Search This Blog
24.10.08
இலங்கையின் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டு இந்திய அரசும் தமிழக அரசும் சும்மாவேயிருக்குமா?
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களையும் சுடுகிறது இலங்கை ராணுவம். பல மீனவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேசினோம்.
பீட்டர், லோயலன், சுவீசன், ஆரோக்யம் ஆகியோருடன் திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனும் சில மாதங்களுக்கு முன் கடலுக்குச் சென்றுள்ளனர். திடீரென அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அவர்களைக் கைது செய்துள்ளது. சுமார் இரண்டு மாதம் சிறைவாசத்திற்குப்பிறகு அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பீட்டர் நம்மிடம்
``நாங்க இந்திய எல்லையோரத்தில் படகுகளை நிறுத்தி வலைகளைப் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது மின்னல் வேகத்தில் வந்தது இலங்கை ராணுவப் படகு. அதிலிருந்த ராணுவத்தினர் திடீரென எங்களை நோக்கிச் சுட்டனர். நாங்கள் செய்வதறியாது கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினோம். அப்போது எங்களைச் சுற்றி வளைத்து அவர்களின் படகில் ஏற்றிக்கொண்டு, எங்கள் அனைவரின் கண்கைளயும் கட்டிவிட்டனர். படகு கொஞ்சதூரம் போயிருக்கும், எங்களை ஒவ்வொருவராகத் தூக்கி கடலில் போட்டனர். அப்போதுதான் நாங்கள் கரைக்கு வந்திருப்பது புரிந்தது. அதாவது தலைமன்னார் பகுதியில் எங்களைத் தூக்கிப் போட்டிருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கே எங்கள் கைகால்களின் கட்டை அவிழ்த்துவிட்டனர். ஆனால் கண்கட்டை அவிழ்த்துவிடவில்லை. அந்த நிலையிலேயே ஐந்து நாட்கள் வைத்திருந்தனர். சாப்பாடு கொடுக்கும்போது கூட கண்களை அவிழ்த்துவிடவில்லை. பேசினால் கன்னத்தில் ஓங்கி அறைவார்கள்.
செவிப்பறை கிழிந்துவிடும்'' என்று சொல்லும் பீட்டருக்கு இப்போது ஒரு காது கேட்காது. அருகில் இருந்த லோயலன் ``எங்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்று அடித்து நொறுக்குவார்கள். துப்பாக்கியைத் திருப்பி கட்டையால் இடித்ததில் என் உதடுகள் கிழிந்து பற்கள் ஆடிவிட்டன. ஐந்து நாட்கள் அடித்து நொறுக்கினார்கள். திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனை எட்டி நெஞ்சுப் பகுதியில் உதைக்க, அவன் ரத்தம் கக்கினான். இது எதைப்பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல் அவர்களின் உயர்அதிகாரிகள் எங்களிடம் விடுதலைப்புலிகளைப் பற்றி விசாரித்தார்கள். எங்களுக்கு எந்தப் புலிகளையும் தெரியாது என்று கூறினோம். அதைவிட கொடுமை என்னவென்றால், எங்களுக்கு சிங்களம் தெரியாது என்பதற்காக எங்களை அடித்து விசாரிக்க சில தமிழர்களை நியமித்திருக்கிறார்கள். தமிழர்களை தமிழர்கள் மூலமே தண்டிக்கும் வித்தையைச் செய்து வருகிறது சிங்கள அரசு'' என்று கூறுகிறார்கள் இந்த மீனவர்கள்.
அடுத்து ஓலை குடாவைச் சேர்ந்த டேவிட் என்ற மீனவர் கடலில் மீன் பிடித்ததற்காக இலங்கைச் சிறையில் ஒரு வருடத்துக்கும் மேலாக இருந்து சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.
``அந்தச் சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிங்களர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சட்டம். தமிழர்களுக்கு ஒரு சட்டம். அவர்களுக்கு வசதிகள் அதிகம். தமிழர்களுக்கு கொடுமைகள் அதிகம்.
சிறையில் அனைவருக்கும் ஒரே உணவுதான் என்றாலும் சிங்களக் கைதிகளுக்கு ருசியான சிறப்பு உணவு தரப்படும். தமிழர்களுக்கு நொந்துபோன சோறும் கெட்டுப்போன கீரையும்தான் சாப்பிடக் கொடுக்கின்றனர். அந்தக் கீரையில் புழுவும், பூச்சிகளும்தான் இருக்கும். அதுவும் இல்லையென்றால் பட்டினியால் சாகவேண்டியதுதான் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு அதைச் சாப்பிடுவோம். அந்த உணவைச் சாப்பிட்டு எனக்கு உடல் முழுக்க சிரங்கு ஏற்பட்டுவிட்டது. அதற்கு வைத்தியம் செய்யக்கூட வழியில்லை. அதேபோல் நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்ற விவரம்கூட தெரிவிக்கப்படாததால் எனது அப்பா சந்திராய்யப்பன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி இறந்தும் போய்விட்டார். ஒரு வருடம் கழித்து என்னை விடுதலை செய்து இலங்கையில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு மாதம் வைத்திருந்தனர்.
அதன்பிறகே இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். எனது படகு, வலைகள் மற்றும் எல்லாப் பொருட்களையும் திருப்பித் தரவில்லை. அதில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் நஷ்டம். அந்தக் கடனிலிருந்து எங்களால் இன்னும் மீளமுடியவில்லை. இலங்கைச் சிறையில் சித்திரவதை அனுபவித்த ஒரு வருட காலத்தை இப்போது நினைத்தாலும் தனிமையில் உட்கார்ந்து அழுவேன்.'' என்று கூறினார் டேவிட்.
இந்த அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டு இந்திய அரசும் தமிழக அரசும் சும்மாவேயிருக்குமா? என்பதுதான் இன்று உலகத் தமிழர்களின் முக்கிய கேள்வி.
----------------நன்றி: "குமுதம்" 29-10-2008
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment