Search This Blog

14.10.08

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிக்கையும், திராவிடர் கழகத்தின் பதிலும்!
ஆத்திரப்படாமல் சிந்திப்பாராக!


ஈழத் தமிழரைக் காப்பதற்காக தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ம.தி.மு.க. பங்கு கொள்ளாமல் புறக்கணித்தது குறித்து, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் உயர்திரு வைகோ அவர்கள் விடுத்துள்ள அறிக்கை இன்றைய ஏட்டில் வெளிவந்துள்ளது (தினத்தந்தி, பக்கம் 15).

மூன்று வகையானவை

1. டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப் பட்டபோது நான் உதவி செய்திருக்கிறேன்.

2. முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தை ம.தி.மு.க. புறக்கணிப்பது குறித்து விஷம் தோய்ந்த வார்த்தைகளை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வீசியுள்ளார்.

3. 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் ஈழத் தமிழரைப் பாதுகாக்க பெரியார் திடலில் பொதுக்கூட்டம் போட்டபோது, தி.மு.க. தலைவரோ, அக்கட்சியின் சார்பில் பிரதிநிதியோ யாரும் கலந்துகொள்ளவில்லை. அதற்காக வீரமணி விமர்சனம் செய்தது உண்டா?

- இந்த மூன்று தகவல்களையும் இணைத்துத் தம் கருத்துகளை மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

1. பெரியார் மய்யம் இடிப்பும் -
வைகோ அவர்களின் ஆதரவும்!


டில்லியில் பெரியார் மய்யம் சங்பரிவார் பின்னணியில் இடிக்கப்பட்டபோது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்வந்து உதவியதற்காக அன்றும் நன்றி கூறியிருக்கிறோம் - இன்றும் கூறுகிறோம் - நாளையும் கூறுவோம்!

நன்றியுள்ளவன்தான் மனிதன்; அது இல்லாதவன் புழு பூச்சிக்குச் சமமானவன் என்பது தந்தை பெரியார் கருத்து. எனவே, செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதில் முதல் இடத்தில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே இருக்கும்.

அந்தக் காரணத்துக்காக கருத்து மாறுபாடு வரவே கூடாது என்று வைகோ அவர்கள் கூறமாட்டார் என்று நம்புகிறோம்.

2. அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்து...

ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் - போராடுபவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர்; இந்த நிலையில் ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தம் கட்சியின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவது அடிப்படைக் கடமையும், அவசியமும் அல்லவா? ஜனநாயக அமைப்பின்கீழ் வாழ்ந்துகொண்டு இருக்கும் நாம் ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குச் சென்று கருத்துகளை எடுத்துக் கூறி, இந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறும் கடமையைச் செய்யாவிட்டால், உயிர் போன்ற ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆகாதா? - துரோகம் ஆகாதா? என்பதுதான் திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் வினாவாகும். அரசியலுக்கு அப்பாற்பட்டு திராவிடர் கழகம் இதனைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளதே.

கட்சி என்பது வேறு - அரசு என்பது வேறு; கட்சி அரசியலை மேடைகளில் வைத்துக்கொள்ளலாம். யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் எல்லோருக்குமானதுதான் ஆட்சி!

அத்தகைய நிலையில், அரசு கூட்டும் கூட்டத்தில் கலந்து தம் நிலையைக் கூறுவது குற்றமா?

ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறைகளைக் கண்டிக்கிறோம் - ம.தி.மு.க.வும் கண்டிக்கிறது. அதேநேரத்தில், பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் ஏன் நேரில் சந்தித்து மனுக்களைக் கொடுக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர்? அதே கண்ணோட்டம் தமிழ்நாட்டில் ஏன் இல்லாமல் போகிறது?

இதனைத்தான் தமிழர் தலைவர் - எதிலும் அரசியல் என்பது தேவையில்லாதது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், அமைப்புகளும், ஈழப் போராளிகளும் (விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அவர்களின் அறிக்கை) வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகக் கூறிக்கொள்ளும் திரு. வைகோ அவர்கள், இந்த மிக முக்கியமான காலகட்டத்தில், அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக் கணிப்பதன்மூலம், ஒரு முக்கிய காலகட்டத்தில் கடமை தவறும் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார் - அதன்மூலம் தனிமைப்படுத்தப்படுகிறார் என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமை தானே தவிர, அது விஷம் தோய்ந்த அறிக்கையோ, கருத்தோ ஆகாது.

அது விஷயம் தோய்ந்த கருத்தேயாகும். அது விஷம் என்று கருதுவார்களேயானால், சில நேரங்களில் அளவான விஷம்கூட நோய்க்கு மருந்தாகக் கூடியதுதான்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

ஈழத் தமிழர்ப் பிரச்சினை போலவே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி தி.மு.க. முழு கடையடைப்புக்கு அழைப்புக் கொடுத்தால், அதனை எதிர்த்தும் அறிக்கை விடும் அளவுக்கு வைகோ அவர்கள் செல்லவேண்டுமா?

சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று பச்சையாக அறிக்கை விடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் கருத்துப்பற்றி காதொடிந்த ஊசிமுனை அளவுக்குக்கூட மறுப்புக் கூற மறுக்கிறார்.

இந்த அரசியலைத்தான் கண்டிக்கிறார் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.

கூட்டணி அரசியலுக்காக பொடா சட்டத்துக்கே ஆதரவு தந்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் திரு. வைகோ அவர்கள், (அந்தப் பொடா சட்டம்தான் பிற்காலத்தில் அவரைக் காவு கொண்டது - அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாமூலம்!) ஈழத் தமிழர்களின் வாழ்வா - சாவா போராட்டத்தின்போது அரசியலைத் தூர வைத்துவிட்டு - அரசியல் பிறகு, தமிழர்களின் வாழ்வுரிமை, உயிர்ப் பிரச்சினைக்குத்தான் முதலிடம் என்று கூறி, அவருக்கே உரித்தான கம்பீரமான குரல் கொடுத்து, தோள் தூக்கி எழுந்திருப்பாரேயானால், அவரின் மதிப்பும், மரியாதையும் மலை அளவுக்கு உயருமே - அந்த வாய்ப்பைத் தவறவிடலாமா? என்பது தான் எங்களின் நியாயமான கேள்வி.

இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன் - நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் கலைஞர்தான் என்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக் கைதியாக வந்த நிலையில், பேட்டி கொடுத்தவர் (ஆனந்தவிகடன், 29.8.2003) வைகோ அவர்கள். அந்த நிலையில் வைத்துப் பார்த்தாலும், அவர் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவரான கலைஞர் அவர்கள் முதலமைச்சர் என்ற முறையில் கொடுத்த அழைப்பினை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

3. ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கலந்துகொள்ளாததுபற்றி வீரமணி விமர்சிக்கவில்லையே என்கிறார்.

திராவிடர் கழகம் கூட்டும் ஒரு கூட்டத்திற்கு தி.மு.க. கலந்து கொள்ளாததும், ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்துகொள்ள மறுப்பதும் ஒன்றல்ல.

சில பிரச்சினைகளை அரசுமூலம்தான் சாதிக்க முடியும்!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் எந்த ஆட்சி இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சினைக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலும் - அந்தத் தருணத்தில் ஆட்சிக்கு ஆதரவு நிலையா - எதிர்ப்பு நிலையா என்று கண்ணோட்டம் செலுத்தாமல், அக்கூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகத்தின் கருத்தினை, நிலைப்பாட்டினைப் பதிவு செய்யத் தவறியதில்லை.

அந்தத் தகுதியின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தினை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து வைத்துள்ளார்.

அதுவும் சகோதர் வைகோ என்று கூறி, அந்த உரிமையுடன் எடுத்துக் கூறியிருக்கிறார். இதில் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இல்லை.

வெறும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், அமைதியாகச் சிந்தித்தால் அவர் செய்யும் தவறு அவருக்கே புரியுமே!

---------------- கலி. பூங்குன்றன்,பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் 14.10.2008 "விடுதலை" யில் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை

2 comments:

குப்பன்.யாஹூ said...

வைகோ வை பற்றி பேசவோ அறிக்கை கொடுக்கவோ வீரமணி நாடற்கு எந்த உரிமையும் கிடையாது.

வரும் தேர்தலில் அதிமுக ஜெயிக்கும், அப்போது வீரமணி திரும்பவும் அம்மா காலில் விழாத்தான் போகிறார். வல்லம் ஊரில் சமூக நீதி காத வீராங்கனை விருது கொடுத்தவர் அல்லவா வீரமணி நாடார்.

அன்பன்
குப்பன்_யாஹூ

தமிழ் ஓவியா said...

அதென்ன வீரமணி நாடார். விளங்கவில்லை.

யாரும் யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யலாம். அந்த விமர்சனம் நேர்மையுடனும், சான்றுகளுடனும், நாகரிகமாக இருந்தால் போதும்