவுமே உபயோகப்பட வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.

எனவே, திராவிடர் என்ற உரிமைச் சொல், திராவிட அரசு அமைக்கும் பரணியாகாமல், சர்க்கார் காரியாலயக் கதவைத் தட்டும் சுயநலச் சத்தமாகி விட்டது. டாக்டர் நடேச முதலியார், உள்ளம் உடைந்தே மாண்டார்; இருந்த வரையில் அவர் திராவிடன் என்று பேசத் தவறியதில்லை.

ஆரியத்தை அகற்ற ஆர்வம் காட்டாத தலைவர்கள் அந்த நாட்களில், ஆங்கிலத்திலே, s.i.l.f. என்றும், ஜஸ்டிஸ் என்றும் மாளிகைகளில் வழங்கி வந்ததேயொழிய, மக்களின் முன்பு, திராவிடன் என்ற பெயரே வழங்கப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையின் பெயரே திராவிடன். திராவிடக் கலை, திராவிட மதம், திராவிட வைத்தியம், திராவிட இசைவாணர்கள் - என்றெல்லாம், அந்த நாளில், பலர், பல்வேறு துறைகளிலே, திராவிட மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிய முனைந்தனர். ஆனால் அந்த அடிப்படை வேலையில் ஆர்வம் காட்டத் தலைவர்கள் தவறி விட்டனர். அவர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் அரசியல் அதிகாரம் எனும் மாயமானைப் பிடிக்கவே செலவிட்டனர். அதனால், அவர்கள், ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச் சந்தித்தபோது, தேர்தலைப் பற்றிப் பேச வந்தனரே தவிர, உத்தியோகத் துறையிலே, அய்யர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனரே யொழிய சமுதாயத்திலே படிந்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட உணர்ச்சியை ஊட்ட, பணி புரியவில்லை.

அந்த நாள் தலைவர்கள் மக்களுக்குப் புதிராயினர்

சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்ப்பனர்களாலேயே நமக்கு ஆபத்து என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர்கள் பேசி வந்தனர். தலைவர்களின் பேச்சு அவ்விதம் இருந்தது. டாக்டர் நடேச முதலியார் போன்ற ஓரிருவர் தவிர; அதேபோது, மக்களில் பழகி, பிரச்சாரம் புரிந்து வந்த ஜே.என். ராமநாதன், கண்ணப்பர், டி.வி. சுப்பிரமணியன் போன்றவர்கள், திராவிடன் என்ற உணர்ச்சியை ஊட்டியும் அரசியலிலே மட்டுமல்லாமல், சமுதாயத் துறையிலே பார்ப்பனர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை விளக்கிக் கண்டித்தும் வந்தனர்.

தலைவர்களோ, மக்களை பார்ப்பனருக்கு எதிராக ஓட் கொடுக்கும் அளவுக்குத்தான் உபயோகித்தனர். எனவே, மக்களுக்கு அந்தத் தலைவர்களின் போக்கு முதலில் புரியவில்லை. புரிந்த பிறகு பிடிக்கவில்லை; பிடிக்காததால் விலகினர். திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் போனதால் அல்ல; நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால், ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில் -மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக, சதியா லோசனைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்தர தாரிகளாயினர்! பதவி தேடுவோர், அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம். மக்கள் இந்தக் காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு கட்சியைக் கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச் செயல்கள், கட்டுக் கடங்கா நிலை பெற்று, ஒரு தலைவர் இன் னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழி லாகக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே, ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று; மடியவில்லை. அந்த உணர்ச்சி என்றுமே மடிந் தது இல்லை - அடிக்கடி மங்கி இருக்கிறது - ஏனெனில், அந்த உணர்ச்சி உள்ளத்தின் பேச்சு - அரசியல் வெட்டுக் கிளிகள் கூச்சல் அல்ல.

ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்

இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம் என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறுசிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு. இவைகளால் என்ற போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக் கூடியதாக இருந்த காரணத்தால், மூல முயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறி விட்டன. முரண் பாடுகளும் தெரியலாயின. விரோத உணர்ச்சியும் கூட வளர்ந்தது. தமிழகத்திலே, பல முகாம்கள் தோன்றலாயின! மூல முயற்சியை மறந்து விட்டனர்.

மடிந்த உணர்ச்சி கண்டு மாற்றார் மனமகிழ்ந்தனர்

கண்ணைக் கட்டி விடப்பட்ட வீரன், சாலையிலே நடந்து செல்கையில், மரத்துக்கு மரம் மோதிக் கொண்டு சங்கடப்படுவதைப் போல, நாடு இருந்தது. மீண்டும் ஒரு முறை திராவிட இன உணர்ச்சி தோன்றுமா என்பதே சந்தேகமாகி விட்டது. அந்த உணர்ச்சி அடியோடு மடிந்து விட்டது என்று மாற்றார்கள் மகிழவும் செய்தனர். ஆனால் இலட்சியம் மடியவில்லை - சமயத்துக் காகக் காத்துக் கொண்டு இருந்தது. பலப்பல சமயங்கள் வந்தன - ஆனால் சரியான சமயங்களாக வில்லை.

தாழ்ந்த தமிழகம் தன்னார்வம் கொண்டது

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க சமயமாயிற்று. நாடு எங்கும், காங்கிரஸ் மீது கோபம் மட்டுமல்ல. அதன் அளவு குறைவு தான் - தமிழ்ப் பற்று, பரவிய காலம். எங்கும் சங்க நூற்களைப் படிக்க ஆரம்பித்த காலம். தமிழானுக்கு தனியாக ஓர் மொழி உண்டு; தனியான பண்பு உண்டு என்ற பெருமையைப் பேசலாயினர்; அய்ம்பெருங் காப்பியத்தைப் பற்றிய பேச்சு பொது மேடைக்கு வந்துவிட்டது! ஆர்வம், தமிழ் மீது அதிகமானதும், இடையே, புராணீகர்களும் புகுந்து கொண் டனர். ஆனால் அவர்கள் ஆதிக்கம் வளர முடியாதபடி, தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் தமிழ் மொழி தாழ்வுற்ற காரணம் என்ன, தமிழ்ப் பண்பு மறையக் காரணம், தமிழகச் சிறப்பு தேய்ந்த காரணம் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி, அவர்களை விட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்த்தது - அதாவது டாக்டர் நடேச முதலியாரின் கல்லறைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திற்று. பழைய நினைவுகள், பழைய பரணிகள் மீண்டும் உலவலாயின!

வாடிய தமிழ்ப் பயிர் செழிக்க வாய்க்கால் வெட்டிய வீரர்கள்

தமிழ்மொழியைக் காப்பாற்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்ற காட்சி, தமிழரின் உள்ளத்திலே, ஒரு புது உணர்ச்சியை உண்டாக்கி விட்டது. தாளமுத்து நடராஜன் கல்லறை மீது தமிழர் கண்ணீர் சிந்தினர். இரு வாலிபர்களுக்குச் சாவு, பல வாலிபர்களுக்குச் சிறை, எல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்பின் பொருட்டு என்பதை அந்தக் கல்லறையின் பக்கம் நின்று சிந்தித்த போதுதான், இந்நிலை மாறவேண்டும் என்ற உறுதி தமிழருக்குப் பிறந்தது. அப்போதுதான் தமிழ் மொழிக்குப் பிற மொழியால் ஆபத்து என்று அலறுகிறாயே தோழனே! ஏன் வந்தது அந்த ஆபத்து, யாரால் வந்தது என்பதை எண்ணிப் பார். மொழிக்கு மட்டும்தானா, கலைக்கு, நெறிக்கு, பண்புக்கு, இனத்துக்கு, நாட்டுக்கு, உன் வாழ்வுக்கு ஆபத்து வந்திருக்கிறதே! அதைத் தெரிந்து கொண்டாயா? எவரால் வந்தது இந்த ஆபத்து என்று அறிவாயா? ஏன் வந்தது என்பதை யோசிப்பாயா? நான் கூறுகிறேன் கேள். தமிழ்நாடு தமிழனிடம் இல்லை! ஆகவேதான் தமிழனுடைய பொருள் தமிழனிடம் இல்லை. பிற நாட்டான் எண்ணுகிற எண்ணமெல்லாம் இங்கு இப்போது சட்டமாகி விடுகிறது. பிறநாட்டானின் பொருளுக்கு இது மார்க்கட்டாகிறது. இந்நிலை மாற வேண்டும். மொழிப் போராட்டம் மட்டும் போதாது - இது முடிவல்ல; தொடக்கம். இந்தியை விரட்டினால் மட்டும் போதாது; தமிழ் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் தீய சக்திகள் யாவும் தொலைய வேண்டும் - அதுவே நமது முழக்கமாக வேண்டும் - இனி அதுவே நமது போர் - நமது இலட்சியம் - தமிழ்நாடு தமிழருக்கே! என்று பெரியார் இராமசாமி முழக்கம் இட்டார். ஆம்! ஆம்! அறிந்தோம்! தெளிந்தோம்! என்று அன்று கடற்கரையிலே கூடிய இலட்சத்தை எட்டிப் பார்த்து பெருந்தொகையினரான மக்கள் முழக்க மிட்டனர் - உறுதி கொண் டனர். மக்களின் மனக் குமுறலைக் காட்டுவது போல கடலலை ஒலித்தது. மேலே நிலவு, தமிழரின் விழிப்பற்ற நிலையை விளக்குவது போல! வானத்திலே இங்குமங்கும் மேகங்கள், தமிழ்ச் சமுதாயத்திலே உள்ள கரைகள் போல! தமிழன் மீண்டும் தன் இலட்சியத்தைப் பெற்றுவிட்டான். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டான். மங்கியிருந்த இலட்சியம் மீண்டும் உலவலாயிற்று! போய்ச் சேர்ந்தது! ஆகவே அந்த இலட்சியத்துக்கு, புதிய தோர் சக்தி ஏற்பட்டுவிட்டது. மக்களுக்கு, தாங்கள் ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றப் போகி றோம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மாளிகைக்கு அல்ல. பதவிக்கு அல்ல; நம் நாட்டின் தனி உரிமைக்குப் போராடப் போகிறோம் என்று எண்ணலாயினர்! அந்த எண்ணம் புரட்சிக் கவிஞரின் பொன்மொழிகளினால், மேலும் உரம் பெற்றது.

ஆடுவமே பள்ளுப் பாடுவமே


தமிழ் ஆட்சியின் மாட்சியிலே கூடுவமே! என்றார் கவிஞர்! ஆயிரமாயிரம் இளை ஞர்களின் விழிகளிலே களிப்புக் கூத்தாடலா யிற்று. தேர்தல், சட்டசபை, மந்திரி சபை முதலியன, அவர்களின் பார்வைக்கு மிக மிகச் சாமான்ய பொருள்களாயின. அந்தப் பொருள் களுக்காக ஆவல் கொண்டிருப்பவர்கள், இளைஞர்களின் கண்களிலே, சேலத்தில் கேலிச் சித்திரங்களாகத் தெரியலாயினர். தடைகளை, சங்கடங்களை மீறி, புதிய பாதை கிடைத்து விட்டது என்ற பூரிப்புடன் தமிழன், தன் மொழி, கலை, இவைகளைக் காப்பாற்ற நாட்டை மீட்டாகவேண்டும் என்பதைக் கண்டறிந்து, கூறிய போர் முழக்கம், தமிழ்நாடு தமிழருக்கே என்பது! ஏளனம் பேசியோர் எரிமலை கண்டனர்

எலிவளை எலிகளுக்கே என்றனர். ஏளனம் பேசியே, எதையும் ஒழித்துவிட முடியும் என்று எண்ணிய அறிவாளிகள்! மக்களோ தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உச்சரிக்கலாயினர். உண்மை தானே, நியாயம்தானே, அவசியம் தானே என்று கூறிக் கொண்டனர்; கூறிக் கொண்டே மேலும் யோசிக்கலாயினர் - இன்று எப்படி இருக்கிறது தமிழ் நாடு என்று. சர்வம் ஆரிய மயமாக இருக்கக் கண்டனர். - எப்போது இருந்து இந்நிலை என்று ஆராயத் தொடங்கினர் - தமிழன் ஆரியத்துக்கு இடங் கொடுத்த நாள் தொட்டு இந்நிலை என்பதறிந் தனர் - அதற்கு முன்பு எந்நிலை என்று ஆராய்ந்தனர் - முப்புறம் கடலும் வடபுறம் விந்தியமும் அரணளிக்க, அழகுத் திராவிடம், ஆற்றலுடன் விளங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். திராவிடத்தின் ஒரு பகுதி ஆந்திரராகி, பிறிதோர் பகுதி கேரளராகிவிட்டதைக் கண்டனர் - பிரிந்தாலும், இவைகளுக்கிடையே மொழி வழியே ஒருமைப்பாடு இருத்தலைக் கண்டனர் - பண்டைத் திராவிடத்தை நினைவிற் கொண்டனர் - ஆரியத்துக்கு எதிர்ச் சொல் லாக - ஆரியர் என்ற கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறான கலாசாரத்தை உணர்த்தும் குறியாக - திராவிடம் என்ற சொல் இருக்கக் கண்டனர். சரிதமும், பூகோளமும், மக்கள் உளப்பண்பு நூலும் இந்த உண்மைக்கு ஆக்கம் அளித்திடக் கண்டனர்! ஓஹோஹோ கண் டோம் உண்மையை என்றனர். திராவிட நாடு திராவிடருக்கே என்றனர். இலட்சியம் முழு உருவம் பெற்றது! இன்று அந்த இலட்சியத்தை ஆதரிக்க திராவிட நாடு திராவிடருக்கே என்று கூற மட்டும் கூச்சப்பட்டுக் கொண்டு மாகாண சுதந்திரம், மாகாண சுயாட்சி என்று சில பலர் கூறுவர். சிலர், முழு உரிமை நமக்கு; ஆனால் அகில இந்தியத் தொடர்பு வேண்டுமன்றோ என்பர். அவர்களின் வார்த்தையிலே உள்ள வளைவு நெளிவுகள் அல்ல, முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை - அவர்கள் இலட்சியத்தை நோக்கி நடந்து வருகிறார்கள் என்பதே
முக்கியம்.


----------------------- அறிஞர் அண்ணா


---------------நன்றி: "விடுதலை" 9-11-2008

0 comments: