Search This Blog

14.3.09

தந்தைபெரியார் கண்ட அதிசய இயக்கம்

உலக அரங்கில் திராவிடர் கழகம் ஓர் அதிசயமான இயக்கம். ஆனால், அதே நேரத்தில் அது மிகவும் அவசியமான இயக்கமுமாகும்.

மற்றவை எல்லாம் வெறும் கட்சிகளாக இருக்கையில் இது ஒன்றே இயக்கமாக இருக்கிறது. மற்றவை எல்லாம் வெறும் அரசியல் நோக்கங் கொண்டவைகளாக இருக்கையில் இது ஒன்றே சமுதாய நோக்கங்கொண்ட இயக்கமாக இருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு அடுத்த தேர்தலைப் பற்றியே பெருங்கவலை. திராவிடர் கழகத்-திற்கோ வாழ்கின்ற தலைமுறையையும் அதற்கடுத்தடுத்த தலைமுறையையும் பற்றியே முக்கியக் கவலையாகும்.

அரசியல் கட்சிகளுக்கு ஆயுள் அற்பமானது. இந்தச் சமுதாய இயக்கமோ மனிதப் புல் பூண்டு உள்ளவரை, அதன் நிழலோடு நிழலாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியது.

கட்சிகளில் உள்ளவர்களுக்கு நடைமுறை வாழ்க்கை நெறி என்று ஒன்று கிடையாது. ஆனால், எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்களோ ஒரு வாழ்க்கை நெறியையே உருவாக்கித் தந்து சென்றிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளில் நல்ல அளவுக்கு ஆதாயம் என்றைக்கும் உண்டு. இங்கோ, தன் வீட்டுச் சோற்றைத் தின்று ஊருக்கு உழைக்கும் போக்குநிலைமை!

சர்க்கரைப் பேச்சுப்பேசி சாதுரியமாக மக்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டைப் பறிப்பதுதான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பொதுத்தொண்டு!

கசப்பான மருந்து தந்து, தேவைப்பட்டால் கத்தியை எடுத்து அறுவை சிகிச்சையும் செய்து, நோயாளியை எப்படியும் பிழைக்கவைக்கும் எதிர் நீச்சல் தொண்டே எங்கள் இயக்கத் தொண்டு.

வீட்டார் எதிர்ப்பு, தெருவார் எதிர்ப்பு, ஊரார் எதிர்ப்பு, உலகத்தார் எதிர்ப்பு என்ற அளவில் எங்களுக்கு இருக்கும் எதிர்ப்பின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும்.

எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பது எங்களது ஆசையா? இல்லை, இல்லை-உண்மையான சமுதாயப் பணி செய்கின்றபொழுது எதிர்ப்பு எங்களைத் தேடி வருகிறது. எதிர்ப்பு வருகிறது என்பதற்காக உண்மைத் தொண்டைவிட்டு ஒதுங்கிக்கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு நியாயமான இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் கஷ்ட நஷ்டம் என்று விலை கொடுத்தாக வேண்டும் என்று எங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்குப் பாலபடமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.


இந்த அடிப்படையிலேயே இந்த இயக்கம் 50 ஆண்டுகாலம் வீரநடைபோட்டு வெற்றி அறுவடைகளை வேகமாகக் குவித்துப் பொன் விழாவையும் கண்டிருக்கிறது என்றால், இது ஒரு அதிசய ஆனால் அதே நேரத்தில் அவசியமான இயக்கமல்லாமல் வேறு என்ன?

எங்கள் இயக்கத்திற்கு எந்தவிதச் சுயநலமோ உள்நோக்கமோ கிடையாது கிடையவே கிடையாது. சுயநலம் இருந்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்க மாட்டோம். எங்களுடைய நோக்கம், இலட்சியம், நாங்கள் எங்கள் வாழ்வை வைத்திருப்பதெல்லாம் எங்கள் அருமைத் தலைவர் மனித குலத்தந்தை பெரியார் அவர்கள் சொல்லிச் சென்ற விட்டுச்சென்ற பணிகளை, கட்டளைகளை எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் அவர் போட்டுத்தந்த பாதையில், பலாத்காரத்திற்குச் சிறிதும் இடமின்றிச் செய்து முடிப்பதைத் தவிர வேறு போக்கோ, நோக்கோ எங்களுக்குக் கிடையவே கிடையாது.

இந்த இயக்கத்திற்கு எங்களை எல்லாம் அழைத்தபோது வெளிப்படையாகப் பத்தியங்களைச் சொல்லித்தான் அழைத்தார் எங்கள் தலைவர். எனவே, இந்த இயக்கத்திற்கு வந்ததற்குப் பின்பு எங்களுக்கு ஏமாற்றமோ அதிருப்தியோ அச்சமோ ஏற்படுவதற்கு எந்தக் கட்டத்திலும் அவசியமில்லாமலேயே போய்விட்டது.

அறிவுக்கு விடுதலை வாங்கித் தருவதைவிட ஓர் உயர்ந்த பணி உலகத்தில் இருக்கிறது என்று எவரேனும் சுட்டிக் காட்டினால், சிரந்தாழ்த்தி அதுபற்றிச் சிந்திக்க நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு விடுதலை வாங்கித் தருவதற்குத்தான் நாங்கள் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்-கிறது. எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை ஏற்க வேண்டியிருக்கிறது. மரணக்கூண்டில் தலைவைத்துக் கிடப்பது போன்ற பணியை அல்லவா எங்கள் தலைவர் அறுபதாண்டுக்கு மேலாகச் செய்து வந்திருக்கிறார்.

இந்த மனிதாபிமானத் தொண்டைச் செய்கின்றவர்களுக்கு, மனிதப்பற்றைத் தவிர வேறு எந்தப்பற்றும் அறவே இருக்கக்கூடாது என்கிற ஒரு பகுத்தறிவு மனப்பான்மையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார்.

நாட்டுப்பற்றோ மொழிப்பற்றோ தேவையற்றது; தேவையானது எல்லாம் மனிதப்பற்றே என்கிற தத்துவத்தைத் தரணிக்கே தந்த தலைவரும் எங்கள் தந்தையே!.......

........மனித சமுதாயத்தில் இருந்துவருகிற பேதாபேதங்களை, பிறப்பின் அடிப்படையில் உள்ள பிரிவினைகளை ஒழித்துக் கட்டுகின்ற பெரும் பணியைத் தம் தலையில் போட்டுக்-கொண்டு தமது 95ஆம் ஆண்டுவரை அதே மூச்சாக, அதே பேச்சாக இருந்துவந்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தாம் கண்ட இயக்கத்தைச் சரியான கட்டுதிட்டங்களோடு உருவாக்கிய பயிற்சி தந்து, ஆளாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

தம் கொள்கை நிறைவேறவேண்டும் என்பதற்காக அடிக்கடி தம் போர் முறையை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இலட்சியத்தை என்றைக்குமே எந்தக் காரணத்திற்காகவும் இம்மியளவும் மாற்றிக் கொண்டது கிடையாது.

----------------------------24.4.1976 - "விடுதலை" தலையங்கத்தில் அன்னை மணியம்மையார் எழுதியதிலிருந்து...

1 comments:

Unknown said...

//கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.//


தி.க.வின் கொள்கைகைகளை உவமைகளுடன் மிகச் சிறப்பாக, எளிமையாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.