Search This Blog

5.3.09

அரசு ஊழியர்களும் கலைஞரும்


அரசு ஊழியர்கள் வியப்படையக்கூடிய அளவுக்கு
முதல்வர் கலைஞர் பல நன்மைகளைச் செய்து வருகிறார்

கடலூர் என்.ஜி.ஜி.ஓ. மாநாட்டில் தமிழர் தலைவர் பாராட்டு


அரசு அலுவலர்களே வியப்படையக் கூடிய அளவுக்கு உங்களுக்காக பல நன்மைகளை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்து கொண்டு வருகின்றார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிப் பாராட்டி உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடலூரில் 28.2.09 அன்று நடைபெற்ற மாநாட்டில் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வரலாற்றுப் பெருமை வாய்ந்த மாநாடு

இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த மாநாடு கடலூரிலே சுப்பராயலு ரெட்டியார் மண்டபத் திலே மக்கள் கூட்டம் நிரம்பி வழியக் கூடிய அளவிற்கு வெளியிலே எல்லாம் ஏராளமானோர் அமர்ந்திருக்கின்றார்கள்.

எப்படி நம்முடைய முதல்வர் அவர்கள் கேட்காமலேயே செய்த, பல்வேறு காரியங்களுக்காக, பல்வேறு சாதனைகளுக்காக, உங்களுக்குச் செய்த நன்மைகளுக்காக உங்கள் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி எப்படிப் பொங்கி வழிகிறதோ அதேபோல இந்த அரங்கமும் வழிந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லத் தகுந்த வகையிலே ஏராளமானோர் இங்கே வந்திருக்கின்றீர்கள். சிறப்பான வகையிலே இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது.

சுப்பராயலு ரெட்டியார்

சுப்பராயலு ரெட்டியார் மண்டபம் என்று இந்த மண்டபத்திற்குப் பெயர். பல பேருக்கு ஏதோ இந்த ஊரிலே இருக்கக் கூடிய ஒருவர் அதைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால் அவர் பேரிலே இந்த மண்டபம் அமைந்திருக்கிறது என்று இளைய தலைமுறையினர் உங்களிலே சிலர் நினைக்கக் கூடும்.

அப்பொழுது பிரதமர் என்று பெயர்

ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரச் சாதனைகளை மிக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கின்ற இந்த மாநாடு நடக்கக் கூடிய இந்த மண்டபம் யாருடைய பெயரில் அமைந் திருக்கின்ற மண்டபம் என்று சொன்னால் நீதிக்கட்சி - ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அந்தக் காலத்திலே அழைக்கப்பட்ட southu indian liberal federation என்ற silf முதல் முறையாக வெற்றி பெற்ற நேரத்திலே மக்களாலே தேர்ந்தெடுக் கப்பட்ட நேரத்திலே வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத் தார்கள்.

அப்பொழுது பிரதமர் என்று பெயர். முதல்வர் என்ற பெயர் கிடையாது. பிரிமியர் என்று அழைக்கப்படுவது பழைய அரசியல் முறை.

நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டி

சர். பிட்டி. தியாகராயர் அந்தப் பொறுப்பை ஏற்காமல், அதாவது முதலமைச்சர் பொறுப்பிலே பிரதமர் என்று அழைக்கப்படக் கூடிய முதலமைச்சர் பொறுப்பிலே நீதிக்கட்சியைச் சார்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார் என்று சொல்லி அறிவித்து முதல் முறையாக திராவிடர் இயக்கத்தினுடைய முன்னோடியான நீதிக்கட்சியினுடைய முதல் முதலமைச்சர் தான் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள்.

வரலாற்றுச் சாதனைகள் செய்து கொண்டிருக்கின்ற முதல்வர்

இந்த நகரத்தைச் சார்ந்தவர்கள். எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, திராவிட இயக்கத்தினுடைய மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மண்டபத்திலே நீங்கள் வரலாற்றுச் சாதனைகளை தனியே வரலாற்றில் பொன்னேடுகளை தினமும் இணைத்துக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்கு நன்றி செலுத்தக் கூடிய பல தீர்மானங்களை நீங்கள் இங்கே நிறைவேற்றியிருக்கின்றீர்கள்.

கோரிக்கைகள் - தீர்மானங்கள்

இதிலே கோரிக்கைகள் சில. தீர்மானங்கள் பல. நீங்கள் மிகுந்த அளவிற்கு எல்லா நன்றியுள்ள தமிழரும் இன உணர்வுள்ள தமிழரும் இன்றைக்கு எதை விரும்புகின்றார்களோ, உலகத்திலே உள்ள எந்த மூலையில் இருந்தாலும், அந்தத் தமிழர்களுக்கு வேறு எண்ணமில்லாமல், ஒரு மித்த ஒரு கருத்தாக எதைக் கொண்டிருக்கின்றார்களோ, அதை முதல் தீர்மானமாக நீங்கள் பிரதிபலித்திருக்கின்றீர்கள்.

ஓய்வில்லா உழைப்பு - உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முதல்வர்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முதல்வர் - தலைவர் ஓய்வில்லாத உழைப்பால், அருந்தொண்டாற்றி வரக்கூடிய மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற்று நீடூழி வாழ இப்பொதுக்குழு நமது நல்லிதய வேண்டுதலை சமர்ப்பித்துக் கொள்கிறது (கைதட்டல்).

ஏழரைக் கோடி தமிழ் மக்களின் வாழ்வு நிலை உயர, இன்னும் நூறு ஆண்டு காலம் வாழ்வாங்கு வாழ இப்பொழுதுக்குழு வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்க கலைஞர்! வாழ்க நீடூழி!

என்றுதான் இந்த மாநாடு துவங்கியிருக்கிறது.

நன்றி உணர்வைக் காட்டியிருக்கின்றீர்கள்

தமிழர்களுக்கு நீங்கள் வழிகாட்டியிருக்கின்றீர்கள். தமிழ் இனத்திற்கு தமிழ் உணர்வை, நன்றி யுணர்வை நீங்கள் காட்டியிருக்கின்றீர்கள்.

அரசு அலுவலர் என்று சொன்னால் அவர்கள் தான் முதலிலே நன்றி செலுத்துபவர்களாக இருப்பார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான சரித்திரத்தை அருமைச் சகோதரர் சூரியமூர்த்தி அவர்களுடைய தலைமையிலே இருக்கக்கூடிய இந்த அரசு அலுவலர் ஒன்றியம் சிறப்பான வகையிலே வழிகாட்டியிருக்கிறது.

முதல் தீர்மானமே சிறப்பானது

எனவேதான் முதல் தீர்மானமே ரொம்ப சிறப்பான நல்லெண்ணத்திலே உந்தப்பட்டது.

அது மட்டுமல்ல நீங்கள் யாரிடம் எதைக் கேட்டுப் பெறலாம் என்பதைப் புரிந்தவர்கள். எதைக் கேட்டுப் பெற முடியாது என்பதையும் புரிந்தவர்கள்.

ஆகவே, இரண்டையும் புரிந்த காரணத்தினாலே அவர் நூறாண்டு வாழ்ந்தால் தமிழர்களுடைய வாழ்வே பல வகையிலே மறுமலர்ச்சியுகமாக மாறி விடும் என்று அந்த ஒன்றிலேயே நீங்கள் சிறப்பாக செய்திருக்கின்றீர்கள்.

அவர் நூறாண்டையும் தாண்டி வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணம்.

அய்ந்தாவது முறையாக முதல்வராக வந்தார் கலைஞர். அவருடைய ஆட்சிக் காலத்திலே அவர் கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சிறப்பாக செய் திருக்கின்றார்கள் என்று பல துறைகளிலே பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

150 ஆண்டுகாலக் கனவு - சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 150 ஆண்டு களாக நிறைவேற்றப்பட முடியாத ஒரு திட்டம்.

அண்ணா அவர்களுடைய படத்தைத் திறந்து வைக்குமாறு அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே எனக்கு அந்த வாய்ப்பைத் தந்திருக்கின்றீர்கள்.

அண்ணா அவர்கள் கண்ட திட்டம் - கண்ட கனவு - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். தந்தை பெரியார் கண்ட, அவருடைய விருப்பம், பெருந் தலைவர் காமராஜர் - இன்னும் தொடர்ந்து தமிழகத் தலைவர்கள் விருப்பம்.

அது மட்டுமல்ல அதுதான் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய திட்டம். தென் கிழக்கு ஆசியப் பகுதியே வளர வேண்டுமானால் அந்தத் திட்டம் தேவையானது.

அந்தத் திட்டப் பெருமை முதல்வர் கலைஞரையே சாரும்

அந்தத் திட்டம் இதுவரை மேடைப் பேச்சாக பல்வேறு மாநாடுகளிலே தீர்மானங்களாகத்தான் இருந்ததே தவிர, அதை செயலுக்குக் கொண்டு வந்த பெருமை முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.

கலைஞர் அவர்கள் உருவாக்கிய ஆட்சி மத்தியிலே சோனியா காந்தி அவர்களுடைய தலைமை யிலே உருவாக்கி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இருந்த காரணத்தால் நல்ல வாய்ப்பாக நாளும் பாலத்தைத் திறந்து கொண்டிருக்கக் கூடிய நம்முடைய அமைச்சர் பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கலைஞர் அவர்களாலே ஆக்கப்பட்ட காரணத்தால், இன்றைக்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிவடையக் கூடிய அளவிலே இருக்கிறது.

நீதிமன்றம் குறுக்கே

நீதிமன்றம் கொஞ்சம் குறுக்கே நின்று கொண்டிருக்கிறது. இன்னும் 25 கி.மீ. தூரம் தோண்டும் பணி தான் பாக்கி.

எனவே 150 ஆண்டுகால கனவு நனவாக்கப் பட்டிருப்பது இந்தப் பொற்கால ஆட்சியிலே. அது மட்டுமா?

120 ஆண்டுகளாக இதே மாவட்டத்திலே இருக்கிற தில்லையிலே இருக்கிற நடராஜப் பெருமாள் கோயில் பொது மக்களுக்குச் சொந்தமானதல்ல.

சிதம்பரம் கோயில் சொந்தமாம்!

அது எங்களுக்கே சொந்தமானது என்று சொன்ன நேரத்திலே, இல்லை - மக்களுக்குத் தான் சொந்தம் என்று சொல்லி, அதை எடுத்து 120 ஆண்டுகளாக அந்த நடராஜர் கேட்காத தமிழை, ஒரு திருவாச கத்தைத் தேவாரத்தைப் பாடும்படியாக, ஒருவரை உள்ளே அனுப்பி அதை எடுத்த பெருமை - பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞரையே சாரும்.

இன்று மாலை சிதம்பரத்தில் கலைஞர் அவர்களுக்கு நடைபெறுகின்ற பாராட்டுக் கூட்டத்திற்குத் தான் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி திரை விலக்கப்பட்டது

எதற்காக இதைச் சொல்லுகின்றோம்? அது நூற்றாண்டுக்கு மேலே உள்ள பிரச்சினை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடினாரே வடலூர் வள்ளலார்.

அவருடைய சத்திய ஞான சபையிலே அவருடைய கொள்கைக்கு மாறான ஒரு நிலை இருந்தது. அவருடைய பாடல்கூட அங்கு இல்லை.

அங்கே வடமொழி அர்ச்சனை இருந்தது. அது நூற்றாண்டுக்கு மேலே அந்த ஊடுருவல் இருந்தது. அதை மாற்றி - அங்கே முதல்முறையாக திரையை விலக்கிக் காட்டி, அவருட்பெருஞ்ஜோதி இதுதான் என்று காட்டிய பெருமை இந்த ஆட்சியினாலே தான் முடிவுற்றது. அதுவும் நூறாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினை. அதுபோல நூறாண்டுக்கு மேலே இருந்த ஒரு பெரிய கோரிக்கை - தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டு கிடையாது.

தமிழனுடைய ஆண்டு எது என்று சொன்னால் வாயிலே நுழையாது. பிரபவ, விப, சுக்ல என்று ஆரம்பித்து சர்வதாரி, விரோதி, குரோதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு - வாயிலே நுழையாத நிலையிலே தமிழனுக்கு தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடக்க நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காட்டி நூறாண்டுக்கு மேலே தமிழறிஞர்கள் விரும்பியதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோர் சொன்னதை எல்லாம் செய்து முடித்து - ஒரே ஒரு வரி உத்தரவிலே செய்து முடித்த பெருமை முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.

எனவே அந்த ஆட்சியின் கீழே நீங்கள் இருக்கின்றீர்கள்.

கேட்காமலேயே நடக்கிறது


எனவே தான், நீங்கள் கேட்காமலேயே எல்லாம் நடக்கிறது. கேட்டு அவர்கள் செய்வதில்லை. தாயினும் சாலப்பரிந்து என்று ஒரு சொற்றொடர் உண்டு. கேட்பதற்கு முன்னாலேயே நல்ல தாய்க்கு பால் சுரக்கும். எப்பொழுது பால் சுரக்கும்?

பிள்ளை பசியாக இருக்கும் என்று நினைத்த நேரத்திலே பால் சுரக்கும். எனவேதான், அந்தத் தாயினும் சாலப் பரிந்து என்ற அளவிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் உங்களுடைய பிரச் சினையை நீங்களே வியப்படையக் கூடிய அளவிற்கு செய்து முடிக்கிறார் என்றால் அது சாதாரணமல்ல.

------------------------தொடரும் "விடுதலை" 5-3-2009

0 comments: