Search This Blog

17.5.09

மதக் கொள்கைகளைக் காரணம் காட்டிச் சண்டித்தனம் செய்வது எந்த வகையில் நியாயம்?


அதர்வண வேதத்தால் வந்த வினை

தாவீந்தர் கய் என்பவருக்கு 70 வயதாகிறது. கடந்த 1968 முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஒழுக்கமான இந்து மத பக்தராம். கடல் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கு இந்துக் கள் போனதை - போவதை - இந்து மதம் ஆதரிக்கிறதா? கணக்குமேதை ராமானுஜம் கடல் கடந்து இங்கிலாந்து போய் இறந்து விட்டதால் - ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட அவரது பிணம் கூட கும்பகோணத்தில் அவமானப் படுத்தப்பட்டதே! மதம் தடுப்பதை - வயிற்றுப் பாட்டுக்காகச் செய்தவர் எப்படி கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்று பவர் ஆவார்? அது கிடக்க -

அவர் இறந்தால் அவரது உடலை வெட்ட வெளியில் விறகு, வரட்டி அடுக்கி - வைக்கோலை தேம்ஸ் நதியின் களிமண் கொண்டு மெழுகி மூடி - கொள்ளி வைத்து எரிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாம்! ஹிந்து மதத்தின் கட்டளை அதுதான்! அதர்வண வேதம் பிணத்தை எரித்து நீர்க்கடன் செய்பவன் தான் சரியான ஹிந்து என்று கூறியுள்ளது. அதனால் அவரது விருப்பம் மட்டுமல்ல - ஹிந்து என்ற முறையில் அவரது கடமையும் கூட!

இந்தக் கடமைக்கு இங்கிலாந்தில் இடம் இல்லை. ஹிந்து மதச் சடங்குகளைச் செய்வதற்கான தனிப்பட்ட விசேஷித்த கோலம், உடைகள், நாகரிகச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டாது. அதை பிரிட்டன் அரசு அனுமதிக்காது. அடுத்து வெட்ட வெளியில் பிணத்தை எரித்துச் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் செயலை அந்நாட்டு சட்டங்கள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் வழக்கு போட்டு, பிணம் எரிக்கும் உரிமையை வாங்க நினைத்தார். வழக்கு போட்டார். வழக்கில் தோற்றார். இருந்தாலும் இவர் விடப் போவதில்லையாம்! தொடர்ந்து போராடப் போகிறாராம். அண்மையில் அவரது போராட்டம் தற்போதுதான் தொடங்கியுள்ளதாம். இவர் கேட்ட உரிமையை இவருக்கு அளிக்காத காரணத்தால் பிரிட்டன்அரசு 5 லட்சத்து 58 ஆயிரம் இங்கிலாந்து வாழ் ஹிந்துக்கள் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறதாம்.

40 ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டுக்குப் போன இவர், அந்நாட்டுச் சட்டங்களை மதிக்காமல் தம் மதக் கொள்கைகளைக் காரணம் காட்டிச் சண்டித்தனம் செய்வது எந்த வகையில் நியாயம்? மதம்தான் உசத்தி என்றால் கம்முனு ஹிந்து நாட்டுக்குத் திரும்பி வந்து செத்துப் போவதுதானே!

-----------------செங்கோ அவர்கள் 16-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: