Search This Blog

10.3.09

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யலாமா?

அரசியல் ஆதாயமா?

திருப்பூரில் கடந்த சனியன்று (7.3.2009) நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (எண். 5) வருமாறு:-

"ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்வது விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கே என்று கருத்துத் தெரிவித்தும், இலங்கை இராணுவத்தினர்க்கு ஈழத் தமிழர்களைக் கொல்லும் நோக்கம் கிடையாது என்றும், போர் என்று வரும் போது பொதுமக்கள் பலியாவது சகஜம் என்றும் அறிக்கை களை வெளியிட்டு, ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து துரோகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, திடீர் என்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற் காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக (மார்ச் 9 அன்று) அறிவித்திருப்பது அசல் சந்தர்ப்பவாதமும், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு மேற்கொண்ட தந்திரமுமாகும் என்பதை இம்மாநாடு அம் பலப்படுத்துகிறது. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் நிர்ப் பந்தத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தமும் இதில் அடங்கி யிருக்கிறது என்பதை தமிழக வாக்காளர்கள் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறது."

மேற்கண்ட இந்தத் தீர்மானம் மிகவும் துல்லியமானது என்பதற்கு அடையாளம்தான் - நேற்று சென்னையில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் - ஜெயலலிதாமுதல் அதில் கலந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் உரைகளுமாகும்.

முழுக்க முழுக்க அரசியல் உணர்வோடு - நடக்கவிருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர் என்பதைத் தெரிந்துகொள்வ தற்கு எவ்வித ஆய்வும் தேவைப்படாது - அது வெளிப்படையாகும்.

முதலமைச்சர் கலைஞர் அவர்களை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தாக்கிப் பேசியவை எல்லாம் உண்மையிலே அ.இ. அ.தி. மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கே பொருந்தக்கூடியதாகும்.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யலாமா? இவ்வளவு கொடுமைகள் அங்கு நடந்தும் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லையே என்பது நூற்றுக்கு நூறு ஜெயலலிதாவுக்குப் பொருந்தாதா?

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்துவந்த ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக அ.இ.அ.தி.மு.க. நடத்திய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டோம் என்று சொல்லப்போகிறார்களா? என்று தெரியவில்லை. அப்படி சொன்னால், அது உண்மையிலேயே மிகவும் சரியாகத்தானிருக்கும்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த ஜெயலலிதா, ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்திட இந்திய அரசு ஏதும் செய்யவில்லை என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளாரே! இதே ஜெயலலிதா இதுகுறித்து ஏற்கெனவே கூறிய கருத்தென்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை, அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். 16.10.2008).

கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒரு பெண்மணி, இதற்கு நேர் விரோதமாக, தேர்தலை முன்னிறுத்தி அந்தர்பல்டி அடிப்பதுபோல இன்று பேசுகிறார் என்றால், மக்களை எவ்வளவு தூரம் மண்ணாங்கட்டிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது விளங்கிடவில்லையா?

இப்படிப்பட்ட ஒருவர்தான் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறார் - திருப்புமுனை இதோ ஏற்படப்போகிறது என்று சில பூசாரிகள் (திரு. வைகோ அவர்கள் பயன்படுத்திய சொல்லாடல்தான் இது) பேசுகிறார்கள் என்றால், இவர்களும்தான் மக்களை எவ்வளவு மட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாகப் பார்க்கவேண்டும்.
செல்வி ஜெயலலிதாவின் இந்த அறிக்கையில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. முதலமைச்சர் கலைஞர் போரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், போரை நிறுத்தச் சொன்னதுதான் அறியாமை என்கிற பொருளில் குற்றமும் சாட்டியவர் ஜெயலலிதா. அய்ந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் வகையில் போரை நிறுத்தச் சொல்லலாமா? என்று குற்றம் சாற்றியவர்.

அப்படி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டவர் இன்று ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்கிறார் என்றால், இதன் பொருள் என்ன? ஈழப் பிரச்சினையில் தாம் எடுத்த நிலை விபரீதமானது - தமிழர்களின் உணர்வுக்கு எதிரானது - இந்த நிலையில் வாக்குகளைக் கேட்கச் சென்றால், கடும் எதிர்ப்பையும், வெறுப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அபாயகரமான அச்சத்தால் ஏற்பட்ட பல்டிதானே இது? ஜெயலலிதாவின் நிலை அவருடன் கூட்டணி சேர்ந்தவர்களையும் சேர்த்துப் பாதிக்கும் என்பதால், அம்மையாரிடம் அவர்கள் ஒருக்கால் மன்றாடி, இந்த நிலையை மேற்கொள்ளச் செய்திருக்கலாம்.

தன் நிலையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டவர் அடக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டாமா?
துணிச்சல் என்றால், அது ஜெயலலிதாதான் என்று பிரச்சாரம் செய்கிறார்களே, அந்தத் துணிச்சல் அம்மையாருக்கு இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?

ஆமாம் - ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் நான் தவறான நிலைப்பாடு கொண்டிருந்தேன். இப்பொழுது எனக்கு நல்ல புத்தி வந்துவிட்டது; பழைய நிலைக்காக மன்னிப்புக் கோருகிறேன் அல்லது வருந்துகிறேன் என்ற பீடிகையைப் போட்டுவிட்டு அல்லவா தமது புதிய ஞானோதயத்தை அவிழ்த்துக் கொட்டவேண்டும்.

இந்தத் திடீர் ஞானோதயம் எதற்காக? அம்மையார் உரைக்கு பாஷ்யம் எழுதப் புறப்பட்டுள்ளார்களே - அதுவும் எதற்காக? எல்லாம் ஓட்டுக்காகத்தான் - மக்களை ஏமாற்றத்தான்!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற நிலையைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை


--------------------------நன்றி:-"விடுதலை" 10-3-2009

0 comments: