Search This Blog

16.7.15

காமராசர் பிறந்த நாள் சிந்தனை-காமராசர் இன்றைய தேவை!

காமராசர் இன்றைய தேவை!


இன்று காமராசர் அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்த நாள். ஒருவரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது என்பது வெறும் சம்பிரதாய முறையில் அமைந்தால் அதில் ஏதும் முக்கியத்துவம் இருக்க முடியாது; அப்படிப் பார்க்கப் போனால் நாள் ஒன்றுக்கு எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள்; எத்தனையோ உயிர்களும் பிறக்கின்றன.

தந்தை பெரியார், பச்சைத் தமிழர் காமராசர் போன்ற வர்களின் பிறந்த நாள் என்பது அவர்களைப் புகழ்ந்து சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அல்ல.
இந்தத் தலைவர்களின் சாதனைகள் என்ன? இன்றைய கால கட்டத்தில் அவர்கள் எந்த வகையில் தேவைப்படுகிறார்கள் என்பதைச் சிந்திக்கவும், நாட்டு மக்கள் மத்தியிலே அவற்றை எடுத்துக் கூறி விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு குறியீட்டு நாளாகத் தான் தலைவர்களின் பிறந்த நாளை அல்லது மறைந்த நாளைக் கருத வேண்டும்.
காமராசர் என்றால் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்பதல்ல - இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுத்த தந்தை பெரியார் அவர்களுக்குத் தோன்றாத் துணையாக நின்றவர்.
1952இல் ராஜாஜி அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு - மீதிப் பள்ளிகளில் அரை நேரம் படித்தால் போதும்; மற்ற அரை நேரத்தில் பிள்ளைகள் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்றும்; அப்படி அந்தப் பிள்ளைகள் தொழிலைச் செய் கிறார்களா என்பதைக் கண்காணிப்பதுதான் பிற்பகலில் ஆசிரியர்களின் பணி என்றும் தன்னிச்சையாக ஆணை பிறப்பித்த போது, கடும் புயலாக தந்தை பெரியார் அவர்கள் பொங்கி எழுந்தநிலையில், தமிழகமே அவர் தலைமையின்கீழ் அணி வகுத்து நின்றதால், ராஜாஜி அவர்கள் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் டாக்டர் பி. வரதராசலு நாயுடு ஆகியோரின் அழுத்தமான வேண்டுகோள் களால் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தோடு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ரத்து செய்து, ஆச்சாரியார் மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, மேலும் 12,000 பள்ளிகளைத் திறந்து கல்விக் கண்ணைத் திறந்த வள்ளலுக்குப் பெயர்தான் காமராசர்.
அதனாலன்றோ கல்விக் கூடங்களில் கடவுள் வாழ்த்துப் பாடக் கூடாது - காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார். நல்ல பெயர் வைக்க வேண்டுமா - காமராசர் என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டினார் - அதற்குள் புதைந்திருக்கும் இனநலம் எத்தகையது என்பது ஆழ்ந்து நோக்கு வோர்க்கு அப்பட்டமாகவே விளங்கும்.

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கார்ட்டூன் போட்டது கல்கி இதழ்; குயில் முட்டையிட்டு வந்தவுடன் அதனைக் காகம் அடைகாக்கும் என்பது போல, தந்தை பெரியார் அவர்களைக் குயிலாகவும் காமராசர் அவர்களைக் காகமாகவும் கார்ட்டூன் போட்டதும் கல்கியே! இந்தப் பின்னணியில்தான் பச்சைத் தமிழர் காமராசரை அணுக வேண்டும். இந்தி திணிப்புக்கு எதிராக தேசியக் கொடியை எரிப்போம் (1.8.1955) என்று தந்தை பெரியார் போராட்டம் அறிவித்த நேரத்தில், பிரதமர் நேருவிடம் பேசி, பள்ளிகளில் இந்தி திணிக்கப்படாது என்று உறுதிமொழியைப் பெற்றுத் தந்தவரும் முதலமைச்சர் காமராசரே!

இன்றைய இந்துத்துவா இந்தியையும், சமஸ்கிருதத் தையும் திணிக்க நான்கு கால் பாய்ச்சலாக இருக்கும் தருணத்தில் காமராசர் சிந்தனை தேவைப்படுகிறது.
பசுவதைத் தடுப்பு என்ற பெயரில், அன்றைக்கு (7.11.1966) அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் காமராசரை அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாரதீய ஜனதா கட்சி) ஆர்.எஸ்.எஸ்., நிர்வாண சாமியார்கள், சங்கராச்சாரியார்கள் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உயிரோடு கொளுத்திட முயற்சித்தனர் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
இப்பொழுது மாட்டுக்கறியைத் தடை செய்யும் வகையில் அந்த இந்துத்துவா சக்திகள் இந்திய அளவில் சட்டம் கொண்டு வரத் துடிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்றைக்கு அந்த இந்துத் துவாவை எதிர்க்கும் வகையில் காமராசர் அவர்கள் உருக்குத் தூணாக இருந்ததையும் இந்நாளில் நாட்டு மக்கள் நினைவு கொள்ள வேண்டும்.
அன்றைக்கு 1954இல் குலக் கல்வியைக் கொண்டு வந்தார் ராஜாஜி இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான அரசு ஒரு திட்டத்தை அறிவித்ததே!
14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ தங்கள் குடும்பப் பாரம்பரிய குலத் தொழிலை மேற்கொண்டால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வராதாம்! எப்படி இருக்கிறது?
இந்துத்துவா என்று சொல்லும்பொழுது அதன் வருணாசிரம தர்மம் என்பது - அப்பன் தொழிலைப் பிள்ளை செய்யும் குலத் தொழில் தானே!
அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களின் துணை கொண்டு, பச்சைத் தமிழர் காமராசர் ஆச்சாரி யாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினார்.
வரலாற்றில் சக்கரம் சுழன்று மறுபடியும் பழைய மனுதர்மப் புள்ளியில் வந்து நிற்கிறது. தந்தை பெரியார் பச்சைத் தமிழர் காமராசர் சிந்தித்த - செய்து காட்டிய அந்த  உணர்வுகள் தேவைப்படும் கால கட்டம் இது. காமராசரைக் கொலை செய்ய முயன்ற சக்திகள் இன்று ஆட்சி அதிகாரத்தில்.
அப்படியானால் காமராசரை மதிப்போர் எத்துணை உணர்வைப் பெற வேண்டும்? காமராசரின் 113ஆம் பிறந்த நாளாகிய இன்று (ஜூலை 15) சிந்திப்பார்களாக!
                              ---------------------------”விடுதலை” தலையங்கம் 15-07-2015

8 comments:

தமிழ் ஓவியா said...

காமராசருக்கு சூட்டப்பட வேண்டிய மாலை!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இன்று கல்வி வள்ளல், சமூகநீதிச் சரித்திரம் படைத்த, குலக் கல்வித் திட்டத்தை, விரட்டியடித்த மாவீரர் - அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள்!

கல்வி நீரோடையை நாடெலாம் பாயச் செய்தவர்!

திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து, கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது.

தகுதி, திறமை பேசி நம் மக்களை மட்டந் தட்டி வைத்தவர்களை வாயடைக்கச் செய்த நடை முறைச் செயல் வீரர்!

தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி, தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர்.
கும்பலில் கோவிந்தாவா?

காமராசரை டில்லியில் உயிருடன் (வீட்டில்) கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட (நவம்பர் 7 1966) இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா  போடுகிறது.

காமராசர் - பலருக்குப் பாடம் - சிலருக்கோ படம்!

இதைப் புரிந்து, காமராசர் விரும்பிய  ஜாதி, தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம, சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.

எது அற்புத மாலை?

மதவெறி சக்திகளை மண் கவ்வச் செய்வதே, காமராசருக்குச் சூட்டும் அற்புத மாலையாகும்.
வாழ்க காமராசர்!

வருக அவர் விரும்பிய சமதர்ம சமுதாயம்!!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


முகாம்: சிங்கப்பூர்

15.7.2015

தமிழ் ஓவியா said...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..

2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.

2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.

2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.

2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.

2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.

2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.

2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.

2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.

2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.

2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.

2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.

1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவநம்பிக்கை

பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை


- கி. தளபதிராஜ்பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15.  இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம். தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர்!. அதனால் "பச்சைத்தமிழர் காமராஜர்" எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார்!.

நான் தீமிதி, பால் காவடி, அப் படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா? எனக் கேட்டவர் காமராசர்

இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, "டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்." என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.

காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.

தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.

தமிழ் ஓவியா said...

காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

மும்மலம் கடந்த முனிபுங்கவர்களா?

மும்மலங்களைக் கடந்தவர்கள் சங்கராச்சாரியார்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அவர்கள் நானே கடவுள் என்று அகங்காரம் கொண்டவர்கள்கூட! உண்மையைச் சொல்லப் போனால் கோவிலுக்குச் சென்று இவர்கள் அந்தச் சாமிகளைக் கும்பிடக் கூடக் கூடாது. ஆனால், ஊரை ஏமாற்றவும்; மக்கள் மத்தியில் பக்தியைப் பரப்பவும்தான் கோவிலுக்குச் சென்று இவர்கள் சாமி கும்பிடுவதுபோலப் பாசாங்குகளைச் செய்கிறார்கள்.

இவர்களிடத்தில் தன்னடக்கமோ, பணிவான பண் பாடுகளோ அறவே கிடையாது. தான் என்னும் ஆணவத் தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு இருப்பவர்கள்.

பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் - அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, சரி சமமாக உட்கார முடியாது - உயரமான ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு, குடியரசுத் தலைவரையும் தரையில் உட்கார வைப்ப வர்கள் - இவர்கள்தான் ஆன்மநேயம் உள்ளவர்களாம் - மும்மலங்களை அடக்கி ஆளக்கூடியவர்களாம்.

மும்மலங்கள் என்றால் ஆணவம், கன்மம், மாயை இவற்றைக் கடந்து வாழ்வது என்று பொருள். இவை களுக்கு இவர்கள் கூறும் எடுத்துக்காட்டாவது,

ஆணவம் - சூரபத்மன்
கன்மம் - சிங்க முகம்
மாயை - தாரகன்
ஆகிய பாத்திரங்களாகும்.

உண்மையைச் சொல்லப்போனால், சூரபத்மன், சிங்க முகன், தாரகன் என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இந்த சங்கராச்சாரிகளையும், ஜீயர்களையும், பார்ப்பனர் களையும்தான் வைத்துப் பார்க்கவேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வானமாமலை மடத்தின் 31 ஆவது ஜீயரான ராமானுஜர் என்பவர் சோழ நாட்டுக்குத் திவ்விய யாத்திரை மேற்கொண்டாராம். கோவில்களுக்கு அவர் செல்லும்பொழுது, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு ஸ்ரீசடாரி வைத்து பெருமாள் சன்னதிக்கு ஜீயரை அழைத்துச் சென்று தரிசனம் பெற வைத்து, அவரிடம் அருளாசியும் பக்தர்கள் பெறுவார் களாம்.

அந்த வகையில் கும்பகோணத்தையடுத்த உப்பிலியா புரம் கோவிலுக்கு வானமாமலை ஜீயர் கடந்த 12 ஆம் தேதி இரவு சென்றுள்ளார். கோவில் கொடி மரம் அருகே ஜீயர் ராமானுஜர் நின்று கொண்டிருந்தாராம். ஜீயர் வந்துள்ள தகவல் அறிந்த பட்டாச்சாரியார்கள் இந்தக் கோவிலில் ஜீயருக்குப் பூரண கும்ப மரியாதை கொடுக்கும் சம்பிர தாயம் இல்லை என்று கையை விரித்து விட்டார்களாம். ஏற்கெனவே இதே கோவிலில் ஜீயருக்குப் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளதே என்று ஜீயரின் சீடர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறினர். அக்கோவில் பட்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையாம்; வாய் வார்த்தைகள் நீண்டு சந்தி சிரித்ததுதான் மிச்சம்!
மும்மலங்களைக் கடந்த ஜீயரோ கோவிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிக்காமல், கோபாவேசத்துடன் அந்த இடத்திலிருந்து நடையைக் கட்டினாராம்; ஏடுகளில் விலாவரியாக செய்தி வெளிவந்துள்ளது.

ஜீயர் மட்டுமல்ல; சங்கராச்சாரியார்களும் அப்படித் தான். ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டினால் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.

14.2.2001 அன்று இராமேசுவரத்தில் இராமநாதசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சீபுரத்தி லிருந்து சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரசுவதியும் விஜயேந்திர சரசுவதியும் சென்றிருந்தனர்.

தமிழ் ஓவியா said...

சிருங்கேரி சங்கராச்சாரியாரும் கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்தார். விழாக் குழுவினர் சங்கராச்சாரியார்களுக்குச் சிறப்பு செய்ய முனைந்தபோது, எந்த சங்கராச்சாரியாருக்கு முதல் மரியாதை என்பதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சர்ச்சை இரவு முழுவதும் நடைபெற்றது.

மதுரை ஆதீனகர்த்தர் தலையிட்டு விடிய விடிய பேசி சமரசம் செய்து வைத்தார் (தினபூமி, 15.2.2001) என்பது சாதாரணமானதா?

தினமணிகளும், தினமலர்களும், துக்ளக்குகளும் அரசியல்வாதிகளுக்குள் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டால், அடேயப்பா எப்படியெல்லாம் பேனாவால் ஏர் உழுவார்கள்? அணுவைத் துளைத்து ஆகாய வெளியில் சண்ட மாருதம் செய்யமாட்டார்களா? ஆனால், அனைத் தையும் கடந்த ஆன்ம நேயர்கள் என்று பார்ப்பனர்கள் தூக்கிச் சுமக்கும் இந்த ஜீயர்களும், சங்கராச்சாரியார்களும் பம்படி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களே - இதைப்பற்றி முணுக்கென்று செய்தி வெளியிடுவார்களா? விமர்சனம் செய்வார்களா?

காஞ்சி ஜெயேந்திரசரசுவதி கொலை வழக்கில் சிக்கிய போதுகூட அவர் விடயத்தில் அரசு அநீதி இழைத்து விட்டது என்றுதானே சோ ராமசாமி அய்யர் எழுதினார்.

கொலைக்குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டு இருக்கிறார்! பார்ப்பனப் பெண் எழுத்தாளராகிய அனுராதா ரமணன் என் கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி! என்று கதறினாரே - தொலைக்காட்சிகள் அதனை நேரடியாக ஒளிபரப்பவில்லையா?

மூத்த சங்கராச்சாரியாராக இருந்தாரே - அடேயப்பா அவரைப்பற்றிப் பார்ப்பன வட்டாரம் (குடியரசுத் தலை வராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் உள்பட) எப்படியெல் லாம் புகழ்ந்து தள்ளுவார்கள் தெரியுமா?

அவர் எத்தகையவர்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறியவர்; தீண்டாமை சம்பந்தமாக தம்மைச் சந்திக்க வந்த காந்தி யாரை பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் உட்கார வைத்துப் பேசியவர் - நாத்திகருக்கு வைத்தியம் பார்க் காதே! என்று சொன்னவர்.
இவர்கள் எல்லாம் மதிக்கத்தகுந்த மாண்புகள் நிறைந்த வர்கள்தானா? சொல்லுங்கள் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...

கட்சிகளின் நிலைமை


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது.
_ (குடிஅரசு, 18.12.1943)