Search This Blog

9.11.08

நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான்



நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான். இஸ்ரோ அனுப்பிய `சந்திரயான்' விண்கலம் நிலவை நெருங்கிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டது. உபயம்: நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

சரி! இந்த சந்திரயான் சாதனைத் திட்டத்துக்கும், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியிலுள்ள கோதவாடி என்ற குக்கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா? ஏன் இல்லை? `சந்திரயான்' என்ற சாதனைத் திட்டத்தைச் சாத்தியமாக்கி இருக்கும் இஸ்ரோவின் திட்ட இயக்குனர் அண்ணாதுரையின் சொந்த கிராமம் இந்த கோதவாடிதான். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் `அ, ஆ,' வை ஆரம்பித்த அண்ணாதுரைதான், இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகி அனைவரையும் `ஆ'வென வாய்பிளக்க வைத்திருக்கிறார்.

அண்ணாதுரை தற்போது மனைவி, மகனுடன் பெங்களூர்வாசி ஆகிவிட்டாலும், அவரது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் கோவையில்தான் வசித்து வருகிறார்கள். கடந்த வாரம் கோதவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் அண்ணாதுரையின் பெற்றோருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அடுத்ததாக அண்ணாதுரை கோவை வரும்போது அவருக்கு அமர்க்களமான வரவேற்பளிக்க, கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளும் ஜரூராகத் தயாராகி வருகின்றன. ஆனால் அண்ணாதுரை அவருக்கு இருக்கும் அலுவல் நெருக்கடியில் கோவை வர வேண்டுமே? இந்தநிலையில் கோவை, பீளமேடு ராதாகிருஷ்ணா மில் காலனியில் ஒரு சாதாரண வீட்டில் வசிக்கும் அண்ணாதுரையின் பெற்றோர் மயில்சாமி, பாலசரஸ்வதி தம்பதி, அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம் ஆகியோரை நாம் அணுகினோம். நம்முடன் மிக இயல்பாக உரையாடினார் மயில்சாமி.

``கோதவாடிதான் என் சொந்த ஊர். எனக்கு மூன்று மகன்கள். இரண்டு மகள்கள். அண்ணாதுரைதான் மூத்தவன். என் அப்பாவுக்கு நெசவுத் தொழில். குடும்பத்தில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நான், கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனேன். 1957_ல், அதுவும் ஓராசிரியர் பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் எனக்கு என்ன பிரமாதமான சம்பளம் இருக்கும்? இருந்தும் ஐந்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழிலும் செய்து வந்தேன்.

அண்ணாதுரை அப்போதே படிப்பில் சூரப்புலி. எட்டாவது படிக்கும்போதே அரசு உதவித் தொகை பெற ஆரம்பித்த அவன், இன்ஜினீயரிங் படிப்பு வரை தொடர்ந்தான். கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.யும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.இ.யும் (அப்ைளடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) படித்து முடித்தான். அவன் படிப்பை முடித்த உடனேயே புதுச்சேரியிலுள்ள `ஆரோலெக்' என்ற பிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை பார்ப்பதா? என்ற எண்ணத்தில் அந்த வேலையை அவன் உதறித் தள்ளி விட்டான். அடுத்த மூன்று மாதத்தில் இஸ்ரோவில் அவனுக்கு வேலை கிடைத்தது. அங்கே ஓயாத ஆராய்ச்சிகள் மற்றும் `சந்திரயான் திட்டம் மூலம் இன்று உலகமே அவனைப் பற்றிப் பேசுகிறது. தூரத்து நிலவை இந்தியா தொடப்போவது பெருமைதானே?'' என்றார் மயில்சாமி.

அடுத்துப் பேசினார் அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம். கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வரான இவர், தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி, தமிழக முதல்வரின் கையால் பாராட்டுப் பெற்றவர். அண்ணனைப் பற்றி ரொம்பவே சிலாகித்தார் அவர்.

``அண்ணன் படிப்பில் கெட்டிக்காரர் மட்டுமல்ல, அபார ஞாபகசக்திக்காரர். எட்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் பாடப்புத்தகத்தை ஒரே ஒரு முறை மட்டும் படித்து தேர்வில் கலக்கி முதல் மாணவனாக வந்துவிடுவார். எம்.ஏ., எம்.எஸ்.சி. படிப்பவர்களுடன் விவாதித்து கேள்விமேல் கேள்வி கேட்பார். கணிதமேதை ராமானுஜத்தின் நிரூபணமாகாத தேற்றங்களை (தியரிகளை) நிரூபிக்க முயல்வார்'' என்றவர், தனது அண்ணனைப் பற்றி இன்னும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

``இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியிருந்தாலும், அவை நிலவின் நடுப்பகுதியை மட்டும்தான் ஆய்வு செய்திருக்கின்றன. ஆனால், இந்தியா அனுப்பியிருக்கும் சந்திரயான் விண்கலம் சந்திரனின் துருவப்பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் அண்ணன் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகைகளில் எல்லாம் அண்ணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தார்கள். கத்தார் போன்ற அரபுநாடுகளில் கட்டட வேலை செய்யப் போகும் இந்தியத் தொழிலாளர்களை இளப்பமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அங்கிருந்து வெளிவரும் `கத்தார்' என்ற பத்திரிகை, `இந்தியாவில், சந்திரயான் விண்கலத்தை ஏவிய அண்ணாதுரை போன்ற நல்ல அறிவுத்திறமையுள்ள மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்மிடம் அறிவு இல்லை. எனவே இனியாவது இங்கே வேலை செய்யும் சாதாரண இந்தியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என எழுதியிருக்கிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள், இப்போது அமெரிக்காவின் `நாஸா' விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாஸா அமைப்பு அண்ணனுக்கு எத்தனையோ முறை அழைப்பு அனுப்பியும் அவர் போக மறுத்துவிட்டார். அதுபோல `தமிழில் படித்தால் விஞ்ஞான அறிவு வளராது' என்ற கருத்துக்கு அண்ணன் எதிரானவர். தமிழ்வழியில் படித்த அவர்தான் இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகவும், விஞ்ஞானியாகவும் இருக்கிறார்'' என்று சொல்லிக் கொண்டே போனவரை நாம் இடைமறித்து, ``கடைசியாக அவர் இங்கே எப்போது வந்து சென்றார்?'' என்ற கேள்வியைக் கிளப்பினோம்.

``அண்ணன் கோவை வந்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எங்கள் தங்கை மகளின் திருமணத்துக்குக் கூட அவரால் வரமுடியவில்லை. சீமந்தத்திற்காவது வருவாரா என்பதும் தெரியவில்லை. `3.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு சந்திரயானைச் செலுத்தி, அதை நிலவுக்கு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அது சாத்தியமான பின் வருகிறேன்' என்று அண்ணன் சொல்லிவிட்டார். அவரது வருகையை எதிர்பார்த்து இப்போது வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார் மோகனசுந்தரம்.

``சந்திரன் என்றால் நிலா. யான் என்றால் ஊர்தி. வாஜ்பாயும், அப்துல்கலாமும் அண்ணாதுரையிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இந்த `சந்திரயான்' என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தியாவின் நிலாப் பயணத் திட்டத்துக்குப் பெயரானதாம்.

நாம் விஞ்ஞானி அண்ணாதுரையுடன் தொலைபேசியில் பேசினோம். ``சந்திரயான் 1 விண்கலத்தை 100 கி.மீ. வட்டப்பாதையில் நிறுத்திய பின் அது இரண்டாண்டுகாலம் நிலாவை ஆராய்ந்து அங்கு கதிரியக்கம் உண்டா? நீர்நிலைகள், தனிமங்கள் உண்டா? நிலாவின் பருவநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து, தகவல் அனுப்பும். அதன்பின் ஏவப்பட இருக்கும் சந்திரயான் 2, நிலாவில் எங்கே இறங்குவது என ஆராய்ந்து அங்கே ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவி சந்திரயான் 1 செய்த ஆய்வுகள் சரிதானா என ஆராயும். அதன்பின் சந்திரயான் 3! அது நிலாவிலிருந்து எதையெல்லாம் எடுத்து வரமுடியும்? அங்கிருந்து வேறு கோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா? என ஆய்வு செய்யும். சந்திரயான் 4, நிலாவிலேயே காலனி அமைக்க முடியுமா? என ஆராயும்'' என்றார் அவர் அடக்கமாக.

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தைப் பற்றித்தான் அவரது நினைவு முழுக்க இருந்த நிலையில், அவரது கோவை வருகை, பாராட்டு, பரிசளிப்பு பற்றியெல்லாம் கடைசி வரை நமக்குக் கேட்கத் தோன்றவில்லை.

-------------நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்" -13-11-2008

0 comments: