Search This Blog

9.5.09

இந்தியாவில் பர்தா (கோஷா) முறை ஒழிக்க வேண்டியது அவசியம்


சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - ii


கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என வலியுறுத்துவது மதம். விதவை என்று பட்டம் சூட்டியது மதம். சதி என்று உடன்கட்டை ஏற்றியது மதம், மொட்டையடித்து மூலையில் முக்காடிட்டு உட்கார வைத்தது மதம். பெண் கல்வியை மறுத்தது மதம், ஆணுக்குப் பெண் அடிமைப் பொருளே என்று பெண்ணே ஏற்றுக் கொள்ளச் செய்தது மதம். இப்படி மதத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் விடுபட முடியாமல் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறாள். துப்பாக்கி ஏந்தி எதிரிகளை வீழ்த்தினாலும் முஸ்லிம் பெண்கள் கோஷாவை அகற்ற முடியாது. வெளிச்சத்தைக் காண முடியாது. பிற ஆண்களுடன் பேசுதல் கூடாது. முஸ்லிம் மதம் இப்படிக் காலப் போக்கில் பல சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. ஆயிரம் கற்றாலும் கர்த்தரின் அருள்வாக்கு இல்லாமல் வாழ்க்கையில் எதுவுமில்லை என்று சொல்லித்தர கிறித்து மதம் உள்ளது. நாள்தோறும் வாரந்தோறும், மாதந்தோறும் கோயில், பூசை, புனஸ்காரம் சடங்கு பண்டிகை விழாக்கள், உற்சவம் எனப் பணத்தை வாரி இறைத்து ஜாதியை, மதத்தை பெண்கள் வழியாக தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இந்துமதம். இதுபோன்ற நடவடிக்கைகளால் பெண்களே தாங்கள் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்று நினைக்க வைத்திருக்கிறது.

பெண்ணினத்தைச் சுற்றிப் போடப்பட்ட இத்தகைய விலங்குகளை உடைத்தெறிந்து பெண்கள் தங்களைத் தாங்களே சுதந்திரமாக வழிநடத்திக் கொள்ள இடப்பட்ட புரட்சிகரப் பாதையே சுயமரியாதை இயக்கப்பாதை

இந்தச் சிந்தனையை வழங்குவதற்கே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.


சங்கீதத்தாலும், நாட்டியத்தாலும் ஏற்படும் தீமை

-------- டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியம்மையார்


படைக்கப்பட்ட படைப்பு முழுவதிலுமே, அழகும், வர்ணமும், கீதமும் இசையும், ஒழுங்கும் நிரப்பியிருக்கின்றன. பகுத்தறிவு படைத்த மனிதன் முதல் ஊர்ந்து செல்லும் புழுவரையில் சகல ஜீவராசிகளுமே, சங்கீதத்தை அனுபவித்து இன்புறலாம். தாங்களும் சங்கீதத்தைப் பொழியலாம். நாகரிகமடைந்த மனிதன் முதல் அநாகரிக வனவாசி வரையில் சகல மனிதர்களும், மனத்திலே உற்சாகம் ஏற்பட்டபோது பாடலாம்; நடிக்கலாம்; களித்து விளையாடலாம். மனித சமூகத்துக்கு சத்விஷயங்களில் தூண்டுதல் அளிப்பதற்குரிய, மாட்சிமிக்க உன்னத கருத்துகளை இயற்கை சங்கீதத்தின் மூலமே வெளியிட முடியும்.

நமது நாயன்மார்களும், ஆச்சாரியார்களும், ஆழ்வார்களும் பக்தி மேலீட்டால், அழகான தோத்திரங்களையும், அருட்பாக்களையும் பாடியிருக்கிறார்கள். திருக்குறள், திருவாசகம், தேவாரம் முதலிய நமது பாடல்கள், வாழ்க்கையின் அரிய தத்துவங்களை சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சரியான ராகபாவங்களோடு இவற்றைப் பாடினால், இவை நமது உள்ளத்திலே, பக்தி, தூய்மை, அன்பு ஆகிய குணங்களைத் தூண்டத் தவற மாட்டா.

சங்கீதம், மனத்தை உன்னத ஒழுக்க நிலைக்கு உயர்த்தும்; மிகத் தாழ்ந்த கேவலப் படுகுழியில் தள்ளவும் தள்ளும். ஆகையால், நாம், அதிலும் முக்கியமாக நமது வாலிப ஸ்திரீபுருஷர்கள் தங்கள் சகவாச விஷயத்தில் ஜாக்கிரதை எடுத்துக் கொள்ள வேண்டும். சங்கீதத்தில் நல்லதுமுண்டு; கெட்டதுண்டு. நற்குணமும் தூய்மையும் படைத்த மனிதர்கள், ஆன்ம பரவசத்தோடு பாடும் சங்கீதமுண்டு. மோகமும், அழுக்கும் நிறைந்த பக்தியில்லாத மனிதர்கள் வெறிகொண்டு பாடும் சங்கீதமுமுண்டு.

ஆகையால், பகுத்தறிவுடன் பாடகரைப் பிடிக்க வேண்டும். பகிரங்க இடங்களில் பாடவும், ஆடவும் சங்கீத வித்வான்களையும், நாட்டியக்காரர்களையும் அழைக்கும் பொழுது நமது தலைவர்கள் செயலிலும் உன்னத நிலைமையை அடைய வேண்டுமென்பதே தலைவர்களின் விருப்பம். ஆகையால் நல்ல சங்கீதத் திறமை மாத்திரமன்றி சிறந்த ஒழுக்கமுடையவர்களையே, பொதுக் கச்சேரிக்கு அழைக்க வேண்டும். ஏனெனில் அவை உலகுக்கு ஓர் உதாரணமாய் பயன்பட வேண்டும்.


அக்கிராசனம் வகித்த திருமதி லஷிமியம்மாளவர்கள் முடிவுரையாகச் செய்த உருக்கமான வீரமொழிகளின் சாரம் வருமாறு:

சாந்தி முகூர்த்தத்திற்குப் பார்ப்பனன் ஏன்?

மற்றும் ஒரு விஷயம் உளது. அதைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. வெட்கமாக இருந்து என்ன செய்வது? சொல்லித்தான் தீர வேண்டும். சொல்லுகிறேன் கேளுங்கள். சாந்தி முகூர்த்தமென்று நம் நாட்டில் செய்யும் கொடுமை மிகவும் வருந்தத்தக்கதே. படுக்கை அறையை ஜோடிக்க பைத்தியக்காரத்தனமாய் 400, 500 என்று செலவிடுகின்றனர். பாழும் சென்னைப் பட்டினத்தில் சாந்தி முகூர்த்தத்தின் பேரால் செய்யும் கொடுமை சொல்லத் தகுந்ததல்ல படுக்கை அறையில் பிராமணன் போய் ஒளிந்துக் கொள்ளுகிறதாம். பெற்றோர்கள் உறவினர்கள் படுக்கை அறையில் பால் பழம் வைத்துவிட்டு வர வேண்டுமாம். பின்னர் மணமக்களை படுக்கை அறையில் விட்டு ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பனன் கதவு அடைத்து வர வேண்டுமாம். என்ன அநியாயம்! அதிக நாகரிகமடைந்த சென்னையிலேயே இம்மாதிரி நடக்கின்றதைப் பார்த்தால் பிறர் நம்மைக் கைதட்டி நகைக்க மாட்டார்களா? பிற நாட்டார் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள்? (வெட்கம் வெட்கம்!!)

நம் நாட்டில் ஏழைகளுக்குக் கல்வி கற்க வசதி செய்யுங்கள் என்றால் முடியாது என்கிறார்கள். ஆனால் மேனாட்டில் இம்மாதிரி யாராவது செய்வார்களா என்று சற்று கவனித்துப் பாருங்கள். இம்மாதிரியான விஷயங்களில் நமது காலத்தைக் கழிக்காமல் அவசியமற்றதில்தான் நம் நாட்டம் செல்கின்றது.

பின்னர் பண்டிகையை எடுத்துக் கொள்ளுவோம். பங்குனி, உத்திரம், உகாதி, தீபாவளி, ஆடி 18 போன்ற பண்டிகைகளுக்கு ஏதாவது அர்த்தமுண்டா பாருங்கள். நமது ஊரை எடுத்துக் கொண்டாலும் சுவாமிகள் அதிகமிருக்கின்றன பாருங்கள். அங்காளம்மன், ஓங்காளியம்மன், பத்திரகாளியம்மன், பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் போன்ற பல ஸ்வாமிகள் இருக்கின்றன. இவைகளுக்கு உற்சவம் செய்வதால் எவ்வளவு நஷ்டமேற்படுகிறது பாருங்கள். நல்ல வேளையாக நம் ஊரில் மாரியம்மன் திருவிழா நடத்தவில்லை. சாதாரணமாக ஒவ்வொரு திருவிழாவுக்குக் கூலி செய்து ஜீவனம் செய்பவர்கள் செலவிட முற்பட்டால் திருவிழாவன்று கூலி நஷ்டம். ஒரு நாள் கூலியும் திருவிழா செலவு செய்துவிட முடியாது. ஆகையால், அவர்கள் கடன் வாங்கித்தான் தீர வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். எனவே, நாம் செய்வது ஒவ்வொன்றிலும் நம் நாடு முன்னேற்றமடைவதிலேயே நமது கவலையையும் ஆராய்ச்சியையும் செலுத்த வேண்டு-மேயல்லாது சாமிக்கு ஆட்டை வெட்டி, மயிரைக் கொடுக்கும் வழியில் காலத்தை வீண் போக்கக் கூடாது.


கோயிலுக்குச் செல்வோர் பக்தியாளர்களா?

நம் பெண்கள் தங்களுடைய பக்தியைக் காட்டுவதற்கு கோயிலுக்குப் போகின்றார்கள். அவர்கள் ஸ்வாமியின் பேரில் எண்ணம் வைத்துக் கொண்டு போவதே கிடையாது. போகும்போது அயலார் கட்டிவந்த புடவைகளின் விலை விசாரிப்பதும், பிறர் நடக்கும் நடையைப் பற்றி ஏளனமாகப் பேசத்தான் போகிறார்களேயொழிய இவர்கள் வாஸ்தவத்தில் ஸ்வாமியினிடத்தில் பக்தியைக் காட்டுவதில்லை. வெளிவேஷத்திற்காக நானும் கோயிலுக்குப் போகிறேன் என்ற முறையில் தான் கோயிலுக்குப் போகிறார்கள். ஆகையால், நான் உங்களனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாம் செய்யும் காரியம் தன்மை பயக்கக்கூடியதா, தீமை விளைவிக்கக் கூடியதா, பிரயோஜனமானதா, அர்த்தமற்றதா என்பவைகளை முதலிலேயே ஆலோசித்தறிந்த பின்னரே நாட்டிற்கும் நமக்கும் பலன் பயக்கக் கூடியதிலேயே நம் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று வெகு தீவிரமாகப் பேசினார்.


இந்தியாவில் பர்தா (கோஷா) முறை ஒழிக்க வேண்டியது அவசியம் ஒரு முஸ்லிம் மாது கூறும் காரணங்கள்

லாயிலாபானோபீகம் என்னும் முஸ்லிம் மாது இந்தியன் டெயிலிமெயில் பத்திரிகையில் பின்வருமாறு எழுதுகிறார்:

பர்தா என்னும் கொடிய வழக்கத்தை ஏற்படுத்தியவர் எவராயிருந்தாலும் எப்பாவமும் அறியாத இலட்சக்கணக்கான பெண் மக்களை மெதுவாய் சாகும்படி தண்டித்துள்ளதற்கு அவரையே பொறுப்பாய்க் கொள்ள வேண்டும். இந்தப் பர்தா வழக்கம் இஸ்லாம் மதத்திலில்லை. இது நிச்சயமான செய்தியாகும். கடவுளுடைய உபதேசங்களோ அல்லது பொறுப்புள்ள சமூக ஒழுக்க நெறி விதிகளோ உண்மையுள்ள பெண் மக்களுக்குத் தப்பாய் தடையிடவோ அல்லது அறைக்குள் மூடியிருக்கும்படி கூறவோ இல்லை. முகமத் காலத்திலாவது அல்லது அவருக்குப்பின் வந்தார் சிலர் காலத்திலாவது இவ்வழக்கம் இருந்ததில்லை என்பதை சரித்திரம் நன்கு தெரிவிக்கின்றது. இஸ்லாம் மதம் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒருவிதமான தண்டனை விதிக்கின்றது. ஆனால், இப்பர்தா வழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கட்கு எவ்விதமான தண்டனையும் விதிக்கின்றதில்லை. ஏனென்றால் இவ்வழக்கம் அக்காலத்தில்லாதிருந்ததே அதற்குக் காரணமாகும்.

இவ்வழக்கம் பண்டைக் காலத்தில் பாரசீகத்தில் ராச குடும்பங்களிலும் பெரிய மனிதர்கள் வீடுகளிலும் இருந்து வந்துள்ளது. பிற்காலத்தில் இந்தியாவில் அரசர்களாய் இருந்த முஸ்லிம்களும், சீனர்களும் இதற்கு அருகில் இருந்தமையால் இவ்வழக்கைத்தைக் கைக் கொண்டு விட்டதாய்த் தெரிகின்றது. பின்னர் நாட் செல்லச் செல்ல இது மதக் கொள்கையில் ஒன்றாக வந்துவிட்டது. அதிலும் இந்தியாவில்தான் இது வேரூன்றி மதக் கொள்கையாகிவிட்டது. இந்தியாவில் பண்டைப் பழக்கங்கள் எவ்வளவு மூடத்தனமானவைகளாய் இருந்தபோதிலும் அதற்கெல்லாம் மதம் அனுமதி கொடுக்கின்றது.

இவ்வாறு மேற்கூறியதில் நான் புதிய இரகசியம் ஒன்றை வெளியிட்டு விடவில்லை. இவைகள் சாதாரணமான உண்மைகளாகும். நியாய புத்தியுடைய எல்லா முகமதியர்களும் நான் கூறியவைகளை ஒப்புக் கொள்வர். நான் இந்நாட்டிலுள்ள எனது மதத்தினர்களை ஒன்று கேட்க விரும்புகின்றேன். எவ்வளவு காலம்வரை இப்பழக்கத்திற்கு நீங்கள் அடிமைப்பட்டிருக்கப் போகின்றீர்கள்? உயிருள்ள எல்லாப் பிராணிகட்கும் பிறப்புரிமையான அதிலும் மானிடப் பிறவிக்கு முக்கியமான பிறப்புரிமையான சூரிய வெளிச்சமும் சுகந்த நற்காற்றும் எவ்வளவு காலத்திற்கு எங்கட்கு இல்லாது செய்வீர்கள்?

துருக்கி வழி காட்டல்

துருக்கி ஏற்கெனவே முகமூடியையும் அறவே ஒழித்துவிட்டது. போய்னியா, ஹாஜி ஹோவினா, அல்பானியா, மற்றைய பால்கன் ராஜ்யங்களிலுள்ள முஸ்லிம் மாதர்கள் வீட்டுக்கு வெளியில் பேருக்கு முகமூடியிடுவதையும் விட்டுவிட்டார்கள். எகிப்து ஓர் வரி உத்தரவினால் இப்பர்தா வழக்கத்தை ஒழிக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்-கின்றது. ஆப்கானிஸ்தானும் இதற்காகப் பாடுபட்டு வருகின்றது. ஏற்கெனவே இதற்குப் படியாக சில சீர்திருத்தங்கள் செய்துள்ளது. ஆதியில் இக்கொடிய வழக்கத்திற்கு உற்பத்தி இடமாயுள்ள பாரசீகம்கூட, தனது தற்போதைய அறிவிற் சிறந்த அரசரின் ஆட்சியில் என்றாவது இவ்வழக்கத்தை விட்டு விடலாம். ஆனால் ஏழை இந்தியா என்று இக்கொடிய வழக்கத்தை விடப் போகின்றதோ!


------------------------------சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - ii நூலிலிருந்து... நன்றி:- "உண்மை" மே 01-15_2009 பக்கம் 28-31

3 comments:

குப்பன்.யாஹூ said...

yes womens shouls be allowed to go freely (without bardhaa).

இருமேனிமுபாரக் said...

பர்தா என்ன உயிர் கொல்லும் கொசுவா? பறவைக் காய்ச்சலா?பன்னி இறைச்சியைப் போல வைரஸை உற்ப்பத்தி செய்கிறதா? ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி சொல்லி விட்டதால் உங்கள் உள்ளங்கள் குளிர்ந்து விட்டதா?அந்தப் பெண்ணிற்கு வேண்டாம் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும்.உங்களுக்கு விருப்பமானால் உங்கள் தாய்,சகோதரி,மனைவி எல்லோரையும் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து சுதந்திரமாக இருக்கச் சொல்லுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது?இப்படி இப்படி நீ இருந்தால் உனக்கு நல்லது என்று சொன்னால் தவறா? முஸ்லிம்களின் எத்தனையோ நல்ல கோரிக்கைகள் உங்களைப் போன்றவர்களின் ஆதரவின்மையால்இங்கே கிடப்பில் போடப்படுகிறது.இந்த மாதிரி விதண்டாவாதிகளின் பேச்சுக்களையும்,எழுத்துக்களையும் உங்களைப் போன்றவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் போதும்.இந்தியா மட்டும் என்ன? உலகம் முழுவதும் பர்தா முறையை ஒழித்து விடலாம்.

அசுரன் திராவிடன் said...

என்னய்யா முபாரக் நீங்கள் தங்களின் முழு முகத்துடன் புகைபடத்தில் இருக்கீர் வெளியில் செல்லும் போது உம்முடைய முகத்தை மறைக்காமல் செல்கிறீர் ஆனால் உம்முடைய பெண்களின் உடல் முழுவதற்கும் பர்தா அணிந்து மறைக்க வேண்டும் என்கிறீர் இது என்ன நியாயம் .சேலையோ அல்லது வேறு மேலாடைகளையோ அணியும் பொழுது அதற்கு மேல் எதற்கு இனொரு ஆடையான பர்தா .மாறாக அவ்வாறு அணிய வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருமே அணிய வேண்டும் .அதுதானே மரியாதை அதை விடுத்து பெண்கள் மட்டும் அணிய வேண்டும் என்றால் இது பச்சம் பசலித்தனமான அயோக்கியத்தனம் அல்லவா?

இவ்வாறு சொல்வதால் நான் அரைகுறை ஆடை அணியும் கலாச்சாரத்தை ஆதரிக்கிறேன் என்று கருதி விடவேண்டாம் .
சமநிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

ஏதோ எங்களால் பல திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொல்கிறீர் .....அதை எல்லாம் குஜராத் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தால் அவர் உடனடியாக செய்வார் அல்லது அத்வானிக்கு பரிந்துரை செய்வார் .ஏன் என்றால் இவர்கள் தான் முஸ்லிம் களின் காவலர்கள் .

பாபர் மசூதி இடித்து இந்த நாடே இரத்த ஆறு ஓடிய போது அமைதி பூங்காவாக இருந்தது இந்த தமிழ் நாடு மட்டும் தான்
அதற்க்கு காரணம் தந்தை பெரியாரும் அதன் வழிவந்த தலைவர்களும் இருந்ததால் தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .