Search This Blog

17.3.09

அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும் சரி சமமானதே!

தேர்தல் அணுகுமுறை!

15 ஆவது மக்களவைத் தேர்தல்பற்றிய செய்திகளும், தகவல்களும், அணுகுமுறைகளும், கூட்டணிகளும் பற்றியவை அன்றாடம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வெளிவருகின்றன. மக்களின் கவனமும் பெரும்பாலும் இவற்றைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் (UPA), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), இடதுசாரிகள் முயற்சியில் மூன்றாவது கூட்டணியும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை 5 ஆண்டுகாலம் ஆட்சியை நடத்தி முடித்திருக்கிறது. இடதுசாரிகள் இடையில் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

பொருளாதாரப் பிரச்சினையைப் பொறுத்தவரை உலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்து இருக்கிறது என்பது உண்மைதான். இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை வலுவான தன்மையில் நொடிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்பது ஆறுதலான ஒன்றாகும்.

மதச்சார்பின்மை என்ற கொள்கையிலும் ஓட்டை இல்லை; அதேநேரத்தில் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை நீதிமன்றத்தின்முன் நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தில் பா.ஜ.க., சங் பரிவார்த்தலைவர்கள்தான் முக்கிய பங்குக்கு உரியவர்கள் என்ற உண்மை வெகுமக்களுக்குத் தெரிந்திருந்தாலும், நீதிபதி லிபரான் தலைமையில் அமைந்துள்ள விசாரணை ஆணையம் அளித்துள்ள இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பார்களேயானால், நீதியின்மீதே நம்பிக்கையில்லாத் தன்மையை வெகு மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

காலவரையறையின்றி இந்த ஆணையத்தின் காலத்தை நீட்டிக்கொண்டே போக அனுமதிப்பது உசித மல்ல! இந்த ஆணையத்தைக் கலைத்துவிட்டு, நேரிடை யாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினைத் துரிதப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

உரிய நேரத்தில் இந்த வழக்கு நடத்தப்பட்டு சம்பந்தப் பட்டவர்களுக்குத் தண்டனை கிடைத்திருக்குமாயின் அவர்கள் தேர்தலில் நிற்கவே தகுதியிழந்தவர்களாக ஆகியிருப்பார்கள். அதன்மூலம் மதவாதச் சக்திகள் அரசியல் களத்தில் அசிங்கமாக அடியெடுத்து வைப்பதைத் தடுத்திருக்க முடியும்.

நாக்பூரில் கூடிய பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ராமன் கோயில் பிரச்சினையை மக்களவைத் தேர்தலில் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இது ஒன்றே போதும் பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டது என்பதற்கு. மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் நுழைப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை.

இதனையெல்லாம் மத்தியில் ஆளும் ஆட்சி கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமானதே என்றாலும், மதச்சார்பின்மையில் மத்தியில் உள்ள ஆட்சி சரியாகவே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நம்பலாம்.


மூன்றாவது அணியினரான இடதுசாரிகளால் ஒருங்கிணைக்கப்படும் கட்சிகளிடையே மதச்சார்பின்மைத் தத்துவத்தில் முரண்பாடுகள் நிரம்பி வழிகின்றன.

இந்தியாவில் கட்டாமல் ராமன் கோயிலை வேறு எங்கு போய் கட்டுவது என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தவரும், சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்கு ராமன் பாலம் என்ற மதத் தொடர்பான முட்டுக்கட்டையை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றவருமான செல்வி ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக்கொள்வது எந்த வகையில் சரியான தாக இருக்க முடியும்? அந்த வகையில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும் சரி சமமானதே!

மத்தியில் ஆட்சியில் இப்பொழுது அங்கம் வகித்துள்ள கட்சிகள்- நடக்கவிருக்கும் தேர்தலில் அய்க்கிய முற் போக்குக் கூட்டணிக்கு எதிரான அணியில் அங்கம் வகித்து கடந்தகால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை எதிர்த்தால், விமர்சித்தால் அதைவிட அகடவிகடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அது மல்லாக்கப்படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்குச் சமமாகிவிடும்.

சமூகநீதியிலும் மத்தியில் உள்ள ஆட்சி எதிர்பார்க்கும் அளவுக்கு முத்திரை பதிக்கவில்லை என்ற குறைபாடு இருந்தாலும், இந்த அணியை எதிர்த்து நிற்கும் அணியில் பிரமாதமாக எதிர்பார்க்கும் அளவுக்கு சமூகநீதிக்கு முக்கியத்துவம் காணப்படுவதில்லை. இருப்பதில் எது சிறந்தது என்று முடிவெடுக்கவேண்டியதுதான் மக்கள்முன் உள்ள நிலையாகும்.


-------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 17-3-2009

3 comments:

Unknown said...

//இந்தியாவில் கட்டாமல் ராமன் கோயிலை வேறு எங்கு போய் கட்டுவது என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தவரும், சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்கு ராமன் பாலம் என்ற மதத் தொடர்பான முட்டுக்கட்டையை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றவருமான செல்வி ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக்கொள்வது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்? அந்த வகையில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும் சரி சமமானதே!//

இது கம்யூனிஸ்டுகளுக்கும், வை.கோ.வுக்கும் தெரியலையே.

அதிலும் த.பாண்டியனுக்கு ஜெ கூட கூட்டணி வைக்க அலாதிப் பிரியமாம்

மணிகண்டன் said...

கலைஞர் 5 வருஷம் பாரதிய ஜனதா கூட்டணில இருந்ததுக்கு பிறகு அவங்க தான் பாபர் மசூதி இடிப்புக்கு காரணம்ன்னு புரிஞ்சிகிட்டாரு இல்ல. அதே மாதிரி என்னிக்காவது கம்யூனிஸ்ட் புரிஞ்சிப்பாங்க !

அது சரி said...

//
மதச்சார்பின்மை என்ற கொள்கையிலும் ஓட்டை இல்லை; அதேநேரத்தில் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை நீதிமன்றத்தின்முன் நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
//

உண்மையான வாசகங்கள்...

அதே சமயம், அதே பாபர் மசூதியை இடித்த பின், அதே பா.ஜ.கவுடன் தேர்தல் உறவு கொண்டு, மத்திய மந்திரி பதவியையும் அனுபவித்து, இன்றைக்கு காங்கிரஸுடன் உறவு கொண்டு மீண்டும் மத்திய மந்திரி பதவியை அனுபவிக்கும் தி.மு.க போன்ற கட்சிகளை பற்றி விடுதலையோ, "தன்மான" தமிழன் வீரமணியோ எதுவும் பேச மறுப்பது ஏன்???

தமிழர்கள் முட்டாள்கள் என்று ஆரியர்கள் அவமானப்படுத்தியிருக்கலாம்...ஆனால் அதை விடாப்பிடியாக வீரமணியும், விடுதலையும் நம்புவதாக தெரிகிறது....

வாழ்க வீரமணியின் சுய மரியாதை...வாழ்க தி.மு.கவின் மதச்சார்பின்மை!!