Search This Blog

31.5.09

1935 ஆம் ஆண்டு விடுதலை பற்றி பெரியார் என்ன எழுதினார்?

விடுதலை இதழ் துவக்கப்பட்டபொழுது தந்தை பெரியார் அவர்கள் என்ன எழுதினார் என்பதை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.
தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 29.5.2009 அன்று தஞ்சையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

கலந்துரையாடலுக்கு ஒப்புக்கொள்ள காரணம்...

இது போன்ற கலந்துரையாடலுக்கு நான் ஒப்புக்கொள்ளுவதற்குக் காரணம் ஒன்று, தேர்தல் நேரத்திலே பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நீங்கள் கூட்டத்திற்கு வந்திருந்தாலும் கூட, உங்களை எல்லாம் கூட்டத்திலே பார்த்துவிட்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டு அடுத்த கூட்டத்திற்கு உரிய நேரத்தில் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு பரபரப்போடு செய்யப் பட்ட பிரச்சாரம் அது. எனவே நான் மேடையிலிருந்து பார்க்கிறேன். எல்லா தோழர்களையும், யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். எங்கேயிருக்கிறார்கள்? எங்கே அமர்ந்திருக்கின்றார்கள் என்றெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடிய வாய்ப்பு இருந்தது. இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அளவளாவி சந்திக்கக்கூடிய ஒரு நிதானமான சூழல் அப்பொழுது இல்லை. ஆகவே மீண்டும் அந்த வாய்ப்பை இன்றைக்கு உருவாக் கிக்கொள்ளலாம். என்பது முதல் நோக்கம்.

விடுதலை பவள விழா


இரண்டாவது விடுதலை பவளவிழா என்ற அந்த வாய்ப்பைக் கருத்திலே கொண்டு நம்மு டைய இயக்கப் பணிக்கு அடித்தளமாக இருப்பது தமிழ்நாட்டிலே இந்த இரண்டு மாவட்டங்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். (பலத்த கைதட்டல்)

எனவே உங்களோடு கலந்துரையாடுவதிலே உங்கள் கருத்துகளைக் கேட்பதிலே ஒரு புதுத் தெம்பும், உற்சாகமும் எனக்கும் ஏற்படும். என்னுடைய பேட்ரியும் சார்ஜ் ஆகும்.
ஆகவே அந்த வகையிலே இது ஒரு பெரிய வாய்ப்பு. பல கருத்துகளை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள். நான் நிறைய எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழைய செய்தி கள் இளைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும்.

75 ஆண்டுகள் வரலாறு

விடுதலையினுடைய நீண்ட நெடிய வரலாறு 75 ஆண்டுகள் வரலாறு என்பது சாதா ரணமல்ல. அதுவும் 75 ஆண்டு காலத்தை தென்றல் காற்றைப் போல அல்லது தடையில்லாத ஒரு நீரோட்டத்தைப் போல அது நடந்து கொண்டிருக்கின்றது. எத்தனையோ இடர்பாடுகள் அவைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்; வயதானவர்கள் அறிவீர்கள்.

இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டிய புதிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. எனவே அந்த வகையிலே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். மூன்று, நான்கு முறை விடுதலையைப் பற்றி எழுதியிருக்கின்றார்கள்.

அதைப்பற்றிச் சொல்லுகின்றேன். இதைப்பற்றி பவளவிழா மலரில் எழுதியிருக்கின்றேன். அதைப்பற்றி ஒரு பகுதிதான் இங்கே துண்டறிக்கையாக உங்களுக்கு அச்சடித்து வழங்கக்கூடிய அளவிலே வேண்டுகோளாக வைக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக விடுதலையை நிறுவியவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கப் பொறுப் பாளர்கள் ஆவார்கள். ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்பட்ட அதனுடைய சரியான பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

திராவிடன் இதழ் இல்லாமல் போய் விட்ட சூழ்நிலையில் கட்சியின் வார இரு முறை இதழாக அக் காலத்தைய அரையணா விடுதலை வெளி வந்தது.

1935இல் விடுதலை துவக்கம்

1.6.1935 ஆம் நாளிலிருந்து விடுதலை ஏடு தமிழ்மக்களுக்குக் கிடைத்தது. இது அப்பொழுது வாரம் இரு முறை வந்தது. அரையணா விலை. அறிஞர் டி.ஏ.வி நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு எண்.14, மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து அது வெளி வந்தது.

தந்தை பெரியார் அவர்கள் இதனைப் பாராட்டி தம் குடிஅரசு இதழில் மகிழ்ச்சி பொங்க எழுதினார். நம்முடைய பேராசிரியர் பெரியார் பேருரை யாளர் அ.இறையனார் அவர்கள் ஒரு பெரிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக நூலாக வெளிவந்திருக்கிறது.

இதழாளர் பெரியார் என்ற நூல் ரொம்ப அற்புதமான நூல். இந்த நூலில் தேன்கூட்டிலிருந்து தேனை எடுத்து வந்து திரட்டித் தருவது போல அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். நம் நூலகத்தில் இந்த நூல் இருக்கிறது.

விடுதலை ஏடுகளை கிடைத்த வரையிலே நாமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அய்யா அவர்கள் மகிழ்ச்சி பொங்க விடுதலையை வரவேற்கிறார்கள். விடுதலை பற்றி பெரியார்
1935இல் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ் பத்திரிகை ஒன்று விடுதலை எனும் பெயரால் சென்னையிலிருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப் பற்றி ஒரு மதிப்புரை அவசியம் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

(அய்யா எழுதுகிறார் அதற்கு என்ன காரணம் என்பதை சொல்லுகின்றார்) ஏனெனில் இரண்டு, மூன்று வருடங்களா கவே (1933) நமது செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர் கள் சொன்ன மாதிரி நீதிக்கட்சியைச் தோற்கடிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இவ்வளவு சாதனைகளைக் குவித்த கட்சியை தோற்கடிக்கிறார்கள். பத்திரிகைகள் மூலமாக பார்ப்பனர்கள் செய்கிறார்கள்)

(அய்யா எழுதுகிற வார்த்தையைப் பாருங்கள்)

பரிசுத்த, வீரரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் (என்ன அதற்குத் தகுதி பாருங்கள்) இரவும், பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப்பத் திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல், அலட்சிமாய் இருந்ததும் அதன் பயன்களை சமீபத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும் மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை, தமிழ்பத்திரிகை என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விசயம் யாரும் அறியாததல்ல.

இன்றைக்கும் அதே கூப்பாடுதான்!

75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைக்கும் நம்முடைய நாட்டு அரசியலிலே இதே கூப்பாடு தேவைப்படுகிறது. (பலத்த கைதட்டல்)

அப்படியானால் அந்த இனப்போராட்டம் - தேவாசுரப் போராட்டம். இன்றைக்குக் கூட முதல்வர் அவர்கள் குறிப்பிட்டிருக்கக் கூடிய ஆரிய -திராவிட போராட்டம் எவ்வளவு நீண்ட நெடுங்காலமாக ஒரு தொடர் போராட்டமாக இருக்கிறது என்பதை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

நேற்றைய தலை முறை கூக்குரலிட்டது. இளைய தலைமுறையினருக்கும் இதே முழக்கம் தேவைப்படுகிறது.

இந்த மருந்தையே திருப்பித் திருப்பிக் கொடுக்கிறீர்களே என்றால் நோய் தொடர்ந்து கொண்டி ருக்கிறதே அதனால் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அதற்கு மருந்து தேவை என்பதற்கு அடையாளமாகச் சொல்லுகின்றார்கள்

அப்படிப்பட்ட நிலையில் விடுதலை எனும் பெயரால் ஒரு பத்திரிகை வெளியாகியிருப்பதைப் பார்த்து எந்த பார்ப்பனர் அல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய இதற்கு மதிப்புரை வருகின்றதா? எப்படி வருகின்றது? என்பதை யாரும் கவனிக்கமாட் டார்கள்.

(எப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த எழுத்துகள். எவ்வளவு ஆணித்தரமான கருத்துகள், எவ்வளவு அடித்தளத்திலே இருந்த இன உணர்வு கொப்பளிப்புகள் இவைகளை எல்லாம் நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்) ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேளையில் பிரவேசிக்காமல் வந்து விட்டது தமிழ் பத்திரிகை (அய்யா எப்படி சொல்லுகிறார் பாருங்கள்) என்று விளம்பரம் செய்யவே ஆசைப் படுகிறோம் என்று அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார்.

நாம் இதில் தெரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் வந்து விட்டது விடுதலைக்குப் பவள விழா ஆண்டு என்ற புதிய ஓட்டத்தை உருவாக்க வேண்டும். இன உணர்வு கொண்ட தமிழர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்கள் வந்துவிட்டது, வந்து விட்டது, வந்துவிட்டது தமிழினத்தைக் காப்பாற்றிய ஒரு பத்திரிக்கைக்கு பவள விழா ஆண்டு வந்து விட்டது. தமிழினத்திற்கு மூச்சுக் காற்றாகத் திகழ்ந்த விடுதலைக்குப் பவள விழா வந்துவிட்டது.

என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று ஆனந்தக் கூத்தாடு கின்ற அளவிற்கு மகிழ்ச்சியாக செய்ய வேண்டியதை நமக்கு அய்யா அவர்கள் ஆரம்ப காலத்திலேயே சொல்லியிருக்கின்றார்கள். இது மிக முக்கியமான ஒரு நிலை.

பழைய விடுதலை அலுவலகம்

அதற்கு அடுத்த படியாக நண்பர்களே! அய்யா அவர்கள் 15.12.1965இல் 2, ரண்டால்ஸ் சாலை பெரியார் திடலிலே இயக்க உரிமையாகி விட்ட புதிய கட்டடத்திற்கு விடுதலை மாறி யது.

விடுதலைக்கு எத்தனையோ தடைகள் இருந்ததை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.
அண்ணா அவர்கள் ஆசிரியராக, குத்தூசி குருசாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார்கள். சிந்தாதிரிப்பேட்டை எண்.2 பாலகிருஷ்ணா பிள்ளை தெரு என்ற இடத்தில்தான் விடுதலை அலுவலகம் இருந்தது. அவர்களுக்குப் பிறகு அய்யா அவர்கள் என்னையும் கொண்டு போய் உட்கார வைத்தார்.

அந்த கட்டடம் குடோன் மாதிரி இருக்கும். ஒரு சிறிய கழிப்பறை ஒரு பக்கம் இருக்கும். மெசின் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே சிலதுகள் எல்லாம் வந்து கொட்டும். மேசைகள் எல் லாம் எப்படியிருக்கும் என்று கேட்டால் பலகைகளை வாங்கி ஆணி அடித்து உருவாக்கு வார்கள் பாருங்கள் அந்த மாதிரி அய்யா அவர்களுடைய எண்ணப்படி மேசை, நாற்காலி உருவாக்கப்பட்டது.

நாம் வாங்குகிற பேப்பருக்கு பலகைகள் அடித்து பெட்டி மாதிரி கொடுப்பார்கள் அந்த பலகை பெட்டியை மேஜையாகவும், நாற்காலியாகவும், செய்து போட்டிருப்பார்கள். எங்கள் சேருக்கு - நாற்காலிக்கு கையெல்லாம் இருக்காது. அய்யாவே அதில்தான் உட்கார்ந்திருப்பார்கள் என்றால் நமக்கெல்லாம் சாதாரணம். அந்த கட்டடம் நாட்டுக் கோட்டை நகரத்தாருக்கு உரிய கட்டடம். அந்த கட்டடத்திற்கு மாத வாடகை முப்பது ரூபாய். அதற்கு முன்பு இன்னும் குறைவுதான். நான் விடுதலை ஆசிரியராக சென்ற சமயம் வாடகை முப்பது ரூபாய். சென்னையில் 1962இல் 30 ரூபாய்க்கு அவ்வளவு பெரிய இடம் வாடகைக்குக் கிடைத்தது.

--------------------தொடரும் "விடுதலை" 31-5-2009

0 comments: