Search This Blog

9.11.08

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலின் அநாகரிகம்

ரவுடிகள்!

பண்பாட்டின் பொக்கிஷமாகவும், தார்மீகத்தின் தத்துப் புத்திரர்களாகவும், பாரத மாதாவின் பத்திரமாற்றுத் தங்கப் புதல்வர்களாகவும் தங்களைத் தாங்களே புகழ்ந்து சுமக்கும் பா.ஜ.க., - அதன் பரிவாரங்கள் - அந்த வருணனைக்கு நேர் எதிரான குணக்கேடர்கள் - அழுக்கு மனம் படைத்த அநாகரிகப் பேர் வழிகள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.
டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு சீ இப்படியும் படித்த மாணவர்களா? என்று கூனிக் குறுகச் செய்து விட்டது.

இஸ்லாமியர்மீது அப்படி ஒரு இட்லர் பாணி வெறுப்பு நஞ்சை ஊட்டி வளர்த்து வைத்துள்ளனர். டில்லியில் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட நிகழ்வில் ஜாகிர் உசேன் கல்லூரிப் பேராசிரியர் கிலானி என்பவர் தொடர்புப் படுத்தப்பட்டார்; விசாரணையில் அவருக்கு அந்தத் தாக்குதலில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அதோடு அந்தப் பிரச்சினைக்கு முடிவு வந்திருக்க வேண்டும் அல்லவா? டில்லி பல்கலைக் கழகத்திற்குப் பேராசிரியர் கிலானி கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க கடந்த வியாழனன்று வந்தார் (6.11.2008).

பாரதிய ஜனதாவின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. (அகில பாரத் வித்யார்த்தி பரிஷத்) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பேராசிரியரைத் தாக்கியுள்ளனர்; பேராசிரியர் முகத்தில் எச்சிலைத் துப்பியிருக்கின்றனர்.

எத்தகைய அநாகரிகக் கும்பல் அந்த அமைப்பு என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டா தேவை?

எச்சில் துப்பிய மாணவரின் பெயர் வினய்குமார் - கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவராம்.
கேவலமான ஓர் செயலில் ஈடுபட்ட இந்தப் பதர் பெரிய வீரர் போல இந்து ஏட்டுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். இந்து ஏடும் தரமில்லாமல் அதனை வெளியிடவும் செய்துள்ளது.
பேராசிரியரின் முகத்தில் எச்சில் துப்புவது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டது என்றும், இது ஒரு புதுமையான எதிர்ப்பு என்றும் தெரிவித்துள்ளாரே பார்க்கலாம்.

மாணவர்கள்தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், அதன் தலைமை அமைப்பான பா.ஜ.க.வின் பேச்சாளர் பிரதாப் மோடி என்பவர், சுதந்திரத் தாகமுள்ள ஒரு மாணவனின் இத்தகு செயல்பாட்டை ஒதுக்கி விட முடியாது என்று வக்காலத்து வாங்கியுள்ளார்.

வாத்தியார் ஓடிக் கொண்டே ஒன்னுக்கு இருந்தால் மாணவன் எப்படி, எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்று நாட்டில் வழமையான பழமொழி உண்டு. அது வேறு எங்கும் பொருந்துமோ, பொருந்தாதோ, பா.ஜ.க.வுக்கு இந்த இடத்தில் இலக்கணச் சுத்தமாக! பொருந்தவே செய்கிறது.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலின் இத்தகைய அநாகரிக நடவடிக்கை கண்டு நாணித் தலைக்குனிய வேண்டும். மாணவர்களை ரவுடிகளாக வளர்த்து வருவது தான் பா.ஜ.க.வின் யோக்கியதை போலும்!

---------- மயிலாடன் அவர்கள் 9-11-2008 "விடுத்லை" யில் எழுதிய கட்டுரை

0 comments: