Search This Blog

14.3.09

கம்பன் ஓர் நச்சுப்பாம்பு

பதினெட்டு வயதாயிருந்த தருணத்திலேயே கம்பரது இராமாயணத்திலுள்ள பன்னீராயிரம் கவிதைகளையும் மனப்பாடமாகக் கற்றறிந்தவரான பஞ்ச இலட்சண மகா வித்வான் கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் இராமாயணத்தைப் பற்றி எழுதியுள்ள பாடல் இதோ!


கம்ப நாகம் பொய்க்கடுவைக் கக்கி மதுரகவி யென்னும்
அம்பொற் கிண்ண நிறைத் துவைத்த தறியா தமிழ்தமென வருந்தி
வெம்பியறிவு மாண்டீரவ் விடந்தீர்த் துய்க்குங் கிறிஸ்தெமது
நம்பன் வசன சஞ்சீவி நயத்துட் கொள்ளும் ஜெகத்தீரே


இதன் பொருள்:-

இவ்வுலகில் வாழுகின்ற மக்களே - கம்பன் எனப்பட்ட நாகப்பாம்பு (தன்வசமுள்ள) பொய் என்னும் நஞ்சைக் கக்கி இனிய செந்தமிழாகும் அழகிய தங்கக் கிண்ணத்தில் நிறைத்துள்ளதைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் (அந்த நஞ்சு சாவாமை தரக்கூடிய) அமுதென்று தவறாகக் கருதிக் குடித்து, அதனால் நோயுற்றுத் தளர்ந்து அறிவை இழந்து விட்டீர்களே.

மதுரகவியென்னும் அழகிய பொன் கிண்ணத்தில் பொய்யாகிய இராமாயணத்தைக் கக்கி வைத்துள்ளது கம்பனென்னும் நாகப்பாம்பு.

இன்னம் கேளும்:

கடலைக் குரங்கு தாவினதுங் கடலைக் கணையாற் றகித்தும்பின்
கடலை யடைத்துக் கடந்ததும்பாற் கடலை மலையாற் கடைந்த தும்பொய்
கடலைக் கடைந்த கடற்புளுகர் கட்டி வைத்த கதை காணுங்
கடலை யமைத்துக் காத்தகர்த்தன் சுழற்காட் படுமின் ஜெகத்தீரே

கருத்துக்கும் காட்சிக்கும் ஏற்காத கட்டுக்கதை:

உள்ளுக்கும் உணர்ச்சிக்கும் ஒவ்வாத கதை. உண்மையற்ற கற்பனையுடன் புளுகர் கட்டி வைத்த கதை. எத்தகைய புளுகர் என்பீரோ? மகாவித்வானைக் கேட்போம். கடற்புளுகராம். கரைகாணக் கூடாத கடலைப்போல அளவு காண முடியாத புளுகு. கடலைக் கடைந்து இக்கதையைக் கண்டார்களாம் அப்புளுகர்.

கட்டி வைத்த கதைகள் யாவை?

சஞ்சீவி என்னும் பெரிய பர்வதத்தை அடியோடு பெயர்த்துக் கொண்டு பறந்து வந்து இலக்குமணனை உயிர்ப்பித்த குரங்கு வாய்வு பகவானின் மகனாம். அம்புகளின் வெப்பத்தைத் தணிக்கக் கடலை அம்பால் எய்து அதை வற்றவைத்தல், கற்களைக் கொண்டு குரங்குகள் கடலில் பாலங் கட்டுதல், மகாமேரு பருவதத்தை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் மறுபக்கமும் பிடித்துத் திருப்பாற் கடலைக் கடைந்து தேவாமிர்தத்தைக் கொண்டு வந்தார்களென்பதெல்லாம் கடற்புளுகர் கட்டிவைத்த கதை என்றே கூறிவிட்டார்.


----------------------நன்றி:- "விடுதலை" 13-3-2009 பக்கம் 5

1 comments:

? said...

//கம்பன் எனப்பட்ட நாகப்பாம்பு//

கிறிஸ்தவரான கிருஷ்ணப்பிள்ளை இப்படி சொன்னதிலிருந்து அவர் மத சகிப்புத்தன்மையற்றவர் என்பது கண்கூடு.

இவருக்கு கம்பனை படித்தவுடன் தெரியவில்லையா, அது நஞ்சு எனறு? அதனைப் போய் எதுக்கு மனப்பாடம் செய்ய வேண்டும்?

இன்னொரு காமெடி இவரது பட்டப் பெயர் "கிறிஸ்தவக் கம்பர்"