Search This Blog
14.5.09
மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்
உலக மொழிகளில் மூத்தது தமிழ்; மிகவும் தென்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங் குவது; கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரே காட்டியுள்ளார்.
பிறப்பு - கல்வி
சங்கரன்கோயில் என அழைக்கப்படும் சங்கரநயினார் கோயில் திருநெல்வேலி மாவட்டதைச் சேர்ந்தது. அங்கு, ஞானமுத்து, பரிபூரணம்அம்மையார் ஆகியோருக்கு, 1902 பிப்ரவரி 7இல், பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர், தேவநேசன். இவரே பிற்காலத்தில் தேவநேயப் பாவாணர் எனப் புகழ்பெற்றார்.
தம் அய்ந்தாம் அகவையில் தேவநேசன் தம் பெற்றோர்களை இழந்தார். அதன்பின், அவ ருடைய தமக்கையர், பாக்கியத்தாய் அவரை வளர்த்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். அடுத்து, வடார்க்காடு மாவட்டம் ஆம்பூரில், கிறித்துவ நடுநிலைப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பை முடிக்கும் வரை படித்தார். முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சோழபுரத்தை அடுத்து முறம்பு எனும் சீயோன் மலை உள்ளது. அங்கு யங் எனும் விடையூழியர் (மிஷனரி) தொண்டாற்றி வந்தார். அவருடைய உதவியால், பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (சி.எம்.எஸ்) உயர் நிலைப் பள்ளியில் தேவநேசன் சேர்ந்தார். அங்கு, பதினோராம் வகுப்பு (அப்பொழுது அதை ஆறாம் படிவம் என்பர்) வரை படித்து, உயர் நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.
பள்ளித் தமிழாசிரியர்
பள்ளிப் படிப்பை முடித்ததும், தமது 17ஆம் அகவையில் சீயோன் மலை நடுநிலைப் பள்ளியின் 1919இல் ஆசிரியராகப் பணியேற்றார். முறைப்படி ஆசிரியப் பயிற்சி பெற்றார்.
ஆம்பூரில் அவர் பயின்ற உலுத்திரன் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஆனார். பாளையங்கோட்டை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பண்டித மாசிலாமணியார், இவருக்குக் கொடுத்த சான்றிதழில் இவர் பெயரை, தேவநேசக் கவிவாணன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதுவே, தேவநேயப் பாவாணர் எனத் தமிழ் வடிவம் பெற்றது.
மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் 1924இல் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த ஆண்டு தேவநேயன் ஒருவரே வெற்றி பெற்றவர் ஆவார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, கிறித்துவக் கல்லூரி உயர் நிலைப்பள்ளி, பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளி, மன்னார்குடி ஃபின்லே உயர்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, புத்தூர், ஈபர் உயர்நிலைப் பள்ளி, சென்னை மண்ணடி முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1925 முதல் 1944 வரை தமிழாசிரியராகப் பணி யாற்றினார். திருச்சிராப்பள்ளியில் மட்டும் ஒன்பது ஆண்டுகள் (1934-43) தொடர்ந்து ஒரே பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தார்.
கல்லூரிப் பணி
நடுநிலை, மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில், 1919 முதல் தமிழ் கற்றுத்தந்த தேவநேயர், 1944இல் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் ஆனார். அங்கு பன்னீராண்டுக் காலம் தொடர்ந்து பணியாற்றினார். இங்கு அவருடைய பணிக்குப் பெரும் உதவியாக இருந்தவர்கள், கல்லூரி முதல்வர், இராமசாமிக்கவுண்டர், நகராட்சிஆணையர், கீ.இராமலிங்கனார், நகராட்சித் தலைவர், இரத்தினசாமப்பிள்ளை ஆகியோர் ஆவர். துரை மாணிக்கம் எனும் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் முனைவர் வ.செ.குழந்தைசாமி, மேனாள் அமைச்சர் க.இராசாராம், அருணாசலம் ஆகியோர் சேலம் கல்லூரியில் பாவாணரிடம் பயின்றோர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பல்கலைக் கழகத்தில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திராவிட மொழி ஆராய்ச்சித்துறையின் வாசகர் (ரீடர்) என்ற பொறுப்பில் 1956 முதல் 1961 வரை, பாவணர் இருந்தார். இருவடைய ஆய்வு முறை, அதுவரை தமிழகத்தில் எவரும் மேற்கொள்ளாத ஒன்று. அந்நிலையில், இவருடைய பணியின் அருமையை அறியாத வர்கள், இவருக்கு மேலிருந்து இவருடைய திறனை மதிப்பீடு செய்ய முற்பட்ட பொழுது சிக்கலும் முரண்பாடும் ஏற்பட்டன. ஆகையால், இவர் இடையில் வெளியேற வேண்டியவர் ஆனார்.
காட்டுப்பாடி வாழ்க்கை
பல்கலைக்கழகப் பணியிலிருந்து விடுபட்ட பின்பு 1951 முதல் 1974 வரை, வடார்க்காடு வேலூரை ஒட்டிய காட்டுப்பாடியில் பாவாணர் வாழ்ந்தார். நிலையான பணியும் ஊதியமும் இன்மையால், அங்கு முதலில் சுமார் அய்ந்தாண்டுகள் இல்லாமையும் போதாமையும் அவரைத் துன்புறுத்தின. இந்நிலையில் அவர்தம் துணைவியாரையும் இழந்தார். சொற்பொழிவுகளுக்குச் செல்லும் பொழுது அன்பர்கள் தரும் பணம், சில காலம் தனிப் பயிற்சி ஊதியம், வேலூர் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ச் சொற்கள் தொகுப்புப் பணியால் கிடைக்கும் வருவாய், பெருஞ்சித்தரனாரின் பொருட்கொடைத் திட்டம், மணிவிழாக் குழுவினர் அளித்த பணமுடிப்பு, நண்பர்களும் தொண்டர்களும் அரிதாய் அளித்த நன்கொடை ஆகியவற்றால் குடும்பம் நடத்தியதுடன், ஆய்வுப் பணியையும் தடைகளுக்கு இடையே தொடர்ந்தார்.
அரசு அகர முதலித் திட்டம்
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் முயற்சியால், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது. அதன் இயக்குநராகப் பாவாணர் 1974 ஆகசுட்டு 5இல் பணியமர்த்தம் செய்யப்பட்டார். சென்னைக்குக் குடியேறினார். ஏந்து (வசதி)க் குறைகள் பலவற்றிற்கு இடையில் அலுவலகத்திலும் வீட்டிலும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியை அரும்பாடுபட்டுத் தொகுத்தார். அப்பணியில் இருந்தபொழுதே, மதுரையில் நடைபெற்ற அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்த மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு முடிவு செய்தினார். அவர் உழைப்பின் பயனாகிய அகர முதலியின் முதல் மடவம் 1985இல் வெளியிடப்பட்டது. அவருக்காகத் தொடங்கிய திட்டம் தொடர்கிறது. அடுத்தடுத்துப் பயன்மிகுந்த வகையில் மடலங்கள் வெளிவருகின்றன.
குடும்பம்
பாவாணர் ஆசிரியப் பணி ஏற்றபின் எசுத்தர் அம்மையாரை 1927இல் மணந்தார். அவர் களுக்குப் பிறந்த குழந்தை மணவாளதாசன், குழந்தைக்கு ஓராண்டு முடிந்தபின் தாய் மறைந்தார். பாவாணரின் தமையனார் அப்பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டார். 1930இல் நேசமணி அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்று 33 ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்தார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஆறு பேர். ஒன்று குழந்தைப் பருவத்திலேயே இறந்தது. மற்ற அய்வர், நச்சினார்க்கினிய நம்பி, செல்வராயன், அடியார்க்குநல்லான், மங்கையர்க்கரசி, மணி ஆகியோர் ஆவர்.
நூல்கள்
1925இல் சிறுவர் பாடல் திரட்டு எனும் பாவாணரின் முதல் நூல் வெளியாயிற்று. மொழியாராய்ச்சி எனும் முதல் கட்டுரையை செந்தமிழ்ச்செல்வி எனும் மாத இதழ் வெளியிட்டது (1931). அவருடைய அரிய மொழி ஆய்வுத் திறனைத் தொடக்கத்திலேயே அடையாளங் கண்டு போற்றியவர் சுப்பையாப் பிள்ளை. தமிழின் மீது ஆரியத்தின் மேலாதிக்கத்தையும், அதனால் தமிழ்நெறி தடம் புரண்டதையும் அடையாளப்படுத்தி, தமிழ் நெறியையும் அதன் தொன்மையையும் காட்டிய பெருஞ்சிறப்பு ஒப்பியன் மொழி நூலுக்கு உண்டு (1940). திரவிடத் தாய் (1944). முதல் தாய் மொழி (1953), தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு (1967), வேர்ச் சொல் கட்டுரைகள் (1973) என 35 நூல்களுக்கு மேல் எழுதித் தனித் தமிழின் வளம், தொன்மை, முதன்மை முதலியவற்றை நிறுவினார்.
பாவாணரின் தொண்டு, மறைமலைஅடிகள் கண்ட தனித்தமிழை இயக்கம் ஆக்கிற்று; உலகத் தமிழ்க் கழகம் (1968) எனும் அமைப்பைத் தோற்றுவிக்கும் அளவிற்கு இளைஞரிடையே புதிய அறிவையும் உணர்ச்சியையும் உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சி எல்லாக் காலத்தும் நிலைக்கட்டும், தமிழர் வாழ்வு செழிக்கட்டும்!
---------------- கு.வெ.கி.ஆசான் அவர்கள் "பெரியார் பிஞ்சு" மார்ச் 2008 இதழில் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பெரியார் உட்பட திராவிட இயக்கத்தினர் நினைத்திருந்தால் பாவாணாரின் சிந்தனைகளையும் எழுத்துக்களையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றிருக்க முடியும். பார்பன எதிர்ப்பில் காட்டிய அக்கரையை பாவாணரின் ஆராய்சி முடிவுகளை பொதுமக்களிடம் கொண்ட செல்ல எந்த முயற்சியையும் அவர் வாழும் காலத்திலும், அதற்கு பிறகும் கூட எடுக்க வில்லை. எனக்கு தெரிந்து பாவாணர் பெயரில் மணி மண்டபம், நூலகம் திறந்ததைத் தவிர்த்து பாவணாரின் தமிழ் ஆய்வுகளை திகவினரோ, திமுகவினரோ பெரிதாக கண்டு கொண்டதில்லை.
நான் சொல்வது தவறு என்றால் பாவாணரை திக எந்த வகையில் போற்றியது என்று சொலுங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
கழகங்கள் சாராத தமிழார்வளர்களால் தான் பாவாணர் தமிழர்களிடையே ஓரளவு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறார்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இது குறித்த தகவல்களை திரட்டி விரைவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன். கோவி. கண்ணன்
நன்றி
Post a Comment