Search This Blog

29.3.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையா?

சீனா, ருசியாவின் சறுக்கல்!

ஈழத் தமிழர் பிரச்சினையில் சரியான அணுகுமுறை இல்லாத கட்சிகள் உண்டு; ஏன் நாடுகளும் உண்டு என்பதற்கு அடையாளம்தான் அய்.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி விவாதம் நடந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் நாடுகள் என்று பொதுவாகக் கருதப்படும் சீனாவும், ருசியாவும் பிற்போக்குத்தனமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளன.

ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாம். அந்தப் பிரச்சினையால் உலக நாடுகளுக்கு எந்தவித நெருக்கடியும், பாதிப்பும் இல்லை என்று அவ்விரு நாட்டின் பிரதிநிதிகள் கருத்துக் கூறியுள்ளனர் என்கிற செய்தி திடுக்கிட வைக்கக் கூடியதாகும். தேசிய இன உரிமை பற்றியெல்லாம் புரட்சியாளர் லெனின் எவ்வளவு பேசியிருக்கிறார் - எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் ஆணி வேருக்குச் சென்று உலக மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டிய கடமை உடையோர், தலைகீழாகப் பிறழ்ந்து பேசுகின்றனர் என்றால் இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

ஒரு இன மக்கள் பேரினவாத அரசால் திட்ட மிட்ட வகையில் படுகொலை செய்யப்படுகின்றனர் (Genocide) என்று உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. இலங்கை இன வாத அரசு எந்தெந்த வகைகளில் எல்லாம் உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியிருந்தாலும், காலதாமதமானாலும் உண்மை என்பது வெளிச்சத்திற்கு வரத்தான் செய்திருக்கிறது.

உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்றவர்கள் சொல்லலாம். சர்வ தேசியம் பேசுகின்ற காம்ரேடுகள் அப்படிச் சொல்லலாமா?

அப்படிப் பார்க்கப் போனால் பங்களாதேஷ் பிரச்சினைகூட பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை தான். அதனை எந்த வகையில் இந்தியா தீர்த்து வைத்தது? அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக காயை நகர்த்த முற்பட்டபோது ருசியா ஏன் இந்தியாவுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தது!

பாகிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியாவே தலையிடாதே என்று ருசியா குரல் கொடுத்திருக்கவேண்டுமே! கொடுத்தது உண்டா?

ருசியா என்ற அமைப்பிலிருந்து ஜார்ஜியா பிரிந்து சென்ற நிலையில், அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் ருசியா ஏன் தலையிடவேண்டும்?

இதில் மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு பிரச்சினை என்னவென்றால், அய்.நா.வில் ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைப்பற்றி விவாதிக்க சுவிட்சர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஹாலந்து, பெல்ஜியம், ஜெர்மனி முதலிய நாடுகள் முயற்சித்தபோது, விவாதத்துக்கே அதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கம்யூனிசம் பேசும் இந்த இரு நாடுகளும் முட்டுக்கட்டை போட்டன என்கிற செய்தி - உலக மக்கள் மத்தியில் கம்யூனிஸ சித்தாந்தத்தை வேறு வகையான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடிய ஒரு அவல நிலையையல்லவா ஏற்படுத்தக்கூடும்?

சோவியத் யூனியன் என்பது பல மொழி, பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட பல மாநிலங் களை இணைத்த ஒன்றியம்தானே! அதில் முரண்பாடு வந்தபோது பல மாநிலங்கள் பிரிந்து செல்லவில்லையா?

அதனை சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் அனுமதித்ததே - அந்தக் கண்ணோட்டம் ருசியாவுக்கு இல்லாமல் போனது ஏன்?

சீனா வேண்டுமானால் திபேத் விஷயத்தில் வேறு மாதிரியாக நடந்துகொள்ளலாம் - அதன்மூலம் முற்போக்குச் சிந்தனையாளர்களின் பார்வையில் சீனாவின் மதிப்பும் குன்றிப் போனதும் உண்மைதான்.

சித்தாந்தங்கள் எல்லாம் சீக்குப் பிடித்து, ஆதிக்க மனோபாவங்கள் குடியேறுமானால் ருசியாவும், சீனாவும் நடந்துகொள்வது போன்ற சறுக்கலில்தான் போய் முடியும்! இது ஒரு எச்சரிக்கையாகும்.

--------------------"விடுதலை" தலையங்கம் 28-3-2009

1 comments:

Unknown said...

//உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்றவர்கள் சொல்லலாம். சர்வ தேசியம் பேசுகின்ற காம்ரேடுகள் அப்படிச் சொல்லலாமா?

அப்படிப் பார்க்கப் போனால் பங்களாதேஷ் பிரச்சினைகூட பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை தான். அதனை எந்த வகையில் இந்தியா தீர்த்து வைத்தது? அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக காயை நகர்த்த முற்பட்டபோது ருசியா ஏன் இந்தியாவுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தது!

பாகிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியாவே தலையிடாதே என்று ருசியா குரல் கொடுத்திருக்கவேண்டுமே! கொடுத்தது உண்டா?

ருசியா என்ற அமைப்பிலிருந்து ஜார்ஜியா பிரிந்து சென்ற நிலையில், அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் ருசியா ஏன் தலையிடவேண்டும்?//

வாதங்களில் உண்மை தெரிகிறது. ஆனாலும் காம்ரேடுகள் ஒத்துக் கொள்வார்களா? அவர்களுக்கும் கொள்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? கூட்டனில் யார் அதிக சீட் பிடிப்பது என்பதில் தானே அக்கறை.

நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போனால் அவர்களுக்கென்ன?