Search This Blog

16.3.09

சங்பரிவார்க் கும்பலின் சண்டித்தனம்

இந்துத் தலிபான்கள்

தலிபான்கள் என்று குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் மய்யப்படுத்துவதில் அர்த்தமில்லை. அவர்களையும் தாண்டி இதோ இந்துத் தலிபான்கள் தோன்றிவிட்டார்கள்; தலைதெறிக்க நிர்வாணக் கூத்து ஆடுகிறார்கள்.

கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பீடத்தில் ஏறினாலும் ஏறியது - கலாச்சாரக் காவல் படையினராக மாறி மக்களின் உரிமைகளில் தலையிடும் குண்டாந்தடி இசத்தை நடத்தி வருகிறார்கள்.

காதலர் தினத்திற்காக எதிர்ப்பு என்று கூறி ஆணும் பெண்ணும் சந்திக்கும் இடங்களில் தாலிக் கயிறுகளுடன் சென்று கல்யாணத்தை அந்த இடத்திலேயே முடித்து வைக்கும் திடீர் புரோகிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டனர்.

ஒரு முசுலிம் பெண்ணும், இந்து ஆடவனும் (இருவரும் மாணவர்கள்) பேசிக்கொண்டனர் என்பதற்காக அவர்களை கடத்திச் சென்று அடித்துத் துவைத்திருக்கின்றனர்.

அண்ணன் தங்கையைக் காதலர்கள் என்று தவறாகக் கற்பித்துக் கொண்டு அவர்களைத் தாக்கிய காட்டுவிலங் காண்டித்தனமும் கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அரங்கேறியது.

மாணவ மாணவியர்கள் இணைந்து சுற்றுலா சென்றனர் என்பதற்காக மங்களூரில் இந்த இந்துமதத் தலிபான்களால் அவர்கள் பயணம் சென்ற வாகனம் தாக்கப்பட்டுள்ளது.

மாநகரில் உள்ள பூங்காக்கள் எல்லாம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றனவாம்.

பா.ஜ.க. ஆளும் கருநாடகத்தில் மட்டுமல்ல; அந்தக் கட்சி ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் இந்த நோய்த் தொற்றிக்கொண்டு விட்டது.

உஜ்ஜயினியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அண்ணன் தங்கையை பஜ்ரங்தள் கும்பல் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளனர். நாங்கள் காதலர்கள் அல்லர்; அண்ணன் - தங்கை என்று எடுத்துச் சொன்னதற்குப் பிறகும்கூட அந்தக் குரங்குப் பட்டாளம் தாக்குதலை நிறுத்தவில்லை. அந்தப் பகுதியில் காவல்துறையினர் வந்த காரணத்தால் அந்த அண்ணனும், தங்கையும் உயிர் பிழைத்தார்கள்.

மாநில அளவில் ஆட்சியைப் பிடித்த நிலையிலேயே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இப்படி வன்முறை வெறியாட்டம் போடுகிறார்கள் என்றால், மத்தியிலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தால் இந்த நாடு தாங்காது - எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.


18 வயது அடைந்த ஒரு பெண்ணும், 21 வயது நிறைந்த ஒரு ஆணும் காதலிப்பதோ, திருமணம் செய்துகொள்வதோ சட்டப்படி தவறானதல்ல.

இந்த நிலையில், அத்தகையவர்களைத் தடுப்பதோ, துன்புறுத்துவதோ மனித உரிமையில் குறுக்கீடு செய்வதாகும். சட்டப்படி தண்டனைக்குரியது மாகும்.

சங்பரிவார்க் கும்பலைப் பொறுத்தவரை அவர்கள் சட்டத்தை மீறினாலும் மீறுவார்களே தவிர, சாஸ்திரத்தை ஒருபோதும் மீறவேமாட்டார்கள். கேட்டால் ஒன்றைச் சொல்லக்கூடும், சட்டத்தை மீறினால் சிறைத்தண்டனை தான் கிடைக்கும்; சாஸ்திரத்தை மீறினால் ரவுரவாதி நரகமன்றோ கிடைக்கும் என்று கதைப்பார்கள்.

சட்டத்தை மீறினால் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து வைத்துதான் இத்தகு செயல்களில் ஈடுபடுகிறார்கள். தெரியாமல் செய்தாலாவது மன்னிக்கலாம். தெரிந்து செய்பவர்களுக்கு மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, இத்தகைய இந்துத் தலிபான்களை சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டிக்கா விட்டால், இந்த வியாதி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஸ்ரீராம்சேனா, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளைக் கட்டுப்படுத்த, அந்தந்த மாநில ஆட்சிகள் தவறுமேயானால், தற்காப்புக்காக சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்ட முறையில் தற்காப்பு நோக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகப் போய்விடும்.

அரசு பாதுகாப்புக்கு வரவில்லையென்றால் வேறு என்னதான் செய்ய முடியும்? தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த சங்பரிவார்க் கும்பல் ஏற்படுத்துகிறது.

நம் கையில் இருக்கும் ஆயுதத்தை நமது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமானதாகவே இருக்கும்.


--------------------"விடுதலை" தலையங்கம் 16-3-2009

2 comments:

Unknown said...

//அண்ணன் தங்கையைக் காதலர்கள் என்று தவறாகக் கற்பித்துக் கொண்டு அவர்களைத் தாக்கிய காட்டுவிலங் காண்டித்தனமும் கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அரங்கேறியது.//

பெற்ற மகளையே மனைவியாக்கிக் கொண்ட பிரம்மாவை எதைக் கொண்டு அடிக்கப்போகிறார்கள் சங்பரிவாரத்தினர்?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி