Search This Blog

30.3.09

பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் வீட்டுப் பிராணியா?


வீதிக்கு வரவேண்டும் பெண்கள்!

மருத்துவ ஆய்வேடான "லேன் சட்" என்பதில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஊட்டக் கூடியவையே! பெண்களைப்பற்றிய தகவல்கள் அவை. 1,06,000 பெண்கள் ஓராண்டில் தீ விபத்துகளில் பலியாகியுள்ளனர். விபத்தா - வேண்டுமென்றா அன்றித் திட்டமிட்டா என்பது கேள்விக்குறியே!

தேசிய குடும்ப சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் தகவல்படி திருமணமான பெண்களில் 37.2 சதவிகிதம் பேர் வீட்டுக்குள் வன்முறைகளுக்கு இலக்காகின்றனர்.

பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் 75 விழுக் காட்டினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வளவுக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டும், அந்தக் கொடுமைகள் குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுப்பது என்பது அரிதினும் அரிதே! இவ்வளவுக்கும் பெண்களுக்கென்றே காவல்துறை தனி அலுவலகம்கூட இருக்கின்றது என்றாலும்கூட தன்னிச்சையாக இந்த வாய்ப்புகளைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத சிக்கிலில்தான் குடும்பம், சமூகமும் சுற்றுச்சூழலும் இருந்து வருகின்றன!

வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005 என்ற ஒரு சிறப்பான சட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கென்று இரு முக்கிய சட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒன்று- பெண்களுக்குச் சொத்துரிமை; இரண்டாவது வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் - 2005 ஆகியவையாகும்.

ஆனாலும் இவைபற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியிலே குறிப்பாக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் மத்தியிலே சென்றடையவில்லை என்பதுதான் சோகம்.

பெண்கள் மத்தியிலே கல்வி வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், சிந்தனை ரீதியாக - உடல் வலிமை ரீதியாக மேலும் அவர்கள் வளர்த்து எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக பெண்கள் மத்தியில்கூட ஒரு எண்ணம் வலிமையுடன் வளர்ந்திருக்கிறது. தமக்குத் துணை வராக வரக்கூடியவர் தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும்; தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு தாழ்வு மனப்பான்மை என்னும் சங்கிலியால் பிணைத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே, தன்னைவிட வயதிலும் மூத்தவராக இருக்கவேண்டும் என்கிற எண்ணமும் வேறு.

இந்த எண்ணங்கள் எல்லாம் அடியோடு நிர்மூலம் ஆகாதவரை பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் ஒரு வீட்டுப் பிராணி என்னும் நிலையே தொடரும் - தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பாடத் திட்டங்களில் அடிப்படையாக கட்டாயமாக வைக்கப்படவேண்டும். இது ஏதோ இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உலகெங்கும் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் பரப்புரை செய்யப்படவேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்சத் திட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழியிருந்தும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் 1996 ஆம் ஆண்டுமுதலே இந்தச் சட்டம் இதோ வருகிறது - அதோ வருகிறது! என்று பராக்குக் காட்டப்பட்டே ஏமாற்றப்பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு கட்சி என்று கூறி அதன் உண்மையின் விரிவைக் குறைத்திடவோ, சிதைத்திடவோ முடியாது.

எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மைதான் இதற்கு ஆணிவேராகும். ஆண்களால் பெண்களுக்கு என்றைக்கும் விடுதலை இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் இந்த இடத்தில், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது.

பெண்கள் களத்திற்கு வரவேண்டும்; போராடாமல் எந்த உரிமையும் இலவசமாகக் கிடைத்துவிடாது; அதற்குரிய விலையைக் கொடுக்கத் தயாராகவேண்டும் - இதுவும் தந்தை பெரியார் என்ற ஆணாகிய தாயின் மனிதநேயக் குரலாகும்.

----------------"விடுதலை" தலையங்கம் 30-3-2009

1 comments:

தமிழ் ஓவியா said...

இனைத்து விட்டேன். ந்ன்றி