Search This Blog

22.3.09

திராவிடர்களாகிய நமக்கு இழிநிலை மாறவேண்டும்


ஓய்வெடுத்திருந்தால் செத்திருப்பேன்!

என் சுபாவம், நான் எந்தக் கட்சிக்குப்போனாலும், நான் எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும், எதில் தலைமை வகிக்க நேரிட்டாலும், அந்த இயக்கத்தை என் சொந்த இயக்கம்என்றும், பெரியவர்கள் அதைக் காப்பாற்ற என் வசம் கொடுத்தது என்றும் கருதுவது வழக்கம். கட்சியில் உள்ள மற்றவர்களும், இருக்க ஆசைப்படுபவர்களும் பின்பற்ற வேண்டியது அவர்கள் கடமை என்றும் எண்ணுவது என் வழக்கம். அப்படி எண்ணுவதால் தான் நான் இவ்வளவு பாடுபட முடிகிறது என்பதோடு இவ்வளவு உற்சாகமும் பொறுப்பும் உடன்பாடுபடவும் எனக்குப்படுகிறது.

நான் பொதுவாழ்வில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டு நிம்மதியாய் - பத்தியமாய் இருந்தாலொழிய இனி 4,5 வருசத்துக்குக் கூட உயிருடன் இருக்கமாட்டேன் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். அப்படி இருந்தாலும் ஒரு வேலையும் செய்ய இலாயக்கில்லாமல் உயிரோடு இருப்பதும் சரி, வேலை செய்துகொண்டே இருப்பதன் மூலம் சாவதும் சரி என்று கருதியே வேலைசெய்கிறேன், அலைகிறேன், நோய்வாய்ப்பட்டுத் தொல்லைப்பட்டுக் கொண்டும் சுற்றுகிறேன். இப்பொழுதும் வயிற்றினுள் ஏதோ ஒரு அவயவம் வீங்குவதைத் தெரிந்துகொண்டே பேசுகிறேன். இதன் காரணமென்ன? இந்த இயக்கம் என் சொந்தச் சொத்து, இதற்கு என்னைத்தவிர, வேறு யாரும் எனக்கு மேல் பொறுப்புக் கொண்டவர்கள் இல்லை. ஆதலால் நாம் சும்மாவோ, அலட்சியமாகவோ அல்லது லாப நஷ்டம் பார்த்துக்கொண்டோ இருப்பது துரோகமும் இழி தன்மையுமான காரியம் என்று கருதுவதேயாகும். இந்த நிலையில் தான் நாம் இந்துக்கள் அல்ல என்பதையும் நமக்குத் திராவிடநாடு அமையவேண்டும் என்பதையும் உங்களை ஏகமனதாக ஒப்புக்கொள்ளும்படி செய்தேன்.அதற்கு வேலை செய்யவோ வழிகோலவோ வேண்டிய கடமையும் பொறுப்பும் என்னைவிட வேறு யாருக்கு இருக்குமென்று கருதிப் பொறுப்பை அவர்கள் தலைமையில் போட முடியும்? ஆகவே, இலட்சியத்தை ஈடேற்ற என் உழைப்பும் பொறுப்பும் எனக்கு அதிக உரிமையைக் கொடுப்பது இயற்கைதானே. அந்த முறையிலே சொல்லுகிறேன், நாம் திராவிட நாட்டை அடைந்தே தீரவேண்டும். அதுவும் இந்துக்கள் அல்லாதவர்களாக இருந்தே அதை அடையவேண்டும். அப்படி நாம் அதை அடையாவிட்டால் நமக்கு ஜஸ்டிஸ் கட்சி வேண்டாம், சுயமரியாதைக் கட்சி வேண்டாம், காங்கிரஸ் கட்சியே போதும்.

நமது இலட்சியம் ஒன்றே ஒன்று தான் . அதாவது திராவிடர்களாகிய நமக்கு இழிநிலை மாறவேண்டும் என்பது தான். அந்த இழிநிலையால் தான் சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டு, மற்ற துறையிலும் கேடடைந்திருக்கிறோம் என்பதேயாகும்.
நாம் பிறக்கும் போது இந்து சம்பிரதாயப்படி கீழ்ச்சாதியாய் பிறந்தது என்னவோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. அதை மாற்றிக்கொண்டு பிறக்கவும் நம்மிடம் யாதொரு சக்தியும் இருந்ததில்லை. ஆனால், நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமலும் நம் பின் சந்ததி இழிவான பிறப்பாய்க் கருதப்படாமலும் இருக்கும்படியாக நடந்துகொள்ளத்தக்க சக்தி நம்மிடம் இருக்கிறது. அதை நாம் செய்யாவிட்டால் நாம் இழிவை நீக்கிக்கொள்ள ஆசைப்பட்டவர்களோவோமா? நம்ம செல்வ வான்களுக்கும், அறிவாளிகளுக்கும் இந்தக் கவலை முதற்கவலையாக இருந்திருக்க வேண்டியது மிகவும் நியாயமான காரியமாகும்.


சம்பாதிப்பதே முடிந்த முடிவா?


கக்கூஸ் எடுக்கும் தோழனுக்கு மல நாற்றமும், மலஅசூயையும் நமக்குள்ளதுபோல் எப்படி இருப்பதில்லையோ அதுபோல் பணத்திலும், பெருமையிலும் மாத்திமே முக்கிய ஆசைகொண்ட பெரியோர்களுக்கு அறிவு ஆற்றல் இருந்தாலும் அவர்களுக்குள்ள அவர்கள் அனுபவித்துவரும் இழிவும் தாழ்வும் தோன்றாதது இயற்கையேயாகும்.

மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக்கூடியதல்ல. அவன் காலத்திலே மாறும். அவன் சந்ததி காலத்திலும் மாறும். ஆகவே அவற்றைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம். யோக்கியமும், அறிவும் உள்ள அரசியல் ஏற்படுமானால் பெரிய உத்தியோகம், பெரும்பாட்டம், ஜமீன், இராஜா, மகாராஜா, பதவிகள் எல்லாம் பற்ந்துவிடும் என்பது நினைக்க முடியாத காரியமா என்று கேட்கின்றேன். அப்படியிருந்தும் அதற்கே பாடுபடுகிறவர்கள் அதிலே கவலை உள்ளவர்கள் அதற்காகவே எந்தக் கட்சியிலும் யோக்கியமாய் நடந்து கொள்ளாதவர்கள் இருந்து போகட்டும். அப்படிப்பட்டவர்கள் அவர்களில் ஆற்றல் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும்? விரல் மடக்க ஆரம்பித்தால் எல்லா விரல்களையும் மடக்க முடியும் என்றா கருதுகிறீர்கள்?

இவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, இழிவை ஒழிப்பதற்காகவே பிறந்தோம் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் தப்பித்துக்கொள்ள முடியுமா? பணம், பதவி, புகழ், பெருமை, விரும்பாத ஒரு பொதுத்தொண்டன் எனப் பீத்திக்கொள்ளுகிறவர்கள் சும்மா இருக்க முடியுமா? என்று கேட்கிறேன்.

முதல் பந்தியில் இருந்திருப்பேன்!

என் காலம் முடிவடைந்து விட்டது என்றுஅறிந்து கொண்டதாகக் கூறும் நான் அது முடிவுபெறுவதற்கு முன் ஏதாவது செய்துவிட்டுப் போக வேண்டாமா? அல்லது என்னை உண்மையாகச் சுயநலமில்லாமல் கவலையோடு பாடுபடுகிறேன் என்று கருதி என்னைப் பின்பற்றும் உங்களில் சிற்சிலருக்காவது ஏதாவது ஒருவழிகாட்டிவிட்டுப் போகவேண்டாமா? என்று கருதுகின்றேன்.

நீங்கள் என்னைப் பின்பற்றுவதற்கு முன் என் எண்ணத்தையும், நடத்தையையும் பரிசோதிக்க வேண்டியது அவசியம்தான். என் யோசனையையும் ஆராயவேண்டியது அவசியம்தான். கண்மூடிப் பின்பற்றுங்கள் என்று நான் சொல்லவில்லை. என் எண்ணத்தைப் பரிசோதித்து என்னைத் தலைவராக்கிக் கொண்டு என் யோசனைகளைப் பரிசோதித்து ஏற்றுக்கொண்டு பிறகு உங்களால் உங்கள் சக்தியால் பின்பற்ற முடியவில்லை என்பதற்காக மாறுபாடாகப் பேசுவது இழிதன்மையாகும். பொறுப்பேற்றுக்கொள்ளத் துணிச்சலோ, இஷ்டமோ இல்லாமல் என்னை உங்களின் சொந்த லட்சியத்திற்கு உங்கள் கையாளாக உபயோகித்துக் கொள்ள நினைப்பது மிக மிக இழிவான காரியமாகும் என்பதோடு ஒரு மாபெரும் சமூகத்துக்கும் துரோகம் செய்தவர்கள் ஆவீர்கள்.

குறைந்தது 30 வருடகாலமாக நான் நம் சமுதாய நிலை மாற வேண்டுமென்றே கவலை கொண்டவனாக இருந்துவருகிறேன். எந்த சொந்த நலனுக்கு-பணத்துக்காக ஒரு நாளும் கவலைப்பட்டது கிடையாது. கவலைப்பட்டிருந்தால் என் தொழிலில் நான் தமிழ்நாட்டில் நம்மியக்கத்தில் இருக்கும் பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆளாய் இல்லாவிட்டாலும், முதல்பந்தியில் இருந்திருப்பேன்.
இன்றும் பணக்காரர்களுடன் கசப்பு மருந்து சாப்பிடுவதுபோலத் தான் புழங்குகிறேனேஒழிய, அவர்களிடம் எனக்குப் பக்தியில்லை.

100க்கு 99 முக்கால் பேர்

உடலைக் காப்பாற்றவோ என் கவுரவத்தைக் காப்பாற்றவோ எனக்கு எப்போதும் கவலை இருந்ததில்லை. காரியத்தை விட தங்கள் உடல் நலமும் சுகமுமே எப்போதும் பெரிதென்பவர்களிடமோ கவுரவத்திற்கு பிறகுதான் அவரவர்கள் வீட்டுக் காரியத்திற்கு பிறகுதான் பொதுத்தொண்டு என்கின்றவர்களிடமோ எனக்கு எப்போதும் அசூயையும் அவநம்பிக்கையும் உண்டு. ஆனால் அவர்களை வெளியாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்போதும் கிடையாது. ஏனெனில் 100-க்கு 99 முக்கால் பேர் அப்படித்தான். ஆதலால் அவர்களை நாம் குறை கூறவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை.

ஆனால் அவர்கள் நம் கிட்டத்தை ஏற்றுக்கொள்ளாமலும் நம் மீது அதிகாரம் செலுத்தவும், குற்றம் கூறவும் மாத்திரம் வரும்போது தான் அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பற்றுதலும் நம்மை அறியாமலே நழுவுகிறது.

இயக்கத்துக்கு அதிகாரம் செலுத்துகிறவர்கள்

இயக்கத்துக்கு அதிகாரம் செலுத்துகிறவர்கள் இயக்கத்துக்கு தாங்கள் செய்த தொண்டு,செய்த செலவு, பட்ட கஷ்டம் என்ன? அவைகளுக்காக தாங்கள் அடைந்த இலாப நஷ்டமும் என்ன? இயக்கத்துக்கு தங்களுடைய திட்டம் என்ன? எந்த அளவுக்கு தங்களால் முன்னுக்கு வரமுடியும்? என்பதையும், தாங்களும் தங்கள் நண்பர்களும், தனித்து ஏகாந்தமாய் பரவசத்தில் இருக்கும் போது மற்றவர்களைப் பற்றியும்,உண்மையாய்ப் பாடுபடும் உழைப்பாளிகளைப் பற்றியும் என்ன பேசிக்கொண்டார்கள்,என்ன திட்டம் போட்டார்கள் என்பதை எல்லாம் யோசித்தும் பார்த்துப் பேசவதை நாம் ஆட்சேபிக்கவில்லை.

இயக்கத்துக்கு வேண்டியவர்கள்

சுயமரியாதை-ஜஸ்டிஸ் இயக்கம் ஏதாவது பொதுமக்களுக்குப் பயன்படவேண்டுமானால், அது பொதுமக்கள் இயக்கமாக இருக்க வேண்டுமானால், புரட்சிகளை உண்டாக்க வேண்டுமானால் சமயத்தை தாக்கவோ, சர்க்காரைத் தாக்கவோ, கிளர்ச்சி செய்யவோ, சாதாரண மனிதரைப்போல் நடக்கக்கூடியவர்களைத் தவிர மற்றவர்கள் முன்னணியில் இருக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

செல்வந்தவர்கள், அறிவு ஆற்றல் உள்ள பெரியோர்கள் நம் இயக்கங்களுக்கு அவசியம் வேண்டும். உதவி செய்யவே தவிர ஆட்சி செலுத்த அல்ல என்பதை உணரவேண்டும்.
அரசாங்கத்தார் ஜஸ்டிஸ் கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதிலுள்ள செல்வர்களையும் அறிவாளிகளையும், ஆற்றலுள்ளவர்களையும் தனித்தனியாகப் பிரித்து ஒருவருடன் ஒருவர் போட்டி போட, ஒருவரை ஒருவர் வெறுக்கச்செய்து விட்டதோடு, கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களையே காப்பாற்றிக்கொள்ளும்படி செய்துவிட்டார்கள். கட்சியை மதிக்கவேண்டிய அவசியம் இல்லாமலும் செய்துவிட்டார்கள். இந்த நிலையில் நாம் இனி இப்படி நேராதபடியும் செய்ய வேண்டும்.

இப்போது செய்யவேண்டியது

நம் கட்சி இப்போதே தலைவர்களோ, பின்பற்றுபவர்களோ அவசியமில்லாத நிலையில் நடந்துசெல்லும்படியான தன்மைக்கு வந்துவிட்டது.
யாரைக்கேட்டாலும் சுயமரியாதை இயக்கம் என்றால் கடவுள்களையும், மதங்களையும் ஒழிப்பதுதானே என்றும் ஜஸ்டிஸ் கட்சி என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதுதானே என்றும் பெரிய புராணத்தையும், இராமாயணத்தையும் விட அதிகமான பேருக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே இந்த இரு கட்சிக் கொள்கைகளும் இப்போது மக்கள் விபூதியும், நாமமும் போட்டு கொள்வதற்கு எப்படி ஒரு தலைவரும், ஒரு இயக்கமும், பிரசாரமும் இல்லாமல், காரியம் நடந்து வருகிறதோ அதுபோல் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இவை வேலை செய்துகொண்டும் முயற்சி நடந்துகொண்டும் வருகிறது. ஆதலால் இனி இந்தக் காரியங்களுக்காகக் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் இவர்கள் சறுக்கி விழுந்து விடாமலும், மறுபடியும் ஏமாற்றப்படாமலும் இருப்பதற்கு ஒருவழிகாட்டப்படவேண்டும் என்பது என்கவலை. அப்போது தான் நிலை நிற்கும். அதற்கு ஆவன செய்யவேண்டும். அது என் மீது பட்ட பொறுப்பு என்றும் கருதுகிறேன்.

அதற்காக நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளுங்கள். நன்றாய் ஆர அமர யோசியுங்கள். யோசித்து முடிவுக்கு வாருங்கள்; வந்தது சரியென்றுபட்டால் துரோகம் செய்யாதீர்கள். ஏனெனில் இது மிக முக்கியமான காரியமாயிருந்தாலும், பெருத்த ஒரு புரட்சியாகத் தோன்றக்கூடிய காரியமாயிருந்தாலும், நம்இழிவைப்போக்கி கொள்ள உண்மைப் பரிகாரம் தேடுபவருக்கும், அறிவாளிகளுக்கும் சுயமரியாதைக்காரர்களுக்கும், மிகச் சாதாரண காரியமாகும்.

என்னவெனில், நாம் மனிதத் தன்மையும், மானமும் பெறத் திராவிட நாடு பெறவேண்டும். அதற்காகத் திராவிடர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஒன்றாய்ச் சேரவில்லையானால் சேராததாலோ, வேறு காரணத்தாலோ நமக்குத் திராவிடநாடு பிரிந்து கிடைக்கவில்லை யானால் என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கவலையில்லாமல் விட்டு விட்டு இருக்கிற நிலையில் பேசாமல் இருந்து விடுவாதா? அன்றியும் நம் எதிரிகள் பழிவாங்கப் போவதற்கு நாம் ஆளவதா? சண்டை முடிந்த (பிரிட்டிஷாரே வெற்றி பெறுவார்கள்) பிரிட்டிஷ் வெற்றி பெற்றாலும் சரி, ஜப்பான், ஜெர்மனி, வெற்றி பெற்றாலும் சரி, (திராவிடநாடு கிடையாதவரை) எந்த ஆட்சியிலும் பார்ப்பான் தான் ஆதிக்கத்திற்கு வருவான். இந்த கல்லுப் போன்ற பட்டப்பகல் போன்ற உறுதி.


-------------------------25.4.43இல் நடைபெற்ற திருச்சி ஜில்லா - 14 ஆவது ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிடநாட்டுப் படத்தை திறந்து வைத்தபோது தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
- விடுதலை 28.04.1943.

0 comments: