Search This Blog

20.10.08

மத, சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிந்து விடுமா?

நாங்கள் கூறுவதெல்லாம், உன்னை எந்தக் கடவுள், எந்த மதம், எந்த சாஸ்திரம், எந்த புராணம் இழி ஜாதியாகப் படைத்துக் காட்டி இருக்கிறதோ, அவற்றை வேண்டாம் என்று தள்ளிவிடு; அவை நம்முடையதல்ல என்று வெறுத்துவிடு என்கிறோம். ஒவ்வொருவரும் இதைத்தான் நினைக்க வேண்டும். அதாவது எனக்கும் ஜாதிக்கும் மதத்துக்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை மட்டும் உண்மையாக இதயப் பூர்வமாக சொன்னால் போதும். ஜாதியை உண்டாக்காத மதம் எத்தனையோ இருக்கின்றன.ஜாதியை உண்டாக்காத கடவுள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒன்றை வேண்டுமானால் எடுத்துக் கொள். இல்லாவிட்டால் தைரியசாலியாக இருப்பதானால், ஒன்றும் வேண்டாம் என்று சொல்வது நல்லது.

எனக்கு முன்னால் பேசிய சில தோழர்கள் சொன்னார்கள். ஏதோ கல்யாணம் (கலப்பு மணம்) செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து போகும் என்று. கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. அதையும் ஒரு ஜாதியாக ஆக்கிவிடுவார்கள். எப்படி என்றால் கலப்பு மண ஜாதி என்றுதான் கடைசிக்குச் சொல்ல முடியுமே தவிர, ஜாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும் சம ஜாதியில்தான் கலப்பு மணம் நடைபெறும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய ஜாதிகளில் ;மேல்' ஜாதியான் லேசில் மணம் செய்ய மாட்டான்.

நம் நாட்டிலே எத்தனையோ ‘தாசி'கள் இருக்கிறார்கள்; நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம். இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே -அந்த ஜாதிக்குள் கூட ஜாதி போவதில்லையே! அதையும் பல ஜாதிகளாக ஆக்குகிறோமே. அவர்களும் மேல்ஜாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்! இதனால் கலப்பு மணத்தால் ஜாதி போய்விட்டதென்று கூற முடிகிறதா?

இப்போது நானும் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறேன். தோழர் சாமி சிதம்பரனார், தோழர் குருசாமி, தோழர்கள் எஸ். ராமநாதன் முதலியவர்களும் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறோம். அதனால் ஜாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், எங்களுக்குக் குழந்தைகள் இருந்து அவர்களுக்குக் கலியாணம் ஆக வேண்டுமானால், அப்போது தகராறுதான்.

‘கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு ஜாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுவார்கள். அன்றியும் எங்களுக்கு மதம், கடவுள், ஜாதி என்ற மூன்றைப் பற்றியும் கவலை இல்லை. அதனால்தான் மறுஜாதி மணம் செய்து கொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது. நாட்டில் அரசாங்கம் வந்த பிறகு ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் செய்யலாம். மத, சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.

திருவிழா கொண்டாடுவதும், நல்ல நாள், கெட்ட நாள் -பண்டிகை கொண்டாடுவதும் எதற்காக? மதத்தினால் ஏற்பட்ட ஜாதியை, புராணத்தினால் புகுத்தப்பட்ட ஜாதியை, ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வருவதற்காக தனித்தனியாகப் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறதே தவிர, அதனால் எந்த விதமான பலனும் இருப்பதாகக் கூற முடியுமா?

மதுரை, ராமேஸ்வரம், பழனி, திருப்பதி ஆகிய இடங்களில் பெரும் பண்டிகைகள் நடக்கின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன? பத்து வருடத்திற்கு முன் அந்தக் கல்லைக் கழுவிய குடும்பமே இன்னும் கழுவுகிறது. இதுவரை ஒரு மாற்றமும் இல்லை என்றாலும் கூட, அங்கே போய் வருவதன் நோக்கம் என்ன? அங்கே போய் வருவதன் மூலம் மதப் பிரச்சாரம்தான் நடக்கிறதே தவிர வேறு என்ன? எனவே, இந்த மாதிரி சூரசம்ஹாரம், ராமன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, கந்த சஷ்டி அது இது என்று வருகிற அனேக பண்டிகைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்.


அதோடு பெண்களும் இம்முயற்சியில் முன் வருவார்களானால், கண்டிப்பாக ஜாதி ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், ஜாதியைப் பற்றி கெட்ட நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்து கொள்கின்றன. எனவே, பெண்கள் அந்த நம்பிக்கைகளை எல்லாம் அடியோடு விட்டுவிட வேண்டும். இந்த மாதிரி நடக்கும் மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு அல்லாமல், தங்கள் புருஷனையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும். பல தோழர்கள் சொன்ன மாதிரி, கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிடர் கழகமும் தங்கள் தங்களுடைய வேலை முறைகளை கலந்து வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது என்று ஆரம்பித்தால், ஒரு வருட காலத்திலே நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்து விடும்.

----------------------- 30.1.1952 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை

----------நன்றி: "கீற்று" இணையதளம்

0 comments: