Search This Blog

6.10.14

ஆர்.எஸ்.எசுக்கும், பிஜேபிக்கும் தொடர்பில்லையா? காலந்தாழ்ந்தாவது உணர்வார்களா?


ஆண்டுதோறும் இந்துக்களின் பண்டிகையான விஜயதசமி நாளில் ஆர்எஸ்.எஸ். ஆண்டு விழா நடைபெறுவது வாடிக்கைதான். குருதட்சணை என்ற பெயரால் பெரு நிதி குவிக்கப்படும். பிரதமராக இருந்த வாஜ்பேயிகூட வரிசையில் நின்று உண்டியலில் பணம் போட்டதுண்டு.


ஆர்.எஸ்.எசுக்கும், பிஜேபிக்கும் தொடர்பில்லை - அதுவேறு; இது வேறு என்று கொஞ்ச காலம் சொல்லிப் பார்த்தார்கள். அது அப்பட்டமான ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்  என்று வெளிப்படையாகத் தெரிந்து விட்ட நிலையில் வெட்கப்பட்டு இப்பொழுதெல்லாம் அதிகம் அந்த அளவு சொல்வதில்லை.


16ஆவது மக்களவைத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த அக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸின் அறிவுரையின் அடிப் படையில், வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் தேர்தல் அறிக்கையே தயாரிக்கப்பட்டதாக செய்தி யாளர்களிடம் தெரிவித்தாரே!


அந்தத் தேர்தல் அறிக்கையிலும் ஒளிவு மறைவின்றி அது பளிச்சிட்டு காணப்பட்டது


ராமன் கோயில் கட்டுவது, கங்கையைச் சுத்தி கரிப்பது, கோமாதா பாதுகாப்பு, யுனிஃபார்ம் சிவில் கோட், காஷ்மீருக்கென்று உள்ள 370 ஆவது பிரிவு நீக்கம்- என்ற ஆர்.எஸ்.எஸின் நிகழ்ச்சி நிரல்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.


வெளிநாடுகளில் வாழும் இந்துக்களைக் காப்போம் என்று கூட பிஜேபி தேர்தல் அறிக்கையிலே இடம் பெற்றுள்ளது என்றால் இதைவிட வேறு அப்பட்டமாக எப்படித்தான் தனது இந்து வெறியைக் குறிப்பிட முடியும்?


அரசின் தொலைக்காட்சியை (தூர்தர்ஷன்) ஆர்.எஸ்.எஸின் ஒலி பெருக்கியாக்கி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வரைமுறையின்றி ஆர்.எஸ்.எஸின் வெறிப் பொறி கிளப்பும் மேடையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியோ சபாஷ்! சபாஷ்!! சரியான பேச்சு! என்று சான்றுப் பத்திரம் வாசித்துக் கொடுக்கிறார்.


இதன்மூலம் நரேந்திரமோடி தன்னைத்தானே மீண்டும் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ்.பாசிசத்தின்மீதான செல்லத்தை கட்டுக்கடங்கா காதலை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் அனைவரும் இந்துக்களே எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளைத் தம் முன் எடுத்துச் செல் பவர்களே! என்று மோகன் பகவத் தொலைக் காட்சியில் கூறுவது ஆர். எஸ்.எஸின் ஆணவத் தையும், பாசிச குரூரத்தையும் தான் வெளிப்படுத்தும்.


குடிமக்கள் உரிமையுமின்றி முஸ்லிம்கள் வாழ முன்வர வேண்டும் என்று கோல்வால்கர் எழுதி இருப்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்க முடியும்.


முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ராமனையும், கிருஷ்ணனையும் தான் வணங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் (சர்சங்சலாக்) குப்ப ஹள்ளி சீதாராமையா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) கூறிடவில்லையா?


இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்த அமைப்புகள் எப்படி நடமாடுகின்றன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!


அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவற்றை ஒருவர் பேசுகிறார் - அத்தகையவரின் முழு உரையை அரசுத் தொலைக்காட்சியே ஒளிபரப்புவது - நினைத்தே பார்க்க முடியாத அப்பட்டமான சட்ட மீறல்! இந்தச் சட்ட மீறலுக்கு ஒரு பிரதமரே ஆதரவு என்கிறபோது இதுபற்றி மிகப் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுப்பப்பட வேண்டாமா? விமர்சனங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் - வீதிகளில் எதிர் முழக்கங்கள் ஒலிக்க வேண்டும். சட்ட விரோதமான ஆட்சி நடந்து கொண்டுள்ளது என்ற பிரச்சாரம் எங்கெங்கும் நடைபெற வேண்டும்.


இதில் ஊடகங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது;  வெட்கக் கேடு என்னவென்றால் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் நடந்த பொழுதும் சரி, தேர்தலுக்குப் பிந்தைய இந்தக் கால கட்டத்திலும் சரி, அறிவு நாணயமாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் பிற்போக்குத்தனங்களின் வாகனங்களாகச் செயல்பட்டன.


ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சட்ட விரோத உரை  -அதனை அரசு தொலைக்காட்சி முழுமையாக ஒளிபரப்பும் போக்கு, அதற்குப் பச்சைக் கொடி காட்டும் பிரதமர் - என்ற நிலையில் அரசு இயந்திரங்கள் எந்தத் திசையில் இயங்கும்? அதிகாரிகள் அலுவலர்கள் மனப்பான்மை எந்தத் திசையில் பயணிக்கும்? என்பதெல்லாம் மிக முக்கியமான வினாக்கள் ஆகும்.


பாபர் மசூதியை இடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட ஆபத்தின் அடுத்தடுத்த போக்குகள் இந்த அளவுக்குப் பரிணாமம் பெற்று இருக்கின்றன. இதனைக் குடிமக்கள் உணர வேண்டும். இந்துத்துவாவாதிகளை அதிகாரத்தில் அமர வைத்ததன் பலனை நாடு அனுபவிக்க நேர்ந்திருப்பதைக் காலம் தாழ்ந்தாவது உணர்வார்களாக!

---------------------------------”விடுதலை” தலையங்கம் 6-10-2014

2 comments:

தமிழ் ஓவியா said...

முதலாளிகளின் பின்பலம்


அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)

Read more: http://viduthalai.in/e-paper/88901.html#ixzz3FYtx3gVF

தமிழ் ஓவியா said...

பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?

பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.

கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,

பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.

இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.

கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/e-paper/88905.html#ixzz3FYukpTch