Search This Blog

11.5.09

"பெரியார்" மட்டுமல்ல "பெரியாருள் பெரியார்" - ஏன்? எப்படி? எதனால்?


மகா சன்னிதானம் என்றே அழைப்போம்

சிங்கம்புணரி தாண்டி திருப்பத்தூரை நெருங்கி விட்டது வேன். மணி மாலை நான்கு. வண்டியில் முகப்பிலே கட்டியிருந்த நடுவில் சிகப்பு வட்டமும் சுற்றிலும் கருப்பாய் பட்டொளி வீசி பறந்த திராவிடர்கழகக் கொடி கம்பீரமாய் காற்றிலே பறக்க, ஓட்டுநரின் தோள் பற்றி பெரியார், தம்பீ! குன்றக்குடி நுழையும்போது இந்த வேகம் வேண்டாம். மெதுவா போ - என்றார். வேனில் உடன் பயனித்த அன்றைய மதுரை மாவட்டச் செயலர் பெரியகுளம் அழகர்சாமியும் துணைச்செயலர் திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தியும் காரணம் புரியாது விழித்தனர். ஏன் என்று கேட்கலாமென்றால் அதற்குள் வேன் குன்றக்குடி தெருவில் நுழைகிறது. மடத்துக்கு முன்பாக வேனை நிறுத்த பெரியார் கட்டளை இடுகிறார்.

காரைக்குடியில் மாலை பொதுக்கூட்டம் இந்த இடைப்பட்ட நேரத்தில் குன்றக்குடி ஆதின மடாதிபதி தெய்வசிகாமணி அடிகளாரை ஊரில் இருந்தால் மரியாதை நிமித்தம் சந்திக்க விரும்பினார் பெரியார்.

வண்டியில் இருந்த அழகர்சாமியும் கிருஷ்ணமூர்த்தியும் விரைந்து இறங்கி, அடிகளார் மடத்தில் இருக்கிறார்களா என விசாரிக்க, மாடியில் நூலகத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. மாடிக்குப் போனால்... அங்கே அடிகளார் தன் தலைப்பாகையை களைந்து எடுத்துவிட்டு, ஏதோவொரு புத்தகத்தில் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். கருஞ்சட்டைத் தோழர்களைக் கண்டதும் வியப்புற்ற நேரத்தில் வந்த தோழர்கள், கீழே அய்யா அடிகளாரைக் காண காத்திருப்பதாகக் கூறுகின்றனர். அடிகளாருக்குப் பதட்டம். கையும் காலும் இயங்க மறுத்தாலும், சமாளித்தபடி அய்யாவை வரவேற்க முகப்புக்கு விரைகிறார். அதற்குள் அய்யாவும் வாகன ஓட்டியின் உதவியால் வேனை விட்டு இறங்கி, கைத்தடியின் உதவியால் மடத்துக்குள் நுழைந்து விடுகிறார். அடிகளார் இதைக் கண்டு பதறி, அய்யா! தங்கள் வயசென்ன என் வயதென்ன; முன் கூட்டி சொல்லியிருந்தால், நானே வந்து தங்களை வரவேற்றிருப்பேனே! என்ன காரியம் செய்துவிட்டீர்கள் எனக் கூறி, முகப்பில் கிடந்த நாற்காலியில் பெரியாரை கைபிடித்து அமர வைத்தார்.

உடனே பெரியார் அழகர்சாமி - கிருஷ்ணமூர்த்தியை கூப்பிட்டு, அடிகளார் நிற்கிறாங்கய்யா! அவுங்க உட்கார ஒரு இருக்கையை முதல்லே தூக்கிட்டு வாங்க எனக் கூறி அடிகளார் அமர்ந்த பிறகே அய்யா உட்கார்ந்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடி விடைபெற்றபோது, அய்யா! நீங்க பெரியார் மட்டுமல்ல பெரியாருள் பெரியார் எனக்கூறி வணங்கினார்.

இதனை மனதில் பதிவு செய்த பெரியார் அன்று மாலை காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது எவன் எவனோ ஜெகத்குரு, ஸ்ரீலஸ்ரீ என அழைக்கப்படும் போது இனி, அடிகளாரை மகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகள் என்றே அழைப்போம் என்றார்.



---------- சந்தனத் தேவன் - " உண்மை" அக்டோபர் 16-31 2008

0 comments: