Search This Blog

14.3.09

இன்னாருடைய மனைவி என்பதைவிட இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும்.


பெண்ணியம் பற்றி பெரியாரின் சிந்தனைத் துளிகள் ஒரு சில ..............


பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும்.
*******************************

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?
***************************************


கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள்.

****************************************

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமான தாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்.

*****************************************

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

*******************************************

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமை ஆக்கு வதற்காகத்தான்.

***************************************

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


*******************************************

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

*******************************************

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத்தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.


****************************************

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

********************************************

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

**************************************

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும்.

*********************************************

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல், இவன் இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும்.

**********************************************

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பதுமான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது.

**********************************************



-------------------- தந்தைபெரியார் - "உண்மை" மார்ச் 1-15 2009

1 comments:

Unknown said...

பெண் உரிமைக்கான பெரியாரின் சிந்தனைகளைப் படிக்கும் போது வியப்பில் ஆழ்த்துகிறார் பெரியார்.

யாரும் சிந்திக்க முடியாத கருத்தை சிந்தித்து துணிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில்
பெரியார் பெரியார் தான்.