Search This Blog

14.3.09

ஜோதிடப் பைத்தியமும்- தேர்தலும்

ஜோதிடர்களின் ஆதிக்கம் அரசியலில் அதிகம்; மெத்தப்படித்த மேதாவிகள் - அரசியலில், பழந்தின்று கொட்டை போட்டவர்கள் கூட, ஜோதிடர்களின் வலையில் சிக்கி தங்களது அறியாமையை, முட்டாள் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் வெட்கப்படுவதே இல்லை!

வரும் பொதுத்தேர்தல் தேதிகள் நல்ல நாள்களில் நடைபெறாததால், நாட்டிற்குப் பெருங்கேடு ஏற்படுமாம்!

டெல்லி ஜோதிடர், மும்பை ஜோதிடர், இப்படி பலரும் நல்ல கொழுத்த வருமானத்தை இந்த மூட நம்பிக்கையாளர்களான அரசியல்வாதிகளிடம் கறக்கிறார்கள்!

நிலையான ஆட்சியாக ஒரு கட்சி வராமல் பல கட்சி ஆட்சி வருமாம்! இதைச் சொல்ல ஒரு ஜோதிடரா தேவை? தொடர்ந்து செய்திகளை அறியும் எவருக்கும் தெரியுமே!

அத்வானிக்கு ஏழரை நாட்டுச் சனியன் என்று கூறி அவர் பிரதமராக வரவேமுடியாது என்று கூறுகிறார் இன்னொரு ஜோதிடர்.

அந்த நம்பிக்கை உடையவர்கள், பாவம், தூங்கா இரவுகளாக தங்கள் வாழ்நாளின் தேர்தல் காலத்தைக் கழிப்பார்கள்!

எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டார் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா!

அக்கட்சியின் புர்ரட்சி எவ்வளவு என்றால், வேட்பாளர்கள் ஜாதகத்தையும் தாக்கல் செய்ய வேண்டுமாம்!

அண்ணா பெயரில் கட்சி - இப்படி ஒரு அசிங்கம்!

சென்ற 2004 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்த அம்மையார் அப்போதும் பரப்பனம்பாடி உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர் முதல் பலவகை ஜோதிடர்களின் ஆலோசனை கேட்டுத்தானே களம் இறங்கினார்!

ஏன் பூஜ்ஜியத்தை - தேர்தல் முடிவுகளை - ராஜ்யமாகப் பெற்றார்?

நேற்று விழுந்த குழியிலே இன்றும் விழுவதை விட - மூடநம்பிக்கைகளின் உச்சம் வேறு உள்ளதா?

எந்த வண்ணம், எந்த உடை இவைகளைக் கூட ஜோதிடர்களா தீர்மானிப்பது? வெட்கம்! மகா வெட்கம்! இந்த 21 ஆம் நூற்றாண்டில் சந்திரயான் விண்வெளிக்கலம் நிலவை அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு மானக்கேடா?

எந்த ஜோதிடரும் நவம்பர் 26 (2008) மும்பை நிகழ்வு பற்றி முன்கூட்டியே கூறவில்லையே ஏன்?


ஜோதிடத்தை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற பகுத்தறிவாளர்கள்தான் ஏற்கவில்லை என்று கருதவேண்டாம்!

தேசிய கவி பாரதியார் - ஜோதிடந்தனை இகழ் என்று ஆத்திச் சூடி எழுதினார்!

திரு ராஜகோபாலாச்சாரியார் - ராஜாஜி - ஜோதிடத்தை மிகவும் கண்டித்தார்!

பண்டித ஜவஹர்லால் நேரு ஜோதிடர்களைப் பற்றி மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார்!


100-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள், ஜோதிடம் என்பது புரட்டு, அது அறிவியல் அல்ல - அது ஒரு போலி விஞ்ஞானம் (Pseudo Science) என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டு அறிக்கையே வெளியிட்டுள்ளர்கள்!

என்றாலும், பலர் இதனை வைத்து மக்களைச் சுரண்டிக் கொழுக்கின்றனரே!

மூன்றாவது அணியை இப்போது உருவாக்கும் கர்நாடகத்தில் அழைப்பு விடுத்த தேவகவுடா பார்க்காத ஜோதிடமா? நாமக்கல் செல்லப்ப அய்யர் ஆஞ்சனேயர் என்ற குரங்குசாமி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வரை கேட்டும் அவர் பதவியில் தொடரமுடியவில்லையே!

அறிவியல் மனப்பான்மையைப் பெருக்குவதை அடிப்படைக் கடமையாகக் கூறும் நமது அரசியல் சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியில் இப்படிப்பட்ட மூடத்தனங்கள் முற்றாக ஒழிக்கப்பட தடைச் சட்டங்களை இயற்றிட முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆங்காங்கு இயக்கங்களை நடத்தி அரசுகளுக்கு அழுத்தம் (Pressure) கொடுக்க வேண்டும்! ஜோதிடத்தால் கெட்டவர்கள்; செத்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், ஏமாந்தவர்கள், நாளும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கையோ பெருகிய வண்ணம் உள்ளது! உடலின் தொற்று நோய்களைத் தடுப்பது மட்டும்தானா முக்கியம்? உள்ளத்தின் அறிவின் தொற்று நோய்க்கிருமி, அது உற்பத்தியாகும் இடத்திலேயே அழிக்க அரசும் , மக்களும் முன்வர வேண்டாமா?

அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் இதுபோன்ற பணிக்கு கூட்டணி அமைத்துப் பிரச்சாரம் செய்ய முன்வாருங்கள்! மக்களை அறியாமையிலிருந்து காப்பாற்றுவது மிகமிக முக்கியம் அல்லவா?

------------------ 14-3-2009 "விடுதலை" இதழில் - கி. வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

ttpian said...

Aththa kakkoos povathil irundhu kaal kazhuvathuvarai JOSHYAM paarththuthaan!
MAMA verumaathiri: Manjal thundu anindhu manjaththil saaivaar!

Unknown said...

//எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டார் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா!

அக்கட்சியின் புர்ரட்சி எவ்வளவு என்றால், வேட்பாளர்கள் ஜாதகத்தையும் தாக்கல் செய்ய வேண்டுமாம்!

அண்ணா பெயரில் கட்சி - இப்படி ஒரு அசிங்கம்!//

புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சித் தலவியின் புரட்டுவேலை ஜாதகம் பார்ப்பதா?

அண்ணா இருந்திருந்தால் தூக்குமாட்டிக்கொள்வார்.

அசிங்கத்திலும் அசிங்கம்.