Search This Blog

19.10.13

எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக்கிறார் வீரமணி?

இருட்டை விட்டு வெளியே வரட்டும், இந்தியா டுடே!

இந்தியா டுடே வார இதழ் பெரியாருக்குத் தடை? எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (16.10.2013, பக்கங்கள் 8, 9).
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்ட விருத்தாசலம் திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மதவெறி, ஜாதி வெறி கொண்ட ஒரு சிறுகூட்டத்தார் வன்முறையில் ஈடுபட்டதைப் பற்றிக் கூறிவிட்டு, இந்தியா டுடே தன் கருத்தை எழுதுகிறது! எப்படி தெரியுமா?
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரியார் கொள்கைகளை இனி சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று எழுதுகிறது இந்தியா டுடே!
இது இந்தியா டுடேயின் ஆசையா? அல்லது நடைமுறை உண்மையா?
(1) எதிர்ப்பு நெருப்பாற்றில் நீச்சல் போட்டுப் போட்டுத்தான், இந்த இயக்கம் மகத்தான வெற்றி களைக் குவித்திருக்கிறது.
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் எல்லாம்கூட செருப்புகள் வீசப்பட்டதுண்டு - கற்கள் வீசப்பட்ட துண்டு - முட்டையில் ஓட்டைப் போட்டு, அதில் மலத்தை வைத்து பெரியார்மீது வீசியதுண்டே! சால்வையால் அதைத் துடைத்து எறிந்துவிட்டு, தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தாரே தவிர, தொடை நடுங்கி ஒதுங்கிடவில்லை.
சின்னாளப்பட்டியில் கடுமையாக கற்கள் வீசப்பட்ட நேரத்தில், தானும் முண்டாசு கட்டிக்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டே!
இவற்றையெல்லாம் சந்தித்தே - தந்தை பெரியாரை ஒட்டுமொத்தமான சமூகமே ஏற்றிப் போற்றிடும் ஒரு நிலையைத் தன் வாழ்நாளிலேயே கண்டு கண் மூடினார்.
தேர்தல் அரசியலில் தன்னையோ, தன் இயக்கத் தையோ ஈடுபடுத்தாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கையாக்கப்பட்டது என்று ஒரு முதலமைச்சர் (அறிஞர் அண்ணா) சொன்னார் என்றால், அது என்ன சாதாரணமா?
இது சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவை யில் ஒரு முதலமைச்சர் (கலைஞர்) கூறியதெல்லாம் எந்த அடித்தளத்திலிருந்து?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை எடுத்துக்கொண்டால்கூட, இத்தகு தாக்குதல்கள் ஒன்றும் புதியன அல்ல - இதற்கு முன்புகூட நான்கு முறைகள் அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட துண்டே! அதனால் என்ன ஓய்ந்துவிட்டாரா? பொதுத் தொண்டிலிருந்துதான் ஒதுங்கிவிட்டாரா?
உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத அள வுக்குப் பொது இடங்களில் தந்தை பெரியார் சிலைகளை எழுப்பி, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுதானே வருகிறது - இப்பொழுதும்!
அதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் சென்றதும் உண்டே! 

ஆன்மிகவாதியான ஜஸ்டிஸ் திரு.மு.மு.இஸ்மாயில் அவர்களே கூட வழக்கைத் தள்ளுபடி செய்து, பெரியார் சிலையில், பெரியார் கருத்துகளைப் பொறிக்காமல், வேறு யாருடைய கருத்துகளைப் பொறிக்க வேண்டும்? என்று மண்டையில் அடித்துத் தீர்ப்புக் கூறினாரே!
பெரியார் மறைந்த ஓராண்டு நிறைவு நாளிலே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தியது திராவிடர் கழகம்தானே - அன்னை மணியம்மையார்தானே - வழக்குப் போட்டார் களே - வெற்றி பெற்றனரா? மாறாகக் கழகம் அல்லவா வெற்றி பெற்றது.
எதிர்ப்பைப்பற்றி, உயர்த்தி எழுதுகிறார்களே! உண்மை என்ன? திராவிடர் கழகத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது தடிகொண்டு தாக்கிய தடியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள்தானே அதிகம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை என்றால், அதற்குள் அரசியலும், கூட்டணியும் இரகசியமாக இருக்கிறது - அவ்வளவே!
(2) இன்னொன்றை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு எழுதி இருக்கிறது - இந்தியா டுடே. கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே, அதனை இழிவுப்படுத்திப் பேசவேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர் வீரமணிக்கு என்று சொல்லுகிறது.
கடவுள் என்ற ஒன்று இல்லை என்று இந்தியா டுடே ஒப்புக்கொண்டதே கூட, திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியே!
இன்னொன்று கடவுளை இழிவுபடுத்திப் பேசவேண் டிய அவசியம் இல்லை என்று இதோபதேசம் செய்தும் உள்ளது.

எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக்கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
இராமன் என்றும், கிருஷ்ணன் என்றும், விநாயகன் என்றும், சிவன் என்றும், பிரம்மா என்றும், சரஸ்வதி என்றும் கடவுள்கள்பற்றிப் புராணங்களை எழுதியது திராவிடர் கழகத் தலைவரா?
இந்தப் புராணங்களில் இந்தக் கடவுள்கள் பிறப்பு எல்லாம் ஆபாசமாகத்தானே எழுதப்பட்டுள்ளது.
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து உருட்டித் திரட்டியவன்தானே விநாயகன் என்று எழுதி வைத்ததும்; - அதனை இன்றுவரை நம்பி விநாயகன் ஊர்வலங்களை நடத்துவதும் - அதனை மய்யப்படுத்தி சிறுபான்மை மக்களைத் தாக்குவதும் சரியானதுதானா?
சரஸ்வதியின் தந்தையும் பிரம்மா - கணவனும் பிரம்மா என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கேவலத்தை எப்பொழுதாவது சுட்டிக்காட்டி - நாட்டு மக்களுக்கு நல்லதைச் சொல்லியிருக்கிறதா இந்தியா டுடேக்கள்?
ஒழுக்கமாகக்கூட ஒரு கடவுளை உண்டாக்க முடிய வில்லையே - அதற்காக வெட்கப்படவேண்டாமா?
பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளதே - இப்படிக் கூறுபவன் பகவான் கிருஷ்ணன் என்று கூறு வதும், அந்தக் கீதையை ஒப்பற்ற நூல் என்று புகழ்வதும் மதிமயக்கத்திலும், மூட நம்பிக்கைச் சகதியிலும் மூழ்கிக் கிடப்பவர்களுக்குச் சரியானதாகப் படலாம். காரணம், பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்துவது இல்லையே!
ஆனால், சமூக அக்கறையும், ஒழுக்கத்தின்மீது உயர்நாட்டமும் - அறிவின்மீது அளப்பரிய ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஆபாசங்களையும், இழிவையும், அறியாமையையும் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் இடித்துக் காட்டிச் சொல்லவேண்டிய சமூக அக்கறை யும், கடமை உணர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது!
அது இந்தியா டுடேயிடம் இல்லை என்றால், அய்ம்பொறிகளையும் பொத்திக்கொண்டு நாய் விற்ற காசு குரைக்காது என்ற தன்மையில் வியாபாரப் பொழைப்பை நடத்திக் கொள்ளட்டும்!
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அறிவு வெளிச்சப் பாதைக்கு அழைத்து வருவதையும் ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதிக்காக அயராது பாடுபடுவதை யும், பெண்ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறித்து ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற பாலியல் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பதையும், பிறவியில் பேதம் பேசும் வருணதர்மத்தையும், அதனைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட கடவுள்கள், புராணங்கள், இதிகாசங் கள், சாஸ்திரங்களை எதிர்ப்பதையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு, எந்தவித சுயநலச் சிறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு, ஊருக்காக உழைக்கும் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவரையும் சரியாக எடை போடாமல் எழுதவேண்டாம் - இந்தியா டுடேக்கள்! 

---------------------------மின்சாரம் அவர்கள் 18-10-2013”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மன வருத்தம்

பெரியாரும் கி.ஆ.பெ. விசுவநாதமும் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ரயிலில் மதுரை சென்று கொண்டிருந்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. நடைமேடையில் இருந்த கடையில் இட்லி வாங்கி வரும்படி விசுவநாதத்திடம் பெரியார் கூறினார். விசுவநாதம் இட்லி வாங்கி வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கினர். நடை மேடையில் இருந்த இருவர் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த பெரியார் விசுவநாதத்தின் தோளைத் தட்டி அவர்கள் இருவரும் நம்மைப் பற்றி ஏதோ கூறுகிறார்கள் என்று கூறினார். அவர்கள் ஏதோ பேசிவிட்டுப் போகட்டும் விடுங்கள் என்று விசுவநாதம் பெரியாரிடம் கூறினார்.

அதற்கு பெரியார் இவன்தான் நம்மை எதிர்க்கிறவன் என்று அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் நாம் எந்த சமுதாயத்துக்காக பாடுபடுகிறோமோ அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்கக்கூட தயாராக இல்லையே என்று மனவருத்தத்துடன் கூறினார். பெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று சுட்டதாகக் கூறி அந்த சூட்டை இன்னும் தன்னால் மறக்க முடியவில்லை என்றும் எழுதியுள்ளார் கி.ஆ.பெ. விசுவநாதம்.

நன்றி: தீக்கதிர் 8.10.2013)
தகவல்: ச. இரணியன், சென்னை-_62

தமிழ் ஓவியா said...


தூய தொண்டறத்திற்கு... என்றும் துணை நிற்போம்!...

இட்லர் தன் வாழ்நாளில் 60 லட்சம் யூதர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான் என்பது வரலாறு! ஆனால், அவன் இறுதி முடிவு?... யாவரும் அறிந்ததே!!

கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் போது... யார் ஆண்டால் நமக்கென்ன? என்று அலட்சியப் படுத்தினால் விளைவு என்ன ஆகும் என்பதற்கு வரலாற்றில் இருந்து இதோ! ஒரு சான்று...

ஹிட்லருக்கு எதிரானவன், மார்ட்டின் நீல்மில்லர் என்பவன் நாயால் பிடிக்கப்பட்டு 1937-லிருந்து 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு... இறுதியில் படுகொலை செய்யப்பட்டான்!...

அவன் படுகொலை செய்யப்படுவதற்கு முன் எழுதிய கவிதை உலக மக்கள் அனைவருக்குமே ஒரு பாடம்! அவன் அதில் எழுதுகிறான்.
முதலில் நாஜிகள் யூதர்களைப் பிடித்தனர். நான்பேசவில்லை. ஏனெனில் நான் யூதனில்லை!,

பின்னர் அவர்கள், கம்யூனிஸ்டுகளைப் பிடித்தனர். நான் பேசவில்லை! ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல!.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடித்தனர். அப்போதும் நான் பேசவில்லை!. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதியுமல்ல!

இறுதியில் அவர்கள் என்னைப் பிடித்தனர்! அப்போது எனக்காகப் பேச யாரு மில்லை!.

இதுதான், கொலை செய்யப்படுவதற்கு முன் அவன் எழுதிய பொருள் பொதிந்த கவிதை!
யாராண்டால் நமக்கென்ன? நாம் வாழ்ந்தால் போதும் என எண்ணினால் தன்னலத்தோடு வாழ்க்கை நடத்தினால்...

நாடு அழிவதோடு அவர்களும் அதோடு சேர்ந்து அழியநேரிடும் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறான்!.

இது ஜாதி, மத வேறுபாடுகளால்... அரசியல் கட்சிகளால் சிதறுண்டு கிடக்கும் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம்!...

வரு முன் காக்கும் வல்லமை இருந்தால் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்! இதற்கு

ஈரோட்டு பகுத்தறிவுப் பாசறையே... சரியான வழியினைக்காட்டும்!... இந்த இனமான உணர்வு மேலோங்கினால்... பிறகு...

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களை குறிவைத்துத் தாக்குகிற ஈனச்செயல் தலைதூக்குமா?

விழிப்போடு இருப்போம்! அய்யா, அண்ணா வழியில் அயராதுழைப்போம்!! அய்யா ஆசிரியர் அவர்களின் தூயதொண்டறத்துக்கு என்றும் துணைநிற்போம்! மதவெறி மாய்ப்போம்!! -

- நெய்வேலி க.தியாகராசன் (கொரநாட்டுக்கருப்பூர்)

தமிழ் ஓவியா said...


நான் அறிவாளி! நான் முட்டாள்!!

ஒரு மனிதர் சக மனிதர் ஒருவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்தச் சக மனிதர் பெற்றோர்கள், நண்பர்கள், உயரதிகாரிகள் என யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த கோரிக் கைக்கான பதில் அல்லது பலன் ஓரிரு நாளில் அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. ஓரிரு நாளென்பது ஒரு மாதம் ஆகி, நாலைந்து மாதத்தையும் அது கடந்து விட்டது. அப்போதும் பதில் இல்லை; பலன் இல்லை!

கோரிக்கை வைத்தவர் என்ன செய்வார்? கோபம் கொள்வார். கோபம் என்றால் கடும் கோபம். ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். அதைக்கூட என் பெற்றோர்கள், நண்பர்கள் உயரதி காரிகள் செய்யவில்லை. நான் எதற்கு உயிர் வாழ வேண்டும்? இவர்கள் எல்லாம் மனிதர்களா? எனக் குதிப்பார். அவர் கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அவர் குதிப்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம்! நிற்க! அந்த உணர்ச்சியுள்ள மனி தரின் இன்னொரு நாள் அனுபவத்தைப் பார்க்கலாம். காலை எழுந்தவுடன் குளித்தல், பின்னர் காவி உடை தரித்தல், திருநீற்றை உடம்பில் அப்புதல், இரு கைகளையும் ஒன்றாய் இணைத்தல், தன் சாமியிடம் கோரிக்கை வைத்தல். ஒன் றிரண்டு அல்ல; ஒரு நூறு கோரிக்கை. நேற்று இன்றல்ல; நீ பிறந்தது முதலாக! இந்தக் கோரிக்கையில் ஏதாவது ஒன்றே ஒன்று, வேண்டாம் அந்த ஒன்றில் அரை, அதுவும் வேண்டாம் அந்த அரையில் கால், அய்யோ! அதுவும் வேண் டாம். அந்த கால் அளவில் கடுகளவா வது உனக்கு நிறைவேறி இருக்கிறதா?

நிறைவேறவே இல்லை. நீ கோரிக்கை வைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின் றன? ஒருவருக்கு 20, மற்றவர்களுக்கு 30,50,70 ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். ஆனாலும் உங்களுக்குக் கோபம் வரவில்லையே? உங்களை இந்தப் பூமிக்கே அறிமுகம் செய்து வைத்த பெற்றோர்கள்மீது கோபம் வருகிறது. நான்கு நாளில் உதவவில்லை என்ப தற்காக நண்பர்கள்மீது கோபம் வருகிறது. ஆனால் பிறந்தது முதலே உங்களுக்கு உதவாதவர்மீது ஏன் இன்னும் கோபம் வரவில்லை. ஒரு வழிப் பாதையாக நீங்கள் கோரிக்கை வைப்பது மட்டும் நின்ற பாடில்லை.

சக மனிதர்கள் செய்யாத போது கோபம் வருகிறது. அதாவது அந்த நேரத்தில் அறிவு வேலை செய்கிறது, சிந்தனை வேலை செய்கிறது, உடம்பில் உணர்ச்சி இருக்கிறது. அதே நேரத்தில் கோரிக்கைகள் தொடர்ந்து 100 விழுக்காடும் தோற்றுப் போகிற கடவுளிடத்தில் கோபம் வருவதில்லை.

ஒரு மனிதன் ஒரு நேரத்தில் அறி வாளியாகவும், மற்றொரு நேரத்தில் முட்டாளாகவும் எப்படி இருக்க முடியும்? ஒரு மனிதனை அறிவாளி என்போம் அல்லது முட்டாள் என்போம். அப்படியின்றி இவர் ஒரு அறிவாளி அந்த நேரத்தில் முட்டாள் என்று எப்படி சொல்ல முடியும்?

சொல்ல முடியும்! இந்தியாவில் அப்படி சொல்ல முடியும். இந்து மதம் இருக்கிற வரை அப்படி சொல்ல முடியும். அதைப் பாதுகாக்கிற பார்ப்பன ஊடுருவிகளும், அதனூடே வந்த ஊடகங்களும் இருக்கிறவரை சொல்ல முடியும். சரி! எப்போது நாம் சொல்ல முடியும்! மேலே சொன்னதை ஒழித்து விட்டால் வெல்ல முடியும்!

வெல்வதா? வீழ்வதா? என்பதை முடிவு செய்வோம், வாருங்கள்!

_- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...பாம்பு பால் குடிக்காது

உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்ன வென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தன பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டன. அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத் தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது.

ஆகவே, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

திருட்டு

அவன்: கற்சிலையை (கடவுளை) பொற்(சிலை) பாதம்னு வருணித்து விளக்கியது தப்பாய் போச்சு...

இவன்: ஏன் என்னாச்சு...?

அவன்: அதன் காலை மட்டும் வெட்டி எடுத்துட்டு போயிட்டாங்க திருடன்க..
ஆ !? !? !?

- கோ. கலியபெருமாள்,

தமிழ் ஓவியா said...


நீங்கள் தனியாக இருந்தால்....


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து

மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந் திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர் வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம்.. இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!

- தகவல்: பெரியாரடியான்

தமிழ் ஓவியா said...


மோடி அம்பலமாகிறார்


இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக் கான அறிக்கையைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பி.ஜே.பி. இதுபற்றி பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளது.

பொது சிவில் சட்டம், ராமர் கோயில் ஜம்மு-காஷ்மீருக்கான தனி அந்தஸ்து இந்தக் கொள்கைகளில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளது.

மக்களிடம் கருத்தையும் கேட்டு விட்டு அதற்கு நிபந்தனைகளையும் வைப்பது எந்த ஊர் நியாயமோ!

பிஜேபி கூறியுள்ள இந்த மூன்று நிபந் தனைகளும் ஆர்.எஸ்.எஸின் அடிப்படை அஜண்டா! அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் குயுக்தியும் இதில் இருக்கிறது.

பிஜேபியின் லகான் ஆர்.எஸ்.எஸிடம் இருப்பதாகக் கூறுவது தவறு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன் னொரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸின் அடிப் படைக் கோட்பாடுகளில் சமரசம் இல்லை என்று சொல்லுவதன்மூலம் பிஜேபி தன் முகத்தில் பூசிக் கொண்டிருந்த வண்ணப் பொடியைக் கழுவி விட்டது. உண்மையான ஆர்.எஸ்.எஸ். முகம் பளிச்செனத் தெரிய வில்லையா?

தமிழ் ஓவியா said...

அனுகூல சத்ருவா?

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சங்கல்ப திவாரிப் போராட்டத்துக்கு அழைப்புக் கொடுத்தது.

உத்தரப்பிரதேசம் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் நேற்று தடையை மீறி ஊர்வலம் சென்றபோது 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பி.ஜே.பி. எம்.பி. யோகி ஆதித்ய நாத்தும் அடங்குவார். இதன்மூலம் ராமன் கோயில் கட்டுவதையும் தேர்தல் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துவிட்டது என்று கருதலாமா?

சரத் பவுர்ணமியை ஒட்டி 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் புனித நீராடிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தில் வி.எச்.பி. பேரணியைத் தொடங்குவதன் உள்நோக்கம் - கலவரத்தை உண்டாக்கு வதே!

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடம் - இப்பொழுதுள்ள நிலையிலேயே நீடிக்கப்பட வேண்டும். இதன் அருகே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில் - அந்த இடத்தை நோக்கிப் பேரணி என்பதெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் அடாவடித்தனத்தைத் தான் பச்சையாக வெளிப்படுத்தும்.

எந்த விதி முறைகளையும், தீர்ப்புகளையும் மதிக்காத இந்தக் கூட்டத்தின் கையில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டுமாம் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நாக்கில் தேன் தடவும் மோடி

மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களின் கனவுகளை நனவாக் குவோம் என்று நேற்று சென்னையில் பேசி இருக்கிறார்.

இதற்கு முன் நடைபெற்ற ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை முற்றாக நிராகரித்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் காலி.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்த நிலை யில் தமிழ்நாடு மட்டும் அமைதித் தென்றல் காற்று வாங்கிக் கொண்டு இருந்தது.

இதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு! இதில் தமிழ்நாட்டு மக்களின் எந்தக் கனவை நனவாக்கப் போகிறாராம் மோடி?

முதலில் குஜராத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கட்டும் நரேந்திர மோடி.

குஜராத்துதான் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற மோசடிப் பிரச்சாரம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுதெல்லாம் அந்தவகையில் பேசு வதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த நிலையில் வீண் சவடால்கள் எதற்கு?

தமிழ் ஓவியா said...


யார் கேட்பார்?


இந்து மதக் கடவுளான இலட் சுமிக்குப் பொதுவாக யானை வாகனம் இருக்கும். வங்காள தேசத்தில் சிட்டஹாஸ் எனும் ஊரில் உள்ள கோயிலில் இலட்சு மியின் வாகனம் ஆந்தையாம்.

இதுபற்றி எல்லாம் யார் என்ன கேட்க முடியும்? அவனவனுக்குத் தோன்றியதைக் கிறுக்கி வைக்க இந்து மதத்தில் தாராள அனுமதி உண்டே! யார் கேட்கப் போகி றார்கள். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என் றால்? அவாள் ஆதிக்கம் போகிறதே என்பதால் அந்த இடத்தில் மட்டும் நீதிமன்றம் சென்று விடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு கோயபல்சு மோடிமீது தாக்கு!

புதுடில்லி, அக். 19- சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொன் னால் அது உண்மையாகி விடும் என்ற ஹிட்லரின் தலைமை கொள்கை பரப்பாளர் ஜோசப் கோய பல்ஸ்சின் கொள்கையை அப்படியே கடைபிடிக் கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடில்லியில் நடை பெற்ற இளைஞர் காங் கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அக மது கூறியதாவது:-

நாட்டிலேயே முன் னேறிய மாநிலம் குஜராத் தான் என நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முன்னேறுவதில் நமக்கொன்றும் பிரச் சினை இல்லை.

அது காந்தி, வல்ல பாய் பட்டேல் போன்ற வர்களின் பூமி. அதனால் முன்னேறதான் செய்யும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை ஒப்பிடுகையில் குஜராத் மாநிலம் 12-ஆவது இடத் தில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளதே?

முன்னேற்றம் என்ற பெயரில் பா.ஜ.க. தொடர்ந்து பொய்யையே பரப்பி வருகிறது. பா.ஜ.க. வின் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதே சம் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் 25 மற் றும் 26 இடத்தில் உள்ள தாக அதே ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட் டுகிறது.

இதுதான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னேறியுள்ள கதை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ஆசாராம் பாபுவைக் காப்பாற்றும் மோடி

குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங் களை பாலியல் பலாத் காரம் செய்து விட்ட தாக அக்கா-தங்கை இருவர் புகார் அளித் தனர். அதன் அடிப் படையில் காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாராம் பாபுவை தங் களிடம் விசாரணைக் காக ஒப்படைக்க வேண் டும் என குஜராத் மாநில காவலர் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் காவலர் துணை ஆணையர் மனோஜ் நினாமா தலைமையி லான போலீசார் ஆசா ராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் காவல்துறையினர் காவ லில் வைத்து விசாரிக்க காந்திநகர் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அனு மதி அளித்தது.

ஆசாராம் பாபுவுக்கு நேற்று ஆண்மை பரி சோதனை செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோ தனை முடிவில் 72 வய தாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந் துள்ளது.

இந்நிலையில், குஜ ராத்தில் ஆசாராம் பாபு மீதான பாலியல் வன் முறை புகார் தொடர்பான வழக்கில் மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலை வர் அர்ஜுன் மோத் வாடியா, இது தொடர் பாக உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஆசாராம் பாபு மீது நில அபகரிப்பு, ஊழல், பாலியல் குற்றச்சாட்டு கள் ஆகியவை கூறப் பட்ட போதெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரை காப்பாற்றிக் கொண்டே வந்துள்ளது.

அவரை பற்றிய செய் திகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவ ருக்கு மேலும் மேலும் தவறுகள் செய்யும் துணிச்சல் வந்திருக்காது.

இவ்வாறு கூறிய அர்ஜுன் மோத்வாடியா நரேந்திர மோடியை புகழ்ந்து ஆசாராம் பாபு பேசிய டேப்பை ஒலிக்க செய்தார். திபேஷ் வகேலா மற்றும் அபிஷேக் வகேலா ஆகியோரின் மர்ம மர ணத்தின் போதும், சூரத் தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போதும் இந்த அரசு ஆசாராம் பாபு மீது எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை.

நரேந்திர மோடிக்கும் ஆசாராம் பாபுவுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் கண்காணிப் பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாமியார் ஆசாராமின் மகன் எங்கே? எங்கே?

பாலியல் குற்றச்சாட் டில் சிக்கி தலைமறை வாக உள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயை பிடிக்க, குஜராத் காவல் துறையினர் பிகாரில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் போலீஸர் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர் பாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப் பட்டு ராஜஸ்தான் மாநி லம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரத் சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாரா யண் சாயை காவலர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நாரா யண் சாயின் மெய்க்காவ லரான அரியாரி கிரா மத்தைச் சேர்ந்த கெசல் குமார் என்கிற ஹனு மான், காவலர் வருவ தைத் தெரிந்து தப்பி யோடி விட்டார்.

இந்நிலையில் நாரா யண் சாய் தப்பிச் செல்ல உதவி செய்ததாக அவ ரது உதவியாளரும், டில்லியில் உள்ள ஆசிர மத்தின் பொறுப்பாளரு மான தர்மேஷ் என்ப வரை தில்லி காவல்துறை யினருடன் இணைந்து குஜராத் காவலர் கைது செய்தனர்.

குஜராத்தை விட்டு வெளியேறிய நாராயண் சாய், டில்லி வந்ததாக வும், அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக வும், தகவல் தொடர்புக் காக அவர் 17 சிம் கார்டு களை பயன்படுத்தியுள்ள தாகவும் காவல்துறையி னர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாட்டையே கடனில் மூழ்கடித்து விடுவார்


புதுடில்லி, அக்.19-மோடி பிரதம ரானால், குஜராத்தை போலவே நாட் டையே கடனில் மூழ்கடித்து விடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் இணையதளத்தில், தான் பிரதமரா னால், குஜராத்தை போலவே இந்தி யாவையும் வளர்ச்சியடைய செய்வேன் என்று நரேந்திர மோடி கூறி வருகிறார். குஜராத் முதல்வராக மோடி பதவி யேற்ற பிறகு, நாட்டில் எங்கும் இல் லாத வகையில் அங்குள்ள மக்களின் தனிநபர் கடன் சுமை அதிகமாகி உள்ளது. இது உறுதியான தகவல். மோடியின் பிரதமர் குறிக்கோள் நிறை வேறினால், குஜராத்தை போலவே ஒட்டு மொத்த இந்தியாவையும் கடனில் மூழ்கடித்து விடுவார் என்று திக்விஜய் சிங் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதப் போதகரின் பாலியல் விளையாட்டு


சேலம், அக். 19-சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் சேலம் அஸ்தம்பட்டி சக்தி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்ப வம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித் தார். அவர்கள் நேற்று இரவு அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரில் எனது மகள் பள்ளி சென்ற போது அங்கு தங்கியுள்ள மதபோதகர் ஜெயசீலன் பாலியல் தொல்லை ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் இது குறித்து பள்ளிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

தமிழ் ஓவியா said...


அநீதிகள்அய்க்கோர்ட்டில் சாதியின் பேரால், இனத்தின் பேரால் விருப்பு வெறுப்புப் பேரால் தீர்ப்புகள் அநீதிகள் இழைக்கப் படுகின்றன.
(விடுதலை, 26.10.1960)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.க்கு, வி.எச்.பி. அனுகூலசத்ருவா?


உத்தரப்பிரதேசத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தினர், அயோத்தி நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டனர். அதற்கு உ.பி. மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் (11.9.2013) என்ன சொல்லுகிறார்?

கேள்வி: விசுவ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரையால் பா.ஜ.க.வுக்குப் பலமா, இல்லை பலகீனமா?

பதில்: விசுவ ஹிந்து பரிஷத் பா.ஜ.க.விற்கு அனுகூலசத்ரு. நல்லது செய்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, தர்ம சங்கடத்தை உண்டாக்குவதில் விசுவ ஹிந்து பரிஷத்தை மிஞ்ச முடியாது. அவர்களால் பா.ஜ.க.விற்கு புதிதாக ஹிந்து வாக்கு சேராது. மைனாரிட்டி வாக்கு குறையும் என்று பதில் எழுதுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? வி.எச்.பி.யை, பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்று கூறுகிறார் திரு சோ. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வி.எச்.பி. யாத்திரைக்கு உ.பி. அரசு அனுமதி மறுத்ததையும் அதனை மீறி யாத்திரை செய்ய முயன்ற வி.எச்.பி. தொண்டர்களை உ.பி. அரசு கைது செய்ததையும் கண்டித்துள்ளது பி.ஜே.பி. என்பதை மறந்து விடக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களுள் பிஜேபி எம்.பி.யும் ஒருவர்!

உ.பி., பி.ஜே.பி. அந்த யாத்திரையை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை; ஆனால் சோ எழுதுகிறார் வி.எச்.பி., பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்.

திருவாளர் சோவைப் பொறுத்த வரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரிக்கக் கூடியவர், இராமன் கோயில் அங்கு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்தான்.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையை திரு சோ ராமசாமி எப்படி எல்லாம் கண் மூடித்தனமாக எதிர்த்து விமர்சனம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்புக்குற்றவாளிப் பட்டியலில் வாஜ்பேயியையும், லிபர் ஹான் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. அடேயப்பா எவ்வளவு குதி குதித்தார்கள் இந்தப் பிஜேபியினரும், சங்பரிவார்களும்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் வாஜ்பேயி மட்டும் விதிவிலக்கா? அவர் மட்டும் அசல் பசு மாட்டு நெய்யில் பொரிக்கப்பட்டவரா?

நானாவதி ஆணையம், மோடிக்குச் சாதகமாக இருந்ததால் ஆணையமே கூறி விட்டது என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்து எழுதுகிறார் துக்ளக் ஆசிரியர்.

லிபர் ஹான் ஆணையம், அவாளைக் குற்றப்படுத்தினால் ஆணையத்தின்மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவார்கள்.

ராம ஜென்ம பூமி விடயத்தில் பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன என்பது உலகம் அறிந்த உண்மை! அதே நேரத்தில் அரசியல் லாப - நட்டம் கருதி அதனைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது அதைவிடப் பெரிய உண்மை.

பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி, அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற இதே விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் என்ன பேசினார்?

எங்களுக்குப் பெரும்பான்மை கிட்டினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவோம். நான் பிரதமர் என்பதைவிட சங்பரிவாரைச் சேர்ந்தவன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன் என்று பேசவில்லையா?

ஆனால் சோ ராமசாமி சொல்லுகிறார் வி.எச்.பி., என்பது பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்; இவர்களின் இரட்டை வேடத்துக்கு அளவே கிடையாது.

தமிழ் ஓவியா said...


எங்கும் பார்ப்பன ஆதிக்கமே!


கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாகச் சில தாலுகாக் களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற் குட்பட்ட எல்லாத் தாலுகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர்.

நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங் களையும், பார்ப்பனர்களே வெகுகால மாகக் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டை யாலேயே நம் நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை.

பார்ப்பனர், பார்ப்ப னரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின், பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக் கூடாது; பார்ப்பனரல்லாதார் களுக்கே கொ டுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்குச் சர்க்காரிலுங்கூட ஆதரவு காட்டி வந்திருப்ப தாகத் தெரிகிறது.

அப்படியிருக்க, நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தாபனங்களில் பார்ப்பன ரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தாபனங் களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல்லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு இலாயக் கில்லையென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

நமது ஜில்லாவில் அநேகப் பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பாஸ்செய்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும்போது, ஒரு ஸ்தானங்கூடப் பார்ப்பனரல் தாருக்குக் கொடுக்காமல் நான் கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்குப் பார்ப்பனரல்லாதார் மிகவும் வருந்த வேண்டி யிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி அநியாயம் செய்ய என்ன அவசிய மேற்பட்டதோ தெரியவில்லை, என்னவோ சில சிபாரிசுகள் என்ற சிறிய காரணம் தவிர, வேறு காரணம் சொல்ல முடியாதென்றே நினைக்கிறோம்.

உத்தியோக வேட்டையில் கைதேர்ந்த பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபாரிசு பிடிக்கத் தெரியாமற்போகாது. கேவலம் சிபாரிசுகளுக்குத் தாலுகாபோர்டு தலைவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங் களைப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப்பார்களென்பதை எண்ணும் போது வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

ஆனால், தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல்லாதாரின் சேமத்தில் அக்கறை யில்லாதவர்களல்லர். ஆனால் பார்ப்பன டாக்டர்கள் மேற்படி ஸ்தானத்தை அடையச் செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின் அபிப்பி ராயத்தையும், பார்ப்பனரல்லாதார் சேமத்தில் போர்டு தலைவர்களுக்குள்ள அக்கறையையும் பலி கொடுத்துவிட்டதானது, பார்ப்பனரல் லாதாரின் துர்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.

எப்படியோ அந்தந்த தாலுகா போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும்படிச் செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்ப னர்கள் அடித்துக் கொண்டு போனதை நினைக்கும்போது, நம்மவர்களுக்குக் கண்ணி ருந்தும் பார்க்க முடியவில்லை, காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச முடியவில்லை, மனமிருந்தும் அறியமுடிய வில்லை என்று சொல்வதைத் தவிர நாமொன் றும் சொல்லக் கூடவில்லை. இனி மேலாவது, போர்டு தலைவர்கள் இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 23.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரச்சாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டிப் பிரச்சாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியி ருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னையிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவதாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளாமலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம்.

மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


இனிச் செய்ய வேண்டிய வேலை


மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கி விட்டது.

ஆனால், இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரச்சாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும், உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக் கூடிய உற்சாகமென்றாவது, சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறோம்.

நமது மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் விழாதிருக்க வேண்டுமானாலும், நமது மக்களின் முன்னேற்றத்திற்கு அனுகூலமான மகாநாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானாலும், தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து வேலையை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தவிர, மகாநாட்டிற்கு ஒவ்வொரு ஜில்லா, தாலுகாவிலிருந்தும் தக்க பொறுப்பு வாய்ந்த பிரதிநிகிள் வந்து போயிருக்கிறார்களானதால் அவர்கள் தங்கள் தங்கள் ஜில்லாவிலும் தாலுகாவிலும் ஜில்லா, தாலுகா மகாநாடுகள் கூட்ட வேண்டும். அதை ஆதாரமாக வைத்தே ஜில்லா முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தச் சவுகரிய மாயிருக்கும்.

அந்தந்த இடங்களில் இப்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தார், இந்த மகாநாட்டு வேலையை எடுத்துக்கொண்டு ஆங்காங்குள்ள பெரியோர்களைப் பிடித்து மகாநாட்டை கூட்டுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும். திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, வட ஆற்காடு, சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களில் இப்போது அவசரமாய் ஜில்லா மகாநாடுகள் கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்போதே அந்தந்த ஜில்லாக்களில் இருக்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கக் கிளை ஸ்தாபனத் தலைவர்கள் இதை உடனே கவனிக்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். தேர்தல்களில் நிற்பதும், தேர்தல்களுக்குச் செலவு செய்வதும் தேர்தல்களின் போது ஊரூராய்ச் சென்று ஓட்டர்களை ஏமாற்றுவதுமே தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தார் வேலையானால் இந்தச் சங்கத்தைவிட காங்கிரஸே மேலானது என்று சொல்லுவோம்.

உண்மையிலேயே, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதானால் குறைந்தது இந்த மாதத்திலேயே இரண்டு மூன்று ஜில்லா மகாநாடுகளாவதுகூட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். சேலம், கோயமுத்தூர், திருச்சி ஆகிய மூன்று ஜில்லாக்காரர்களும் இந்த மாதத்தில் கூட்ட ஆட்சேபணை இருக்காது என்றே நினைக்கிறோம்.

மற்றபடி அந்தந்த தாலுகாக்காரர்களுக்கும் கூட்ட வசதி இல்லாமற்போகவில்லை. ஆதலால், இந்த மூன்று மாதத்திற்குள் இந்த வேலை முடிந்து, கதர், பார்ப்பன ஆதிக்கப் புரோகிதத்தை ஒழித்தல், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு இவைகளில் தக்க முன்னேற்றம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.

இதில் பார்ப்பனரல்லாத எவ்வித ராஜிய அபிப்பிராய பேதமுடையவர் களாயிருந்தாலும், இந்த மேற்கண்ட கொள்கைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய யாரையும் அக்கிராசனராக அழைப்பதில் ஒன்றும் குற்றமில்லை என்றே நினைக்கிறோம். வீண் செலவும், ஆடம்பரமும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும் ஞாபக மூட்டுகிறோம். மகாநாட்டுப் பிரதிநிதிகள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையே மதுரை மகாநாட்டில் நிறைவேறிய கதர் திட்டத்திற்கு மிகுதியும் துணைபோவதாகும்.

அன்றியும், கிராமங்களில் தொழிலுமற்றுச் சுயமரியாதையுமற்று இரண்டு நாளைக்கு ஒருவேளைக் கஞ்சிக்கும் வகையற்றுப் பட்டினி கிடந்து தவிக்கும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் பசியைத் தீர்த்து பட்டினிக்காக அவர்கள் இழக்க நேரிடும் கற்பையும், மனசாட்சியையும் காப்பாற்ற இது ஒரு ஒப்பற்ற சாதனமாகவும் இருக்கும்.

ஆதலால் கதரைப் பிரதிநிகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். தவிர, வரப் போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லாரும் கதரே உபயோகிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு, தலையங்கம் - 09.01.1927

தமிழ் ஓவியா said...


ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை, அக்.20-தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின் றனர். இதனை மீறி ரயில் களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம்.
ரயில்களில் பட்டாசு களை கொண்டு செல்வ தால் ஏற்படும் பிரச் சினைகள் குறித்து ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரங் கள் வழங்கியும், ஒலிப் பெருக்கி மூலமும் விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்வார்கள்.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. இதே போன்று பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை காவல் துறையினர் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
இந்த பட்டாசு சோத னைகளில் காவல் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட் டாசுகளைக் கொண்டு செல்லும்போது, அதனை காவலர் கண்டுபிடித்து விட்டால், இந்திய ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயி ரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

எனவே ரயில்களில் பயணம் செய்யும் பயணி கள், பட்டாசுகளை தங் களுடன் எடுத்துச் செல் லாமல் முன்னெச்சரிக் கையாக நடந்து கொள் வது அவர்களுக்கும் நல் லது, ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு பெரியார் உலகம்


திராவிடர் கழக வரலாற்றிலும், தமிழின வரலாற்றிலும் அக்டோபர் 20 (2013) மறக்க முடியாத மகத்தான பொன்னாள்.

இந்நாளில்தான் திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 16 - முக்கியத்துவம் வாய்ந்தவை - இன்றைய கால கட்டத்தில் நாடு எதிர்நோக்கக் கூடிய சவால்கள்பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளன - தீர்வுகளை நோக்கி நம் மக்களை மேலாக உந்தித் தள்ளக் கூடியவையாகும்.

மிக முக்கியமாக பொன்னிழைகளால் அடிக்கோடிட் டுத் தெரிவிக்க வேண்டியது சிறப்புத் தீர்மானமாகும்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்பதுதான் அந்தச் சிறப்புத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, மாநிலக் கழகப் பொறுப்பாளர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், மண்டலக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், பொதுக் குழு உறுப்பினர்களும், தோழர்களும் அடைந்த உணர்வும், உற்சாகமும், கரை புரண்டு ஓட அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்ற அந்தக் காட்சிதான் என்னே! என்னே!! என்றென்றும் பசுமையாக நம் நெஞ்சக் கண்ணாடியில் நிழலாகக் கூடிய அரிய காட்சியாகும். நமது கழகத் தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்தக் கருத்துரு - திட்டம் அவர்தம் சிந்தனையில் தந்தை பெரியார் பற்றியே சதா அசைபோட்டுக் கொண்டிருக்கும் விளைவின் விளைச்சல் ஆகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளில் (டிசம்பர் 2) முதற் கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான தொகையை வழங்குவது என்று சிறப்புத் தீர்மானம் கூறுகிறது.

வரலாற்றில் என்றும் நிலைக்கத் தக்க - நினைக்கத்தக்க பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்குத் தமிழர்கள் ஆற்றித் தீர வேண்டிய நன்றிக் கடனை வெற்றிகரமாகச் செய்து சாதித்துக் காட்டிட இப்பொதுக்குழு உறுதி கொள்கிறது! உறுதி கொள்கிறது!! என்ற சிறப்புத் தீர்மான வாசகம் என்றென்றும் பேசப்படக் கூடியது.

அந்த உறுதியை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியது சாதாரணமானதல்ல.

61 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு 15 சவரனுக்கான தொகையைத் திரட்டினால்கூட ஆயிரம் சவரன் என்பது எளிதான இலக்கே!

தமிழர் சமுதாயமே தந்தை பெரியார் அவர்களின் தனிப் பெருந் தொண்டின் கருணை மழையால் செழித்துக் குலுங்குகிறது என்றாலும் நேரடியாகப் பயன் பெற்ற வர்கள் ஓராயிரம் பேர்களாவது இருக்க மாட்டார்களா?

நம் தோழர்கள் பட்டியலிட்டு அவர்களை அடையாளங் காண வேண்டியதுதான் முக்கியம். கழகத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ நன்றி உணர்வு மிக்க பெரு மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். பட்டியல் தயார் செய்து விட்டால் முயற்சி திருவினை ஆக்கும் என்பதில் அய்யமில்லை.

அத்தகையவர்களின் பட்டியலை தயார் செய்ய முன்கூட்டியே சூட்டோடு சூடாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். மாநில தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒரு தோழர்கூட விடுபடாமல் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் 40 நாட்கள் இடைவெளி இருக்கிறதே என்று எண்ண வேண்டாம் - ஒரே வாரத்தில் இந்த இலக்கை எட்டும் வகையில் வீதியில் இறங்கினாலே போதும் - நாங்களே எதிர்பார்க்கவில்லை - எளிதாக இந்தப் பணி நிறைவேறி விட்டதே என்று வியப்புக்குறியாக மாறும் அளவுக்கு - பெரியாருக்குப் பேருருவச் சிலை என்ற தகவலை நம் தமிழர்கள் கேட்ட அளவிலேயே அவர்கள் மத்தியில் ஆர்வப் பெருக்கு கரை புரண்டு ஓடுவதை நாம் அறிய முடியும்!

கழகத் தோழர்களே! நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ களங்களைக் கண்டுள்ளோம், பிரச்சாரக் களங்கள் உண்டு, போராட்டக் களங்களுக்கு பஞ்சமே யில்லை.

இந்தக் களமோ வரலாற்றுக் களம் - வருங்கால சந்ததியினருக்கு ஓர் உலகத் தலைவரை - உயர் எண்ணங்கள் மலரும் சோலையை - புத்துலகம் பூக்க புரட்சிக் கருத்துக்களை வாரி வாரி வழங்கிச் சென்றுள்ள வரலாற்று நாயகராம் உலகத் தலைவர் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண்கலத்தால் சிலை செதுக்கி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் இந்தக் களம் - இன்பக் களம் - நம் வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைக்களம் - நன்றிக்களம் - இந்த வரலாற்றுச் சாதனையில் நமது பங்கும் உண்டு என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இறும்பூதெய்தும் இணையற்ற களம் இது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு


திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் 20.10.2013 ஞாயிறு காலை 11 மணிக்கு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். வண்ணமயில் திருமண மண்டபத்தில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார். திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கா.மு.தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

முதலாவதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த திண்டுக்கல் பொதுக் குழுவுக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற கழகச் செயல்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தந்தை பெரியார் கருத்துக்கள் பரவி வரும் தன்மையை விளக்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் (தீர்மானங்கள் நேற்று விடுதலையில் வெளி வந்து விட்டன).

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பெரியார் அருங்காட்சியகம், நூலகம் - குழந்தைகள் பூங்கா, உள்ளிட்ட பெரியார் உலகம் உருவாக்குவது தொடர்பான சிறப்புத் தீர்மானத்தினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்தார். பெரியார் உலகம் என்று கழகத் தலைவர் பெயர் சூட்டியுள்ளார்.

தமது குடும்பத்தின் சார்பில் ஒரு சவரனுக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கழகத் தலைவரிடம் துணைத் தலைவர் அளித்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி அத்தீர் மானத்தினை ஆதரித்து வரவேற்றனர்.

குறும்படம்

பெரியார் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டக் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றிய பிறகு நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை சந்தாக்களையும், 95 அடிஉயர முழு உருவப் பெரியார் வெண் கலச் சிலை அமைப்புக்கு நிதியையும் உற்சாகமாக வழங்கிய வண்ணமே இருந்தனர்.

மாவட்டக் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை நன்றி கூறிட, திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு பெருஞ் சிறப்புடன் நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)