Search This Blog

27.3.09

இந்தியா எல்லா மதக்காரர்களும் வாழ்ந்திடத் தகுதி உள்ள நாடா? இல்லையா?

இந்தப் பாசிசத்திற்கு முடிவுதான் என்ன?

குஜராத் மாநிலத்தை இந்த்துவாவின் பரிசோதனைக் கூடமாக்கி முடித்துவிட்ட சங்பரிவார்க் கூட்டம் அடுத்த கட்டமாக - அடுத்த களமாக கருநாடக மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து தன் வன்முறை சூரத்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக முசுலிம் என்று அறிந்த மாத்திரத்திலேயே அவர்களைத் தீர்த்துக் கட்டுவது - கதையை முடிப்பது என்கிற மூர்க்கத்தனத்தில் மூழ்கி இருப்பதாகத் தெரிகிறது.

பேருந்து ஒன்றில் ஒரு முசுலிம் மாணவனும், இந்து மாணவியும் பேசிக் கொண்டிருந்தனர் என்பதற்காக அவர்களைக் கீழே இழுத்துத் தள்ளி, தனி இடத்திற்குக் கொண்டு சென்று அடித்துத் துவைத்தனர் என்றால், இந்தியா எல்லா மதக்காரர்களும் வாழ்ந்திடத் தகுதி உள்ள நாடா? இல்லையா? என்ற வினாவை இது எழுப்பியுள்ளது.


கிரிக்கெட் விளையாடி விட்டு வேனில் வந்த இளைஞர்களை தெருநாயை அடிப்பதுபோல அடித்துத் தள்ளியுள்ளனர்.

முசுலிம்கள் என்று எப்படி அடையாளம் கண்டனராம்? அவர்கள் பயணம் செய்த வேனில் உருது எழுத்துகள் காணப்பட்டனவாம். அதன் அடிப்படையில் அதில் பயணம் செய்பவர்கள் முசுலிம்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற யூகத்திலே இந்தக் காலித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அப்படி தாக்கியபோது ஒரு மாணவனின் முதுகில் இருந்த பூணூல் வெளியில் தெரிந்ததாம் - சரி, அந்தப் பையனையாவது விட்டுவிட்டார்களா? கடுமையாகத் தாக்கினார்களாம் - ஏன்? அதற்கு அந்த வெறியர்கள் கற்பித்த காரணம் என்ன தெரியுமா? நீ ஒரு பிராமண ஹிந்து பையனாக இருந்துகொண்டு முசுலிம் பசங்களுடன் எப்படி சேரலாம்? என்று சொல்லி அடித்திருக்கின்றனர்.

இப்படியே போனால், இது எதில் போய் முடியும் என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியிலே குடிகொள்ளத் தான் செய்யும்.

இந்தியா - இந்து வெறியர்களின் நாடல்ல. பல மொழி, பல இனம், பல பண்பாடுகள், மதம், மத நம்பிக்கையற்ற மக்கள் வாழ உரிமைப் படைத்த துணைக் கண்டம் இது.

அனைவரும் வாழும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் கூறும் பெரும்பான்மை மதம் என்பதில் கூட ஆயிரக்கணக்கான பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரின் நம்பிக்கையை ஏற்கமாட்டார்கள்.

வைணவம் என்றால் அதில் வடகலை, தென்கலை என்று பிளவுபட்டு ஒருவருக்கொருவர் உறுமுவது நாடறிந்த ஒன்றே. இந்த நிலையில், நாங்கள்தான் பெரும்பான்மை என்று மார்தட்டிக் கொள்ளும் வாய்ப்பும் இந்த ஹிந்துத்துவா வெறியர்களுக்குக் கிடையவே கிடையாது.

உண்மையைச் சொல்லப்போனால், ஹிந்து மதம் என்ற போர்வையில் சிறுபான்மை இனத்தவராகிய பார்ப்பனர்கள், புலிக்குப் பயந்தவன் என்மேல் படுத்துக் கொள்ளலாம் என்னும் கதைபோல, தங்கள் பாதுகாப்பையும், ஆதிக்கத்தையும் வளர்த்துக்கொள்ளத்தான் இது பயன்படுகிறது.

இவர்களின் ஆதிக்க நிலையை ஹிந்து மதத்தில் உள்ள பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து எதிர்க்காமல் இருப்பதற்காக - அவர்களையெல்லாம் இந்துக்கள் என்ற தன்மையில் குரல் கொடுத்து நமக்கு எதிரிகள் இந்தச் சிறுபான்மை மதத்தவர்கள்தான் என்று சூ காட்டித் திசை திருப்புகிறார்கள்; அந்தச் சிறுபான்மை மக்களும் தமிழர்களே!

இதனை பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் உண்மையான நண்பன் யார்? பகைவன் யார்? என்பதைப் புரிந்து கொண்டு களம் இறங்கிப் போராட முன்வரவேண்டும்.

அவர்கள் செய்வது போன்ற வன்முறையில் அல்ல - நமது உரிமைகளைப் பறித்து ஏகபோகமாக அனுபவித்து வருபவர்களிடமிருந்து உரியதை மீட்டிட நம் பணிகள் வீதிகளில் நடந்தாகவேண்டும்.

சிறுபான்மை மக்களை எதிர்ப்பதற்கு மட்டும் நாம் அடியாட்களாக இருந்த நிலை மாறி, நம்மை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கும் வருணாசிரம பிறவி முதலாளிகளை வீழ்த்த ஒன்று சேர்வதுதான் இந்த சங்பரிவார்க் கும்பலின் கொட்டத்தை அடக்க ஒரே வழியாகும்.

சரி, சட்டம் என்ன செய்கிறது? வன்முறையை செயல் முறையாகக் கொண்ட அமைப்புகளை அனுமதிப்பது எப்படி? இது வெகுமக்களின் கேள்வியாகும்.

--------------------"விடுதலை" தலையங்கம் 27-3-2009

1 comments:

sathish (bengaluru) said...

koil vasalil pichai edukkum periyar... :(