Search This Blog

17.3.09

இராம லீலாவை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் இராவண லீலாவை நடத்து வோம்!


அன்னை மணியம்மையாரின் தொண்டுகளை, அருமை, பெருமைகளை வெளி உலகத்திற்குத் தெரிவிப்போம் என்று அம்மா அவர்களுடைய நினைவு நாளில் பெரு மக்கள் கூறி விளக்கவுரையாற்றினர்.


பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி தமது தொடக்க உரையில், திராவிட இயக்கப் பெண்களின் வரலாற்றை - பெருமைகளை பெண்களே இன்னும் தெரிந்துகொள்ள வில்லை. ஆண்களும் அதைப்பற்றிப் பேசுவதில்லை. சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் வளர்மதி மிகச் சிறப்பாக பல செய்திகளை ஒரு நூலாக எழுதியிருக்கின்றார்.

மேதினம் பெண்கள் தினம். 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பெண்கள் தான் என்று சொல்லியிருக்கின்றார். வெளியிலே பெண்களை அழகாகப் பேசுவார்கள். ஆனால், வெளியில் கழட்டிவிட்டுச் செல்கின்ற செருப்பாகத்தான் கருதுகிறார்கள் இன்னமும்.

பெண்களுக்கு என்று சில துறைகளைத்தான் தருவார்கள். ஆனால், ஆண்கள் நிர்வகிக்கின்ற தகவல் தொழில்நுட்பத் துறையை அமைச்சர் பூங்கோதை அவர்களுக்கு முதல்வர் கலைஞர் வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது.

எம்.ஜி.ஆருக்கு மறுப்பு

எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்று அம்மா அவர்கள் பேசியதைக் கேட்டு, இறுதியாக எம்.ஜி.ஆர். பேசினார், கடவுளே இல்லை என்று சொன்ன பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லியிருப்பாரா? என்று சந்தேகத்தோடு பேசினார். அன்னை மணியம்மையார் அடுத்த நாளே அதற்குப் பதிலடி கொடுத்து விடுதலையில் எழுதி விளக்கம் கொடுத்தவர் என்று கூறி விளக்கமளித்தார்.


பொருளாளர்
கோ. சாமிதுரை


திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது தலைமை உரையில்,


அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி நாம் நிறைய விளம்பரப்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன். மிசா காலத்தில் அம்மா அவர்கள் ஒரு 20 பேரை அழைத்தார்கள். நமது தமிழர் தலைவர் சிறையில் இருக்கிறார். நம்முடைய தோழர்கள் எல்லாம் சிறையில் இருக்கி றார்கள். அப்பொழுது அம்மா அவர்களுக்குத் துணையாக நமது கவிஞர் கலி. பூங்குன்றன் தான் உடனிருக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களைப் பார்த்து கேட்டார்.

ஒரு யோசனைபோல கேட்டார். என்னைவிட வயதில் மூத்த ஒருவர் வயதானவர் அவர் சொன்னார், நாம் என்ன தவறு செய்தோம்? மற்றவர்களைப்பற்றி கவலை இல்லை. அவர்கள் இருக்கட்டும்; நாம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியே வந்துவிடுவது தான் நல்லது என்று சொன்னார், என்ன அண்ணே இப்படி சொல்கின்றீர்கள் என்று கேட்டேன். அட போப்பா, நீ சின்ன பையன்! உனக்கு ஒன்றும் தெரியாது என்றார். அதற்கு அம்மா அவர்கள் பதில் சொன் னார்கள்: கலைஞர் மன்னிப்புக் கேட்டால் அடுத்த நாளே நாம் கேட்கலாம். அவர் கேட்க மாட்டார். நாம் மன்னிப்புக் கேட்டால் அது கலைஞரைக் காட்டிக் கொடுத்ததாகிவிடும். எனவே, மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான் அழைத்தேன். நீங்கள் தைரியமாக இருங்கள். அவரவர்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டு சிறையில் இருக்கின்ற நமது தோழர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படிப்பட்ட தைரியசாலி அம்மா அவர்கள்.

ஆசிரியர் அவர்கள் சிறையில் இருக்கின்றார். அவருக்கு நான் கடிதம் எழுதுவேன். அன்புள்ள சகோதரருக்கு என்று போட்டுத்தான் கடிதம் எழுதுவேன். சிறையில் அவரைப் பார்க்கவேண் டுமானால், இரத்த பந்தம் உள்ளவர்களைத் தான் அனுமதிப்பார்கள். ஒருமுறை சிறைக்குச் சென்று ஆசிரியர் அவர்களைப் பார்த்து நன்றாக இருக்கிறீர்களா? என்று தான் கேட்டேன். அதை எல்லாம் இங்கு கேட்கக் கூடாது என்று மிரட்டுகிற பாணியில் ஜெயில் அதிகாரிகள் பதில் சொன்னார்கள். ஆசிரியர் கண் ஜாடை காட்டி போகும் படி சொல்லிவிட்டார். கண் கலங்கிவிட்டேன். அம்மா அவர்கள் எங்களைப் போன்றவர்களை டிரஸ்ட் மெம்பராக்கியது முக்கிய மல்ல. இந்த இயக்கத்தை சோதனையான கால கட்டத்திலே தலைமை ஏற்று நடத்தினாரே அது தான் சிறப்பு!

அதற்காக என்றும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று விளக்கமளித்துப் பேசினார்.

பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு

கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்கி வழி நடத்தியவர் தந்தை பெரியார். அவருக்குப்பின் அந்தப் பொறுப்பை ஏற்று மிகத் துணிச்சலாக இந்த இயக்கத்தைக் கட்டிக் காத் தவர் அன்னை மணியம்மையார். தந்தை பெரியார் அவர்கள் என்ன நினைத்தாரோ அதை முழுக்க முழுக்க அப்படியே செயல்படுத்தியவர் அன்னை மணியம்மையார். மகளிரைப் பற்றி மகளிர்தான் - பிரச்சாரம் செய்யவேண்டும். ஆண்கள் பிரச்சாரம் செய்யமாட்டார்கள். தந்தை பெரியார் திருமணம் என்பதே கிரிமினல் குற்றம் என்றார். பெண்கள் கடவுளை வழிபட உரிமை இல்லை. அவர்களுடைய கணவனைத்தான் கடவுளாக வழிபடவேண்டும் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

மார்க்ஸ் சொன்னார், பெண்களின் நிலை என்பது தொழிலாளிக்குத் தொழிலாளி என்று சொன்னார். பெண்கள் 24 மணிநேரமும் உழைக்கப் பிறந்தவர்கள் என்கிற சமுதாய நிலை இன்றைக்கும் இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கின்ற உரிமை பெண்களுக்கு இல்லை. பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் 50 விழுக்காடு இடம் தரவேண்டுமென்று 1929 ஆம் ஆண்டு 80 ஆண் டுகளுக்குமுன்பே செங் கற்பட்டு சுயமரியாதை மாநாட்டிலே தீர்மானம் கொண்டு வந்தார் தந்தை பெரியார். இன்றைக்குப் பெண்களுக்கு சொத்துரிமை மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு உரிமை இவைகளை எல்லாம் முதல்வர் கலைஞர் அவர்கள் 1989-இல் கொண்டு வந்திருக்கின்றார். பெண்கள் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றார்கள். தந்தை பெரியார் காட்டிய வழியில், அன்னை மணியம்மையார் பாடுபட்ட வழியில் மகளிர் முன்னேற வேண்டும். அதற்கு ஒத் துழைப்பு நாம் தருவோம் என்று கூறிய அவர். கிறித்துவ, முஸ்லிம், இந்து மதத்தில் பெண்களின் நிலைகளையும் விளக்கினார்.

பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன்

கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தமது உரையில், நாம் இன்றைக்கு நிற்கின்ற இடம் இன்றைக்கு நம்மிடம் இருப்பதற்கு யார் காரணம்? இந்தப் பெரியார் திடலை ஜி.டி. நாயுடு அவர்கள் அய்யா அவர்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். பெரி யார் திடலின் முன்பகு தியை சி.பா. ஆதித்தனார் வாங்கினார். இதன் பின் பகுதியை தந்தை பெரியார் வாங்கினார்.

பிறகு சி.பா. ஆதித்தனார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து இந்த இடத்தை விலைக்குக் கேட்டார். வாங்கிய விலையைவிட கூடுதல் பணம் தருவதாகச் சொன்னார்.

இந்த இடத்தை விற்கக்கூடாது என்று பிடிவாதமாக இருந்து போராடியவர் அன்னை மணியம்மையார். இன்றைக்கு இவ்வளவு பெரிய பெரியார் திடல் ஒரு இயக்கத்துக்குக் கிடைத் திருக்கின்றதென்றால், அதற்குக் காரணம் அன்னை மணியம்மையார் அவர்கள்தான்.

ஒரு அகில இந்திய கட்சிக்குக் கூட சென்னையில் இவ்வளவு பெரிய கட்சித் தலைமை அலுவலகம் கிடையாது.

இந்த இடம் இயக்கச் செயல்பாட்டுக்கும், கொள்கைப் பரப்புதலுக்கும் எவ்வளவுப் பெரிய துணை என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

நெருக்கடி காலத்திலே எந்தவித நியாயமும் இல்லாமல் நம்முடைய தோழர்கள் கைது செய் யப்பட்டார்கள். யார் யார்? எந்த சிறையிலே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த பிரமானந்த ரெட்டி சென்னைக்கு வருவதாக தகவல் வந்தது. சென்னை ஆளுநர் மாளிகையில் அம்மா அவர்கள் பிரமானந்த ரெட்டியை சந்தித்தார். எங்களுடைய திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதற்கு என்ன காரணம்? என்று கேட்டார். அவர் அதற்கு பதில் சொன்னார். தி.மு.க.வை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று சொன்னார். தி.மு.க.வை ஆதரிப்பது ஒரு குற்றமா? என்று அம்மா அவர்கள் திருப்பிக் கேட்டார். வேண்டுமானால், நீங்கள் தி.மு.க.வை ஆதரிக்கவில்லை என்று ஒரு அறிக்கை கொடுங்கள். உங்களுடைய தோழர்களை எல்லாம் விடுதலை செய்வதுபற்றி யோசிக்கிறோம் என்று சொன்னார். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் அந்த இடத்தில் இல்லை. - எழுந்து வந்துவிட்டார்.

நீங்கள் இராம லீலாவை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் இராவண லீலாவை நடத்து வோம் என்று பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். பிரதமரிடமிருந்து தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு அழுத்தம் வந்தது. இராவண லீலா போராட்டத்தை நிறுத்தச் சொன்னார்கள். அம்மா அவர்கள் மறுத்தார்கள். அந்த சமயத்தில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி பொறுப்பான அதிகாரி அம்மா அவர்களை சந்தித்துப் பேசினார். இதுவே பெரியாராக இருந்திருந்தால் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு, போராட்ட நடவடிக்கைகளைக் கொஞ்சம் தள்ளியாவது வைத்திருப்பார் என்று சொன்னார். ஆனால், அம்மா உடனே பதில் சொன்னார், நான் பெரியாரில்லையே! என்று. இராவணலீலா போராட்டத்தை நடத்திக் காட்டிய வீராங் கனை அன்னை மணியம்மையார்.

கலைஞர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் மிக மோசமாக நடந்துகொண்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அம்மா அவர்கள், திருமதி ராஜாத்தி அம்மா அவர்களையும், அன்றைக்குச் சிறுமியாக இருந்த கனிமொழி அவர்களையும் பெரியார் திடலுக்கு கவிஞர் கருணானந்தம் மூலமாக அழைத்து வந்து ஒரு நாள் முழுக்க தன்னுடன் தங்க வைத்து உபசரித்து தைரியத்தையும், ஆறுதலையும் கூறியவர்தான் அன்னை மணியம்மையார்.

தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த அன்னை மணியம்மையார் தன்னுடைய உடல்நலனைப்பற்றி கவனித்துக் கொள்ளா மல், 61 வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்.

அம்மா அவர்கள் மருத்துவமனையிலே இருக்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு டாக்டர் ராமச்சந்திரா, டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு, அன்றைய மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி. நடராஜன் மூவரையும் தொலைபேசி மூலமாக அழைத்தார். அவசரமாக பதிவாளரையும் அழைத்தார். தனக்காக அய்யா அவர்கள் கொடுத்த அத்துணை சொத்துகளையும் அறக்கட்டளையாக்க விருப்பம் தெரிவித்து உயில் ஒன்றை எழுதினார். அதனை செயல்படுத்துபவராக வீரமணி இருக்கவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். அதில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களில் ஒருவர்தான் நமது கழகப் பொருளாளர் வழக்கறிஞர் சாமிதுரை அவர்கள். அம்மா அவர்களுடைய அருமைப் பெருமைகளை -அடுத்து வெளி உலகத்திற்குக் கொண்டு வருவோம் என்றார்.

அமைச்சர் பூங்கோதை

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பூங் கோதை ஆற்றிய உரை வருமாறு:-

நீங்கள் நான் அன்னை மணியம்மையார் அவர்களுடைய நிகழ்ச்சிக்கு வந்ததை இங்கு பெருமையாகக் கூறினீர்கள். நான் பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியார் அவர்கள் இருந்த இடத்தைப் பார்த்து, அவருடைய அருங்காட்சியகத்தைப் பார்த்ததைத்தான் நான் ஒரு பெரும் பேறாகக் கருதுகின்றேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. வெளிநாட்டிலே படித்து டாக்டராக இருந்த நான், நீங்கள் ஏன் இந்த அரசியலுக்குச் சென்றீர்கள் என்று சிலர் என்னைக் கேட்டனர்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நான் இன்றைக்கு ஒரு டாக்டராக ஆகியிருக் கின்றேன் என்றால், அது தந்தை பெரியார் போட்ட பிச்சை; திராவிடர்கழகம் போட்ட பிச்சை என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 30, 40 ஆண்டுகளாக நம்முடைய சமுதாயத்தை படிக்கவிடாமல் முன்னேறவிடாமல் செய்தது பார்ப்பனியம். அந்த அளவுக்கு அதனுடைய கொடுமை அந்தக் காலத்திலேயே தலை விரித்தாடியது. பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் இந்த நிலையை உணர வேண்டும்.

பார்ப்பனத் தலைமையா? வெட்கக்கேடு!

ஒரு திராவிட கட்சிக்கு ஒரு பார்ப்பனர் தலைமை தாங்குகிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடான நிலை இந்த சமுதாயத்தில் வேறு இருக்க முடியாது. இன்றைக்கு அந்தப் பார்ப்பனரை அது சோவாக இருந்தாலும், இந்து ராமாக இருந்தாலும், சப்பிரமணியசாமியாக இருந்தாலும் அவர்கள் தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்படியாவது இந்த திராவிட இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கங்கள் திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக்கழகமும்தான். எனவே, நம்முடைய இன மக்களுக்காக அதிகம் உழைக்கவேண்டும் என்று கருதுகின்றேன்.

நான் முதலில் தந்தை பெரியார் அவர்களுடைய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி வரச் சொல்லி, தந்தை பெரியார் சொன்ன மதம், பெண்ணுரிமை கருத்துகளை எல்லாம் படித் தேன். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்கள் உடல்நலம் பேணவேண்டும்; குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என்பதை பெண்களுக்காக - தந்தை பெரியார் சொன்ன கருத் துகள்தான். அவர் சொன்ன அறிவுரைகள் தான் இன்றைக்கும் இந்தப் பெண்கள் சமு தாயத்திற்கு பொருத்தமாக - தேவையாக இருக்கின்றன.

உலகத்திலேயே நாத்திக இயக்கத்திற்கு ஒரு பெண்மணி தலைமை தாங்கியிருக்கின்றார் என்றால், அவர் அன்னை மணியம்மையார்தான்.

பெரியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கல்வி, மருத்துவம் போன்ற பல பணிகளை ஆற்றி வருகிறது என்பதை அறிந்தேன். தந்தை பெரியார் அவர்கள் கண்ட கனவையும், அன்னை மணியம்மையார் அவர்கள் கண்ட கனவையும் நாம் நிறை வேற்ற வேண்டும். அதற்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து செயல்பட வேண்டும். - இவ்வாறு அமைச்சர் பேசினார்.


---------------------நன்றி:-"விடுதலை" 17-3-2009

2 comments:

Unknown said...

//இராம லீலாவை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் இராவண லீலாவை நடத்து வோம் என்று பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். பிரதமரிடமிருந்து தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு அழுத்தம் வந்தது. இராவண லீலா போராட்டத்தை நிறுத்தச் சொன்னார்கள். அம்மா அவர்கள் மறுத்தார்கள். அந்த சமயத்தில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி பொறுப்பான அதிகாரி அம்மா அவர்களை சந்தித்துப் பேசினார். இதுவே பெரியாராக இருந்திருந்தால் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு, போராட்ட நடவடிக்கைகளைக் கொஞ்சம் தள்ளியாவது வைத்திருப்பார் என்று சொன்னார். ஆனால், அம்மா உடனே பதில் சொன்னார், நான் பெரியாரில்லையே! என்று. இராவணலீலா போராட்டத்தை நடத்திக் காட்டிய வீராங்கனை அன்னை மணியம்மையார்.//

பெரியாரின் நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது. பெரியாரின் அதே துணிச்சல் மணியம்மையாரிடம் காண முடிகிறது.


//அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி நாம் நிறைய விளம்பரப்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்.
//


உண்மைதான்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு