Search This Blog

9.11.08

ஓ! திராவிடர்களே! கண் விழியுங்கள்! சீக்கிரம் எழுந்திருங்கள்!

தென்னிந்தியாவில் வாழும் திராவிட நன்மக்களே! இனிக்கணமேனும் நீங்கள் உறங்காது இப்போதே எழுந்திருக்க வேண்டும். எழுந்திருந்து நீங்கள் ஏற்றவற்றைச் செய்ய வேண்டும்! திராவிடர்கள் மிகுந்த தென்னிந்தியத் திருநாடு, பிராமணரல்லாத வர்களாகிய நம்மனோர் வாழும் பெரியதொரு நன்னாடு! அத்தகைய தேசம் பிராமணர்கள் அதிகாரத்திற்குட்பட்டுப் பெரிதும் வருந்துகின்றதே! இத்தனை நாளும் பிராமணர்கள் இஷ்டப்படியெல்லாம் ஆடினோம்! மறை மறை என்று வேதத்தை மறைத்து வைத்தார்கள். கண்ணைக் கட்டினார்கள், கபோதிகளாக்கினார்கள்! இனியேனும் நாம் கவனத்தோடிருந்து, நம் முன்னேற்றத்தை நாடிச் செல்வோமாக!

தென்னிந்திய ஜனசங்கம் ஸ்தாபிக்கப்பட்டு இன்னும் சரியாய் ஒரு வருடமாகவில்லை. ஜஸ்டிஸ், திராவிடன், ஆந்திரப் பிரகாசிகை என்கிற பத்திரிகைகள் ஆரம்பமாகியிப்போது சில மாதங்களே யாகின்றன. இதற்குள்ளாக அவை இயற்றிய காரியங்கள் மிகப் பெரியன வென்றே சொல்லலாம். ஜன சமூக எண்ணிக்கையின் பிரகாரம் சட்டசபை முதலியவற்றின் பிரதி நிதித்துவம், உத்தியோக நிலைகள் கொடுத்தல் முடியாதென்று பிடித்த பிடிவாதமாய்க் கூறிக் கொண்டிருந்த பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும் இப்போது தம் அபிப்பிராயத்தை மாற்றிவிட நேர்ந்தது நம் இயக்கத்தினாலேயே என்பது நன் கேற்பட்டு விட்டது.

இது வரைக்கும் நம் சங்கத்தார் எடுத்துக் கொண்ட ஊக்கத்திற்கும் பிரயாசைக்கும் இஃதொன்றே போதிய சாட்சியாகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், புது பிராமணரல்லாதார் கூட்டமொன்று சேர்ந்து வருவதற்குத் தகுமான காரணம் புலனாகவில்லை. இப்புதிய பிராமணரல்லாதார் கூட்டமாகிற பொம்மையாட்டத்திற்குக் கம்பிகட்டியிழுப்பவர்கள் பிராமணரேயாவர். நமது ஜஸ்டிஸ் பத்திரிகையிற் பதிப்பித்த சில விஷயங்களினாலே இது வெள்ளிடை மலைபோல் விளங்கிவிட்டது. பிராமணரல்லாத பெருங்கூட்டத்தினரே, தென்னிந்திய நாட்டுத் திராவிட நன்மக்களே, உங்கள் முன் னேற்றத்தையும் உங்கள் பின்னபிவிர்த்தியையும் எதிர்க்கட்சி யாரிடம் கொடுத்துவிட்டு ஏக்கப்பட்டு, நில்லாதீர்கள். இதனால் நாம் பிராமணரிடம் பகைமை பாராட்டுவதாய்க் கொள்ளுதலாகாது. எல்லோரும் நம் சகோதரர்களே, பிராமணரும் நம் சகோதரர்களே. ஆனால் ஜாதி வித்தியாசங்களினடியாகப் பிறந்த பேத புத்தியே காரணமாக, பிராமணர்கள் நமது முன்னேற்றத்துக்கு இடையூறாய் நின்றிருந்தமையே பிராமணர்க்கும் பிராமணரல்லாதார்க்கும் நடுவில் பெருவாய்க்கால் உண்டாக்கி விட்டது. இனி, ஜாதி வித்தியாசங்கள் அறவேயொழிந்து ஏகபாவம் உண்டாகிற வரைக்கும் பிராமணரல்லாதார் தம் அபிவிருத்தியை நாடித் தாமே உழைக்க வேண்டும்.

இது நிற்க. இப்போது பிராமணர்கள் இயைந்து வந்து விட்டதாய்க் காட்டுவதனாலேயே நமது ஊக்கத்தையும் முயற்சியையும் தளரவிடுதல் கூடாது. முன்னிற்காட்டினும் இப்போது நாம் கச்சையிறுகக்கட்டி இளைத்துப் போகாது இயங்குதல் வேண்டும். நாம் கேட்பவற்றைக் கொடுப்பதற்கு இப்போது பிராமணர்கள் இயைந்து வருகின்றார்களென்பதனாலேயே இனி எப்போதும் அப்படியேயிருப்பார்களென்று எண்ணுவதற்கு என்ன நியாயமிருக்கின்றது? இதுவரைக்கும் நடந்து வந்த சரித்திர ஆராய்ச்சி, அவ்வாறு அவர்கள் நடப்பார்களென்று நினைக்க அணுவளவும் நமக்கு இடங்கொடுக்கவில்லை. ஜாதி பேதங்களை அகற்ற வேண்டுமென்று அட்வோகேட் ஜெனரல் மிஸ்டர் ஸ்ரீநிவாச அய்யங்கார் முதலிய சில பிராமண கனவான்கள் நினைப்பதுபோலேயே எல்லாப் பிராமணர்களும் எண்ணியும் பேசியும் நடந்தும் வருகிற வரைக்கும். பிராமணரல்லாதார் இயக்கம் பேரவசியமாகின்றது.

ஆதலின் பிராமணரல்லாதவர்களே, நீங்கள் அனைவரும் ஒத்த மனத்தினராயிருந்து, ஒரே உறுதியினராய் நின்று, எடுத்த காரியத்தை முடிக்க முயலுங்கள். பிராமணரால் தூண்டப்பட்ட பிராமணரல்லாதார் கூட்டம் ஏமாந்தவர்கள் கூட்டம் என்று இதயத்தில் நீங்கள் கருதுங்கள். அந்தக் கூட்டத்திற் சேர அணுவளவும் நீங்கள் சம்மதியாதீர்கள். பிராமணரல்லாதவர் களுக்குள் சென்னையில் பிரமுகர்களும், பொது நலம் நாடுப வர்களும் திவான் பகதூர் ராஜரத்தின முதலியார், ஸி.அய்.ஈ., ராவ் பகதூர் தியாகராய செட்டியார், டாக்டர் நாயர், மிஸ்டர், ராமராய நிங்கார், எம்.ஏ. முதலானவர்களைக் காட்டிலும் வேறு யாவரிருக்கின்றார்கள்? இவர்களுக்கெல்லாம் யாவர் அதிகாரம் கொடுத்ததென்று கேட்டால், இத்தனை நாள் மஹாஜன சபைக்கு யாவர் அதிகாரம் கொடுத்தனர், இரண்டொரு பிராமணர்களுக்கு யாவர் அதிகாரம் கொடுத்தனர், காங்கிரஸ் தலைவர்களுக்குத் தான் யாவர் அதிகாரம் கொடுத்தனர் என்று நாம் கேட்போம். நாட்டுப்புறத்துச் சனங்களெல்லோரும் கூட்டமாய்க் கூடித் தான் இவர்களுக்கெல்லாம் அதிகாரம் எடுத்துக் கொடுத்தனர் போலும்!


பிராமணரல்லாதர்களே, நீங்கள் பெரிதும் கவனிக்க வேண்டியது பிறிதொன்றுமிருக்கின்றது. பிராமணரல்லாதவர்கள் முன்னுக்கு வருதலை விட்டுப் பிராமணரை ஏன் குறை கூற வேண்டும்? பிராமணரல்லாதார் படிப்பதைப் பிராமணர்கள் கூடாதென்று தடுக்கின்றார்களா? என்பவை போன்ற எண்ணங் கொண்டு நீங்கள் ஏக்கமுற்று நில்லாதீர்கள். முன்னேற்றமடை வதற்கு வழியிலுள்ள முள்ளையும் முருடையும் கல்லையும் காட்டையும் நீக்கிக் கொண்டே முன்நோக்கிச் செல்ல வேண்டியிருத்தல் பற்றி, சுய பாதுகாப்பிற்காகச் சிலவற்றைக் கூற நேருவது அவசியமாயிருத்தலால், அதனைக் கொண்டே பிறரைக் குறை கூறுகிறோமென்று கூறுதல் அணுவளவும் பொருந்தாது. மேலும் பிராமணரல்லாதவர்களுக்குள் காணப்படும் பெரு வகுப்பு களையும் சிறு வகுப்புகளையும் நாம் முன்னரொழித்தாலன்றோ, பிராமணர்களும் பேதமொழிக்க முற்படுவார்கள் என்று கூறுதலும் சரியாகாது. பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் பரஸ்பரம் உண்டாயிருக்கும் பேத புத்திகளையும் அதனால் பிராமணரல்லாதாருக்கு ஏற்படும் குறைபாடுகளையும் போலப் பிராமணரல்லாதாருடைய சிறுவகுப்புகளில் மாச்சரிய மேற்படாதிருப்பது எல்லோர்க்கும் நன்கு தெரிந்த விஷயமாயிருக் கின்றது. அதனால் முதலிலே பிராமணரே வித்தியாசங்களை யொழிக்க முற்படுவது வெகு அவசியமாகின்றது.

ஆதலின் திராவிடர்களே, பிராமணரல்லாதவர்களே, நீங்கள் இச்சமயம் சரியான பிராமணரல்லாதார் கூட்டத்திற் சேர்ந்து ஒரே கூட்டாயிருந்து செய்ய வேண்டியவற்றைச் செய்து தீருங்கள்! ஒரு சிறிதும் நீங்கள் உளஞ்சலிக்காதீர்கள்! ஓ! திராவிடர்களே, சகோதரர்களே, கண் விழியுங்கள், சீக்கிரம் எழுந்திருங்கள்! உறங்காது நீங்கள் உடனே எழுந்திருந்து, ஊக்கத்துடனே நின்று ஏக்கம் போக்க முயலுங்கள்!

--------------- "திராவிடன்" தலையங்கம் 1.10.1917

0 comments: