Search This Blog

12.10.14

தீபாவளிப் பண்டிகை - பெரியார்

தீபாவளிப் பண்டிகை
- சித்திரபுத்திரன்
வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்?


தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.


ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.


ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லு வாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.


சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள்தன மான காட்டுமிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்?
போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத கல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தைவிட  அந்தக் காலத்து பெரியாரை விட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது.


ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற் பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!


சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை,  பெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள் களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப் பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படி யானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒரு வருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக் கிறானே அவனைப் போல் அடிமடை யனும் வேறு இருக்க முடியாது என்று சொல் லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.


கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக் குச் சொன்னாரா? முஸ்லிமுக்குச் சொன் னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்திகனுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்னவர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட் டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவைகளை யெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதை யும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண் டும். மாடாயிருந்தால் அல்லவா யோசி யாமல் ஆம் என்று தலையாட்ட வேண் டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா  தம்பி தெரியவில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கட வுள்கள் அருமை என்று நினைக்கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற் புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண்டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.


அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன் னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படா தீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?


அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயி பாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத் தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?


இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?


ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்து விட்டு உன் அனுபவத்தையும் அறிவை யும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!


கோபம் செய்தாலெமன் கொண் டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!


தீபாவளி கதை


தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதுமாகும்.


மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிரா மணர்கள் சாபத்தால் இரணியன், இரணி யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதார மெடுத்து வந்து கொன்று விட்டார். இளைய வனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதார மெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பது தான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவ தாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.


விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக் கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர் களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.


மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணு வைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதார மெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகை யில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படி யுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?


இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத் தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித் தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண் டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?


இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?


பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந் திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?


அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.


இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப் படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட் சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரு முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரி யர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங் களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர் களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங் களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?


ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?


நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண் டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடா தீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.


------------------------ சித்திரபுத்திரன்  என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள்  எழுதிய கட்டுரை - “குடிஅரசு” -கட்டுரை -  07.10.1944

13 comments:

தமிழ் ஓவியா said...


நாட்டுக்குத் தேவை இந்துத்துவா கல்வி முறையாம்!

ஆர்ப்பரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

புதுடில்லி, அக்.12-_ இந்துத்துவம் என்பது இந்தியர்களின் உரிமையே! யார் ஏற்றுக் கொண்டா லும், மறுத்தாலும் இந்தி யாவில் உள்ள அனை வரும் இந்துத்துவத்திற்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தான்; உடனடியாக இந்துத்துவா கல்வி முறையைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மோகன் பகவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த இந் துத்துவ என்சைகிளோ பீடியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத் தில் பேசிய மோகன் பகவத் மீண்டும் இந்தியர் கள் இந்துக்கள் என்ற பிரச் சினையைக் கிளப்பியுள்ளார். 10.10.2014 அன்று தனி யார் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய மோகன்பகவத் இந்தியா வில் உள்ள மக்கள் அனை வரும் இந்துத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்,

இது அவர்களின் உரிமை, ஏதோ ஒரு காலத்தில் அந்நிய மதத்தவரின் கொடுமைக்கு ஆட்பட்டு நமது மக்கள் பிற மதங் களை பின்பற்றத் துவங் கினர். இருப்பினும் அவர்கள் இந்துக்களே, இந்துக்கள் என்பதற்கு ஏன் பலர் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். எனத் தெரியவில்லை. இந்துமத வரலாற்றின் வேரை அனைவரும் அறிந்து கொள்ள வேண் டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும். தற் போதுள்ள கல்விமுறை யில் இந்துத்துவத்தின் மதிப்பு காணாமல் போய் விட்டது. இது நம்மை பல நூறு ஆண்டுகளாக ஆண்ட அந்நிய ஆட்சியா ளர்களினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.

இந்துத் துவத்தை வளர்க்க வேண் டுமானால், முதலில் மாணவ மாணவியர்களி டம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இளைய வயதினரிடையே நமது இந்துத்துவத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க இதை விட எளிதான வேறு வழி இருப்பதாகத் தெரிய வில்லை. அந்நிய மதங்கள் கல்வி என்ற போர்வை யில் தான் அவர்களது மதத்தை நமது நாட்டில் பரப்பியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது பாடத் திட்டத் தில் நமது இதிகாசங்கள், மற்றும் மகாபுருஷர்களின் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கற்பதன் மூலம் எதிர் காலத் தலைமுறைகள் சிறந்த முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள், நமது அரசு இந்துத்துவக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.

இந்துத்துவக் கல்வி முறையை உலக நாடுகள் பல மறைமுகமாக நடை முறைப்படுத்தி வரு கின்றன. ஆனால் அக் கல்வி முறை தோன்றிய நமது நாட்டில் அது அழியும் நிலையில் உள் ளது. இருப்பினும் தற் போது பாரம்பரிய கல்வி அமைப்புகள் ஒரு சில அந்தக் கல்வி முறையை இன்றளவும் காப்பாற்றி வருகின்றன.

விரைவில் நாடுமுழுவதும் அக்கல்வி முறை நடைமுறைப்படுத் தப்படும் என்று மோகன் பகவத் கூறினார். மேலும், இந்துத்துவம் குறித்த உலகப் பார்வை யில் இதுவரை எழுதி வரும் பொய்யான கருத் துக்களை மறுத்து புதிய பதிப்புகளை இந்துத்துவ என்சைக்ளோ பீடியா விரைவில் கொண்டுவர முன் வர வேண்டும், இதன் மூலம் மீண்டும் இந்துத்துவம் புத்து ணர்ச்சி பெறும் என்றும் கூறினார். இக்கூட்டத்தில் பரமார்த்த நிகிகேதன் ஆசிரமத் தலைவர் சித் தானந்த சரஸ்வதி, மற்றும் பல் வேறு மடக் கல்வி நிறுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/89167.html#ixzz3Fz4KWOXW

தமிழ் ஓவியா said...

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்


இந்தியக் குடிமக்கள்

மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.

கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.

இந்தியாவில் வாழ்பவர்

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-7/89149.html#ixzz3Fz4lcsn9

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு


கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!

Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது


சி.கார்த்திகா (3 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் இளைஞர் நீதி குழுமத் தலைவர்), ஏ.ஆனந்த ஜெரார்டு (சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இயக்குநர் சி.வி.சுப்பிரமணியம், பி.பாத்திமாராஜ் (இயக்குநர், சைல்டு லைன், நோடல் நிறுவன செட் இண்டியா), எம்.தவமணி (இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்),

டி.மலர்வாலண்டினா (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதி), எஸ்.ஞானராஜ் (சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), எஸ்.சுவேதா, எஸ்.முகிலா (முதலாம் ஆண்டு மாணவிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), தஞ்சை, அக்.12_பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மனித நேய கழகம், இலவச சட்ட ஆலோசனை மய்யம், சைல்டுலைன் நோடல் நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு இணைந்து வளர் இளம் பெண்களின் மேம்பாடு: வன்முறை சுழற்சிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தல் என்ற கருத்தை மய்யமாக கொண்டு சர்வதேச பெண்குழந்தைகள் நாள் விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சுவேதா வரவேற்புரையாற்ற, சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் தவமணி தலைமை வகித்தார். அவர் தமதுரையில், குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தி யார்த்திக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இது மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்றார். இதுபோல் பெண் குழந்தைகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைத்து சமுதாயத்தில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும் என்றார். தஞ்சை மாவட்ட 3 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரும் இளைஞர் நீதி குழுமத் தலைவர் மாண்பமை நீதிபதி கார்த்திகா சிறப்புரையாற்றினார்.

அவர் தமதுரையில், பெண்குழந்தைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்ற லையும், ஆளுமை திறனையும் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும் என்றும், வளர்ந்து வரும் நவீன பொருள்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று கூறினார். அதனையடுத்து மாவட்ட சட்டப்பணி கள் ஆணை குழு செயலாளர் / சார்பு நீதிபதி மலர்வலண்டினா கருத்துரையாற் றினார்.

அவர் தமதுரையில், பெண்கள் குழந்தைகள் நல்ல நண் பர்களுடைய தொடர்பை வைத்துக்கொள் வதன்மூலம் அவர்களுக்கு வரும் பிரச் சினையை எளிதில் அவர்களால் எதிர் கொள்ள முடியும் என்றார். வளர் இளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்றும் பெண் குழந்தைகள் வளர் இளம் பருவத்தில் கல்வியறிவில் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு அறிவில் சிறந்து நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

சைல்டுலைன் இணை நிறுவன செட் இன்டியா இயக்குநர் பாத்திமாராஜ் வாழ்த் துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மற்றும் நிருவாக மய்ய இயக்குநர் சுப்பிரமணியன், பல்கலைக் கழக இலவச சட்ட உதவி மய்ய ஆலோ சகர் விஜயலஷ்மி மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி யாக பல்கலைக்கழக பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி முகிலா நன்றி யுரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/89134.html#ixzz3Fz5B4YFo

தமிழ் ஓவியா said...

" பெரியார்ஒரு கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்லோகம்

பூஜை நேரத்தில் மட்டுமல்ல; வீட்டில் சமைக்கும்போதுகூட ஸ்லோகங்களைச் சொல் லிக் கொண்டே வேலை செய்யலாமாம் - இதனால் பலன் கிடைக்குமாம்.

அது சரி, பிள்ளைகள் பாடம் படிக்கும் பொழுது எப்படி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? சமைக்கும் போது ஸ்லோகம் சொல் லிக் கொண்டிருந்தால் கவனம் தப்பி உப்பும், காரமும் அதிகமாகி மருத் துவமனையில் சேர வேண்டியதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/89212.html#ixzz3G4tccVQM

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக் கூடாது.

அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள் ளுங்கள்.

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்குச் சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89193.html#ixzz3G4vCG9cI

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குணம் நிறைந்த முருங்கைக் கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக் குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணி லடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். இனிமேல் தவற விடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/89186.html#ixzz3G4vW1H7c

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 14: உலகத் தர நாள்


ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி நடைபெறும் நிலையில் நிலையில் தரக்கட்டுப்பாடு பற்றிய பொதுத்திட்டத்தை வரையறை செய்வது முக்கியமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக அய்.எஸ்.ஓ என்ற அமைப்பு 1974-ஆம் ஆண்டு ஜெனி வாவில் துவங்கப்பட்டது.

அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய தர நிர்ண யங்களைப் பொருள்களுக்கு ஏற்படுத்தி உலக நாடு களிடையே தடையின்றி வர்த்தகம் வளர வழி செய்வதே முக்கிய குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பில் வளர்ந்த நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தன. படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினராகி இருக்கின்றன. 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உலகத் தர நிர்ணய நிறுவனத் துக்கு ஒத்துழைப்பைத் தந்து தரக்கட்டுப்பாட்டை, விதிகளுக்கு உட்பட்டு கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.

அய்.எஸ்.அய். தர முத்திரையிடப்பட்ட பொருள் களை வாங்குவதால் நுகர்வோருக்கு என்ன பயன்?

கலப்படப் பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களால் ஏற்படும் விபத்துகள், ஆபத்து களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் என்பதால் விற்பனை அதிகமாகவும், விரைவாகவும் இருக்கிறது. இதனால், அதிக உற்பத்தி, குறைந்த விலை சாத்தியமாகிறது.

மத்திய அரசு நுகர்வோர் நலன் கருதி, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களையும், விபத்து ஏற்படுத்தும் பொருள்களையும் கட்டாய அய்.எஸ்.அய். தர முத்திரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தரக்கட்டுப்பாடு மூலம் கிடைக்கும் நற்பயன்களை நுகர்வோர் உணர்வது இல்லை. நுகர்வோர்களிடம் தர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், உற்பத்தி யாளர்களிடையே தரம் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தை உண்டாக்கவும் உலகத் தர தினத்தில் கருத்தரங்கள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய தலைமைச் செயலகம் டில்லியிலும், கிளைஅலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சண்டிகார், சென்னை போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

அக்மார்க் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட நம்நாடு உணவுப்பொருட்களில் தனித்துவம் கொண்ட முத்திரையை அய்.எஸ்.ஓ.வின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தி வருகிறது. தரம் மற்றும் தூய்மைக்கு அடையாளமாக அக்மார்க் அடையாளம் இருக்கிறது. பொதுமக்களாகிய நாம், தரக்கட்டுப்பாட்டில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். முன்பு கூறியது போல் கலப்படம் என்பது முழு சமூகத்தையே பாதிக்கும் ஒன்றாகும்.

லாபம் மற்றும் பேராசை காரணமாக கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைச் செய்யும் நபர்களைப் பற்றி தெரிந்தால் உடனே மாநகராட்சி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கவேண்டும்.

அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து அக்டோபர் 14 அன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் இந்தியாவில் தனியார் நடத்தும் சில கல்வி நிறுவ னங்கள் மட்டும் விளம்பரத்திற்காக இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலத்தில் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாமும் பெற்று மற்றவர்களுக்கும் இவ்விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/89250.html#ixzz3G7vo1REf

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page-2/89238.html#ixzz3G7wJPqt5

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை


முஸ்லிம் பெண்கள் கல்விக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனத்தை எதிர்த்துத் துணிவாகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கும், குழந்தைகள் நல உரிமை என்னும் கண்ணோட்டத்தில் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதை ஓர் இயக்கமாக நடத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பற்றிய திசையில் இந்நிகழ்ச்சி ஓர் உரத்த சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது - எழுப்பிடவும் வேண்டும். இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. (ஜூன் 1) இதையொட்டி, மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழி லாளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரகண்டில் 17.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம், ராஜஸ்தானில் 4 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பை சேர்ந்த தாமஸ் சாண்டி கூறும்போது, 14 வயதுக்கு உட்பட்டவர்களை, வீடுகளி லும் ஓட்டல்களிலும் வேலைக்கு வைக்கத் தடை உள்ளது. இருந்த போதிலும் ஏராளமான குழந்தைகள் ஓட்டல்களிலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற் சாலைகளிலும் வேலைக்கு விடப்படுகின்றனர் என்றார்.

தமிழ் ஓவியா said...

"உலகிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 40 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இதில் தலைநகர் தில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதுடன் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள்" என குழந்தைகள் தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "51 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் படிக்க வேண்டிய அய்ந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். இந்த ஆய்வில் நாற்பத்தேழு சதவிகித முதலாளிகள் சட்டத்தை அறிந்திருப்பதாகவும் ஆனாலும் அது அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதிலிருந்து தடுப்பதில்லை" எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. குழந்தைத் தொழி லாளர்களை மீட்கும் நோக்குடன் செயல்படும் இந்த அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இதை வெளி யிட்டது. இந்த ஆய்வறிக்கை மூலம் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அதாவது எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தேனீர்க் கடைகள், உணவகங்கள் அல்லது சிறிய கடைகளில் பணிபுரிவ தாகவும், விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற இடங்களில் பணி நெறிமுறைகள் குறைபாடுகள் முழுவதுமாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டு களுக்குள் அடிப்படைக் கல்வியை அளிப்பது என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. இந்தச் சட்ட திட்டம் மட்டும் சரியாகச் செயல்படுத்தப்பட்டு இருக் குமானால், இந்தக் குழந்தைத் தொழிலாளர்ப் பிரச்சினை என்ற கேள்வியே எழுந்திருக்காது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச் சினையில்கூட வருணாசிரம தர்மத்தின் ஆணி வேர் ஆழமாக ஊடுருவியுள்ளதை யார்தான் மறுக்க முடியும்?

எந்தப் பகுதி மக்களிடத்தில் கல்வி வளர்ச்சி யில்லையோ அந்தப் பகுதியிலிருந்துதான் இந்த குழந்தைத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிறார்கள்.

சமூக நீதி முழுமையான அளவு கிடைக்கும் ஒரு சூழலில்தான், கால கட்டத்தில்தான் இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்னும் கொடுமைக்கு முடிவு ஏற்பட முடியும்.

இன்னொரு வகையில் இது ஒரு மனித உரிமை மீறலும்கூட! குழந்தைகள் நல உரிமைகளுக்காகப் பாடுபட்டு நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
இது ஒன்றும் சாதாரணப் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; வெறும் சட்டப் பிரச்சினையும் அல்ல. பல்வேறு விதமான சமூகப் பிரச்சினையின் கலவையாகும். சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான பிரச்சினை - என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் உலகக் குழந்தைகள் நாளை ஒரு சடங்காக அனுசரிப்பதால் உருப்படியான விளைவுகள் ஏற்படப் போவதில்லை.

உயர் ஜாதி, உயர் பணக்கார வீட்டில் பிறந்தாலும் சரி, கீழ் ஜாதி என்று கீழே தள்ளப்பட்ட குடும்பங்களில், வறுமைக் கோட்டுக்கும்கீழ் கிடந்துழலும் குடும்பங் களில் பிறந்தாலும் சரி, குழந்தை குழந்தைதான்! குறிப்பிட்ட குடும்பங்களில் பிறந்து விட்டதால் அவர்களின் தலையெழுத்து அப்படித்தான் என்று நினைக்கும் மனப்பான்மைக்குக் கல்லறை எழுப்பப்பட வேண்டும். குழந்தைகள் நலனுக்குப் பாடுபட்டவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனை எங்கும் பாய்ந்து பரவட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/89239.html#ixzz3G7wUeSeV

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடே பின்பற்றட்டும்! 56 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 பட்டி கிராமங்கள்


தீபாவளி பற்றி துளி கூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடா மல் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றி யத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பி லான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடைய பட்டி, கிலுகிலுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப் புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவ ளியே கொண்டாடுவ தில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர் அய்ப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவ தும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வ தும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடை யின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுத லாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந் துயரம் தொடர்ந்துள்ளது.

இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958ஆ-ம் ஆண்டு பெரிய அம்பலகாரர் பெரி.சேவுகன் அம்பலம் தலைமையில் ஊர்க்கூட் டம் போட்டுள்ளனர். அப் போது கிராம தெய்வ மான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவ தில்லை என ஒருமித்து முடிவெடுத்தனர்.

விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை, துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண் டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின் றனர்.

இதுகுறித்து பெரிய அம்பலகாரர் சே. சபாபதி கூறியதாவது: தீபாவளி வர்ற காலம் மழைக்கால மாகவும், விதைப்பு செய் யும் காலமாகவும் இருக் கும். அப்போ யாரு கைல யும் காசு இருக்காது. கையில இருக்குற நெல், தானியக் கையிருப்பும் கரஞ்சு, வெளியில வட் டிக்கு வாங்குற நெலம ஏற்பட்டுச்சு.

அப்போல்லாம், வட் டிக்கு வாங்கின 100 ரூபாய்க்கு ஒரு மூட்டை நெல் கொடுக்கணும். அந்த நேரத்தில வர்ற தீபா வளிய, கடன் வாங்கித் தான் கொண்டாடணும்ங் கிற நிலைமை. அது எல்லாருக்கும் கஷ்டத்த கொடுத்துச்சு. அப்பத்தான் கூட்டம் போட்டு, தீபா வளியை நிப்பாட்டிட்டு, அதுக்கு பதிலா பொங்கல சிறப்பா கொண்டாடுற துன்னு முடிவெடுத்தாங்க. தீபாவளிக்கு என்னென்ன பயன்படுத்துறோமோ அத பொங்கலன்னிக்கி பயன் படுத்தி கொண்டாட லாம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ் சாங்க. தீபாவளிய இருக்கிற வங்க கொண்டாடுவாங்க, இல்லாத வீட்டுப் புள் ளைக என்ன செய்யும்?

இருக்குற வீட்டுப் புள்ளைங் கோடி (புத் தாடை) கட்டி நிக்கும் போது, இல்லாத வீட்டுப் புள்ளைங்க பழசோட நின்னா மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதப்பாக் குறப்போ புள்ளைய பெத் தவங்களும் நொந்து போவாங்க.

அதனால, எல்லாரும் சந்தோஷமா இருக்குற நாளை தீபாவளியா கொண்டாடுவோம்னு நிப்பாட்டி 56 வருஷமாச்சு.

இந்த ஊரைச் சேர்ந் தவங்க எங்க இருந்தாலும், தீபாவளியன்னிக்கி பலகாரம் கூட போடாம சாதம், கஞ்சியத்தான் குடிப்பாங்க. தீபாவளி யன்னிக்கி இங்க பொண்ணு எடுத்தவங்களை விருந்துக்கு அழைக்கமாட் டோம், வெளியில பொண்ணு கட்டுனவங் களும் விருந்துக்கு போக மாட்டாங்க. மனக்குறை வந்துட கூடாதுங்கிறதால தோதுப்பட்ட இன்னொரு நாளில விருந்து வெப் பாங்க. சின்னப் புள்ளையில இருந்து பெரியாளுக வரைக்கும் இதை கடைப் புடுச்சி வர்றோம். 56 வரு ஷமா தைப்பொங்கலத் தான் தீபாவளியா கொண்டாடுறோம். என் றார்.

இக்கிராமத்தில் பெரிய வர்கள் வகுத்த கொள் கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்து, விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதாரம் காரணமாகக் கூறப்பட் டாலும் தீபாவளி என்பது மூடப்பண்டிகை மட்டு மல்ல - திராவிடர்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது.

Read more: http://viduthalai.in/e-paper/89260.html#ixzz3G7wifdfc