Search This Blog

31.5.10

தேவநாதன், நித்யானந்தா காமலீலை

தேவநாதன், நித்யானந்தா ஒழுக்கக்கேட்டைப் பார்த்து நாடே சிரிப்பாய் சிரிக்கிறதே!
கோவையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் பேச்சு

மதவாதிகள், காவி உடை அணிந்த தேவநாதன், நித்யானந்தா காமலீலை, ஒழுக்கக் கேடுகளைப் பார்த்து நாடே சிரிக்கிறது. ஆனால் நாத்திகவாதிகள் யாராவது இப்படி ஒழுக்கக் கேடர்களாக நடந்தார்கள் என்று சொல்ல முடியுமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள், செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சி மனநிறைவு

மிகுந்த மகிழ்ச்சிக்கிடையிலே, மனநிறைவு கொள்ளத் தக்க வகையிலே இந்த கோவை மாநகரில் குடிஅரசு நூல்கள் அறிமுக விழா, உலகத் தமிழ்செம்மொழி மாநாடு விளக்கப் பெருவிழா ஆகிய இரண்டு விழாக்களை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய அறிவு ஆயுதமான குடிஅரசு வெளியீடு என்பது முறையாகப் பார்க்க வேண்டு-மானால் கோவையிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.

வெள்ளைக்கார நீதிபதி முன்பு பெரியார்

காரணம் குடிஅரசு ஏட்டினை தந்தை பெரியார் அவர்கள் 1925 லே தொடங்கிய பொழுது எங்களைப்போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே தொடங்கிய பொழுது இந்த மாவட்டம் கோவை மாவட்டமாகத்தான் ஈரோடு உள்ளடங்கியிருந்தது.

குடிஅரசுக்குத் தொந்தரவு ஏற்பட்ட பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இந்த மாவட்டத்தின் வெள்ளைக்கார நீதிபதிகள் முன்புதான் நின்றிருக்கிறார்கள்.

குடிஅரசையே மூடும்படியாக உத்தரவிட்ட நேரத்திலே உடனடியாகப் புரட்சி என்ற ஏட்டினை தொய்வில்லாமல் நடத்திய பெருமையும் இந்த கோவை மாவட்டம்தான் அதற்கு பதிவு கொடுத்தது.

முதலில் கோவை மாவட்ட தலைவர்

தந்தை பெரியார் அவர்கள் முதலில் கோவை மாவட்டத் தலைவராக இருந்துதான் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வந்தார்கள்.

எனவே இப்படி பல்வேறு வரலாற்றைப் பார்க்கும் பொழுது கோவை சிறப்பாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால் வேறு எதுவுமில்லை. சுயமரியாதை இயக்கமான தந்தை பெரியாருடைய இயக்கம். திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் வடிவம் அவ்வளவுதான். இதற்கு மேலே பெரிய வேறுபாடுகள் கிடையாது. நாங்கள் சமுதாயத்திற்கு முன்னாலே பாதை அமைத்துக்கொண்டு போகக் கூடியவர்கள்.

சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்

இராணுவ மொழியிலே சொல்ல வேண்டுமானால், சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் என்று சொல்லுவார்கள். ஒரு படை பின்னாலே வருகிறது. எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்ய வேண்டும் என்று நினைத்து வேகமாக சேப்பார்ஸ் அண்டு மைனர்ஸ் படை முன்னேறிக்கொண்டிருக்கின்ற கால கட்டத்திலே இடையிலே எதிரிகள் என்ன செய்வார்கள் என்றால் பாலத்தைத் தகர்த்துவிடுவார்கள். பாதையை மூடி விடுவார்கள்.

உலகத்திலே நடக்கக் கூடிய ஒரு முறை. ஆனால் அதை எல்லாம் கண்காணித்து புதிய பாலங்களையும் உடனடியாக போட்டு புதிய பாதைகளையும் அமைப்பதுதான் ஈரோட்டுப் படையின் மிக முக்கியமான பணி.

படைக்கு பாதை அமைப்பு

எங்களுடைய பணி படைக்கு பாதை அமைத்துக்கொண்டு முன்னாலே செல்லும். பின்னாலே அரசியல் படை வரும்.

செங்கற்பட்டு மாநாடு, ஈரோடு மாநாடு, விருதுநகர் மாநாடு என்று சுயமரியாதை இயக்கத்தின் மாநாடுகள் எங்கெங்கெல்லாம் சிறப்பாக நடத்தப்பட்டன. அந்த மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். மிக முக்கியமான தீர்மானங்கள். ஏதோ கட்டுரைகளைப் போல படித்தார்கள்.

கசப்பாக சிலர் உணர்ந்தனர்

கசப்பாக சிலர் உணர்ந்தார்கள். சிலர் விமர்சனம் செய்தார்கள். பெண்களுக்கு உரிமையா? பெண்ணுக்குப் படிப்பா? பெண்களுக்கு சொத்துரிமையா? இந்த நாடு உருப்படுமா? பெண்களை அடக்க முடியுமா? இவைகளை எல்லாம் பெண்களுக்குக் கொடுத்து விட்டால் ஒழுக்கம் மிஞ்சுமா? இப்படி எல்லாம் கேட்டவர்கள் யார்? நித்யானந்தாக்களின் சீடர்கள்.

பக்திக்கே உதாரண பரம்பரை

இப்படி எல்லாம் கேட்டார்கள், காஞ்சிபுரம் தேவநாதன் பரம்பரையினர். பக்திக்கே இவர்கள்தான் உதாரணம். குடிஅரசு எப்படி வெற்றிபெற்றிருக்கிறது என்று சொன்னால் கடவுள் இல்லை என்பதை எங்களை விட அதிகமாக நிரூபித்திருக்கிறார்கள்.

பெரியாருடைய அகராதியிலே கொள்கையிலே சமரசம் கிடையாது. நட்பிலே சமரசம் உண்டு. அருமைச் சகோதரர் கோவைத் தென்றல் மு.ராமநாதன் அவர்கள் வேகமாகப் பேசினார்கள்.

கடவுள் இல்லை என்று அமைச்சர் பேசினார். நான் அன்றைக்கே சொன்னேன். அடக்கிப் பேசுங்கள் என்று. ஏனென்றால் பலரது ஓட்டுக்களை வாங்கி ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளே போகக் கூடியவர்கள் என்பதற்காக. நாங்கள் தேர்தலிலே நிற்காதவர்கள், துணிச்சலுடன் சொல்லக்கூடிவர்கள்.

நித்யானந்தாக்களின் செயல்களே போதுமே!

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்பதை தங்களுடைய அற்புதமான செயல்களாலே உலகத்திற்குக் காட்டிய கருஞ்சட்டைக்காரனை விட நித்யானந்தாக்களுக்குதான் பெருமை உண்டு. (கைதட்டல்).

குடிஅரசு ஏடு எதற்காகத் துவக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெளிச்சம்போட்டு உலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கின்றார். காத்மண்டு வரை ஓடிப்போனவரைத் தேடிக்-கண்டு-பிடித்திருக்-கின்றார்கள்.

ஏற்கெனவே சங்கராச்சாரியார் ஓடிப் போய் திரும்பி வந்தார். இருக்கும் பொழுதே கமண்டலத்தை விட்டு ஓடிப்போனவர். இப்பொழுது சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளை கலைத்துக்கொண்டிருக்கின்றார்.

காவி முகத்திரைகள் கிழிகிறது

இன்றைக்கு காவியினுடைய முகத்திரைகள் கிழிந்து கொண்டிருக்கின்றன. அய்யோ என்ன இப்படி நடக்கிறார்களே என்று காவிச்சட்டை நண்பர்களுக்கே வெட்கம். குடிஅரசு எதற்காகத் துவக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் பெரு வெற்றியை குடிஅரசு ஏடு பெற்றிருக்கிறது.

பெரியார் பற்றி அண்ணா சொன்னார்

ஒரு முறை தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியார் அவர்களைப் பற்றி அவ்வளவு ஆழமாக சொன்ன தலைமகன் வேறுகிடையாது. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரி சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார பீரங்கி அவர் சொன்னார். ஈட்டி எட்டிய வரையில் பாயும். பணம் பாதாளம் வரையில் பாயும். ஆனால் எங்கள் தலைவர் பெரியாரின் கொள்கை இருக்கிறதே அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையிலும் பாய்ந்து அதற்கு அப்பாலும் பாயும் என்று சொன்னார்கள்.

பெரியார் கொள்கை உலகளாவிய அளவில்

இன்றைக்கு தந்தை பெரியாரின் கொள்கை உலகளாவிய அளவிலே பரவி வருகிறது. இன்றைக்கு தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு நாட்டிலே அடிபட்டுக்கொண்டிருக்கின்றார்களே அதற்கு என்ன அடிப்படை? மதம் தானே அடிப்படை? தந்தை பெரியார் மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன என்று குடிஅரசிலே எழுதிக் கேட்டார்.

மதம் என்ன நன்மை செய்தது?

இன்றைக்கு மக்கள் எல்லோரும் புரிந்துகொண்டார்கள். மதம் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. ஒரு பொதுக்கூட்டத்திலே நிம்மதியாக உட்கார முடியவில்லை. ரயில் நிலையங்களிலே நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. பேருந்துகளிலே, மக்கள் கூடுகின்ற இடத்திலே நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், அதற்கு யார் காரணம் பகுத்தறிவாளர்களா?

எந்த நாத்திகன் ஒழுக்கம் தவறினான்?

கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாத்திகர்களா? இதுவரை எந்த நாத்திகனும் ஒழுக்கம் தவறியவன் கிடையாது. நாங்கள் சவால் விட்டுச் சொல்லுகின்றோம். எங்களுடைய பகுத்தறிவாளர்கள் இங்கே இருக்கிறார்களே இவர்களைப் பார்த்து உங்களுடைய சுட்டு விரலை நீட்ட முடியுமா? இவர்கள் இன்னின்ன தவறு செய்தார்கள். ஒழுக்கக்கேடர்களாக இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? செம்மொழி மாநாடு கோவையிலே நடத்த இருக்கின்றோம். திருக்குறளிலே ஒரு பாடல் உண்டு தவறு செய்யாதே. தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நினைக்காதே.

உரிய தண்டனையைப் பெற்றுக்கொள். இதுதான் பகுத்தறிவாளர்களுடைய அணுகுமுறை. இதுதான் திராவிட இயக்கத்தினுடைய தெளிவான நிலைப்பாடு. இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடித்தளம். ஆனால் வைதீகர்களுக்கு அப்படி அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு அப்படி அல்ல. மாறாக நீ எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். காசு போட்டால் பாவம் தீர்ந்தது

வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் சென்று உண்டியலிலே காசு போட்டால் உன்னுடைய பாவம் மறைந்து போகும். ஒரு மதம் வெள்ளிக்கிழமை இன்னொரு மதம் வியாழக்கிழமை. பாத்தியா ஓதினால் போதும். இன்னொரு மதம் ஞாயிற்றுக்கிழமை. அவர்கள் சொன்னார்கள் அல்லவா? இஸ்ரேல் அனுபவத்தைப் பற்றி.

ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ கோவிலுக்குச் சென்று ஏசுநாதரிடம் பாவ மன்னிப்பு பெறலாம். இந்த பாவ மன்னிப்பு பெருகிப் போய்தான் போப்புக்கே இப்பொழுது பெரிய சங்கடம் வந்திருக்கிறது. அதை எல்லாம் இந்த மேடையில் சொல்ல நேரமுமில்லை. மூன்று கோடி ரூபாய் சம்பாதித்த பாதிரியார் கைது என்று இன்று மாலை ஏட்டிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் அப்படி செய்வதற்கு என்ன அடித்தளம்? கர்த்தர் பாவத்தை மன்னிப்பார் என்று ஞாயிற்றுக்கிழமை பாவத்தைத் தீர்க்க உண்டியலில் பணம் போட்டுவிட்டால் பாவம் தீர்ந்துவிடும் அவர்களுக்கு. திங்கட்கிழமையிலிருந்து அவர்களுக்கு புதுக்கணக்கு. அடுத்த வாரம் அவன் ஏன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றான்.

(தொடரும்) ----------------”விடுதலை” 29-5-2010

0 comments: