Search This Blog

5.7.15

பார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து விடுபட வேண்டும்!-பெரியார்

பார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து விடுபட வேண்டும்!


நமக்கு இருக்கும் பறையன் - பள்ளன் - சூத்திரன் என்ற இழிவுத் தன்மையை நீக்க ஒழிக்க இந்தப் பயணம் பயன்படவில்லையே. நம்மிடையே உள்ள மூட நம்பிக்கைகளை வளர்க்கத் தானே பயன்படுகிறது?

இந்த நாட்டில் நாங்கள் ஒருத்தர் தான் "திராவிடர் கழகம்" ஒன்று தான் மான உணர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது. சொந்த வீட்டுச் சோற்றை தின்று விட்டு உழைப்பவர்கள் நாங்கள். கட்சியின் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் அல்லர் நாங்கள். ஜனாதிபதியாக இருந்து இப்போது விலகியுள்ள இராஜேந்திரப் பிரசாத் பெரிய தியாகி என்று புளுகுகிறார்கள். அவர் செய்த தியாகம் என்ன? அதன் பலன் என்னவென்றால் 20- லட்சம் சொத்து சேர்ந்திருக்கிறது அவருக்கு. வெறும் ஆளாக வந்தவர் பெரிய பணக்காரனாகச் சென்றார். இது தான் அவர் செய்த தியாகம். இதுவரை மக்களுக்கு என்ன நன்மை செய்தார்? மக்களுக்கு அவரால் என்ன நன்மை ஏற்பட்டது? சொல்லுங்களேன் பார்க்கலாம் யாராவது.

அப்படி தான் இந்த ஆச்சாரியருக்கும் (இராஜாஜி) இன்று 10,20- லட்சம் ரூபாய் சொத்து சேர்ந்து விட்டது. மாதம் ரூ. 1250- பென்ஷன் பிரசாதுக்கு ரூ. 2500- பென்ஷன் ஏன்? இவர்கள் எல்லாம் பெரிய தியாகிகள் அல்லவா? அதனால் தான் வாழ்க்கையை நடத்த மாதம் இவ்வளவு பணம் தேவை போல் இருக்கிறது. இவர்களின் அண்ணன் தான் இந்தக் கண்ணீர்த்துளிகள்! பொது வாழ்க்கையில் வரும் போது இவர்கள் சோற்றுக்கே தாளம் போட்டவர்கள் தான். இன்று அவர்களின் ஆடம்பரம் என்ன? கார் என்ன? பங்களா என்ன? காரை விட்டுக் கூட இறங்க முடியவில்லை. இவர்கள் எல்லோரும் தேசத்துக்குப் பாடுபடுபவர்கள் - தியாகிகள்.

நம் இழிவைப் பற்றி அதை ஒழிப்பது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் வராது. பார்ப்பனர்களுடைய மனம் நோகாதபடி நடப்பது தான் இவர்களுடைய வேலையாகும். இவர்களை ஆச்சாரியார் தூக்கி விட்டுள்ளார். இவர்கள் வேறு என்ன செய்வார்கள்? இவர்களுடைய சொந்த யோக்கியதை தான் என்ன?ஆச்சாரியருடைய வேலையெல்லாம் நம்மை பழையபடி சூத்திரனாக ஆக்குவது தான். அவர் பச்சையாகக் கூறுகிறார். அப்படியிருந்தும் அவர் காலில் விழுகிறார்கள்.

தோழர்களே! நாங்கள் இப்படி வரும் பணங்களை – சொத்துக்கள் மூலம் வருமானங்கள் இவற்றை எல்லாம் சுக்கான் செட்டி மாதிரி மிச்சம் பண்ணி, அதை வட்டிக்கு விட்டு அதைப் பெருக்கி வருகிறோம். இவைத் தவீர வேறு வழியில்லை எங்களுக்கு வருமானம் கிடையாது. ஆனால் மற்றக் கட்சிக்காரனுக்கு எல்லாம் தேர்தலுக்கு என்றும், மற்றவற்றிற்கு என்றும், கோடிக்கணக்கில் இலட்சக்கணக்கில் பஸ் முதலாளிகள் வியாபாரிகள் எல்லாரும் தருவார்கள். ஏன் ஏன்றால் இவர்களுடைய தயவு அவர்களுக்குத் தேவை. ஒரு இலட்சம் ரூபாய் தருகிறான் என்றால் அதைக் கொண்டு அவன் 5,6- இலட்சம் ரூபாய் இவனுடைய தயவால் சம்பாதித்து விடுவான்.

இந்தியாவிலேயே சமூதாயத் துறையில் மக்களுக்கு இருந்து வரும் கேட்டை மடமையை நீக்க யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகம் ஒன்று தான். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான். வேறு யாரும் இருப்பதாகக் கூறினால் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுடைய ஆதரவுக்கு விண்ணப்பம் போடுகிறேன். ஜாதி ஒழிப்பு பற்றிப் பேச, நடக்க எங்களைத் தவிர வேறு ஆள் இல்லை. கம்யூனிஸ்ட் தலைவனே பார்ப்பான். கண்ணீர்த்துளிக் கட்சியோ பார்ப்பான் ஆதரவில் அவர்கள் தயவில் வாழும் கட்சி. காங்கிரசோ ஜாதியைக் காப்பாற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். ஆகவே, எந்தக் கட்சியும் ஜாதி ஒழிப்பு மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்தல் பற்றிப் பேசுவது இல்லை.

பெரிய தலைவர்கள் என்பவர்கள் எல்லாம் மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளை வளர்க்க கடவுள் - மதம் - புராணக் குப்பைகளைப் பற்றித் தான் பேசுவார்கள். மற்ற கட்சிக்காரர்களுக்கு சட்டசபைப் பதவி - புகழ் - பணம் இவை தான் கொள்கை. ஆனால் நம்முடைய திராவிடர் கழகக் கொள்கை ஜாதியையும், மூடநம்பிக்கைகளையும் அழித்து மக்களை மனிதத் தன்மை உள்ளவர்களாக ஆக்குவது தான். இதுவே நம்முடைய கொள்கை ஆகும்.

ஜாதி - மதம் - கடவுள் - பார்ப்பான் இவற்றைப் பற்றிப் பேசினால் அவர்களை (பேசியவர்களை) ஒழித்துக் கட்டி விடுவான் பார்ப்பான். துணிந்து தான் போராட வேண்டும். 2500- ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி பாடுபட்டார். அவரைப் பார்ப்பான் ஒழித்து விட்டான். இந்த இராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் எல்லாம் புத்தரை ஒழிப்பதற்காகவே தோன்றியது தான். புத்தரை ஒழிக்க எடுத்த முயற்சிகளின் கதை தான் இது.

நமக்கு என்று கடவுள் கிடையாது. இப்போது கடவுள்களில் ஒன்றுக்குக் கூட ஒழுக்கம் என்பது சிறிது கூட இல்லை.வைஷ்ணவமதம், சைவ மதம் இரண்டும் ஒன்று தான். ஒன்றைப் பார்த்து மற்றொன்று காப்பி அடித்து எழுதப்பட்டது தான் ஆகும். வடநாட்டுக்காரன் வைஷ்ணவத்தையும், தென்னாட்டில் சைவத்தையும் உண்டாக்கினார்கள். இரண்டின் நடவடிக்கையும் ஒன்று தான். கோயில்களும் அப்படித்தான். போட்டி போட்டுக் கொண்டு கட்டினார்கள். கடவுள் பெயர்களும் ஒன்றுதான். விஷ்ணு கடவுள் அரங்கநாதன் என்பான். அரங்க நாதன் என்றால் சபைக்குத் தலைவன் என்று பெயர். அதுபோல் இவன் கடவுள் சிதம்பரத்தில் இன்று சபாபதி என்பான். சபாபதி என்றால் சபைக்கு எஜமான் (தலைவன்) என்ற பொருள். வைணவன் மண்ணை நெற்றியில் பூசுவான். சைவன் சாம்பலை (நெற்றியில்) அடித்துக் கொள்ளுவான்.

ஆகவே சைவம் - வைஷ்ணவம் இரண்டும் ஒன்று தான் ஆகும். நம்மைக் காட்டுமிராண்டியாக ஆக்கவும், சுத்த மடையர்களாக அயோக்கியர்களாக ஆக்கவும் பார்ப்பான் கடவுள் - மதம் - புராணம் இவற்றை உண்டாக்கினான். இவற்றின் பிடிப்பிலிருந்து விடுபடுவதே நமது குறிக்கோள்.

------------------------------------- இடையாற்றுமங்கலத்தில் 24.05.1962- அன்று தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு."விடுதலை", 30.05.1962

0 comments: