Search This Blog

31.5.09

விடுதலைப்புலிகளை ஒழிக்க இலங்கைக்கு உதவிய சீனாவின் தந்திரம்

இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததன் பின்னணியாகக் கூறப் படும் பல்வேறு காரணங்களில், சீன வல்லரசு இலங்கைக்கு அளித்த மிகப்பெரிய உதவிதான், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முடிவைக் கொண்டுவந்தது என்று அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கைக்கு அருகில் உள்ள இந்திய நாடு செயல்பட்ட விதத்தையும், சீனா உறுதியாக இலங்கைக்கு உதவி செய்த விதத்தையும் காணும்போது எதற்காக இலங்கை மீது சீனா இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அனைத்தும் அய்.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர பலமுறை முயற்சித்த போதும், அவை தோல்வி அடைய முக்கிய காரணம் சீனா தெரிவித்த எதிர்ப்புதான்.
சீனாவின் நிதி, ராணுவ மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை முழுமையாகப் பெற்றி ருந்ததாலேயே ராஜபக்சே அரசால் மேற்கத்திய நாடுகளில் நிர்ப்பந்தங்களை நிராகரிக்க முடிந்தது. இதனால், இலங்கையில் பெரிய அளவுக்குப் போர் நடந்த போது, அய்.நா.வால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு சீனா பல ஆயிரம் கோடி நிதியை இலங்கைக்கு அளித்தது. மேலும், சீனாவின் ஆறு எப்7 ரக போர் விமானங்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டன. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களும், ஆயுதங்களும் இலங்கை ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் இந்த தாராள உதவியினால் தான், 25 ஆண்டுகளாக தங்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவத்தால் ஒழிக்க முடிந்தது.
தான் செய்யும் இத்தகைய உதவிகளுக்கெல்லாம் சீனா இலங்கையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறது? மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வரும் சரக்குக் கப்பல்கள் பயணிக்கும் முக்கியமான இந்தியக் கடல் பகுதியில் சீனாவுக்கு இடம் தந்து இலங்கை தனது நட்பை பலப்படுத்திக் கொண்டது.


இலங்கையில் ஹம் பன்தொடா என்ற இடத்தில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணிகள் அனைத்தையும் சீனாவே செய்து வருகிறது. 2007 இல் தொடங்கிய இப்பணிகள் 2022 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வர்த்தக ரீதியான நடவடிக்கை என்று சீனா கூறினாலும், இதன் பின்னணி மிகவும் ஆபத் தானது. எதிர்காலத்தில் இத்துறைமுகத்தை சீனா ஒரு கடற்படைத் தளம் போல பயன்படுத்தலாம். மேலும், பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் குவாதர் என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தையும், மியான்மரில் கியாவுக் புவ் என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தையும் சீனா அமைத்து வருகிறது.

அமெரிக்காவையும் விஞ்சி வல்லரசாகும் எண்ணம் ஏதும் சீனாவுக்கு இல்லையென்றாலும், தெற்காசியப் பகுதியில் தன் பலத்தை நிரந்தரமாக வலுவானதாக ஆக்கிக் கொண்டு, எந்த சக்தியாலும் அசைக்க முடியாத அடிப்படைகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நீண்டகால உத்தியைக் காணும்போது, ஹம்பன் தொடா எதிர்காலத்தில் சீனாவின் கடற்படைத் தளமாக அமையக்கூடும்.

எரிசக்தியையே பெரிதும் சார்ந்துள்ள சீனாவுக்கு தேவையான 80 விழுக்காடு எரிசக்தி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மலாக்கா நீரிணைப்பு வழியாக கப்பல் மூலமாகக் கொண்டு வரப்படுகிறது. மியான்மாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீரிணைப்பு வழி மிகவும் குறுகியது என்பதால், சீனாவுக்கு இந்தியக் கடல்வழித்தடம் வழியாகவே பெட்ரோலிய, டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.

இக்கடல் வழித் தடத்தில் ஆங்காங்கு தங்களது துறைமுகங்கள் இருந் தால் எரிசக்திப் பொருள் கள் கொண்டுவர இடை யூறு இருக்காது என்று கருதும் சீனா இவ்வாறு இலங்கை, மியான்மா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் துறைமுகங்களை அமைப்பதாகக் கூறப்படுகிறது.
அணுஆயுத உதவிக்கு சீனாவை பாகிஸ்தான் நம்பியிருக்கிறது. விடுதலைப்புலிகளை அழிக்க இலங்கைக்கு சீனா முழு உதவியை அளித்தது. ராணுவ ஆட்சியில் திணறும் மியான்மாவில் கால் பதிப்பதில் சீனாவுக்கு பெரிய சிக்கல் ஏதுமிருக்காது. இதில் இந்தியா மட்டுமே பெரிய ஜனநாயக நாடு என்ற தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

அகாசிசின் என்ற பனிமலைப் பகுதியில் இந்தியாவின் 16 ஆயிரத்து 500 சதுரமைல் பரப்புள்ள பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது. மேலும் அருணாசலப் பிரதேசம் தனது நாட்டைச் சேர்ந்தது என்பது போல் சீனநாட்டு வரை படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது.

பெரிய அளவுக்கு இந்தியாவுடன் மோதல் பாதையை சீனா பின்பற்றாவிடினும், இந்தியா வுக்கு நெருடல் தரும் செயல்களைச் செய்வதற்கு சீனா தயங்குவதேயில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனாவின் செயல் பாடுகளை எச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டிய காலமிது.

-------------------------நன்றி:-"விடுதலை" 31-5-2006

0 comments: