Search This Blog

29.5.09

பார்ப்பனர் வஞ்சம் இன்னும் தணியவில்லைஈழத்தில் நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அங்கு வாழும் தமிழர்களுக்கான உரிமைகள் முற்றாகக் கிடைக்கும்வரை போர் அங்கு ஓயப் போவதில்லை; பல்வேறு வடிவங்களில் அது நடக்கத்தான் செய்யும் என்பது வரலாறு மக்களுக்குப் போதிக்கும் பாடமாகும். வரலாறு தரும் இந்தப் போதனையைத் துச்சமாக எண்ணுபவர்களின் வரலாறு சோகமாகத்தான் முடியும்.

போர் முடிந்துவிட்டது என்று ராஜபக்சே அரசு அறிவித்திருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அய்.நா.வின் அதிகாரிகள் அங்கு அனுமதிக்கப்பட வில்லை. அய்.நா. செயலாளரைத் தடுக்க முடியவில்லை; அவ்வளவுதான்; நிலைமையை நேரில் பார்த்த அய்.நா. செயலாளர் பான்-கீன்-மூன் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை வேதனையுடன் வெளிப்படுத்தியும் உள்ளார்.

முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களைக் கொடுமைப்படுத்தும் சிங்களர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் ஊடுருவல் என்ற பெயராலே தமிழினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்ன என்பது திகிலான கேள்வியாகத்தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அய்.நா.வில் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தியாவும், கம்யூனிஸ்ட் நாடுகளும் நடந்துகொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அதோடு அல்லாமல் இலங்கை அரசுக்குப் பொருளாதார உதவிகள் அளிக்கப்படுவது இனி தடைபடாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

எந்த எல்லைக்கும் சென்று மனித உரிமைகளைச் சாகடிக்கலாம்; இன அழிப்பைச் (Genocide) செய்யலாம்; சொந்த நாட்டு மக்களைக் குண்டுகள் போட்டு கொல்லலாம். தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி பொது மக்களைப் படுகொலை செய்யலாம்; மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசலாம்; மக்கள் புகலடைந்த வழிபாட்டுத் தலங்கள்மீதும் குண்டு வீசலாம். குடிமக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளைத் தடை செய்யலாம் - கேட்டால் இது ஒரு நாட்டின் உள்விவகாரம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு இதன்மூலம் அய்.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் பச்சைக் கொடி காட்டிவிட்டது என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது.


இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கைகள் தொடர்வது என்பது முன்னிலும் பல மடங்கு அதிகமாகிவிட்டன என்றே தோன்றுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்துக்குக் கூடுதலான சுமைகளும், கடமைகளும் பெருகியிருக்கின்றன.

நேற்று மாலை (28.5.2009) விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட வீர வணக்க ஊர்வலம் இதில் ஒரு மைல்கல் என்றே குறிப்பிடப்படவேண்டும்.

அந்தப் பேரணியைத் தொடங்கி வைத்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், ஈழத் தமிழர்ப் பிரச்சினை சிலருக்கு அரசியல் பிரச்சினையாகவிருக்கலாம்; நமக்கோ உயிர்ப் பிரச்சினை; மானப் பிரச்சினை; மனித உரிமைப் பிரச்சினை; போராட்டம் தொடரும் - அது முற்றுப் பெறவில்லை என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் தற்காலிகமாக முடிந்த நிலையில், பார்ப்பன ஊடகங்கள் குறிப்பாக சோவின் துக்ளக் போன்ற ஏடுகள் எழுதிவரும் நஞ்சு தோய்ந்த தமிழின வெறுப்பு - எதிர்ப்புக் கட்டுரைகளும், எழுத்துகளும், தமிழர் களை வெகுவாக உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் - பலியான பிறகும்கூட அவர்களின் ஆத்திரமும், வஞ்சகமும் தணியவில்லை என்று தெரிகிறது.

ஈழத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்றது உரிமைப் போராட்டம் அல்ல. ஒரு நபர் தன்னுடைய சர்வாதிகாரத்தின்கீழ் ஒரு நிலப் பகுதியையும், மக்களையும் கொண்டு வருவதற்காக நடத்திய, கொலை வெறியாட்டம்தான் முடிந்திருக்கிறது. இது வேதனைக்குரிய விஷயம் அல்ல என்று திருவாளர் சோ பதில் எழுதியுள்ளார்

(துக்ளக், 3.6.2009, பக்கம் 24).

தமிழ்மொழி ஆட்சி மொழியல்ல என்று அறிவிக்கப்பட்டது. யாழ் நூலகம் கொளுத்தப்பட்டது; சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு அங்கு இருந்த கைதிகள் அடித்துக் கொல்லப் பட்டது - தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது. தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் நடத்தப்பட்டது. எல்லாமே நியாயம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்டது என்பது ஒரு தனி நபரின் சர்வாதிகாரத்துக்குத்தான் என்று எழுதக் கூடிய வன்னெஞ்சம் கொண்ட நல்ல பாம்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நினைக்கும்போது, அத்தகைய ஏடுகளைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்களும் இன்னும் இருக்கிறார்களே என்று எண்ணும்போது தமிழர்களுக்கு இன்னும் பணிகள் அதிகமாகவே இருக்கின்றன - நம் பணிகள் தொடரும் - தயாராவீர்!

--------------------------29-5-2009"விடுதலை" தலையங்கம்

1 comments:

Gokul said...

செத்த பாம்பை அடிக்காதிர்கள்
--------------------------------

அய்யா என்னவோ சோ ராமசாமி நடத்தும் துக்ளக் பத்திரிக்கை தமிழர்களின் ஹோல்சேல் ஏஜென்ட் போலவும் அவர் சொன்னது எல்லாம் தமிழகத்திலும் இந்தியாவிலும் பெரிய கிளர்ச்சியை , நம்பிக்கையை (ஆ) அவநம்பிக்கையை உண்டாக்குவது போலவும் இருக்கிறது உங்கள் பதிவு.

சோ விற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகம், தேவை இல்லாதது. பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்த பின்பு சோ ஒரு பத்திரிக்கை ஆசிரியர் அவ்வளவே. அதற்கு பதில் அரசில் அங்கம் வகிக்கும் ஆட்களை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

உதாரணமாக திரு திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியின் அருகில் அமர்ந்து இருந்தார். பிறகு சில நாட்கள் கழித்து வீர வணக்கம் ஊர்வலம் நடத்துகிறார் , அதாவது ஐ.நா மனித உரிமை கழக விசாரணை தேவை இல்லை என்று சொன்ன மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் திருமா இந்த ஊர்வலத்தை நடத்துகிறார்..

இந்த முரண்பாட்டை நீங்கள் எதிர்க்க வேண்டும். மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழரான மு.க .அழகிரியை நோக்கி இந்த கேள்வியை எழுப்ப வேண்டும், அதை விட்டு செத்த பாம்பை அடிக்காதிர்கள்.. சோ ராமசாமிக்கா அல்லது கலைஞருக்கா யாருக்கு செல்வாக்கு இருக்கிறது ஈழத்தமிழருக்கு ஏதாவது செய்ய (அது நல்லதோ தீயதோ) என நீங்களே யோசித்து பாருங்கள்.

இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்கள் என்றே நம்புகிறேன் , ஏனெனில் உங்கள் வலைபக்கத்தில் இருக்கும் பெரியார் இருந்தால் அவரும் இதைத்தான் கேட்பார்.