Search This Blog

28.3.09

வரலாறு தெரியாத விஜயனும் - வம்பை வளர்க்கும் தினமணியும்!


கடந்த பிப்.24-ஆம் தேதி தினமணி நாளேட்டில் மூத்த வழக்கறிஞர் விஜயன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் திராவிட இயக்கத்திற்கு எதிரான சிந்தனையை உடையவர் என்பது ஊரறிந்த செய்தி. எதிரானவர் என்பதாலேயே தனது மேதைமை யைக் காட்டிக் கொள்வதற் காக எதையாவது எழுதினால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

அவர் எழுதிய "சத்தியமேவ ஜெயதே" கட்டுரையில் மூன்று செய்திகளைக் கூறுகிறார். தலைப்பே அவர் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுகிறது அல்லவா? உண்மையான தமிழன் எழுதியிருந்தால் வாய்மையே வெல்லும் என்று எழுதியிருப்பான். அவர் எழுதியுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தில்,

(1) விஜயன் தமிழ் உணர்வாளர்கள் பற்றி எழுதுகிறபோது, திமுக தமிழ் உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது. தமிழின உணர்வை அரசியலாக்கி அனுகூலம் அடைந்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

(2) இதுவன்றி இலங்கைப் பிரச்சினை

3) உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் நிகழ்வு பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்.

இம்மூன்றில் இப்போதைக்கு நாம் முதலாவது பிரச்சினையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

தமிழனுக்குப் பிறந்தவனுக்குத் தமிழ் உணர்வு கட்டாயம் இருக்கும்; இருக்கிறது. மற்ற தமிழர்களுக்கு இல்லையென்றும் நாம் சொல்ல வரவில்லை. ஆனால் திராவிட இயக்கத்தவர் எவரைவிடவும் தமிழர் நலனில் முன்னணியில் இருப்பர்; போர்க்குணம் உடையவர்கள். அவர்கள் விஜயனைப்போல ஆள்காட்டிகளாக இருக்க முடியாது அல்லவா? வரலாற்றை முறையாகப் பார்க்காமல் திரித்து அல்லது விடுபட்டு மக்கள் முன் வைக்கும் விஜயனின் அரைவேக்காட்டுத் தனத்தையே நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தாய்மொழிப் பற்று எப்படி வருகிறது? பிறப்பால்தான். ஆகவேதான் அந்த உணர்வு திராவிட இயக்கத்தார்க்கு இருக்கிறது; திமுக வினர்க்கு இருக்கிறது. தமிழ் இன உணர்வு இருப்பதற்கு இயற்கையான அடிப்படைக் காரணம் இதுவே. ஆகவே பிறப்பால் தமிழனாகவும், திராவிடச் சிந்தனை நெறியை ஏற்றுக் கொண்ட எவரும் தமிழ் இன உணர்வாளராகவே இருப்பர். திமுகவில் இருப்பவர்களுக்கு திராவிட இயக்கத்தில் இருப்பவர்களுக்கு இன உணர்வு என்பது, தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற நிலையில் எப்போதும் இருப்பவர்கள்.

மூவேந்தர் காலத்தில் - சங்க காலத்தில் இல்லாத தமிழ் இன உணர்வு இப்போது ஒன்றுபட்டு உருவானதற்கு என்ன காரணம்? அதற்கு 500 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. திராவிடத் தமிழ்த் தேசிய உணர்வு விஜயன் வீட்டுக் கொல்லையில் காய்த்த வெள்ளரிப் பிஞ்சு அல்ல.

15,16-ஆம் நூற்றாண்டுகளில் கலை, இலக்கிய மறுமலர்ச்சி அய்ரோப்பால் தோன்றியது. அதேபோல 17, 18-ஆம் நூற் றாண்டுகளில் மொழி வழித் தேசிய உணர்வுகள் உருவாயின. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சி தோன்றிற்று. இதனால் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் மாபெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது. இந்தியாவிலும் அதன் பாதிப்புகள் தெரிந்தன. கிறித்துவ சமயப் பரப்புரையும் அச்சு இயந்திர வருகையும் இந்திய மொழிகள் வளரத் துணை நின்றன.

பிரிட்டிஷார் இங்கே வருகிற போது சமஸ்கிருதத்தை மரபு வழியாகப் பார்ப்பனர்கள் மட்டுமே படித்து வந்தனர். உருது, அரபி, பார்சி போன்ற மொழிகள் மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு வந்தன. தாய் மொழிக் கல்வி முறைப்படுத்தப்படவில்லை. தாய்மொழி உணர்வும் அது சார்ந்த தேசியமும் அறியப்படவில்ல. இந்தியா முழுமையும் சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், நிலக் கிழார்களையே நம்பி ஆங்காங்கே இருந்த தாய்மொழிகளின் வளர்ச்சி இருந்தது. தாய்மொழியைப் பேசுகிற மக்கள் இருந்தனர். அதனால் மொழி உயிரோடு இருந்தது.

தமிழ்மொழிக்கு நீண்ட பழம்பெருமை தனது நூல்களைக் கொண்டே ஆதாரமாக விளங்கின. 1830-க்குப் பிறகு பண்டைய இலக்கியங்கள் ஒவ்வொன்றாக அச்சேறின. அதன் பழமை பேசப்பட்டது. அதோடு சென்னை மாநகரத் தில் அந்நாள்களில் சிறுசிறு அமைப்புகள் மக்கள் தம் உரிமையைக் கோருவதற்காகத் தோன்றின.

1816-இல் எல்லீஸ் என்பவர் திராவிடமொழிகளின் உறவைக் கண்டறிந்தார். 1856-இல் வெளிவந்த கால்டுவெலின் ஒப்பிலக்கணம் தமிழ்மொழி தனித்தியங்கும் தன்மையை வெளிப்படுத்தியது. தமிழர் களே தமது மொழியின் ஆற்றலை அப்போதுதான் உணர்ந்தார்கள். 1798-க்கும் 1802-க்கும் இடையில் தமிழ் பேசுகிற பகுதிகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தன. தென்னிந்திய மொழிகள் பேசுகிற பகுதி சென்னை மாகாணம் ஆயிற்று; அதாவது, மெட்ராஸ் பிரசிடென்சி உருவாயிற்று.

எல்லீஸ் தென்னிந்திய மொழிகளின் உறவைக் கண்டறிந்து நூறு ஆண்டு களுக்குப் பிறகு 1916-இல் நீதிக்கட்சி தோன்றியது. இந் நிகழ்வுதான் அமைப்பு முறையிலான திராவிட இயக்கம் தோன்றுவதற்குக் காரணமா யிற்று. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளிலும் அனைத்துத் துறை அறிஞர்களாலும் தமிழ் மொழி வளர்த்தெடுக்கப்பட் டது. இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே இந்திய விடுதலை இயக்கமாக இருந்த காங்கிரஸ் தாய் மொழியில் விடுதலை உணர்வையும் அரசியல் நடவடிக் கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதத்தில் அமைப்புப் பணி இருக்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியது.

பாரதி புத்தெழுச்சி ஊட்டும் அரசியல் கட்டுரைகளை எழுதிக்குவித்தார். மேடைகளில் அவர்களாகவே முன் வந்து தமிழில் பேசினர்; பாடினர்; ஆடினர். ஆனால் அவை பார்ப்பனத் தமிழாக இருந்தது. தமிழின் பொதுமை அதில் இல்லை. பருவ ஏடுகள் நிரம்ப வெளிவந்தன. அதிலும் பார்ப்பனத் தமிழ் கோலோச்சியது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் நடத்திய ஏடு களை நூலகம் சென்று பார்த்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். மொழி நடையின் வேறுபாட்டாலேயே அது தமிழ் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த நிலைமைகள் எல்லாம் மொழி வளர்ச்சியின் அடிப்படையில் மாறி வந்தன. காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி, திராவிட இயக்கம் ஆகிய கட்சிகள் தமிழை வளர்த் தெடுத்தன. ஒவ்வொரு அரசியல் இயக்கத்திற்கும் அதன் பாணியே அடையாளம் ஆயிற்று. திராவிட இயக்கத்தினரின் பாணி மக்களை மிக அதிகமாகக் கவர்ந்தது. விஜயன் சொல்வது போல இதரக் கட்சியினரை தமிழ் இனக் காவலர்கள் அல்ல என்ற பிரமையை நாங்கள் ஏற்படுத்த வில்லை. தமிழை அவர்கள் கையாண்டவிதமே அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. அதற்குத் திராவிட இயக்கம் என்ன செய்ய முடியும்?

இது மட்டுமில்லை. தமிழ் மொழிமீது - இனத்தின்மீது உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும். அந்த உள்ளார்ந்த பற்று இல்லாதபோதுதான் அவர்களுக்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் ஒரு கட்டம் வளர தேவைப்பட்டது. திராவிட இயக்கப் பாணியிலான அரசியலை எதிர்நிலையில் அவர் கையாண்டார். ஆனால் அது எடுபடவில்லை. விடுதலைப் போராட்டக் காலத்திலேயே மொழிவழி மாநிலம் என்பது கூட காங்கிரசின் வெளிப்பாடே. அதற்குக் காரணம் மக்கள் அரசியலை அறிந்து கொள்ள தாய்மொழி தேவை என வற்புறுத்தப்பட்டது. மொழிவழி மாநிலம் தேவையில்லை என்று சுதந்திரத்திற்குப் பிறகு கூறினர். ஆனால் தட்சிணப்பிரதேசத்தை அறிவித்தனர். அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தவே கை விட்டனர். பின்னர் மொழி வழி மாநிலங்கள் அமைந்தன.

திமுக மட்டுமே தன்னைத் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறிக் கொண்டு மற்றையோரைப் பின் தங்கியவர்கள் என்று எப்போதும் கூறியதில்லை. திராவிடச் சிந்தனை நெறிகளுக்கு எதிரான தமிழ் அறிஞர்களுக்குக்கூட திமுக மதிப்பளித்து இருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

கலைஞர்க்கு எதிராக இயங்குபவர்கள் 1990-க்குப் பின்னால் அவரை விடவும் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இயங்குகிறார்கள் என்கிறார் விஜயன். தமிழ், தமிழர், தமிழ் நாடு என்பதற்காகத் திமுக குரல் கொடுத்தாலும் தவறு - இதரக் கட்சிக்காரர்கள் குரல் கொடுத் தாலும் தவறு என்று சொல்லும் விஜயன் என்னதான் சொல்ல வருகிறார் என்று நமக்குப் புரியவில்லை.

நமது மொழிப் பற்று, இனப்பற்று, விஜயன் போன்றவர்களுக்கு வெறியாகத் தோன்றலாம். இதையே திராவிடச் சிந்தனைநெறியின் எதிரிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் விஜயன் எழுதுகிறார்.

பாரதியின் கவிதைகளில், கட்டுரைகளில் தமிழ்த் தேசியத்தின் கூறு இருப்பதைப் போலவே திருவிகவின் எழுத்துகளிலும் இருக்கின்றன. தமிழ் நேஷன் என்பதை தமிழ்நாடு, என்றே மொழி பெயர்ப்பேன் என அவர் தேச பக்தனில் எழுதினார். திரு. வி.க. - திமுக அல்ல; திக அல்ல! தனித்தமிழ் இயக்கத்தினர் தமிழை வளர்த்தெடுத்தனர். க.திரவியம் தேசியம் வளர்த்த தமிழ் என்றே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர்களெல்லாம் திமுகவினர் இல்லை; திராவிட இயக்கத்தவர் இல்லை. இவர்கள் தமிழர்கள்; விஜயனும் தமிழர் (?)

ஜனநாயகத்தின் வளர்ச்சி ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்த எண்ணுகிறபோது தாய் மொழி உணர்வும் மொழி சார்ந்த தேசியமும் இயல்பாக உருவாகி மக்களிடையே நாட்டுப் பற்றை உருவாக்கும். இது இயற்கை. இந்த இயல்பை உள்ளடக்கித்தான், கிளிக்குப் பச்சைப் பூசுவதா? என்று அறிஞர் அண்ணா கேட்டார்.

தமிழ்மொழியின் இயல்பைத் திராவிட இயக்கத்தார் நன்கறிந்து பயன்படுத்தினர். மக்களைத் திரட்டினர். இன எழுச்சினால் உருவாக்கினர். இந்த அனுகூலம் விஜயனுக்கு ஏன் எரிச்சலை உண்டாக்குகிறது? பிறர் பேசிய தமிழை நாங்கள் பேசுகிறபோது இனிமை கூடுகிறது. அதோடு எங்களின் நியாயத்தைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டு எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இதனால் உங்களுக்கோ எல்லா இடத்திலும் எரிகிறது. இன்னும் சொல்வதானால் பக்தி இயக்கம் தமிழை வைத்துக் கொண்டுதான் சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்தது. ஆனால் நாங்களோ எல்லோருடையேயும் அறி வையும் சமத்துவத்தையும் வளர்க்கின்றோம்.

ஆகவே, எத்தனை விஜயன்கள் எழுதினாலும் மொழியைச் சார்ந்த தேசிய உணர்ச்சி என் பதை யாரும் தடை செய்து விட முடியாது. எனவேதான், அது ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்பியது. தமிழுணர்ச்சி இயற்கையாய் அமைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றுபட்டு ஈடுபட்டாலும் அவ்வப்போது வேறுபாடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. மொழி வழி தேசிய உணர்வு என்பது தமிழர் களுக்கு மட்டுமல்ல அனைத்து மொழியினர் இடையேயும் இருப்பது! திமுக மட்டுமே அதற்கு உரிமை கொண்டாடும் சிறுமை அதனிடம் எப்படி இருக்க முடியும்?

மூவேந்தர் காலத்தில் இல்லாத தமிழ்த் தேசிய உணர்வு - அய்ரோப்பாவில் நிகழ்ந்த கலை, இலக்கிய மறுமலர்ச்சியின் தாக்கம் உரு வானதற்கும் பிறகு தோன்றிய கருத்தியல் என்று வரலாறு கூறுவது விஜயனுக்குத் தெரியா மல் இருக்கலாம். ஆனால் திமுகவுக்குத் தெரியும். திமுக ஒரு சுதேசிய அரசியல் இயக்கம். அது தன்னையும் காத்துக் கொள்ளும். துணை நிற்ப வரையும் காப்பாற்றும். தமிழ் உணர்வில் திமுக எல்லாரையும் விட வலிமை வாய்ந்ததாக இருக்கிறது; எனவே வாழ்கிறது. திமுக மீது விஜயன் குற்றம் சாட்டுவதாக நினைத் துக் கொண்டு குழவிக் கல்லை எடுத்து இடித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் நட்டம்; திமுகவுக்கு அல்ல.

திமுகவுக்கு எதிராக இன்று குரல் கொடுப்பவர்கள் பற்றி விஜயன் எழுதுகிறார். அவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. எங்கள் பாதிப்பால் உருவானவர்கள். நாங்கள் விவேகம் காட்டுகிறோம். அவர்கள் சற்று வேகம் காட்டுகிறார்கள். அவ்வளவே!

மேதைமைமிக்க விஜயனுக்கும் தினமணிக்கும் சொல்லிக் கொள்கிறோம். பிரிட்டனின் Union Jack கொடியைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் மூன்று சிலுவைகள் தெரியும்.Jack - என்றால் கொடி; Union என்றால் ஒன்றியம்; ஒருங்கிணைப்பு தானே! பிரிட்டனில் என்ன ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

அக்கொடியில் (1) இங்கிலிஷ் காரர்களின் புனித ஜார்ஜ் ஆலயத்தின் சிலுவை வெள்ளைப் பின்புலத்தில் சிவப்பாய் இருக்கும் 2) அடுத்தது ஸ்காட்லாந்தின் புனித ஆன்ரூ (St. Andrew) தேவாலயத்தின் சிலுவை நீலப் பின்புலத்தில் வெள்ளை நிறமாய் இருக்கும். 3) அயர்லாந்தின் புனித பாட்ரிக் சிலுவை வெள்ளைப் பின் புலத்தில் நீல நிறமாய் இருக்கும். மூன்று தேசிய இனங்களை ஒரே கொடியில் இணைத்து ஒரே நாடாக பிரிட்டன் இன்றளவும் திகழ்ந்து வருகிறது.


இன்றும் இங்கிலிஷ்காரர்கள், ஸ்காட்லாந்துகாரர்கள், அய்ரிஷ்காரர்கள் சந்திக்கிற போது தேசிய இனத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதைப் போல திமுக தனது தேசிய இனத்தைச் செருக்கோடு சொல்லிக் கொள்கிறது. அதை நிலைநாட்டப் பணியாற்றியும் வருகிறது. ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க முயற்சியும் செய்கிறது.

தமிழ் உணர்வு என்பது இயற்கையில் இருப்பது. அதை திமுக கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்ததாக விஜயன் கவலைப்படுவது ஏன்? திமுககாரனுக்கு தமிழ் உணர்வு என்பது - இன உணர்வு என்பது இயற்கையில் இயல்பாக அமைந்தது. திமுக என்றால் - திராவிட இயக்கத்தவன் என்றால் தமிழ் இன உணர்வாளன் என்று சொல்லாமலே பெறப்படும். மொழிவழி தேசிய உணர்வை கலை, இலக்கியப் புரட்சி ஊட்டுவித்தது. அதை திமுக அதன் கொள்கை, குறிக்கோள், நோக்கம் என்பதன் உள்ளடக்கமாக வரித்துக் கொண்டது. அதனால் தான் தமிழகத்தில் அது முதல் இடத்தை இன்னமும் வகிக்கிறது. அதே நேரத்தில் கடுமை யான தாக்குதலுக்கும் உட்படுகிறது. இதை விஜயன்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1971-ஆம் ஆண்டு தேர்தலின் போது தினமணி ஆடிய ஆட்டத்தை இப்போது மீண்டும் ஆட முயற்சிக்கிறது. அதற்கு விஜயன்களைப் பொறுக்கி எடுத்து வைக்கிறது. வரலாறு தெரியாத விஜயனும் வம்பை வளர்க்கும் தினமணியும் திமுகவை வெற்றி கொள்ள முடியுமா? திராவிட இயக்கத்தைத் தான் வீழ்த்த முடியுமா?

--------------- க.திருநாவுக்கரசு -"விடுதலை" ஞாயிறுமலர் 28-3-2009

0 comments: