Search This Blog

23.3.09

கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு - உண்மைக்கதை

ஆமென்: ஒரு கன்னியாஸ்திரியின் கதை


எதன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின. அதன் தலைவர்கள் புனிதர்களாகி வழிபாட்டுக்குரியவர்கள் ஆனார்கள். இவர்கள் இயற்கைக்கு மாறாக இல்லறம் தவிர்த்து மனித சமுதாயத்தில் தம்மை உயர்ந்தவர்களாக, தனித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனாலும், இவர்களது வாழ்வியலோ மிக உயரிய வசதிகள் உடையதாக இருக்கும். எல்லாவிதமான சத்து நிறைந்த உணவுகளையும் புசிப்பார்கள். தமக்கென தனிச் சீருடையை அணிந்து கொண்டு காட்சி தருவார்கள். அப்போதுதான் மக்களின் கவனம் இவர்கள்மீது படியும் அல்லவா? இந்தியாவில் முன்காலத்தில் உருவான பல சமுதாயங்களின் கூட்டுக்கலவையான இந்து மதத்தில் மடங்களும், சாமியார்களும் உண்டு. அதுபோலவே கிறித்துவ மதத்திலும் உலகளாவிய அளவில் திருச்சபைகளும் உள்ளன. அதன் நீட்சியாக இந்தியாவிலும் திருச்சபைகள் அமைக்கப்பட்டு தேவாலயம் அதனையொட்டிய பள்ளிகளிலும், மருத்துவமனை ஆகியவற்றை நிருவகிக்க பாதிரியார்கள் பொறுப்பேற்றிருப்பார்கள்.

கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது என்பதும் இல்லறம் துறந்து இறைப்பணிஆற்றவேண்டும் என்பது மதக்கட்டளை. அதேபோல வேத ஊழியம் செய்யவரும் பெண்களும் கன்னியாஸ்திரீகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் மேற்சொன்ன புலனடக்கவிதிகள் பொருந்தும். ஆனால், இவ்வாறு இயற்கை உணர்வுகளுக்கு எதிராக மனிதர்களால் இருக்க முடியுமா என்பதை பாதிரியார்களாக இருந்து பகுத்தறிவாளர்களாக மாறியவர்களில் தொடங்கி, உலகியல் கற்ற, உடலியல் கற்ற அனைவரும் கேள்வி எழுப்புவதுண்டு.

மனித உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களால் உடல் இச்சை என்பது தவிர்க்க முடியாதது; மாற்றுப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதனைத் தவிர்ப்பது இயலாதது. ஆனால், இதனைக் கடந்து மனதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து இறைப்பணி செய்வோர் இவர்கள் என்றே மதபீடங்கள் மார்தட்டுகின்றன. என்றாலும் அவ்வப்போது மதப்பீடங்களில் திருச்சபைகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து மதக்கட்டுகளை அறுத்தெறிந்து வருகின்றன.

இப்படித்தான் அண்மையில், கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரீ ஆமென் - ஒரு கன்னியாஸ்-திரியின் ஆத்ம கதை என்ற நூல் பல உண்மைகளை உரைத்துவிட்டது. ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூலை எழுதியவர் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி (வயது 53).

இவரது இயற்பெயர் மியாமி ரபேல். தனது 25ஆம் வயதில் காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்னல் (CMC) என்னும் திருச்சபையில் இணைத்துக் கொண்ட ஜெஸ்மி, இங்கிலீஷ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளர், முதல்வர் எனப் பணியாற்றிய இவர் தமது 30 ஆண்டுகால கன்னியாஸ்திரீ வாழ்வில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளார்.

புனித மடங்கள் எனச் சொல்லப்படும் மதச்சபைக்குள் நிகழ்ந்து வரும் பாலியல் எல்லை மீறல்களை விவரித்துள்ளார் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி. கன்னியாஸ்திரீகளிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. கன்னியாஸ்திரீகள் பாதிரியார்களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறும் ஜெஸ்மி, பாதிரியார்கள் தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்புணர்ச்சியையும் கூறுகிறார்.

நான் பெங்களூருக்குச் சென்றபோது வரவேற்க வந்த பாதிரியார் என்னை இறுக அணைத்து அதிர்ச்சி கொடுத்தார். அங்கு லால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மரங்களின் அடியில் அந்தரங்கமான நிலையில் அமர்ந்திருந்த ஜோடிகளைக் காண்பித்தார். பின்னர் உடல் ரீதியான காதலின் தேவை குறித்தும், பெண்களுடன் முறைகேடான உறவு வைத்திருந்த பாதிரியார்கள் மற்றும் பிஷப்புகளின் கதைகளையும் சொன்னார். பிறகு தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கட்டிலில் அமரவைத்து என்னை இறுக அணைத்தார். ஓர் ஆணை முழுமையாய் பார்த்திருக்கிறாயா எனக்கேட்டு விட்டு ஆடைகளைத் துறந்தார் இதைத் தொடர்ந்து ஜெஸ்மி எழுதியுள்ள சில வரிகளை நாம் இங்கு எழுதமுடியாது.

கன்னியாஸ்திரீகளின் மடத்தில் பல கன்னியாஸ்திரீகள் ஜோடியாகவே இருப்பார்கள்; வேறு சிலரிடையே பாலியல் நடவடிக்கைகள் இருந்தது என்று எழுதியுள்ள ஜெஸ்மி, சிஸ்டர் லிமி என் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கினார். எனக்கு காதல் கடிதங்கள் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதவில்லை. சிஸ்டர் லிமி எனக்கு எதிராகத் திரும்பவே அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வேறு வழியில்லாமல் அவரின் பாலியல் இச்சைகளுக்கு நான் சிலகாலம் பலியாக நேர்ந்தது என்று எழுதியுள்ளார்.


புனிதமானவர்கள் என்றும் இறைப்பணியாளர்கள் எனவும் கூறப்படும் கிறித்துவ திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் மீதான ஜெஸ்மியின் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கேரள கிறித்துவ அமைப்புகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. ஜெஸ்மியின் குற்றச்சாட்டுகளுக்கு சி.எம்.சி. அதிகாரபூர்வமான எந்தப் பதிலையும் இதுவரை கூறாமல் மவுனம் காக்கிறது. ஆனால் அதன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பால் தேலக்காட், ஜெஸ்மி எழுப்பியுள்ள பிரச்சினைகளை புறக்கணித்துவிட முடியாது. சர்ச்சும், சி.எம்.சியும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளிடையேயான பாலியல் உறவுகள் உண்மையாக இருக்கலாம்; திருச்சபைகளில் ஆங்காங்கே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தல் என்பது உலகியல் இயல்பு. இதற்கு எதிராக புனிதத் தன்மையை கற்பித்து மதங்கள் செயல்படும்போது அதன்மீதான இயற்கையின் தாக்குதலே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாக எழுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை வேண்டும் என்று 400 பாதிரியார்கள் போப் ஆண்டவருக்கு விண்ணப்பம் போட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

அவர்கள் வலியுறுத்தும் கொள்கைக்கும் அவர்களது நடத்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு வைத்திருந்தார்கள் அல்லது மோசமான ஊழலில் ஈடுபட்டிருந்தனர் - இப்படிக் கூறுவது நாம் அல்ல; - கன்னியாஸ்திரி ஜெஸ்மி. நாம் என்ன சொல்வது? ஆமென் என்று சொல்லலாம்; ஆமென் என்பதற்கு எனவே அது இருக்கிறது என்று பொருளாம்.

----------- மணிமகன் -"உண்மை" மார்ச் 15-31 2009

0 comments: