Search This Blog

16.3.09

ஜாதியை முட்டித்தள்ளும் வெண்ணிலா கபடிக்குழு

கிராமம் என்றால் ஆலமரம், பஞ்சாயத்து, பழைய சொம்பு, உள்ளுர் உயர்ஜாதித் தலைவரின் தீர்ப்பு, கட்டுப்பாடு என்று உயர்ஜாதி மனப்பாங்கை எதிர்க்கத் துணியாவிட்டாலும், அதைச் சிலாகிக்கும் போக்கிலிருந்து தமிழ்த் திரையுலகினர் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். வெண்ணிலா கபடிக்குழு அப்படி வேறொரு கிராமத்தையும் மனிதர்களையும் காட்டுகிறது.

தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாய்த் திகழும் சடுகுடு போட்டிகளை மய்யமாகக் கொண்டு படம் எடுத்திருப்பதற்கு இயக்குநருக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் என்ற நமது எண்ணம் படத்தைப் பார்த்த பிறகு இன்னும் அதிகமாகிறது. காரணம் சடுகுடுக்காக மட்டுமில்லை; சடுகுடுவில் நுழையும் ஜாதிக்கும், ஜாதியைத் திணிப்போருக்கும் சவுக்கடி கொடுப்பதற்கும்தான்.

வெண்ணிலா கபடிக்குழு - ஜாதியை மறந்து அந்தஸ்தை மறந்து விளையாட்டின்மேல் கொண்ட ஈடுபாட்டினால் மட்டும் இணைந்த இளைஞர்களின் குழு. சிறுவர்களாக இருந்த பருவம் தொடங்கி, வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ ஒன்றாய் விளையாடி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பிய, முறையான பயிற்சியில்லாத குழு, கண்ட ஜாதிப் பயல்களோடு விளையாடுவதாக பெற்றோர் சொன்னாலும் கேட்காத இளைஞர்கள்.

திருவிழாவின்போது சொந்த ஊரில் பெருமையடித்துக் கொள்வதற்காகவே, பக்கத்து எருமை நாயக்கன்பட்டி(எரமநாயக்கன் பட்டி என்பதுதான் சரி --- தமிழ் ஓவியா) சொத்தை டீமை வரவைத்து ஆட நினைக்கும் இவர்களைச் சுற்றி நிகழும் கதை.

ஊர்த்திருவிழா, அங்கு வரும் காதல், அடுத்த திருவிழாவில் சந்திக்க உறுதி பூண்டு நிகழும் பிரிவு, திருவிழாப் போட்டியில் சண்டை, வன்மம் எனச் சுற்றி வரும் திரைக்கதை கபடிப் போட்டி ஒன்றில் வேகமெடுக்கிறது.

பேருந்தில் போகும்போது, அரைகுறையாகப் பார்த்த கபடிப் போட்டி விளம்பரத்தை வைத்து, போட்டியில் கலந்து கொள்ளக் கிளம்புகிறார்கள் குழுவினர். முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்ற சூழலில், திடீரென்று வாய்ப்புக் கிடைக்கிறது வெண்ணிலா கபடிக் குழுவுக்கு. சரியான பயிற்றுநரும் அமைந்துவிட முதல் வெற்றியைப் பெற்று, தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்கள்.

வெற்றி பெற்ற குழுவினருக்கு வாழ்த்துச் சொல்ல தூரத்து சொந்தக்காரர் ஒருவர் விருந்து வைக்கிறார். விருந்தின்போது, வந்திருக்கும் குழுவினரைப் பார்த்து ஏம்பா நீ எந்த சாமியைக் கும்புடறவன்? கீழத்தெருவா? என்று கேட்கிறாள் கிழவி. ஊர்ப்பெயரைச் சொன்னால், சொந்தக்காரர் பெயரைக் கேட்டு, குலதெய்வத்தைக் கேட்டு, வசிக்கும் தெருவைக் கேட்டு எப்படியாவது ஜாதியைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்தத் துடிக்கும் பழக்கத்தை நம்மால் இன்றுங் காணமுடிகிறது. இவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒரு இழுப்பு இழுத்ததைப் போல பதில் வருகிறது.

இப்ப என்ன ஜாதின்னு தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப்போற. இந்த சாமியையும், ஜாதியையும் என்னைக்கு தூக்கிப் போடுறீங்களோ, அன்னைக்குத்தான் உருப்படமுடியும் என்ற பதில் நம்மை நிமிரச் செய்கிறது. நிமிர்ந்து அமர்ந்தபடி கூர்ந்து நோக்கினால், போகிற போக்கில் கிழவி பேசும் கண்டகண்ட கட்சியில சேர்ந்து வீணாப் போறான் என்ற வசனத்தையும், பெரியவரின் தலைக்குப்பின்னால் தொங்கும் பெரியார் படத்தையும் கவனிக்க முடியும்.

இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் நேரத்தில் ஜாதி உணர்வாலும், சுயநல உணர்வாலும் தூண்டப்பட்ட அணித்தலைவன், கதாநாயகன் மாரியை விளையாடவிடாமல் செய்ய எண்ணுகிறான். தகுதிவாய்ந்த மாரியைப் புறக்கணிக்கும் அளவுக்கு ஜாதி உணர்வு ஊட்டிய ஜாதிக்காரனை முட்டித்தள்ளி, ஒண்ணா இருக்கறவங்ககிட்ட ஜாதியைத் திணிக்க நினைச்ச.... தொலைச்சுடுவேன் என்று திரையில் முழுதாய் வியாபித்து எச்சரிக்கைத் தருகிறார் கபடி பயிற்றுநர். இறுதியில் அணித்தலைவனை விட்டுவிட்டு, பயிற்றுநர் பின்னால் அணிவகுத்து வெற்றி காண்கிறது வெண்ணிலா கபடிக்குழு. ஜாதியால் உந்தப்பட்டவனே, அதற்காக வெட்கப்பட்டு வெறுப்பால் பேசுவதாக வைக்கப்பட்ட வசனம் - சரியான பாடம்.

சொல்ல வந்த கதையால், அழுத்தமாகப் பதியும் இடத்தில் ஜாதியை வைத்து, அதைக் கேவலமாகப் பார்க்கும்படியான காட்சியமைப்புக்களையும், வசனத்தையும் படைத்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நமது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் படைக்கவேண்டும். வசனத்தில் அல்லாமல் அழுத்தமான காட்சி வடிவில் கருத்தைப் பதியவைக்கும் இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும்.


---------------------இளையமகன் - "உண்மை" மார்ச் 1-15 2009

7 comments:

அப்பாவி முரு said...

//ஏம்பா நீ எந்த சாமியைக் கும்புடறவன்? கீழத்தெருவா? என்று கேட்கிறாள் கிழவி. ஊர்ப்பெயரைச் சொன்னால், சொந்தக்காரர் பெயரைக் கேட்டு, குலதெய்வத்தைக் கேட்டு, வசிக்கும் தெருவைக் கேட்டு எப்படியாவது ஜாதியைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்தத் துடிக்கும் பழக்கத்தை நம்மால் இன்றுங் காணமுடிகிறது//

நல்ல பதிவு,

வாழ்த்துக்கள் தமிழ் ஓவியா.


இன்றும் புதிதாய் ஒரு இடத்திற்க்கு சென்றால், உங்கப்பா பேரு என்ன?,
உங்க தாத்தா பேரு என்ன? என்று கேட்டு, பெயருக்கு பின்னல் இருக்கும் வால்மூலம் என்ன ஜாதி என்று காணவிழைகிறார்கள்.

வனம் said...

வணக்கம் தமிழ் ஓவியா

உங்கள் இடுகைகளை தொடர்ந்து படிப்பேன், ஆனால் இப்பொழுதுதான் கருத்துரை இடுகின்றேன்

இனி வருவேன்

\\இன்றும் புதிதாய் ஒரு இடத்திற்க்கு சென்றால், உங்கப்பா பேரு என்ன?,
உங்க தாத்தா பேரு என்ன? என்று கேட்டு, பெயருக்கு பின்னல் இருக்கும் வால்மூலம் என்ன ஜாதி என்று காணவிழைகிறார்கள்.\\

ஆம் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நான் கடைசில் வரும் ஜாதிக்கு நான் ''சொல்வதில்லை '' என்றே பதிலுரைப்பேன் அவர் எவ்வளவு பெரியவர் என்றாலும்.

பிறகு அவர்களால் எதுவும் பேசமுடிந்தது இல்லை.

நன்றி
இராஜராஜன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி muru

மாசிலா said...

நல்ல பதிவு.
தொடரட்டும் உங்களது தொண்டும் போராட்டமும்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தோழர்.மாசிலா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

இராஜராஜன்.

களப்பிரர் - jp said...

படம் பார்க்கதவர்களுக்காக :

அந்த மூதாட்டியிடம் அந்த பெரியவர் சொல்ல்வது (முடிந்தவரை அப்படியே சொல்ல முயற்சிக்குறேன் ) : " ஜாதியும் சாமியும் மனிதனுக்கு சுமை. அதை எப்ப கீழ எறக்கி வைக்குறீன்களோ அப்பா தான் வேகமா நடக்க முடியும்" அதற்க்கு அந்த மூதாட்டி "இவன் எப்ப இந்த கட்சில சேர்ந்தானோ அப்பா இருந்து இப்படி பேசுறான்"

படத்தின் இறுதியில் இறப்பவரி உடல் புதைக்க படுகிறது !! சுடுகாட்டில் எரிக்க படவில்லை !!
:) மொத்ததில் இயக்குனர் மின்னுகிறார் !!