Search This Blog

19.3.09

'விடுதலை' ஏடு நம் அய்யா தந்த அறிவாயுதம்
அய்யா, அம்மா மறைந்த பின்பும் இயக்கச் சாதனைகள்
பவளவிழா காணும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான

'விடுதலை'யைப் பரப்பிட வீறுகொண்டெழுவீர்!

தமிழர் தலைவர் அறிக்கை


தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைந்த நிலையிலும், இயக்கம் ஆற்றி வரும் பணிகள், சாதனைகள் பற்றியும், பவளவிழா காணும் விடுதலை நாளேட்டை நாடெங்கும் பரப்பிட வேண்டியதன் அவசியம் குறித்தும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பின்னர் (16.3.1978 மறைவு நாள்) என்னைப் பொறுப்பேற்க தலைவர்கள் இருவரும், எனது தோழர்களும் ஆணையிட்ட, பணித்த நாள் 1978 மார்ச் 18 ஆம் தேதி ஆகும்.

அம்மா மறைவுக்குப் பின்

31 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன! கடந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன்.

கடக்கவேண்டிய தூரத்தினை எண்ணிப் பார்க்கிறேன்.

'பெருமூச்சு' என்னை அயர்வில் தள்ளிடவில்லை. பெருஉற்சாகம், என்னை சளைக்காமல், சலிப்புக் கொள்ளாமல் ஓடிக் கொண்டே இரு என்று கட்டளை இடுகிறது!

31 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு -அன்னை யாரால் கழகத்தை விட்டு விலக்கப்பட்டவர்கள் போட்ட வழக்கினை எதிர் கொண்டேன். இல்லை . . . இல்லை. எதிர்கொண்டோம். முகத்துக்கு முன்னால் புன்னகைத்துவிட்டு பிறகு முதுகில் குத்திய முனை மழுங்கிய துரோகத்தினையும் சந்தித்தோம்!

என் உயரம் குள்ளமா னது என்றாலும் கள்ளமான உள்ளத்துக்குச் சொந்தக் காரனல்ல நான். என்னை தம் தோளில் அமரவைத்து சுமந்த, சுமக்கும் என்னருந் தோழர்களின் தோள்வலி மையே என்னை துவளாத பணியாற்றத் தூண்டிய வண்ணம் உள்ளது அன்றும் - இன்றும் - என்றும்!

அறிவு ஆசான் அய்யாவும், அம்மாவும் வைத்த நம்பிக்கை எனது மூலதனம் - உழைப்பு அத்துடன் இணைந்து வரும் வட்டியால் கிட்டும் லாபம்!

வஞ்சனை அறியாது, வஞ்சகம் இல்லாது, இலட் சியப் பயணத்தில் கடும் சூறாவளிகளையும் சுனாமி களையும் சந்தித்து நாளும் உறுதியை, ஊர்தியாக்கி, தடை பல என்றாலும் தளராது சென்று கொண்டே உள்ளோம்!

அறக்கட்டளைக்கு
ஏற்பட்ட சவால்கள்


அய்யாவின் அறக்கட்டளையை, அக்கிரகார சுறாக்கள் விழுங்க நினைத்ததை எதிர்த்து, வருமான வரித் துறை வழக்குகளில் வெற் றியை ஈட்டி, அய்யா, அம்மா சந்தித்த இடர்ப்பாடுகளை இல்லாதனவாக்கியதோடு, பின்னோக்கிய 10 ஆண்டு கால அங்கீகாரம் - அதன் பிறகு அறக்கட்டளை என அங்கீகாரம் - வருமான வரித்துறையினரால் புதைக் கப்பட்டதோ இவ்வறக்கட்டளை என்று பலரும் நினைத்தது மாறி,

விதைக்கப்பட்ட விதை நெற்கள் வீரியத்துடன் முளைத்துக் கிளம்பி, விவேகத்துடன் அறுவடை செய்ய வாய்ப்பளித்த ஒரு புதுதிருப்பம்!

அய்யா விரும்பிய
கல்விப் பணி!


அய்யா அவர்கள், கல்விக்கண்ணை அனைவருக்கும் அளித்திட நாடு முழுவதும் மாறிட வேண்டும்; மாற்றிடும் ஆட்சி வேண்டும் என்று ஒரு புறம் நினைத்தாலும் கூட, தமது செல்வமும் கூட அது போல பள்ளிகள் சில வைப்பதற்குப் பயன்பட வேண்டும் என்று கருதிய வர்கள் என்றாலும், அவர்களது காலத்திற்குப் பின் கல்லூரிகள் பல அவர்தம் அருட்கொடையால் மலர்ந் துள்ளன; பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமாகவும் வளர்ந் தோங்கி நிற்கின்றது!

அனைத்திந்தியாவிலும் இதன்கல்விப் பணி படர்ந்து விரிந்துள்ளது!

பெரியார் என்ற ஈர்ப்புச் சொல்லை கனடா முதல் அமெரிக்கா போன்ற பற்பல நாடுகளும் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ள இக்கல்வித் தொண்டே ஒரே வழி என்பதால், நமது பணி அந்த இலக்கை நோக்கி ஏறுநடை போடு கிறது!

101 காலணாக்களாகத் திரட்டிய நன்கொடையில் இருந்து பல கோடியாக, மக்கள் இன்று தரும் நன் கொடைகள், உரம் போல, இப் பயிர் - தொண்டறம் - வளர உதவி வருகின்றன!

கலைஞர் ஆட்சியின் சாதனைகள்

இயக்கக் கொள்கைகள் - இலட்சியங்களில் நமது நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது செயலுருவில் சட்டமாக்கி அனைத்து ஜாதிகளிலிருந்தும் அர்ச்சகப் பயிற்சி யாளர்களைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்கி விட்டார் நமது வாராது வந்த மாமணியான வைர நெஞ்சர் முதல்வர் கலைஞர் அவர்கள்!

மதவெறிச் சக்திகள் மண் கவ்விடவும், சமூக நீதிக் கொடி பட்டொளி வீசிப்பறந்திடவுமான வெற்றிக் காற்று வீசிடும் நிலை உள்ளது என்பதை அனைத்திந்தியாவும் அறிந்திடும் நிலை ஏற்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில், 69 சத விகித இட ஒதுக்கீடு, இஸ்லாமியருக்கென தனி ஒதுக் கீடு, அருந்ததியர்களுக்கு என்று வரலாற்றில் முதன் முறையாக தனி ஒதுக்கீடு - இப்படி பற்பல வெற்றிகள்!

அய்.அய்.டி. போன்ற கர்ப்பக்கிருகங்கள் திறக்கப்பட்டன

அனைத்திந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு -1951 இல் அய் யாவின் போராட்டத்தினால் முளைத்த வெற்றி முதல் திருத்தம் என்றாலும் அதனைச் செயல்படுத்தி விட வில்லை ஆதிக்கச்சக்தி கள்! அமைச்சர் அர்ஜுன் சிங் முயற்சியாலும், முதல்வர் கலைஞர் அவர்களது வற்புறுத்தலாலும், சமூகநீதி சக்திகளின் இடையறாத போராட்டங்களாலும்,அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்கள் என்ற கர்ப்பக் கிருகங்களி லும் கூட பார்ப்பனரல்லா தார் பிற்படுத்தப்பட்டோருக்குக் கதவு திறந்து 27 சதவிகித இட ஒதுக்கீடு தருவதும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பார்ப்பனச் சக்திகள் தோல்வியுற்றதும் பெரியார் இந்தியமயமாகி உலகமயமாகிறார் என்பதற்கான எடுத்துக்காட்டுகள்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதிர்ச்சியுறு ஆட்சியின் சாதனைகள் தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதற் கொப்பாக விளங் குகின்றன!

பிரச்சாரத்திற்கென நூல்கள் - இரு ஊர்திகள் ஊர்தோறும் வலம் வரும் - நகரும் விற்பனைக் கூடங்களுக்கு நல்லதொரு வரவேற்பு பொதுமக்களிடையே!

இஃதன்றி, பெரியார் விற்பனைப் பேரியக்கத்தின் மிகச் சிறப்பான சாதனையாக்கும், சலியா உழைப்பினரான, பாராட்டுதலுக்குரிய திராவிட மாணவக் கண்மணிகளும், இளைஞரணிப் பொறுப்பாளர்களும் எந்த இயக்கமும் பெற்றிடாத பெரும் அணிகலன்கள்!

தந்தை பெரியாரின் "பகுத்தறிவு ஏன்? எதற்காக?" நூலை ஒரு மாத இடைளியில் 10 ஆயிரத்தினையும் தாண்டி பரப்பினர்;

"அய்யாவின் அடிச்சுவட்டில்" நூலின் பிரதிகளை இதுவரை 20 ஆயிரம் விற்று வரலாறு படைத்து இனியும் 32 ஆயிரம் என்ற இலக்கினை நோக்கி தேனீக்களாகப் பறக்கின்றனர்.

அவர்தம் முயற்சி ஒரு புது வியூகம் அல்லவா!

கொள்கை - கருத்து மணம் பரவ இதைவிட எடுத்துக்காட்டான முயற்சிதான் வேறு உண்டோ!

பவளவிழா காணும் 'விடுதலை' ஏடு!


'விடுதலை' ஏடு நம் அய்யா தந்த அறிவாயுதம் அல்லவா!

அது வரும் ஜூனில் 75 ஆம் ஆண்டு பவளவிழா காணவிருக்கிறது.

பகுத்தறிவு நாளேடு ஒன்று, பவளவிழா காணு வது ஓர் அமைதிப் புரட்சி யல்லவா!

உலகப் பகுத்தறிவாளர் - மனிநேய அமைப்பின் மேனாள் தலைவரான நார்வே நாட்டு லெவி பிராகல் (Levy Fragul) அவர்கள் டில்லியில் பேசும்போது பெருமையுடன் குறிப்பிட்டார்:

"உலகிலேயே பகுத்தறி வாளர்கள் - நாத்திகர்கள் நடத்தும் ஒரே நாளேடு விடுதலை என்பது சரித்திரச் சாதனை" என்று.

அவ்வேட்டின் திருச்சி பதிப்பு வெற்றியுடன் நடைபோடுகிறது!

அடையாறு ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகள் போல் விடுதலை ஏட்டைத் தாங்கும் இயக்க வேர்களாகிய எம் தோழர்களும், இன உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் என்றென்றும் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

'விடுதலை' பரப்புவதே எம் விழுமிய தொண்டு என்று வீறுகொண்டு உழைக்க இப்போதே திட்ட மிடுங்கள். புதுப் பொலிவுடன் மேலும் பல பக்கங்களுடன் "விடுதலை" வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் இந்த எளியவனின் நன்றி! நன்றிக்கு மேல் நன்றி கோடி!!


-----------------------"விடுதலை" 19-3-2009

1 comments:

Unknown said...

//தந்தை பெரியாரின் "பகுத்தறிவு ஏன்? எதற்காக?" நூலை ஒரு மாத இடைவெளியில் 10 ஆயிரத்தினையும் தாண்டி பரப்பினர்;

"அய்யாவின் அடிச்சுவட்டில்" நூலின் பிரதிகளை இதுவரை 20 ஆயிரம் விற்று வரலாறு படைத்து இனியும் 32 ஆயிரம் என்ற இலக்கினை நோக்கி தேனீக்களாகப் பறக்கின்றனர்.//

அரிய சாதனைதான்