Search This Blog

13.3.09

தந்தைபெரியார் ஏற்றி வைத்த பகுத்தறிவு ஒளிவெற்றிச் சின்னம்


மற்றொரு முக்கிய நிகழ்வையும் குறிப்பிட வேண்டும். அதற்கு முன் ஈரோடு நகராட்சியின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் விடுதலை ஆசிரியர் - கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனக்கும் நகர மன்றத்தில் வரவேற்பு கொடுத்தார்கள். நான் பெற்ற முதல் நகரசபை வரவேற்பே ஈரோட்டில்தான் என்கிறபோது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. நான் அந்த வரவேற்பினை அய்யாவுக்குச் சமர்ப்பித்தேன். அய்யாவைப் பெருமைப்படுத்துவதோடு அவர்தம் கொள்கைவயப்பட்ட தொண்டர்களையும் ஈரோடு நகரசபை பெருமைப்படுத்தும் அளவுக்கு அய்யாவின் இயக்கம் வளர்ந்து தொண்டாற்றியதற்கு இதைவிட அருமையான அங்கீகாரம் வேறு கிடையாது என்று எனது சுருக்கமான நன்றிவுரையில் குறிப்பிட்டதாக நினைவு.

மாலை நடந்த விழாவில், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், க.ராசாராம், மு.கண்ணப்பன் ஆகியோர் பேசிய பிறகு எனது உரையில் அய்யா, உற்சாகத்துடன் 93 வயதிலும் 23 வயது இளைஞனைப்போல உழைப்பதற்கு மூலகாரணம் - உற்சாகம்; அந்த உற்சாகத்தினைத் தந்தது அணணா - கலைஞர் ஆட்சி என்று அய்யா அவர்களே இவ்வாண்டு விடுத்த அய்யா பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டிப் பேசினேன்.

தந்தை பெரியார்தம் 93ஆம் ஆண்டு சிலை திறப்புவிழாவில் அவருக்கு மிகவும் விருப்பமான வகையில் வயதுக்கு 100 ரூபாய் என்று கணக்கிட்டு 9,300 ரூபாய் பணமுடிப்பும் சிலைக்குழு சார்பில் அளிக்கப்பட்டது அய்யா அவர்களுக்கு மகிழ்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் தந்தது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை உரையாற்றுகையில், வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீறுகொண்டிருக்கிறது. இது நமது இனத்துக் கூட்டம். தமிழினத்தின் வரலாற்றில் பெரியார் அவர்களின் சகாப்தம் என்பது ஒன்று உண்டு என்பதை யாரும் மறுக்க-மாட்டார்கள்.

தமிழினத்தில் பிறந்த மக்கள் இழிஜாதி மக்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள். இதை மாற்றி அமைக்கப் பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள் என்றும், மனித சமுதாயவாதிகள் யாராக இருந்தாலும், இதைப் பாராட்டியாக வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

மேலும் அடிகளார் குறிப்பிடுகையில், பெரியார் அவர்கள் தமக்கு எடைக்கு எடை அளிக்கப்படும் பொருள்களைப் பெறுவதில் அடையும் பெருமையை விட, தனது கொள்கை வழிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்களே என்பதில்தான் அவருக்குத் தனிப்பெருமை என்று குறிப்பிட்டு, பெரியார் அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு மேலும் தொண்டாற்ற வேண்டும் என்பதோடு அவருடைய எண்ணங்கள் அவருடைய தலைமுறையிலேயே நிறைவேறும் காட்சியை அவர் கண்ணாலே பார்க்க வேண்டும், தமிழர்களிடையே ஜாதியற்ற சமுதாயம் ஏழை இல்லை - எவனும் இல்லை என்ற சமுதாயம் பூத்திட தமிழர்கள் நாம் இந்த நாளில் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறினார்கள்.

அமைச்சர் திரு.மு. கண்ணப்பன் உரையாற்றுகையில், இன்றைய தினம் வாழ்நாளிலேயே பெறமுடியாத வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்றும் நமது சமுதாயத்திற்கு தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் ஆற்றிய தொண்டு மகத்தானது என்று குறிப்பிட்டார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.க. ராசாராம் அவர்கள் பேசுகையில், நான் அய்யா அவர்களின் சிலையை கலைஞர் அவர்கள் திறந்திருக்கின்ற காணற்கரிய காட்சியைக் கண்டு பூரித்துப் போகிறேன் என்றும், இப்படி எல்லாம் பெரியார் அவர்களுக்கு விழா நடக்கும் என்று நான் ஒரு காலத்திலும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

நான் ஒரு முறை சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் வார விழா என்று ஒரு விழா நடத்தப்படவேண்டும் என்று கேட்கப்பட்டபோது, தந்தை பெரியார் அவர்கள் நாள்தோறும் கலந்து கொள்ளும் கூட்டங்களும், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாக்களும், கலைஞர் அவர்களின் பேச்சுகளுமே பிற்படுத்தப்பட்டோருக்காக நடைபெறும் விழாக்கள் என்று குறிப்பிட்டேன் என்று பேசினார்கள்.

இங்கு அய்யா அவர்களின் சிலையும், அண்ணா அவர்களின் சிலையும் பக்கம் பக்கம் இருக்-கிறது. அய்யா அவர்களின் கசப்பான மருந்தை அண்ணா அவர்கள் சர்க்கரை கலந்து கொடுப்பார்கள். இலக்கிய நடையில் இனிய மொழிகளில் அய்யா அவர்களின் கருத்துகளையே மக்கள் மன்றத்தில் வைத்தார்கள் என்றும், நான் அய்யா அவர்களின் அந்தரங்கச் செயலாளனாக இருந்திருக்கிறேன் என்றும் அய்யா அவர்களுடன் வெளிநாடும் சென்றிருக்கிறேன். அவருடைய சொத்துகள் எல்லாம் இன்றைக்கு கல்லூரியாகவும், மருத்துவமனைகளாகவும் மாறி இருக்கின்றன. இதை ராஜாஜி அவர்களே ஒப்புக் கொள்கிறார் என்று எடுத்துக் கூறியிருப்பது இன்றைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

அமைச்சர் ப.உ.சண்முகம் அவர்கள் உரையாற்றுகையில், இன்றைய தினம் அரசியல் (கலைஞர்), சமுதாயம் (அய்யா), சமயம் (அடிகளார்) ஆகிய மூன்றும் இன்றைக்கு இனத்தின் அடிப்படையில் ஒரு மேடையில் சேர்ந்துள்ள இடம் ஈரோடு என்பதை மறக்கக்கூடாது.

அரசியலிலும், சமயத்திலும், சமுதாயத்திலும் அய்யா அவர்கள் பெற்ற வெற்றிக்கு இது சிறந்த சின்னம். உலகத்தில் சமுதாயச் சீர்திருத்தம் செய்தவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், பெரியார் அவர்கள் சமுதாயத்துறையில் புரட்சி செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண வெற்றி அல்ல என்றும் ஒன்றை மட்டும் அவருக்குச் சொல்லி வைக்கிறேன். ஈரோட்டில் நாங்கள் ஏற்றிருக்கிற சூளுரையை எந்த நாளும் மறக்க மாட்டோம்.

வருணாசிரம சூழ்ச்சிக்குப் பலியாக மாட்டோம் என்பதை மட்டும் நம் எதிரிகட்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்று இரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டார்கள்.

சிலையைத் திறந்து வைத்து முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் காஞ்சி காங்கிரஸ் மாநாட்டின்போது காங்கிரசில் இருந்து தந்தை பெரியார் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக வேண்டி வெளியேறினார் என்றும், பின்னர் அவரது இயக்கத்திலிருந்து இதே செப்டம்பர் 17ஆம்தேதிதான் திமுக பிரிந்தது என்றும் சமுதாயத்துறையில் தி.க.வும், அரசியல் துறையில் தி.மு.க.வும் செயல்படுவதைக் குறிக்க இரட்டைக்குழல் துப்பாக்கி என்றும் அறிஞர் அண்ணா வர்ணித்தார்.

இப்பொழுது ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நாலரைக்கோடி தமிழர்களில் பெரும்பாலோர், தந்தை பெரியார் அவர்கள் நாமம் போடாதே: விபூதி பூசாதே என்று கூறுவதைக் கேட்டு சங்கடப்படுகிறவர்களுக்குக் கூட தந்தை பெரியார்தான் பகுத்தறிவு ஒளி ஏற்றி வைத்தார்: தமிழர்களுக்குத் தன்மானம் ஏற்படச் செய்தார்: தமிழர்கள் உரிமை பெறவைத்தார் என்பதை ஒப்புக் கொள்வார்கள்.

இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விளக்கேற்றி வைத்து தன்மானச் சுடர் ஏற்றியவர் தந்தை பெரியார் என்பதில் இரண்டுபட்ட கருத்து நாலரைக்கோடி தமிழர்களில் எவரிடமும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்கள்
. காமராசருக்கும், தந்தை பெரியாருக்கும் அரசியலில் மட்டும்தான் உறவு. அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் எத்தனையோ உறவு! இதே ஈரோட்டில் நான் தந்தை பெரியாரிடம் பணியாற்றியிருக்கிறேன்.

இந்தச் சிலைக்கு அடியில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தேன். ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்த யோக்கியமற்ற செயல் இவற்றை நம்புவது மடமை இவற்றினால் பயன் அனுபவிப்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்று எழுதப்பட்டிருக்கிறது. பாரதியார்கூட சொல்லியிருக்கிறாரே! செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றிடுவார் பித்து மனிதர் என்று ஊதடா சங்கம் என்று பாடியிருக்கிறார். இதைப் பாராட்டியவர்கள் பாமரர்களுக்குப் புரியும் வண்ணம் பெரியார் சொன்னால் தவறு என்பதா
?

இப்படி கூறுவது நாத்திகம் என்றால் நானும் ஒரு நாத்திகன் என்பதை ஒப்புக் கொள்கிறேன் - உலகத்தை - ஊரை ஏமாற்றுவதைக் கண்டிப்பதுதான் நாத்திகம் என்றால் தயங்காமல் - பெருமையுடன் கூறிக்கொள்வேன் நான் ஒரு நாத்திகன் என்று. தந்தை பெரியார் புயல் போன்றவர். அந்த அளவு செல்ல எங்களால் முடியாது - என்றாலும் அவரது உள்ளத்தை உணர்ந்து மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, சமுதாய மறுமலர்ச்சிக்கு அரசு ஆயிரம் செலவு செய்தாலும் வளரமுடியாது - தந்தை பெரியார் போன்றவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரம் இல்லையென்றால் என்றார்.

-----------------------நினைவுகள் நீளும்...


--------------------- - கி.வீரமணி -- அய்யாவின் அடிச்சுவட்டில் .... இரண்டாம் பாகம் (14) -"உண்மை" மார்ச் 1-16 2009

0 comments: