Search This Blog

24.5.09

பெரியாரின் பொது அறிவுக் கூர்மை எப்படிப்பட்டது? என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு


அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும்

1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. கைப்பற்றியவுடனேயே அதன் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியின்போதே சுயமரியாதைத் திருமணங்கள சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் முயற்சிகளைச் செய்து அதனைத் தந்தை பெரியார் அவர்களது காலடியில் வைப்போம் என்று முழங்கினார்! சொன்னபடியே செய்தும் காட்டினார்!

1967-இல் அய்யாவுடன், அண்ணா (முதல் அமைச்சரான நிலையில்) குடந்தையில் நண்பர் திரு. ஏ.ஆர்.இராமசாமி அவர்கள் இல்லத்து மணவிழாவில் கலந்து கொள்ள வந்தார்; அய்யாவுக்கு உடல் நலக் குறைவு - 104 டிகிரி காய்ச்சல் - எனவே மருத்துவர் கட்டளைப்படி வர இயலாத நிலை என்பதை அறிந்த அண்ணா, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு தவறாமல் வரும் அய்யாவின் முதுமைக் காலத்தில் அவர் இப்படி திடீரென்று நோய் வாய்ப்பட்டது அறிய சங்கடப்பட்டு நேரே திருச்சி சென்று பார்த்தார்; அய்யாவை சென்னை பொது மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறும்படியும் கேட்டுக் கொண்டார். அய்யாவும் அடுத்து வந்து சென்னை பொது மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்கள்.

அங்கேயும் வந்து பார்த்தார் அண்ணா. அண்ணாவுக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை அய்யா காலத்தில் நிறைவேற்றி அவரை மகிழ்விக்க வேண்டுமென்ற பெருவிருப்பம். சட்டமன்றத் தொடரில் அச்சட்டத்திருத்தம் வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அய்யாவிடம் என்னை சட்ட அமைச்சர் திரு.மாதவனைப் பார்க்கச் சொன்னார். அய்யாவும் அனுப்பினார். சுயமரியாதைத் திருமண மசோதாவின் வரைவு (Draft) என்னிடம் தரப்பட்டது. அய்யாவிடம் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு.

பொது மருத்துவமனையில் நலமாகி வரும் அய்யாவிடம் காட்டினேன். மகிழ்ந்தார். அதனை இரண்டு படிகள் எடுத்து, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றொரு சட்ட வல்லுநர் இருவரிடம் தனித்தனியே கொண்டு காட்டி இதில் ஏதாவது ஓட்டை உண்டா? நாளை கோர்ட்டுக்கு போனால் அடிபட வாய்ப்பு உண்டா? என்று கருத்து கேட்டு வருமாறு (அய்யாவின் பிரதிநிதியாக) என்னை அனுப்பினார் - இது ரகசியத் தூது- ஆட்சியாளரும் அறியாத ஒன்று!

அவர்களும் ஒப்புதல் முத்திரை தந்து விட்டனர். வந்த பிறகு படிக்கச் சொன்னார். வரிவரியாக நானும் படித்தேன். நிறுத்துங்கள் என்றார். மாலை மாற்றிக் கொண்டோ, மற்றபடி உறுதிமொழி கூறிக் கொண்டோ என்றெல்லாம் போட்டு விட்டு வரைவு மசோதாவில் And tying of thali அதோடு தாலி கட்டியும் என்ற சொற்றொடர் இருந்ததை அய்யா சுட்டிக் காட்டி, And என்று இருப்பதற்கு பதில் Or என்று மாற்றுங்கள். And என்றால் அது கட்டாய அம்சமாகி விடும்; Or என்றால் தாலி கட்டலாம்; தாலி கட்டாமலும் சுயமரியாதைத் திருமணமாக இருக்கலாம் என்று ஆகும் - இல்லையா என்றார்! ஆம் என்று கூறி நான் திருத்தி - புதிதாக டைப் செய்து முதல்வர் அண்ணா இல்லத்தில் இரவு 12 மணி அளவில் - அப்போதுதான் எவருடைய தொல்லையும் இல்லாமல் கோப்புகளை பார்க்கும் வழமையாம். அங்கே என்னை அப்போதுதான் வரச் சொல்லி அனுமதிப்பார்.

அவரது தனிச் செயலாளர் கே. சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்.., மற்றவர் மாடியிலிருந்து கீழே வந்து விடுவார். நான் அண்ணாவைப் பார்த்து இச்சட்ட மசோதா வரைவினைத் தந்தேன். அய்யா ஏதாவது திருத்தம் சொன்னாராப்பா? என்று ஒரு சிறு குழந்தை ஆர்வத்தோடு முந்திக் கேட்பது போல் அவசரமாக அண்ணா கேட்டார்.

நான், And அய் அகற்றி Or போட்ட அய்யாவின் கருத்துப் பற்றி சொன்னபோது, அவர் வியப்புடன் நீ எம்.ஏ., பி.எல்., நான் எம்.ஏ., அரசு, சட்ட இலாகா எல்லாம் இருந்தும்கூட அய்யாவின் பொது அறிவுக் கூர்மை எப்படிப்பட்டது பார்த்தாயா? என்று வியந்து மகிழ்ந்து கூறி பாராட்டினார்!


மசோதாவை சட்டமன்றத்தில் முன்மொழிவதற்கு முன் தனது செயலாளர் கே.செக்கலிங்கம் அவர்களை அழைத்து காதோடு காதாக அய்யா சொன்ன திருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டுத்தான் முன்மொழிந்தார்! அன்று நான் அவையில் பத்திரிக்கையாளனாக விடுதலை சார்பில் இருந்தேன். பிறகு கதோடு காதாகச் சொன்ன இதுபற்றி கே.சி. என்னிடம் கூறினார்!

அப்போது தந்தை பெரியார் அவர்களை சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகையில், சென்னை சட்டமன்றத்தில் தியாகி மானியம்பற்றி ஒரு கேள்வி பதில் எழுந்த நிலையில், தாம்பரத்திலிருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான திரு.முனுஆதி எம்.எல்.ஏ., அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கும், இந்த அரசு தியாகி மானியம் அளிக்குமா என்று ஒரு துணைக் கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்ணா அவர்கள், இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டுள்ள காணிக்கையாகும் என்று குறிப்பிட்டார்.

இச்செய்தியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையவர்களிடம் தெரிவித்தபோது, படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து மகிழ்ச்சியுடன், இதனால் என் பாதி வலி குறைகிறது என்று மனப்பூர்வ மகிழ்ச்சியையும் தெரிவித்ததன் மூலம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்தார்!


இந்து திருமணச் சட்டத்தின் திருத்தமாக சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாகும் மசோதாவை சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, யாரும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

திரு.எச்.வி.ஹண்டே சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர். இந்து மதத்தின்மீதுதான் எதற்கெடுத்தாலும் கை வைக்கிறீர்கள். ஏன் மற்ற மதத்தினரைப்பற்றி கவலைப்படவில்லை என்று தான் கேட்டாரே தவிர, அவரும்கூட சுயமரியாதைத் திருமண முறையை சட்ட பூர்வமாக்கும் முயற்சி கூடாது என்று வாதாடவில்லை.

1955-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்து திருமணச் சட்டத்திற்கு இதை ஒரு திருத்தமாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதே அம்மசோதாவாகும்!

சட்டமன்றத்தில் இம்மசோதாவைத் தாக்கல் செய்தபோது அனைத்துக் கட்சியினரும் இதனை எதிர்க்காமல் வரவேற்கவே செய்தார்கள்! அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. பி.ஜி.கருத்திருமன் அவர்களுக்கும், முதலமைச்சர் அறிஞர் அண்ணாவிற்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் மிகவும் சுவையாக இருந்ததோடு, ஒரு கலகலப்பையும் ஏற்படுத்தியது. சட்டமன்றத்தின் விவாதத்திற்கு பிறகு 27.11.1967 அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டமன்ற அவையிலும், பிறகு மேலவையிலும் நிறைவேறிய பிறகு 17.1..1968-இல் ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று 20.1.1968-இல் சென்னை அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டவடிவமாகியது.

அப்போது நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்கள் மட்டும் செல்லுபடியாகும் என்ற நிலையில்லை. இதற்குமுன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும் என்ற நிலையில் இச்சட்டத்தின் முதல் பின்னோக்கித் தள்ளப்பட்டு, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சட்டமற்ற மனைவி, சட்டபூர்வமற்ற குழந்தைகள் (Illegitimate Children and Illegitimate Wives) என்ற அவப்பெயர் நீங்கி, அனவருக்கும் சட்ட அந்தஸ்து இதன்மூலம் கிடைத்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இதனை தமது ஓராண்டு கால ஆட்சியின் வரலாற்றில் புகழ் ஓங்கிய முப்பெரும் சாதனைகளில் ஒன்று என்று வர்ணித்தார்.


--------------ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "சுயமரியாதைத்
திருமணம், தத்துவமும் வரலாறும்" நூலிலிருந்து

1 comments:

Unknown said...

// அய்யா ஏதாவது திருத்தம் சொன்னாராப்பா? என்று ஒரு சிறு குழந்தை ஆர்வத்தோடு முந்திக் கேட்பது போல் அவசரமாக அண்ணா கேட்டார்.

நான், And அய் அகற்றி Or போட்ட அய்யாவின் கருத்துப் பற்றி சொன்னபோது, அவர் வியப்புடன் நீ எம்.ஏ., பி.எல்., நான் எம்.ஏ., அரசு, சட்ட இலாகா எல்லாம் இருந்தும்கூட அய்யாவின் பொது அறிவுக் கூர்மை எப்படிப்பட்டது பார்த்தாயா? என்று வியந்து மகிழ்ந்து கூறி பாராட்டினார்!//

பெரியார் என்னை வியப்புக்கு மேல் வியப்பு அடைய வைக்கிறார். பெரியாரின் சிந்தனை தனித்தன்மையானது என்பதை இதன் வழியாக நன்கு உணரமுடிகிறது.