Search This Blog

6.3.09

அறிவுக்கு ஒவ்வாத மதத்தை தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன்!
எருமை மாட்டு வாகனக் கவர்ண்மெண்டுக்கு எப்படித் தம்பி பிடிக்கும் ?புராணத்தில் கூறப்படும் உலகங்கள் எத்தனை தெரியுமா? ஈரேழு பதினாலு லோகங்கள். அதாவது மேலேழு, கீழேழு; அவற்றின் பெயர்களே அதல, விதல, சுதல , தராதல்.... பாதாள, கேதாள என்று போகும். எல்லாம் தலதாளதான். இந்த 14 லோகங்களிலுமுள்ள ஈ, எறும்பு, பொட்டு, புழு ஆகிய சகல ஜீவராசிகளுக்கும் எஜமானன் எமன் ஒருவன்தான்.

ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவன் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால், தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம். பாசக் கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இதையெல்லாம் கேட்பது மதத்திற்கு விரோதமென்றால், அப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மதத்தை தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன். வீணாக எங்கள் மீது சுமத்தி ஏன் எங்கள் உயிரையும் வாங்குகிறாய் என்றுதான் கேட்கிறோம். இப்படி எல்லாம் பேசுவது நமது அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லையாம்.பின் எப்படிப் பிடிக்கும் ஒரு எருமை மாட்டு வாகனக் கவர்ன்மெண்டுக்கு இச்சீர்திருத்தக் கருத்துக்கள்?

அறிக்கை அனுப்புகிறார்களாம் பள்ளி ஆசிரியர்களுக்கு, புராணங்களிலுள்ள ஆபாசங்களைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறாதே! மதத்தைப் பழிக்காதே என்று. அத்து மீறினால் தண்டிப்பார்களாம் இவர்கள். `அத்து மீறினால்` என்றால் என்னப்பா அர்த்தம்? அத்து என்பதற்கு அளவென்ன? அதற்கு அளவு ஏற்படுத்துவது நீயா? நானா? ஏனப்பா அரைகுறை சுயராஜ்யத்தை வைத்துக் கொண்டே ஆனமட்டும் பதைக்கிறாய்?

உஷாராய் இருங்கள்! இல்லாவிட்டால் என்ன செய்வோம் தெரியுமா? பத்திரம், ஆட்சி எங்களிடம் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்களாம். ஏம்பா எங்களை இப்படிப் பயமுறுத்துகிறாய்? நாங்களென்ன சின்னப் பொடிப்பசங்காளா. உன் பயமுறுத்தலுக்குஅஞ்சி ஓட? இல்லையானால் எங்களை என்ன முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு பேசுகிறாயா? உங்கள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டு இவ்வளவு ஆணவமாக உளறி வருகிறீர்கள்? ஏதோ பதவி பெற்றுவிட்டதால், கொஞ்சம் பணக்காரர்களாகி வருகிறீர்கள் என்றால், தாராளமாய் பணக்காரர்களாகுங்களேன்! நாங்களொன்றும் அப்படி உங்களிடம் பங்கு கேட்க வரவில்லையே! கொஞ்சம் ஜாக்கிரதையோடு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிழையுங்கள். கோயிலுக்கும் குளத்திற்கும் கொடுத்துக் குட்டிக் சுவராகாதீர்கள் என்று தானே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இதுவா பாவம்! உங்கள் சிந்தனைக்கு விண்ணப்பம் செய்து கொள்வதா பாவம்! நீங்களே சிந்தித்து விடைதாருங்கள்.


-------------நூல்:-கே.வி. அழகிரிசாமி -"இதோ பெரியாரில் பெரியார்" பக்கம்:-24-25

1 comments:

Unknown said...

//ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவன் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால், தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம். பாசக் கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.//

பிள்ளையாருக்கு வாகனம் எலி,
முருகனுக்கு மயில்
முட்டாள்தனத்திற்கு அளவில்லாமல் கதையளக்கிரார்கள்.தமிழனும் மண்டையாட்டி ஆமோதிக்கிறான்.
சிந்தியுங்கள்.