Search This Blog
20.10.08
1939 இல் இலங்கைப் பிரச்சினை பற்றி நிறைவேற்றிய நீதிக் கட்சித் தீர்மானம்: ஆதாரங்களுடன் கலைஞர் விளக்கம்
இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்று நேற்றல்ல; நீண்ட காலமாகவே இருந்து வருவது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 1939 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டி முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கமாக முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.
1956 ஆம் ஆண்டிலேயே இலங்கைத் தமிழர்கள் உரிமை, மொழி, கலாச்சாரம் இவற்றைப் பாதுகாத்திடவும் - சிங்கள மொழியினர் ஆதிக்கம் அகன்றி டவும் அங்குள்ள தமிழர் கிளந் தெழுந்தனர் என்பதைக் குறிப்பிடவும்; இன்று நேற்றல்ல - இலங்கைத் தமிழர் பிரச்சினை 1956 முதற்கொண்டு உருவான தாகும் என்று நான் சுட்டிக் காட்டியதற்கு ஆதாரமாக 1956 இல் சிதம்பரம் தி.மு.க. பொதுக் குழுவிலேயே நான் முன் மொழிந்து - திரு பொன்னம்பலனார் வழி மொழிந்த தீர்மானத்தைச் சான்றாகக் கூறி யிருந்தேன்.
அதைப்படித்து விட்டு சிலர் 1956 ஆம் ஆண்டிலிருந்து - இருந்து வருகிற இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி, இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் என்று அரிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்கள். இந்தியாவில்; தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும் - மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாது என்றும் பொய் கூறி - அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு; நாம் நமது இரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.
இலங்கைப் பிரச்சினை - அங்கே தமிழ் மொழியையும் - தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை - அதனை எதிர்த்து முழங்கிய பிரச்சினை - இவையனைத் தும் 1956 இல் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்.
ஆனால்; இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்தப் பிரச்சினை என்பதற்கு; இரண்டு நாளைக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் என்னிடம் அளித்த பழைய விடுதலை ஏடு சான்றாகத் திகழ்கிறது. 1939 - இல் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழும் தமிழர் பற்றி பண்டித நேரு குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டியிருந்தேன் அல்லவா? அதே ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுவில் (10.8.1939) ஈரோடு நகரில் தந்தை பெரியாரும், அவர் தலைமை யில் குமாரராஜா முத்தையா, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டி யன், சி.என். அண்ணாதுரை (அண்ணா), என்.ஆர். சாமியப்ப முதலியார், கி.ஆ.பெ. விசுவநாதம், டி.ஏ.வி. நாதன், சென்னை, பி.பாலசுப்பிர மணியம், சென்னை, எஸ். நடேச முதலியார், ஏ.கே. தங்க வேலு முதலியார் காஞ்சி, பட்டுக் கோட்டை அழகிரி, என்.வி.நட ராசன், சென்னை, என். ஜீவரத் தினம், சென்னை, டி. சண்முகம் பிள்ளை, திருவொற்றியூர், சி.டி. நாயகம், சென்னை, எம்.ஆர். திருமலைசாமி, திருச்சி, டி.பி. வேதாசலம், டாக்டர் தர்மாம்பாள் சென்னை, விவி.ராம சாமி, விருதுநகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவேற்றிய முதல் தீர்மானம் -
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்தக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆம். 1939 ஆம் ஆண்டு பெரியார், அண்ணா, அழகிரிசாமி, கி.ஆ.பெ., பன்னீர்செல்வம் போன்ற பெரிய தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமே - 17 ஆண்டுக் காலத்திற்குப் பிறகும் செயல் முறைக்கு வர முடியாமல் - இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களையமுடியாமல் போனதென்றால் - அது பற்றி 1956 லும் ஒரு தீர்மானம் தி.மு. கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால் - மொத்தத்தில் தமிழர் தலைவர்கள் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு - சிந்திய ரத்தம் - கொடுத்த உயிர் - பறிபோன உடைமை - இவையெதுவும் போதவில்லை என்பது தானே பொருள்?
அதனால்தானே இப்போது மிச்சமிருக்கிற தமிழ் இனத்தின் பிஞ்சுகள், அரும்புகள், உள்ளிட்ட மாந்தரையாவது மீட்பதற்கு வழி காண - நம்மிடையே ஏற்பட்ட துன்ப துயரங்களையும் - அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு ஓரணியில் திரண்டு இந்திய அரசிடம் கேட்கும் உதவியையாவது ஒற்றுமையுடன் கேட்போம் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள் வைத்தோம். நாங்கள் நிறைவேற்றிய தீர் மானத்தை 17 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லையே என்று ஏங்கி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சியினர்) அந்தத் தீர்மானத்தை திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாட விட்டுவிடவில்லை. எனவே; அந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக 1956 இல் நாம் நிறை வேற்றிய தீர்மானத்தை செயல் படுத்த முனைவதே, நாம், தமிழ்ப் பால் அருந்தியவர்கள் என்பதை தரணிக்கு உணர்த்தும் செயலாக இருக்க முடியும்.
-------------------நன்றி: "விடுதலை" 20-10-2008
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment