Search This Blog

11.5.09

"சேலம் நடந்தால் திருவாரூர் நடக்கும் " என்பதற்கான விளக்கத்தை அறிந்து கொள்வோம்


திருவாரூர் மாநாட்டில், குடிகார இராமன், விபச்சாரி சீதை வேடமணியத் தடை விதித்த நிலையில் அந்த ஊர்வலத்தையே தந்தை பெரியார் அவர்கள் ரத்து செய்த நிலையில், மாநாட்டில் (16.5.1971 இல்) ஆவேசமடைந்த தோழர்களை தந்தை பெரியார் அவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

திருவாரூரும்- தி.மு.க. அரசும் என்ற 17.5.1971 ஆம் விடுதலை தலையங்கம் வருமாறு:-

"திருவாரூரில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டினையொட்டி நடைபெறவிருந்த மாபெரும் ஊர்வலம், தி.மு.க. ஆட்சியினரால் அந்த ஊர்வலத்தில் குடிகார இராமன், விபச்சாரி சீதை வேடமணிந்து அந்த இராமன் குடித்துக் கொண்டும் மாமிசம் தின்றுகொண்டும் வரும் காட்சியை நடத்தக்கூடாதென தடைவிதிக்கப்பட்டது.

மக்களுக்கு அறிவூட்டவும், தெய்விகத்தன்மை என்ற பூச்சாண்டியைப் போக்கி தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும்தான் கழக மாநாட்டு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்பதால் தந்தை பெரியார் அவர்கள் அரசினரின் போக்கு குறித்து மிகுந்த வேதனை அடைந்து அந்த ஊர்வலத்தையே ரத்து செய்து பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்களை அமைதிப்படுத்தினார்கள்.

இந்த ஆட்சி பகுத்தறிவாளர் ஆட்சி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஆட்சி மட்டுமல்ல; பகுத்தறிவாளர் கழகப் பாராட்டு விழாவில் 7.5.1971 அன்று முதல்வர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல - பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதைக் கடமையாகக் கொண்டுள்ள ஒரு ஆட்சியுமாகும் என்ற நிலையில், தந்தை பெரியார் தம் 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் நிகழாத ஒரு சம்பவம் இப்படி நடைபெற்றது குறித்து அவர்களே மிகுந்த வேதனையும் சங்கடமும் படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது, பல லட்சக்கணக்கான பகுத்தறிவாளர்களை, திராவிடர் கழகத் தோழர்களை, சுயமரியாதை இயக்க வீரர்களை மிகவும் ஆத்திரத்திற்குள்ளாக்கிய ஒரு செயலாகும்.

இராமன் குடிகாரன் என்பதோ, கறி (மாமிசம்) தின்றான் என்பதோ தந்தை பெரியார் அவர்களோ திராவிடர் கழகமோ இட்டுக்கட்டி எழுதிய கற்பனையின் பாற்பட்டதல்ல. வால்மீகி இராமாயணத்தில் ஆதாரப்படி உள்ள செய்திகளாகும். இவ்வேடம் அருவருப்பு என்றால், இது கூறும் இராமாயணம் புனித நூல் என்று மக்களிடையே பரப்பிடுவது மட்டும் சட்டப்படி அனுமதிக்கக்கூடிய காரியமா? இராமாயணத்தை அனுமதித்து அதை இன்னமும் புதுப்புது பதிப்புகள் போட்டு விற்கும் நிலையில், இப்படி ஒன்றை ஊர்-வலத்தில் காட்டுவது எப்படித் தவறாகும்? இது எப்படி மற்றவர் மனதைப் புண்படுத்தும்? இது சட்டப்படி (இ.பி.கோ. 295 ஏ செக்ஷன்படி) குற்றம் என்றால், இராமாயணத்தைக் கண்டித்து விளக்கிப் பேசுவதும் எழுதுவதும் கூடக் குற்றம் என்று வாதிட இடமேற்பட்டுவிடும். பகுத்தறிவாளர்களும், இந்த ஆபாசத்தை, பக்தி மூடநம்பிக்கையை மக்களுக்கு சுட்டிக்காட்டி அறிவு கொளுத்தும் திராவிடர் கழகத்தினரும் பிறகு பேன் குத்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்?

சட்டப்படி அதில் ஓட்டைகள் இருக்கின்றன என்றாலும் நாம் கேட்பதெல்லாம் பிறர் மனம் புண்படாமல் எந்தப் புரட்சியாளராகவது, சமூக சீர்திருத்தவாதியாவது காரியமாற்ற முடியுமா?

ராஜமானியத்தை ஒழித்தால் ராஜாக்கள், மனம் புண்படுகிறது! சோஷலிசம் என்றால், பணக்காரர் மனம் புண்படுகிறது. நிலச்சீர்த்திருத்தம் - நிலவுடமைக்கு உச்சவரம்பு என்றால், நிலப்பிரபுக்களுக்கு மனம் புண்படுகிறது. நீ ஏன் உயர்ஜாதி நான் ஏன் கீழ் ஜாதி? என்றால், பார்ப்பான் மனம் புண்படுகிறது என்று கூறலாமே! அதற்காக சமுதாய மாற்றப் பணியை விட்டு விட முடியுமா?

திராவிடர் கழகம் போன்ற தீவிர - ஓட்டு வேட்டையாட வேண்டிய அவசியமற்ற - சமுதாயப் புரட்சி இயக்கத்தின் வேகத்திற்கு ஆட்சியாளர் வரவேண்டும் என்பதல்ல - நமது கோரிக்கை. அது முடியாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பார்ப்பனத் தலைவர் ஆச்சாரியார் ஆண்ட போது இல்லாத அளவுக்கு - பழைய காங்கிரஸ் ஆட்சியான காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் நடைபெறாத ஒரு செயல் - ராமன், சீதை வேடத்திற்குத் தடை தி.மு.க. ஆட்சியில் நடைபெறுகிறது என்றால், தந்தை பெரியார் முதல், இயக்கத்தின் சாதாரணத் தொண்டர் உள்ளம்வரை எவ்வளவு குமுறும், கொதிக்கும் என்பதை ஆட்சியாளர் சிந்திக்கவேண்டும். சேலம் மாநாட்டு நிகழ்ச்சியைப் பெரிது-படுத்தியும்கூட அதற்குப் பிறகே சட்டமன்றத்தில் 184 இடங்களைத் தி.மு.க. பெற்றது என்றால் எதனால்? ஆத்திக சிரோன் மணிகள், பார்ப்பனர்கள் இவர்கள் தயவாலா? ஓட்டாலா? இல்லையே! தந்தை பெரியார் அவர்கள் கொளுத்திய இன உணர்ச்சி, பகுத்தறிவுக் கொள்கை காரணம் ஆக அல்லவா?

இந்நிலையில் ஆட்சியாளர் ஏன் சில அதீதக் கற்பனைகளில் ஈடுபட்டு, ஆஸ்திகர்களுக்கும், ஆச்சாரியார் கூட்டத்திற்கும் உள்ள அக்கறையை விட அதிக அக்கறைகாட்டி பகுத்தறிவாளர்தம் அதிருப்திக்கு ஏன் ஆளாக வேண்டும்? ஆட்சியாளர் நடுநிலையில் நின்றால் கவலை இல்லை. ஆனால், ஆத்திகத்தின் அதிதீவிர வக்கீலாக மாறிவிட்டால், அதனைத் தந்தை பெரியாரோ, அவர்தம் வழி நடப்பவரோ எப்படிப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியும்? வேதனை! சகிக்க முடியாத வேதனை!!

திருவாரூரில் மீண்டும் தேர் ஓடவேண்டும் என்பதற்காக சுமார் 30 லட்ச ரூபாய் செலவான ஒரு செயலை சகித்தோமே அது அளவுக்கு மீறிய சகிப்புத் தன்மையேயாகும். இந்நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அந்த ஊரில் இராமன், சீதை வேடமணிந்து கூட ஊர்வலம் வரக்கூடாது என்று தடுத்தால், இவ்வுணர்ச்சியை மேலும் தீவிரப்படுத்த அதற்குப் பெட்ரோல் ஊற்றுவதாகுமே தவிர, வேறில்லை. தடுப்புக்கு ஒருபோதும் உதவாது.

எனவே, ஆட்சியாளர்கள் தமிழ்நாடெங்கும் திருவாரூர்களை உருவாக்கினால், அது விரும்பத்தக்கதல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது நமது கசப்பான ஆனால் இன்றியமையாத கடமை ஆகும்."


21.5.1971 இல் (வெள்ளி) தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த மன வேதனையுடன் எழுதிய தலையங்க அறிக்கையின் முக்கிய பகுதிகள்:

திராவிடர் கழகத்தாரும், மூடநம்பிக்கை ஒழிப்பு கூட்டத்தாரும் இராமனைச் செருப்பாலடித்த செய்கை எதற்காக வென்றால், இராமன் கடவுளல்ல; தமிழர்களை இழிவுபடுத்த பார்ப்பனரால் (ஆரியரால்) செய்யப்பட்ட கற்பனை என்பதை மக்களுக்கு உணர்த்தவும், அந்த இராமாயணத்திற்கு இராமனுக்கும் மரியாதையும், மதிப்பும் அவைகளிடம் பக்தி செலுத்தும் தன்மையும் தமிழ் மக்களிடம் இருக்கும் வரை தமிழர்கள் சூத்திரர்களாக இழி மக்களாக இருக்க நேரிடும் என்பதோடு தமிழர்களின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும் என்ற முதலிய காரணங்களே யாகும்.

மனம் புண்படுவதற்காக செய்யும் காரியமல்ல

மற்றும் அது சம்பந்தமாகத் திராவிடர் கழகம் நடந்து கொள்ளும், செய்யும் காரியங்கள் எல்லாமுமே சமுதாயப் பொது நலத்தை முன்னிட்டு செய்யும் பொதுத் தொண்டான நல்லெண்ணத்தோடு செய்யும் நல்ல காரியமும் பொது நலத் தொண்டுமே அல்லாமல் உண்மையிலேயே 100க்கு 100 அளவில் எவருக்கும், எந்த மதத்திற்கும் எந்தச் சமுதாயத்துக்கும் மனம் புண்பட வேண்டுமென்றோ கருதி, கெட்ட எண்ணத்தோடு செய்யும் காரியமல்ல.

இதற்கு ஆதாரம் சென்ற 40 ஆண்டு காலமாக இச்செய்கைகள் நடந்து வருவதில் எவ்விதத் தடையோ, ஆட்சேபணையோ, புகாரோ கூட செய்யப்படாமல் இருந்துவருவதும், வெள்ளையர் ஆட்சி முதல் முன்னைய ஆட்சிகள் எல்லாம் அனுமதித்து இருப்பதும் இதை சகஜமாக நடந்துவரும் காரியம் என்று கருதப்பட்டு வந்திருப்பதுமேயாகும்.

திருவாரூர் தீர்மானத்தின் தத்துவம் என்ன?

தவிரவும், இராமாயணத்தை மக்களிடம் பரவச் செய்யாமல் தடுத்தாக வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் வேண்டுகோள் விட்டு திருவாரூரில் செய்யப்பட்ட தீர்மானத்தின் தத்துவம் என்னவென்றால்,

இராமாயணப் புத்தகத்தில் நடந்திருக்கும் நடப்புகளை அது எவ்வளவு அருவருக்கத்தக்கது; இதனால் அதில் வரும் பாத்திரங்கள் எவ்வளவு இழிவு ஆன காரியங்கள் செய்ததாகக்- காட்டப்பட்டிருக்கிறது என்றும் அப்படிப்பட்ட ஆதாரங்களை புண்ணிய சரித்திரமாகவும், பக்தி செலுத்தக்கத்தாகவும் இக்காலத்தில் மனிதர்கள் - முக்கியமாய் நம் தமிழர் சமுதாயம் ஏற்கலாமா என்பதையும் மக்களுக்கு உணரச் செய்வதற்கு ஆகவே ஒழிய, இதனால் யார் மனதையோ புண்படுத்தவோ - படுத்தச் செய்யவோ அல்ல என்பதை உறுதியாய்க் கருதியே, உறுதியாய்க் கூறியே செய்து வருகிறோம்.

ஆயிரக்கணக்கான தடவை செய்தும், எழுதியும், சித்திரங்கள் மூலம் காட்டியும் வருகிறோம்.

திராவிடர் கழகத்தை ஒடுக்கும் திட்டமா?

இந்தச் செய்கை - நடப்பு இப்போது இத்தனை காலத்திற்குப்பின், இவ்வளவு தடவை நடந்திருப்பதற்குப்பின் இப்போது திடீரென்று இன்றைய அரசுக்கு தவறு, சட்டப்படி தவறு, தடுக்கப்படவேண்டிய காரியம், தடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்று தோன்றுமானால் அது உண்மையில் மக்கள் மனம் புண்படும் என்கின்ற காரியத்திற்காக அல்ல என்பதும் வேறு ஏதோ ஒரு காரியத்தைக் கருதி திராவிடர் கழகத்தை ஒடுக்கவேண்டும். மக்களிடையே அதற்கு செல்வாக்கில்லாமல் செய்யவேண்டும் என்ற கருத்தில்தான் இருக்குமென்று சந்தேகமறக் கருதுகிறோம்.

அதாவது, இராமாயணம் தடை செய்யக்கூடியதல்ல என்று முடிவு செய்துவிட்டு அதிலுள்ள நடப்பு பிறருக்கு, அதை வெறுப்பவர்கள் காட்டக் கூடாதென்றால் அதில் உண்மை இருக்குமா? ஏனெனில், ஆட்சித் தலைவர் அவர்கள் அவ்வளவு தெளிவற்றவரல்ல; நல்ல இராஜ தந்திரியுமாவார். இதைவிட தீவிரமான பல கருத்துகளை, நடப்புகளை துச்சமாகக் கருதி, அலட்சியமாக இருந்து வருபவர்.

ஆட்சியின் காரியத்திற்காக நாம் கைவிட முடியாது

இதனால் எந்த வகுப்புக்கும், எந்தத் தனிப்பட்ட மனிதருக்கும் ஆட்சேபணையோ, அதிருப்தியோ ஏற்பட்டதாக 40 ஆண்டுகளாக ஆதாரமோ, அறிகுறியோ இல்லை என்பதும் நல்ல வண்ணம் அறிந்திருப்பவர். ஆதலால், ஆட்சியானது வேறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இதைச் செய்திருக்கிறது என்று கருதியே இதை ஆட்சி காட்டுகிற காரியத்திற்காக என்று நாம் கைவிடக் கூடாது என்றே கருதவேண்டியவர்களாக இருக்கிறோம்.

மற்றும் இந்த நாட்டு எந்த நபருக்காவது, எந்த இனத்துக்காவது மனம் புண்படும் என்பதை ஆட்சியாளர் நிஜமாகவே கருவார்களானால் அந்த நிகழ்ச்சிக்கு ஆதாரபூர்வமான (ஒரு புத்தகத்தில்) மேலும் தீவிரமான கருத்துகளுடன் காணப்படும் சேதிகளைக் கொண்ட புத்தகத்தை மக்களிடையில் நடமாடிக் கொண்டிருக்க எப்படி அனுமதிக்க முடியும்?

அறிஞர் அண்ணா அவர்கள் நெருப்பிடப்போன போது...

ஆதலால், ஆட்சி - உண்மையாய் அக்காட்சி மனம் புண்படத்தக்க காட்சி என்றால் அதற்குண்டான ஆதாரத்தை கண்டிப்பாய்த் தடை செய்யப்பட வேண்டியது அவசியமான காரியம் என்று கருதி ஆட்சியின் நிலையை அறிவதற்காகவே அத்தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. ஆதலால், அந்தக் கெடு தீர்ந்தவுடன் ஆட்சியாளர் எண்ணம் நிறைவேற, மனம் குளிர, மகிழ்ச்சியடையத்தக்க வண்ணம் எந்த முறையையும் கையாள மனமார அனுமதிக்கும் தன்மையில் நடக்க இருக்கிறோம்; யாதொரு ஆட்சேபணையும் கூறவில்லை என்பதற்காகத்தான் இராமாயண நடமாட்டத்தைத் தடை செய்ய வேண்டுகிறோம்.

இது ஒரு அதிசயமான காரியமல்ல. இதை சுமார் 30 ஆண்டுக்கு முன் மதிப்பிற்குரிய அறிஞர் அண்ணா அவர்களால் நெருப்பிடப் போனதும், அப்போது சுயமரியாதை இயக்கத்திற்கு தலைவராக இருந்த திரு. சண்முகம் செட்டியார் அவர்களால் தலைவர் என்கின்ற முறையில் தடை உத்தரவு போடப்பட்டதும், அந்த உத்தரவிற்கு நாம் சமாதானம் சொல்லும் வரை கீழ்ப்படிய வேண்டுமென்று நான் சொன்னதற்காக என்னையும் மீறி அக்காரியம் செய்யத் துணிந்து என்மீது குறையும் சொல்லப்பட்டதுமான காரியம் கொண்ட இராமாயணம் தானே ஒழிய, மற்றபடி யார் மனம் புண்படுவதையும் காரணமாகக் கொண்டு மதிக்கத்தக்க இராமாயணம் அல்ல நாங்கள் தடை செய்ய வேண்டுவது.

தி.மு.க.வை - அமைச்சர்களை நான் மதிக்கவில்லையா?

மற்றும் அந்தப்படி தடை செய்யப்படாத வரையில் இராமாயணத்தில் உள்ள மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் நடப்பில் காட்ட வேண்டியதும் அவசியமாகும் என்றே வருத்தத்துடன் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.

இதனால் தி.மு.க.வையோ, மாண்புமிகு அமைச்சர்களையோ, தலைவர்களையோ நான் மதிக்கவில்லை; பெருமையாய்க் கருதவில்லை என்பதாகி விடாது. அவர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பு, அன்பு, ஆட்படும் தன்மை சிறிதும் மாறவில்லை - கண்டிப்பாய் மாறவில்லை என்பதோடு, மாறாமல் பார்த்துக் கொள்வதையும் எனது கடமையாய்க் கொண்டிருக்கிறேன்.

திராவிடர் கழகத்தைக் கொல்பவன் ஆவேனா?

ஏன் இவ்வளவு விளக்குகிறேன் என்றால், இதற்கு (ஆட்சி கருத்துக்கு) இணங்கினால் திராவிடர் கழகத்தை நானே கொல்பவனாவேன் என்பதோடு மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்கள் சேலம் நடந்தால் திருவாரூர் நடக்கும் என்று எச்சரிக்கை செய்திருப்பதால் எனது தோழர்களுக்கு மன நோவு ஏற்படாமல் மன நிம்மதி ஏற்படவுமே இதை எழுதினேன்.

ஆதலால், எனது தோழர்கள் தி.மு.க.விடம் உள்ள அன்பு, ஆதரவு, பக்தி குறையாமல் எந்தவித மாறுதல் கருத்தும்கொள்ளாமல் எப்போதும்போலவே இருக்கவேண்டிக்கொள்கிறேன்.

------------------ கி.வீரமணி் - அய்யாவின் அடிச்சுவட்டில்... இரண்டாம் பாகம் (5), (6) - உண்மை அக்டோபர் 1-15, 16-31 2008

0 comments: