Search This Blog

7.5.09

ஜாதித் தொல்லைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியதுதான் முதல் தேவை


முதல் தேவை எது?

உடையவன் - இல்லாதவன் என்ற தொல்லை நீங்க உலகில் கிளர்ச்சிகள் நடந்தபடியே உள்ளன. தொழிலாளர்கள் கிளர்ச்சி, விவசாயிகள் கிளர்ச்சி ஆகிய கிளர்ச்சிகளெல்லாம் முதலாளித்துவம் நிலைக்க உபயோகப்படுகின்றனவே ஒழிய அடிப்படையை மாற்றியமைக்கவில்லை. நம் நாட்டிலுள்ள மேல்ஜாதி-கீழ்ஜாதிக் கொடுமை அஸ்திவாரம் இல்லாததும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதுமாக இருப்பதால் கிளர்ச்சிகள் செய்ய முடியாதபடி தந்திரமாக அமைந்துள்ளது. இங்கு ஜாதித் தொல்லைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியதுதான் முதல் தேவை என்பது என் கருத்து.

முதலாளி - தொழிலாளி என்கிற பிரச்சினை எங்கிருந்து வந்தது? மூடநம்பிக்கையிலிருந்து வந்ததல்ல. அந்தப் பிரச்சினை ஆதாரத்தோடுதான் உள்ளது. எப்படி இருக்கிறான் முதலாளி? சட்டத்தின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் பாதுகாப்பின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் சலுகையால்தான் அவன் முதலாளியாக வாழமுடிகிறது. ஆகையால், முதலாளி கூடாது என்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டும். முதலாளிமீது பாய்வதால் பலன் ஏதுமில்லை. முதலாளிமீது போராட்டம் துவக்கி, தொழிற்சங்கங்கள் இந்த அய்ம்பது வருட காலமாகச் சாதித்தது என்ன?

------------------பொன்மலையில், 27.9.1953-இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு 'விடுதலை' 3.10.1953

0 comments: