Search This Blog

21.7.14

டாக்டர் பேசுகிறார்... கேளுங்கள் -கி.வீரமணி


நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் மறைந்தும் மறையாதவராக நம் நெஞ்சில் நிலைத்த டி.ஏ. கோபாலன் அவர்களின் சகோதரர் டி.ஏ. ஜோதி - யசோதா ஆகியவர்களின் மண விழாவின் 50ஆம் ஆண்டு (பொன் விழா) நிறைவையொட்டிய வாழ்த்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றேன். அப் போது நமது கழகப் பொறுப்பாளர் காஞ்சி செ.ரா. முகிலன் அவர்கள், ஒரு சிறு தமிழாக்க நூல் ஒன்றை எனக்கு அளித்தார்.


ஆரோக்கிய கருத்து என்றால் என்ன? என்ற தலைப்பில், பத்ம பூஷன் டாக்டர் பி.எம். ஹெக்டே அவர்கள் (மணிப்பால் மருத்துவப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந் தரின் திருச்சி பொழிவின் கருத்துரை களைக் கொண்ட சிறு கேப்சியூல் (Capsule)போன்ற புத்தகம் இது.


அருமையான கருத்து வெளிச்சம் அதன்மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட் டுள்ளது .
பல மருந்துகள் நோய்களை தீர்ப்பதைவிட புதிதாக நோய்களை (உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலம்) வர வழைப்பதாக அமைந்து விடுகின்றது என்ற நல்ல எச்சரிக்கையினை நம் அனைவருக்கும் அளித்து, நோய்களை மூலதனமாக்கி, பகற்கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனை வியாபாரங்களைப் பற்றி மிகவும் - மனிதநேயம் பொங்க அருமையாக எழுதியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள உலக ஆரோக்கிய அமைப்பு இதனை வெளியிட்டு, மக்களுக்கு நல்ல தொண்டறப் பணி செய்வது பாராட்டத் தகுந்தது!


சில கருத்துக்கள் பகுத்தறிவாளர் களுக்குச் சற்று மாறுபட்டவைதான் என்ற போதிலும், பொதுவான உண்மைகளை நாம் அனைவரும் வரவேற்றுப் பயன் பெறக் கூடியதே!

உடலின் உண்மையான நலப் பாதுகாப்பு என்பது மருந்துகளை  உட் கொண்டு நோய்களை விரட்டுவதைவிட, இயற்கையான நோய் தடுப்பு சக்தியை நமது உடல்கள் வளர்த்துக் கொள்வதே சரியான ஆரோக்கிய வழி என்பது நல்ல கருத்தாகும். (Immunity) என்ற  உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நாளும் குறைவதற் குரிய 1) உலகச் சுற்று சூழல் மாசு அடைவது 2) சுவாசிக்கிற காற்று தூய்மையற்றது. 3) குடிக்கும் தண்ணீர் மாசுபடுதல் 4) உண்ணும் உணவு கலப்பட சங்கமமாக அமைவது முதலிய பல காரணங்களால் என்கிறார். மறுக்க முடியாத உண்மைகள் தானே இவை?


இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகணும் என்கிறார் டாக்டர் ஹெக்டே!
நவீன மருத்துவத்தின் தந்தையின்னு சொல்லப்படற ஹப்போக்கிரடீஸ் சொன்னார் - மருந்துகள் எப்பவாவது தான் குணப்படுத்தும் பெரும்பாலும் சவுகரியம் கொடுக்கிறது. வலி தடுப்பு (Antibioties, Pain  Killers) மருந்துகளின் நோய் புதிய பரிமாணம் பெற்று நம்மை மேலும் கடுமையாகப் பாதிக்கவே செய்கின்றன என்கிறார் டாக்டர்.

ஹிப்ரோகிரடீஸ் Oath பிரமாணம் எடுக்கிறார்கள். ஆனால் பலர் கடைப் பிடிப்பதில்லையே என்கிறார்! ‘Never  make money in sick room’  நோயாளி அறையை வைத்து அதன் மூலம் பணம் பண்ணாதீர் என்ற அறிவுரையைவிட அதிகம் காற்றில் பறப்பது எது? கேட்கிறார் டாக்டர்!

மாற்றுத் தீர்வு என்ன? அதையும் அழகாகச் சொல்கிறார்; கேட்போம்.

1. அளவாகச் சாப்பிடப் பழகுங்கள். (மிதமிஞ்சிய உணவைத் தவிர்ப் போம்).

2. எல்லோரையும் சமமாக நடத்துவோம்; யாரையும் தாழ்வாகவோ, கேவலமாகவோ நடத்த வேண்டாம்! (அப்போது நமது உடல் நலம் மனநலம் பெற்று சீரடைவோம்).

3. உண்மையையே பேசுவோம்.

4. மன்னிப்போம் - மறப்போம் என்பதை கைக் கொண்டு ஒழு குங்கள்.

5.    எல்லோரையும் உலகளாவிய நிலையில் நண்பர்களாக, உறவினர்களாக நினைத்துப் பழகுங்கள்.

6. நாள்தோறும் நடைப் பயிற்சி (Walking)யைவிட நல்ல மருந்து வேறில்லை.

7. கடினமாக உழையுங்கள்.

8. எமர்சன் என்கிற தத்துவஞானி சொல்கிறார்.

சந்தோஷமாக இருக்கிறதல்ல வாழ்க்கை
வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கணும்
கருணை உள்ளதாக இருக்கணும்
உண்மை உள்ளதாக இருக்கணும்.

9. வாழ்க்கை நல்லா வாழ்ந்தால் மட்டும் போதாது இன்னொரு உயிரைத் தொடனும்.

10. நாம் வாழுவதைவிட மற்றவர்களை நாம் வாழவிட்டிருக்கிறோம் என் பது உலகத்துக்குத் தெரியணும்!

இவைகளைக் (கூடுமான வரையிலாவது) கடைப்பிடித்தால், நலன் தானே கிட்டும்; ஆயுள் - நோயற்ற வாழ்வாக மட்டுமல்ல குறைவற்ற செல்வமாகவும், வளர்ந்தோங்கும் என்கிறார் உண்மைதானே!

நீண்ட ஆயுள் முக்கியமல்ல நண்பர்களே, நல்ல உடல் வன்மை - நலத்தோடுகூடி வாழும் ஆயுளே முக்கியம் என்பதால், பள்ளமில்லாத உள்ளத்தால் அதை அடைய முயற்சி யுங்கள்.

                                              -------------------------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து -- “விடுதலை” 21-07-2014

0 comments: