Search This Blog

26.10.08

பற்றி எரிகிறதே ஈழம்
இலங்கையில் எம் இனம் அழிந்து கொண்டிருப்பதைத் தடுக்க குரல்
கொடுத்தால் இனத் துரோகிகள் - நம்மை
குறுகிய மனப்பான்மையினர் என விமர்சிப்பதா?
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுப்பிய வினா


சென்னை, அக்.23- இலங்கையிலே ஈழத்திலே தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக நாம் போர்க் குரல் கொடுத்தால் இந்தப் பிரச்சினையில் என்றைக்குமே இன எதிரிகளாக இருப்பவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று இரக்கமின்றி விமர்சிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

பெரியார் திடலிலிருந்து பிரகடனம் புறப்பட்டால்


தமிழர்கள் உள்ளத்தில் ஒருவரே என்பதை உலகத்தார்க்கு பிரகடனப்படுத்தவேண்டிய நேரத்தில் பெரியார் திடலில் அந்தப் பிரகடனம் புறப்பட்டால்தான் எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரும். அதுவெற்றி வாகை சூடும் (கைதட்டல்) என்ற அளவிலே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்திலே என்னைப் போன்றவர்கள் அதிகம் பேசுவதற்கு அவசியம் இல்லையென்று நான் கருதுகின்றேன். காரணம் இங்கே வந்திருக்கின்ற நீங்கள் அத்துணைப்பேரும் உணர்ச்சிப் பூர்வமாக உணர்வுகளை தேக்கி வைத்திருப்பவர்களாக நாம் அனைவரும் ஆகியிருக்கின்றோம். தொடக்கத்திலே ஈழத்திலே எப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெறுகின்றன என்ற குறுந்தகடு காட்சி நம் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கியிருக்கிறது.

முதல்வரின் மயிலை - மாங்கொல்லை உரை

அதைப் பார்த்து மனம் உருகாதார் மனிதர்களாக இருக்க முடியாது. இலங்கையில் சிங்களம் கோலோச்சிக் கொண்டிருக் கின்றது. கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தக் காட்சியைக் கண்ணுற்று அதற்குப் பிறகு தமிழர்களின் உலகப் பெரும் பாதுகாவலராகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் களுடைய மயிலை மாங்கொல்லையில் ஆற்றிய எழுச்சி யுரையையும் நாம் கேட்ட பிற்பாடு, இவைகளை எல்லாம் தாண்டி இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன. அரசு சார்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் முடிவுகள் அதற்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகள் இவைகளைப் பற்றி அருமைச் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உணர்ச்சி மிக்க எழுச்சியுரையை முன்னாலே ஆற் றினார். அதைத் தொடர்ந்து ஒரு சில கருத்துகளைச் சொன்னாலே போதும் என்று கருதுகின்றேன்.

சுப. வீரபாண்டியன் சொன்னதை வழிமொழிகின்றேன்

சுப. வீரபாண்டியன் அவர்கள் எதையெல்லாம் சொன்னார் களோ, அதை முன்மொழிவாகக் கொண்டு அதை அப்படியே வழி மொழிவதற்காகத்தான் முன்னாலே நான் நிற்கிறேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன். அதைவிடத் தெளிவு வேறு தேவையில்லை.
இன்னும் சிலபேர் இங்கு வம்பு தும்புகளுக்காகச் செய் கிறார்கள். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமலேயே ஒரே வகையான கருத்தைத்தான் செய்வது வழக்கம். காரணம் இரண்டும், இரண்டும் நான்கு என்பதை யார் கூட்டினாலும் சரியாகக் கூட்டினால் நான்காகத்தான் விடை கிடைக்குமே தவிர, வேறு விடை வருவதற்கு வழியே கிடையாது.

தமிழர்களின் எதிரிகளை அடையாளம் காண வேண்டும்

அதுபோல இன்றைக்குத் தமிழர்களுடைய எதிரிகளை நீங்கள் அடையாளம் காணவேண்டும். தமிழர்களுடைய எதிரிகள் அங்கேயும் இருக்கிறார்கள். இங்கேயும் இருக்கிறார்கள். இதை நினைவூட்டுவதுதான் எங்களுடைய பணியாக இருக்கவேண்டும்.

முதலிலே ஒரு யுத்தம் நடைபெறுகிற நேரத்திலே எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? அதை முதலிலே தெளிவாகத் தீர்மானித் துக் கொண்டால்தான் எதிரிகளை நாம் தவறாக நண்பர்கள் என்று கருதுவதோ நண்பர்களை எதிரிகள் என்று தவறாகக் கருதுவதோ கூடாது.
சிங்களவர்களின் கொடுமை - உச்சக்கட்டத்தில்
அந்த வகையிலே இன்றைக்கு அங்கே சிங்களவர்கள் கொடுமையினுடைய உச்சத்திற்குச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் ஆணவத்தினுடைய உச்சாணிக் கொம்பிலே இருந்து ஆடுகிறார்கள் - முழக்கமிடுகிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் முழக்கங்கள் இங்கே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்

தமிழர்கள் எல்லாம் எழுச்சிபெற்றுவிட்டார்கள். எல்லோரும் உள்ளத்தால் ஒருவராக ஆகக் கூடிய உணர்வைப் பெற்றுவிட் டார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலை கிடையாது என்று யார் யாரெல்லாம் அட்சியமாக ஏடுகளிலே எழுதினார் களோ, மேடைகளிலே பேசினார்களோ, அந்த சிலர் அவர்கள் மீண்டும் இப்பொழுது தங்களுடைய விஷம் தோய்ந்த பேனாக் களிலே அதை மறைத்து எழுத வேண்டிய ஒரு கட்டாயத்திற்கும் ஆளாகியிருக்கின்றார்கள்.

தமிழர்களின் உணர்வு எரிமலையாய்

ஆனால், அவர்கள் என்ன நினைத்தாலும் உணர்ச்சி பூர்வ மாகத் தமிழர்களுடைய உணர்வு என்பது எரிமலை போல பொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் காட்டப் போகிறோம் - மனிதச் சங்கிலியின் பொழுது.

முதல்வர் சொன்னதுபோல சங்கற்பச் சங்கிலி

மனித சங்கிலி என்பதிருக்கிறதே அது சாதாரணமாக இருக் காது. நம்முடைய முதல்வர் அவர்கள் சங்கற்பச் சங்கிலி என்று சொன்னார்கள். அப்படி கை கோர்த்துக் கொண்டிருப்பதற்கு பொருள் என்னவென்று சொன்னால் எங்களிடையே ஜாதி இல்லை, மதம் இல்லை, ஏன் கட்சி வேற்றுமைகள் இல்லை (கைதட்டல்).

உலகுக்குப் பிரகடனப்படுத்த

தமிழர்கள் தமிழர்களாகத்தான் இருக்கின்றோம் என்று உலகுக்குப் பிரகடனப்படுத்த ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் இது வரையிலே என்ன நிலையிலே இருந்தார்கள் என்பதை மாற்றி அவர்களுக்கு இங்கே இருக்கின்ற தமிழர்கள் தாய் மண்ணிலே இருக்கின்ற தமிழர்கள் உணர்ச்சிப் பூர்வமான மக்களாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். விதைகளாகவே இருப்பதில்லை

காலமெல்லாம் விதைக்கப்பட்ட விதைகள் விதைகளாகவே எப்பொழுதும் இருப்பதில்லை. அது முளையாகக் கிளம்பி செடியாக வளர்ந்து அது பூத்து காய்த்து கனிந்திருக்கக் கூடிய காலகட்டத்தை நாம் விரைவிலே பார்க்கப்போகிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் மனிதச் சங்கிலி நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நிலைகளிலே அழுத்தம் தரக்கூடிய நிலை யிலே நாம் அனைவரும் சேர்ந்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே தெளிவாக இருக்கின்றோம்.

கலைஞர் பெருந்தன்மையோடு சொன்னார்

இந்த நேரத்திலே நம் இனத்தவர்கள் யார்? நம் மனத்தவர்கள் யார்? புரிந்துகொள்ள வேண்டும். நாம் பிரித்துக்காட்டுவதைவிட அவர்களே பிரித்து கோடு போட்டிருக்கின்றார்கள்.
அதற்காக நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நம்மிடையே அந்தக் குழப்பம் வரவேண்டிய அவசியமில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இது ஏதோ அரசியலுக்காகத் துவக்கப்பட்டது அல்ல.

யாரையும் சங்கடப்படுத்தக்கூடாது

அதைத்தான் கலைஞர் அவர்கள் மிகுந்த பெருந்தன்மையோடு சொன்னார். அவர்கள் தந்தை பெரியாரின் ஈரோட்டு குருகுலத் திலே சரியாகப் படித்த காரணத்தாலே அந்த இன உணர்வி னுடைய உச்சக்கட்டத்திற்குச் சென்று அரசு கூட்டிய கூட்டத்தி லேயே இங்கே சகோதரர் சுப. வீரபாண்டியன் சுட்டிக்காட்டி யதைப்போல, யாரையும் சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக முதல்வர் கலைஞர் அவர்கள் கூட பழியைத் தன்மீது போட்டுக் கொண்டார்கள். தான் பொறுப்பேற்றுக் கொண்டு யாரையும் நீங்கள் பிரித்துப் பார்க்காதீர்கள். இந்தப் பிரச்சினையிலே மற்றவர்களை எல்லாம் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

கோடுபோட வேண்டிய அவசியமில்லை

வந்தவர்கள் வராதவர்கள் என்று ஒரு கோடு போடவேண்டிய அவசியமில்லை என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதைப் போல், நீங்கள் ஏன்அவ்வளவு பெருந்தன்மைக்கு ஆளாகிறீர்கள் என்று அவர்கள் கேட்பதைப்போல கொச்சைப் படுத்தக் கூடிய அளவுக்குப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே தெளிவடைய வேண்டிய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

1956-லே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று கலைஞர் அவர்கள் எடுத்துச் சொல்லி முரசொலியில் எழுதி யிருக்கின்றார்கள். அதை கலைஞர் அவர்கள் விளக்கிய நேரத் திலே அப்பொழுதிருந்தா இந்தப் பிரச்சினை? அப்பொழுதைய பிரச்சினையை இப்பொழுது ஏன் சொல்லுகின்றார்கள் என்று கேட்பவர்களும் உண்டு. நேற்றுகூட கலைஞர் அவர்கள் - முரசொலியில் எழுதியிருக்கின்றார்கள். மற்ற ஏடுகளிலும் வந்திருக்கிறது. என்னுடைய கையிலே 11-8-1939 -லே வந்த விடுதலை நாளேடு - ஈரோட்டிலே இருந்து வெளிவந்த நாளேடு.
பெரியார் மாளிகையில் நடந்த முக்கிய கூட்டம் அந்த நாளேட்டின் விலை அன்றைக்குக் காலணா விலை. நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். 1939-ல் வெளிவந்த விடுதலை நாளேட்டில் முதல் பக்கத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடந்தது. முக்கியமான முடிவுகள் - நமது நிருபர் என்று வந்த அந்த செய்தியில், நான் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அதை அனுப்பியவுடனே அதை அவர்கள் பயன் படுத்தி அவர் எழுதிய கடிதத்திலே அறிக்கையிலே அவர்கள் தெளிவாக எழுதியிருக்கின்றார்கள்.

அப்பொழுது அது திராவிடர் கழகமாக ஆகவில்லை. ஜஸ்டிஸ் கட்சி அதனுடைய அதிகாரப் பூர்வமான பெயர். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதுதான்.

நீதிக்கட்சி என்று மற்றவர்களாலே அழைக்கப்பட்ட அந்தக் கூட்டத்திலே தெளிவாக ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்கள்.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார்

மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை மாகாண நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமை வகித்தார் என்று அதிலே செய்தி வெளியிடப்பட்டு, முக்கியமான சில தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்திலே விஜயம் செய்த நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்கள் என்று போட்டிருக்கின் றார்கள். அந்தக் காலத்திலே அப்படித்தான் தமிழ் இருந்தது.

விஜயம் செய்தவர்கள் யார்? யார்?

விஜயம் செய்த நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்கள் என்று ஒரு நீண்ட பெயர். பெரியார் ஈ.வெ. ராமசாமி, ஈரோடு குமாராஜா முத்தையா செட்டியார், சென்னை, சர் ஏ.டி. பன்னீர்செல்வம், செல்வபுரம், தோழர் டபிள்யூபி.ஏ. சவுந்திரபாண்டியன், பட்டி வீரன்பட்டி, ராவ்பகதூர், என்.ஆர். சாமியப்பா முதலியார், நெடும்பலம் ஏ. துரைசாமி முதலியார்- சென்னை (இவர் ராமசாமி முதலியாருடைய அண்ணார்). அது பலபேருக்குத் தெரியாது. கே.ஏ.பி. விசுவநாதம் - திருச்சி, டி.ஏ.வி. நாதன், சென்னை, பி. பாலசுப்பிரமணியம் (சண்டே அப்சர்வர் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்). எஸ். நடேச முதலியார் - சென்னை, ஏ.கே. தங்கவேலு முதலியார் - காஞ்சி, சி.ஜி. நெட்டோ - சேலம், கே.வி. அழகிரிசாமி - பட்டுக்கோட்டை, பார்த்தசாரதி நாயுடு - திருவாரூர், கோவை டாக்டர் நடேசன், கிருஷ்ணசாமி முதலியார், உதகை, முருகேசன் -சென்னை, என்.வி. நடராஜன் - சென்னை, என் ஜீவரத்தினம் - சென்னை, ஜி. சாமிநாயுடு, திருப்பத்தூர், டி.எஸ். நடராஜப்பிள்ளை, சென்னை, அதற்குக் கீழே சி.என் அண்ணாதுரை (அண்ணா அவர்கள் இயக்கத்திலே சேர்ந்து, அங்கே ஒரு பேச்சாளராக இருந்தபொழுது - அந்த வரிசையிலே வருகின்றபொழுது வருகிறார்). டி.எம். சண்முகம் பிள்ளை, திருவொற்றியூர், சி.டி. நாயகம் - சென்னை, எம்.ஆர். திருமலை சாமி, நகர தூதன் ஆசிரியர் - திருச்சி டி.பி. வேதாச்சலம், டாக்டர் தர்மாம்பாள் - சென்னை, முத்துலிங்க ரெட்டியார், சிக்கய்யா நாயக்கர் - ஈரோடு வி.வி. ராமசாமி - விருதுநகர், ஏ. பொன்னம் பலனார், பூவாளூர், ராவ்சாகிய அய். குமராசாமிப் பிள்ளை - தஞ் சாவூர் இவர்கள் எல்லாம் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக கலந்துகொண்டார்கள்

ஈழப் பிரச்சினை 1939-லேயே ஏற்பட்டது

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி. - ஏனென்றால் வரலாற்றினுடைய பாதையை பின்னோக்கி பார்க்கவேண்டும். ஈழப் பிரச்சினை என்பது . இன்று, நேற்று தொடங்கிய பிரச்சினை அல்ல. மனிதச் சங்கிலிக்காக கைகோர்க்கப் போகின்றோமே, அந்தப் பிரச்சினையினுடைய ஆழம் - அதனுடைய வேர் எதிலிருந்து கிளம்பியது என்பதைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இது குறுகிய மொழிப் பார்வையா?

வரலாற்றுப் பார்வை தமிழர்களுக்குக் குறைவு. இது ஏதோ குறுகிய மொழிவெறி சுபாவம் அல்லது மொழி வெறி மனப் பான்மை, சாவனிசம் என்றெல்லாம் சில ஏடுகளில் எழுதி தங் களுடைய மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
அப்படி நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்திலே முதல் தீர்மானமாகவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாக நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்தக் கமிட்டி வன்மையாய் கண்டிக்கிறது.

1939-லே எப்படிப்பட்ட சூழ்நிலை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அங்கே மலைய தமிழர்கள் உண்டு; வியாபாரத் தமிழர்கள் உண்டு. யாழ்ப்பாணத் தமிழர்கள் உண்டு.
பெரியார் தலைமையில் தூதுக்குழு சென்று பார்க்க நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் மற்றும் பலர் நிறைவேற்றிய தீர்மானம். மேலும் விடுதலையில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு தோழர்கள் ஈ.வெ.ரா., ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், டபிள்யூ. பி.ஏ. சவுந்திரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடுமாறு இக்கமிட்டிக் கேட்டுக் கொள்கிறது என்றும் ஒரு தூதுக்குழு போகவேண்டும் என்று அந்தக் காலத்திலே தீர்மானம் போட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னால்இதனுடைய தொடக்கம் எங்கேயிருந்து தொடங்கி யிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

-------------- "விடுதலை" 23-10-2008
இலங்கையில் பிரிவினைக்கு வித்திட்டவர்கள்
சிங்கள இனவெறி பிடித்தவர்களே!
சென்னையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் பேச்சுசென்னை, அக்.24- இலங்கை நாட்டிலே பிரிவினையைக் கேட்டவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? பிரிவினைக்கு வித்திட்டவர்களே சிங்களவர்கள் தான்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தி.க. வானாலும் தி.மு.க.வானாலும்

இன்றைக்குத் திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் இதுபோன்ற அமைப்புகள் ஆனாலும், எல்லாவற்றுக்கும் மூலம் எது என்று சொன்னால் நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம். ஆகவே திராவிடர் இயக்கத்திற்கு இந்த கவலை உண்டு. ஆகவே திடீரென்று நேற்று பெய்த மழையிலே முளைத்த காளான்கள் அல்ல.

தமிழர்கள் புரிந்துகொண்டால்தான்

இந்த நாட்டு ஏடுகள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். விஷமிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். விஷமிகள் விளங்கிக் கொள்கிறார்களோ, இல்லையோ, தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொண்டால்தான் இதை மற்றவர்களுக்கு திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் எடுத்துச் சொல்லமுடியும்; தெருமுனைப் பிரச்சாரத்தின்மூலம் எடுத்துச் சொல்லவேண்டும்.

2009-ல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்

எனவே அன்றைக்குத் தொடங்கிய பிரச்சினை 2009-லே ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய காலத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்ற ஒரு வலாற்றுத் திருப்பத்தை உருவாக்க வேண்டும். நல்ல வாய்ப்பாக வேக வேகமாகப் பல நிலைகள் வந்திருக்கின்றன. ஆனால், இப்பொழுது ஏற்பட்ட நிலை என்ன? எப்படிப்பட்ட அளவுக்குத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட் டிருக்கின்றார்கள்.?

ஊடகங்கள் திசை திருப்புகின்றன

வேதனையுடன் நான் சொல்லும்பொழுது அதைத் தலைகீழாக ஆக்கி திசை திருப்புகின்றனர் - இங்கே இருக்கின்ற ஊடகங்கள். இங்கே இருக்கின்ற ஏடுகள், இங்கே அவைகளின் பெயர்களை சொன்னார்கள். அத்தனையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், பார்ப்பன ஏடுகள். தமிழர்களுக்கு இன உணர்வு என்பது துளிர்த்துவிடக் கூடாது என்று கருதுகிறார்கள்.
அதுவும் குறிப்பாக இந்த ஆட்சியில் தமிழர்களுடைய இன உணர்வு துளிர்க்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற வேதனை பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும், ஊடகங் களுக்கும் இருக்கிறது. தமிழனுக்குப் புத்தாண்டு கிடைத்து விட்டது.

எதிர்காலத்தில் நம்முடைய நிலை என்ன?

தமிழனுக்கு செம்மொழி புரிந்துவிட்டது. தமிழர்கள் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்று வந்துவிட்டனர். தமிழர்களிடத்திலே ஜாதி இல்லை. தமிழனுக்கு உணர்வு உண்டு என்று ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வளவையும் தாண்டி தமிழன் என்ற உணர்வை இதன்மூலம் உண்டாக்கிவிட்டால் எதிர் காலத்தில் நம்முடைய கதி என்ன? இந்தக் கேள்வி அவர் களுடைய உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கின்றது. அதற்காகத்தான் அவர்கள் எங்கோ மனு போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதோடு காலம், காலமாக நமக்கு எப்படி தொப்புள் கொடி உறவு என்பது மனிதாபிமான உண்மையோ அதுபோல சிங்களவர்கள் என்று சொன்னால், அவர்கள் ஒரிசாவிலிருந்து போன ஆரியர்கள் என்பதை அவர்களுடைய நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்திருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு உண்டு.

தொப்புள் கொடி உறவு நமக்கு உண்டு

தொப்புள் கொடி உறவு நமக்கு உண்டு. அவர்களுக்கும் உண்டு. எனவேதான் இரண்டு இனம். அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே நேரடியாக இதுவரையில் போர்க்களத்தில் நின்று வென்ற வரலாறே கிடையாது. எனவே விபீஷணர்களை பிடித்து, சுக்ரீவர்களைப் பிடித்து, அனுமார்களைப் பிடித்து, குரங்குப் படைகளைப் பிடித்து துரோகிகளைப் பிடித்து அவர்களை வைத்துத்தான் சூழ்ச்சியினாலேதான் வென்றிருக்கின்றார்களே தவிர அவர்கள் வீரத்தால், விவேகத்தால் ஒருபோதும் வென்றதாக வரலாறு கிடையாது.

நமது அரசர்களை அசுரர்களாக ஆக்கி


அதற்காக நம்முடைய அரசர்களை எல்லாம் அசுரர்களாக ஆக்கினார்கள். கோரமானவர்களாக ஆக்கினார்கள். இது பண்பாட்டுத் துறைக்கும் அவர்கள் செய்த மிகப் பெரிய மாறுதல். எனவே இவைகளை எல்லாம் நாம் புரிந்து கொண்டால்தான் பிரச்சினையினுடைய அடிவேர் எங்கேயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ திடீரென்று இன்றைக்கு இவர்கள் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். புலிகளைஆதரிக்கின்றார்கள், புலிகள்தான் அங்கேயிருக்கின்ற தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்து கின்றார்கள் என்றெல்லாம் அவர்கள் பேசுகிறர்கள், பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

திட்டமிட்ட விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று சொன்னால், தயவு செய்து ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள். நம்முடைய இனத்தைப் பொறுத்தவரையிலே இந்தப் பிரச்சினையில் புலிகள் இயக்கம் எப்பொழுது தோன்றியது? தமிழர்களுடைய உரிமைக் குரல் எப்பொழுது தோன்றியது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்

சுதந்திரம் வராததற்கு முன்பே கொடுமை ஆரம்பம்

அதற்கு ஆதாரம்தான் 1939-லேயே சிங்களவர்கள் தமிழர்களை கொடுமைப்படுத்தினார்கள். இலங்கையை அப்பொழுது வெள்ளைக்காரன் ஆண்டான். இலங்கைக்கு அப்பொழுது சுதந்திரம் வரவில்லை

இலங்கைக்கு தனி ஆட்சி வந்தது. 1948-ல். அந்த வரலாற்றை நீங்கள் மனதிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிலே என்ன சொன்னார்களோ, அதே வாய்ப்புதான் தமிழ் நாட்டிலேயேயும் வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

1948-ல் இலங்கை நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதற்கு முன்னாலேயே சிங்கள ஆதிக்கம் இருந்தது. அந்த ஆதாரங்களைப் பதிவு செய்வதற்காகத்தான் இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினையைச் சொன்னோம்.

குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டன

ஆனால், அதற்கு முன்னாலே, என்ன சூழ்நிலை? தலைமுறைத் தலைமுறையாக மலையகப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இந்த வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வளவு பெரிய இந்த சம்பவம் இந்த போர் எப்படி வந்தது? தமிழ் இனமொழி வெறியா?

பேசுகிறவர்கள் எண்ணுகிறவர்கள், தமிழ் இன வெறி, தமிழ் மொழிவெறி என்று நம்மைக் காட்டிக் கொடுக்கின்றவர்கள் - சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும். உண்மைகள் யுத்த காலங்களிலே போர்க் காலங்களிலே களப்பலியாகும். என்பது ஆங்கிலப் பழமொழி.

போர்க்களத்தில் முதல் களப்பலி உண்மையே

போர்க்களத்தில் முதல் களப்பலியாவது உண்மைதான் என் பது மிகப்பெரிய பழமொழி. இப்பொழுது அந்த உண்மை களைத்தான் களப்பலியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே வருகின்ற செய்திகள் உண்மை அல்ல. ஆனால் வெட்கத்தோடு சொல்லவேண்டும். நம்முடைய நாட்டிலே இருக்கின்ற வானொலி, நம்முடைய நாட்டிலே இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள் அவர்கள் கொடுத்த செய்தியைத்தான் இவர்கள் பரப்புகிறார்கள். அரசாங்கமோ அல்லது இவர்களுடைய செய்தியாளர்கள் போய் அங்கே நடுநிலையில் நின்று செய்திகளைச் சொல்லுவதில்லை.

முடிந்தால் நடுநிலையில் இருந்து சொல்லுங்கள்

ஊடகங்களை நாம் எப்படி கண்டிக்கின்றோமோ அதே போல இதையும் சேர்த்து கண்டிக்கவேண்டியது தமிழர் களுடைய முழுப் பொறுப்பிலே முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

சொன்னால் நடுநிலையில் இருந்து உங்களால் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சொல்ல முடியாவிட்டால் சொல் லாமல் விடுங்கள், மாறாக யாருக்காக நீங்கள் ஊதுகுழலாக இருக் கின்றீர்கள். சிங்களத்திலே ரூபவாஹினி என்ற பெயரில் ஏதோ சொல்லுவார்கள். அவன் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

நமது வானொலி தொலைக்காட்சி செய்யலாமா?

ஆனால், சிங்களவர்களுடைய வரிப்பணத்தில் நடக்கின்ற ஊடகங்கள், அரசு ஊடகங்கள், வானொலிகள், தொலைக் காட்சிகள் இதைச் செய்யலாமா? இந்த கேள்வியும் முன்னாலே நிறுத்திப் பார்க்க வேண்டும்.

தலைமுறை தலைமுறையாக தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இதைத் தொடங்கி வைத்தவர் அன்றைய பிரதமர் சேனநாயகா. அதிலேயிருந்து ஆரம்பம். அடுத்து பண்டு தொட்டு தமிழர்கள் பூமியான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப் பட்டனர்.

கற்பு சூறையாடப்பட்டது

தமிழ் மண்ணில் கற்பு சூறையாடப்பட்டது. தமிழ்ப் பெண் கற்பு சூறையாடப்படுவது இப்பொழுது. தமிழ் மண்ணின் கற்பு சூறையாடப்பட்டது அப்பொழுது. எங்கேயெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கு தமிழர்கள் வாழக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது என்று சொல்லி அவர்கள் மிகப் பெரிய அளவுக்கு இன வெறியோடு திட்டமிட்டுச் செய்தார்கள்.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி

தமிழர்கள் அப்பொழுதும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. தமிழ்மொழி துணை மொழியாக இருக்கும் என்று அடுத்தக் கட்டத்திற்கு போனார்கள். அதையும் தமிழர்கள் கொஞ்சம் சலசலப்போடு ஏற்றுக் கொண்டார்கள்.

தமிழர்களை பூமியின் மைந்தர்களாக ஏற்க மறுத்தனர்

வேறு வழியில்லையே. இந்த நாடு முன்னேற நாம் இதற்காகவா உழைத்தோம் என்ற மன வேதனையோடு அவர்கள் இருந்தார்கள். பிறகு சிங்களப் பேரினவாதிகள் விடுவார்களா? அடுத்தபடியாக தமிழர்களை மண்ணின் மைந்தர்களாக, பூமியின் மைந்தர்களாக ஏற்க மறுத்தனர்.

ஒரு அமைச்சர் சொல்லுகிறார்

இது சிங்களவர் பூமி. நாங்கள், போராட உங்களை அனுமதித் திருக்கின்றோம் என்று சொல்லுகிறார்களே, இதோ நான் கையிலே வைத்திருக்கின்றேன் ஆதாரத்தை ஒரு அமைச்சர் சொல்லுகின்றார். நாங்கள் உங்களிடத்திலே அனுதாபத்தோடு இஸ்லாமியர்கள் உட்பட அவர்கள் அங்கேயிருந்து ஓடி வந்தார்கள். நாங்கள் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தோம். அவர்கள் எங்களுக்கு நன்றிகாட்ட மறுக்கிறார்கள் என்று ராஜபக்சே ஆட்சியிலே இருக்கிற ஒரு அமைச்சர் சொல்லி, அது இணையத்திலே வந்தது. விடுதலையில்கூட இரண்டு நாட்களுக்கு முன்னாலே எடுத்து தெளிவாகப் போட்டிருக்கின்றோம்.

தமிழர்களை அழிக்கத் திட்டமிட்டனர்

எனவே அந்த சிங்கள பேரினவாதிகள் இவர்களை பூமி புத்திரர்கள் அல்ல. மண்ணின் மைந்தார்கள் அல்ல. என்று நினைத்ததோடு மட்டுமல்ல, தமிழர்களை அழிக்கத் திட்ட மிட்டார்கள்.

முதலில் கல்விக் கண்ணைக் குத்தவேண்டும் என்று நினைத் தார்கள். அதுதானே ஆரியத்தின் நிலை. ஆரியம் என்ன சொன் னது? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்க லாகாது என்ற மனுதர்மத்தை எப்படிக் கையாண்டார் களோ, அதேபோல. ஏனென்றால் ஆரிய வம்சத்தின் தொடர்ச்சி தான் அங்கே நடைபெறுகிறது.


தமிழர் மாணவர்களுக்கு கல்வியில் வேறுபாடு

தமிழ் மாணவர்களுக்கு வேறு அளவுகோல், சிங்கள மாணவர்களுக்கு சலுகையான அளவுகோல். கிராம அளவிலே கூட தமிழர்கள் படிக்காத அளவு கோல். கிராம அளவிலே கூட தமிழர்கள் படிக்காத அளவிற்கு கல்வியைத் தரக்கூடாது என்று மண்ணைப் போட்டார்கள்.
சிங்களவர்களுக்கு 30 மார்க் இருந்தால்போதும். அவர்களுக்கு அனுமதி உண்டு. 80 மார்க் வாங்கினால்தான் தமிழர்கள் கல்வியில் உள்ளே போக முடியும். அதோடு பல்கலைக் கழகக் கதவுகள் மூடப்பட்டன. தமிழர் மாணவர்கள் போர்க்கோலம் பூண் டார்கள். இதிலிருந்துதான் பிரச்சினை தொடக்கம்.

தமிழகத்தில் இந்திப் போர் தொடங்கியதுபோல்

எப்படி இங்கு இந்திப் போர் மாணவர்களாலே தொடங்கப் பட்டதோ அதுவெறும் மொழிப் போராகத் தொடங்கவில்லை. மாறாக உணர்ச்சிப் பூர்வமாக வந்தது.

1974 ஆம் ஆண்டு யாழ் நகரில் உலகத் தமிழர் மாநாடு. பழைய வரலாறு இது. இதில் சிங்களவர்கள் கலகம். துப்பாக்கிச் சூடு. ஆறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கூட்டாட்சி உரிமை கேட்டார்கள்

பிறகு 1948 -லிருந்து 1972 வரை தனிநாடு என்ற கோரிக்கையை எழுப்பாத தமிழர்கள் பிறகு எங்களுக்குக் கூட்டாட்சி உரிமை வேண்டும் என்று இதைத்தான் கேட்டார்கள். எனவே எடுத்த எடுப்பிலேயே நாங்கள் தனியே போய்விட வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூட கேட்கவில்லை. மாறாக, எங்க ளுடைய உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். எங்களுடைய கலாச்சாரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். எனவே எங்களுக்குத் தேவை - கூட்டாட்சி என்று கேட்டார்கள்.

வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானம்

ஆனால், அதற்கு அவர்கள் இசையமாட்டோம் என்று சொன்னவுடனேதான் தந்தை செல்வா அவர்களுடைய தலைமையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் மயிலை மாங்கொல்லை கூட்டத்திலே தெளிவாகக் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல செல்வா அவர்களுடைய தமிழரசு கட்சி மலையகத் தமிழர்கள் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானத்தை 1976-ல் அவர்கள் முன்மொழிந்தார்கள்.

இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் இங்கு இருக்கிறவர்கள் ஏதோ இப்பொழுது இந்தப் பிரச்சினை தோன்றியதுபோல விடுதலைப் புலிகள்தான் இந்த நாட்டைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் சாயம் பூசி பொய்யுரை பரப்புகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் தனி நாடு கோரிக்கை

செல்வா மறைவுக்குபின் நடந்த இக்கோரிக்கை தேர்தலிலேயே வைக்கப்படுகிறது. உலகத்திலேயே ஒரு நாடு பிரிய வேண்டும் என்பதை அந்த நாட்டில் தேர்தல் அறிக்கையிலேயே ஒரு பிரச்சினையாக வைத்தார்கள். ஈழத்திலேதான் முதல் முறையாக நடந்தது என்ற வரலாற்றை இந்த நாட்டில் தெரிந்தும், தெரியாதது போல இருக்கக் கூடியவர்களுக்கு உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக, வரலாற்றுக் கட்டாயமாக இன்றைக்கு இருக்கின்றது.

அந்தத் தேர்தலிலே என்ன நடந்தது? 19 தொகுதிகளிலே இந்தப் பிரச்சினையை வைத்துப் போட்டியிடுகிறார்கள். 18 தொகுதிகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்று விட்டது. அங்குள்ள தமிழர்கள் தனிநாடு கோரிக்கைக்கு தேர்தல் மூலமாக ஆதரவு தெரிவித்தனர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி. எனவே மொழி, இனம், நாடு என்பது மூச்சாக நின்றது.

பிரிவினை கேட்க வைத்தவர்கள் சிங்களவர்கள்

இப்பொழுது தெளிவாகச் சொல்லுங்கள் தோழர்களே, விடுதலைப்புலிகள் இயக்கம் எப்பொழுது பிறந்தது? பிரிவினை எப்போது தொடங்கியது. பிரிவினை ஏன் தொடங்கியது? பிரிவினை கேட்க வைத்தவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? ஆதிக்கம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறதோ, அங்கே அடிமைத் தனம் எவ்வளவு காலத்திற்கு சலாம் போட்டுக் கொண்டிருக்க முடியும்? நிச்சயமாக ஆதிக்கம் அதிகமாக அதிகமாக நுனிக் கொம்பு ஏறினால் - அதுவே உயிருக்கு இறுதியாகிவிடும் என்பதற் கொப்ப அவர்கள் உச்சாணிக் கொம்பிலே ஆடிக் கொண்டிருக் கின்றார்கள்.

--------------------------"விடுதலை" 24-10-2008மத்திய அரசே, உங்கள்மீது வைத்திருக்கின்ற
நம்பிக்கையைத் தகர்த்துவிடாதீர்கள்
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்


சென்னை, அக். 25- மத்திய அரசே உங்கள்மீது வைத்திருக்கின்ற கடைசி நம்பிக்கையை தயவு செய்து தகர்த்து விடாதீர்கள் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சமரசம் என்று சொல்லுகின்றபொழுது

சமரசம் என்று சொல்கிறபொழுது அரசியல் தீர்வு காணவேண்டும் - தமிழர்கள் மூலம் இங்கே கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக - நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எப்பொழுது எந்த வியூகத்தை வகுப்பது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

ஆகவே அந்த வியூகம் வகுப்பதிலே அவர்கள் தெளிவாக எல்லோருடைய கருத்தையும் ஏற்று, அன்றைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடுவோம் என்று சிங்கள அரசு சொல்லுகின்றது.

காரணம் - தீவிரவாதமா?

இதற்கு காரணம் கேட்டால், தீவிரவாதம், தீவிரவாதம் என்று பதில் சொல்லுகின்றார்கள். விடுதலைப்புலிகள் தீவிரவாதத் தையோ, பிரிவினைவாதத்தையோ தொடங்கியவர்கள் அல்ல. அதைத் தொடங்க வைத்தவர்கள் சிங்களவர்கள். அப்பொழுது அதற்கு என்ன காரணம் இருந்ததோ, அதை விட ஆயிரம் மடங்கு காரணத்தை அதிகமாக இப்பொழுது பெருக்கியிருக்கின்றார்களே தவிர, வேறு கிடையாது.

இராணுவத் தீர்வு வேண்டும்; அரசியல் தீர்வு வேண்டாம்

அதுவும், நன்றாக வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்திலே தெளிவாக இப்பொழுது அரசியல் தீர்வு காணவேண்டும். இராணுவத் தீர்வினாலே வெற்றிபெற முடியாது. இன்றைக்கு நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தெளிவாகச் சொல்கின்றார்கள்.
பிரதமர் அவர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டிலே இருக்கக் கூடிய அமெரிக்கா போன்ற பல வல்லரசுகள் இராணுவத் தீர்வு வேண்டாம். உங்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

அரசியல் தீர்வு என்ற வார்த்தைக்குப் பின்னாலே என்ன இருக்கிறது? அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

சுடுகாட்டைப் பார்த்தா தீர்வு சொல்வது?

அங்கு அரசியல் தீர்வு வருவதற்கு முன்னாலே என்ன நடக்கவேண்டும்? மக்களைப் பார்க்காமல் சுடுகாட்டைப் பார்த்தா தீர்வு சொல்லமுடியும்? (கைதட்டல்). அந்த மக்கள் காடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மிருகங்களை விட கொடுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய உள்ளமெல்லாம் இரத்தத்தால் வடிகிறது

ஏடுகள் வாயிலாகப் படிக்கும் பொழுது எங்களுடைய உள்ளமெல்லாம் இரத்தத்தாலே வடிகிறது. கொடுமையாக இருக்கிறது. பேச முடியவில்லை. தூங்க முடியவில்லை. எங்களுக்கு உணர்வு இருக்கின்ற காரணத்தால் தமிழனாகப் பிறந்த காரணத்தால் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிறது.

காட்டிலே பாம்பு கடிக்கிறது


தாக்குதலிலிருந்து தப்பிக்கக் காட்டுக்குள் போகிறார்கள். அங்கு பாம்புகள் கடிக்கின்றன. விஷம் தாங்க முடியவில்லை. உயிரோடு மடிகிறார்கள் என்கிற செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருக்கிறது.

சிங்களவர்களுடைய விஷத்தைவிட பரவாயில்லை


ஆனால், எம் மக்கள் கருதிவிட்டார்கள் - சிங்களவர்களுடைய விஷத்தை விட பாம்பின் விஷம் பரவாயில்லை என்ற கருத்தில்தான் அவர்கள் எதையும் தாங்கத் துணிந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு கொடுமையான சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்றது. அரசியல் தீர்வு என்று வருகின்ற பொழுது அந்த அரசியல் தீர்வு நெருங்குகிற நேரத்திலே ஆகா, அவர்கள் டெரரிஸ்ட் - பயங்கரவாதிகள். அந்தப் பயங்கரவாதிகளுக்காக இவர்கள் ஆதரவளிப்பதா? மொழி வெறியைத் தூண்டிவிடுவதா? என்று கேட்கின்றார்கள்.

கைகளைக் காட்டி அலைகளை நிறுத்த முடியாது

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற எரிமலை போன்ற உணர்ச்சியிருக்கின்றதே, அந்த உணர்ச்சியை நீங்கள் கையைக் காட்டி அலைகளை நிறுத்திவிடலாம் என்று நினைக் கின்ற நவீன கான்யூட் மன்னர்களாக நீங்கள் மாறலாம் என்று நினைக் கின்றீர்கள். இப்பொழுது வந்திருப்பது வெறும் கடல் அலையின் சீற்றமல்ல. தமிழர்களின் உணர்ச்சி எழுச்சி.
அடுத்து சுனாமி போன்ற அலையாக மாறும்!

அடுத்தக் கட்டத்தில் நாளைக்கு நீங்கள் காணப்போகின் றீர்கள். இது ஒரு சுனாமி போன்ற அலையாக இருக்கும் (கைதட்டல்). இப்பொழுதே உங்கள் இடத்தைப் பத்திரப்படுத்தி வையுங்கள் (கைதட்டல்). எனவே எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்காதீர்கள். பதில் தெரியவில்லை யென்றால் கேளுங்கள். நாங்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தீவிரவாதத்திற்கு மூலம் - மதம்

தீவிரவாதத்திற்கு மூலாதாரம் எங்கே இருக்கிறது? மதம். அந்த மதத்தின் அடிப்படையிலேயே பெயரை வைத்து பத்திரிகை நடத்திக் கொண்டு அதிலேயே நீ தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுகிறாய் என்றால், இன்றைக்கு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு மூலகாரணம் இந்துத் தீவிரவாதம்தானே (கைதட்டல்).

பாபர் மசூதியை இடித்ததன் விளைவு

நீ பாபர் மசூதி இடிக்காவிட்டால் அமெரிக்காவில் இரட் டைக் கோபுரம் இடிந்திருக்குமா? அந்தப் பிரச்சினைக்கு நாம் போனால் வேறு இடத்திற்கு நகர்ந்துவிடுவோம்.
ஆனால், தீவிரவாதம் என்று சொல்லுகின்ற நேரத்திலே எது தீவிரவாதம்? எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சொல்லு கின்றார்கள்! நோபல் பரிசு பெற்றிருக்கின்றாரே அந்த நெல்சன் மண்டேலா - சமீப காலம்வரையிலே அமெரிக்காவின் பட்டி யலிலே டெரரிஸ்ட்டு பட்டியலிலேதான் வைக்கப்பட்டிருக் கின்றார். என்னுடைய பெயர் அதிலே இருக்கிறது என்று சொல்கின்றார்.

எனவே நெல்சன் மாண்டேலாவே தீவிரவாதியாகப் பலருக்குத் தெரிந்திருந்தால் அப்புறம் உரிமை கேட்கிறவர்களுக்குக் கெல்லாம் அந்தப் பெயர் என்று சொன்னால் அந்தப் பெயருக்கு ஏற்ப உள்ளபடியே நாம் எல்லோரும் மாறுவதைத் தவிர, வேறு வழி கிடையாது (பலத்த கைதட்டல்).

ஆயுதம் ஏந்துவதில் நம்பிக்கை இல்லை


நமக்கு ஆயுதம் ஏந்துவதிலே நம்பிக்கை இல்லை (கைதட்டல்). அறிவாயுதத்திலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உணர்ச்சியிலே நம்பிக்கையிருக்கிறது (கைதட்டல்). ஒற்றுமையிலே நம்பிக்கை இருக்கிறது.

மண்ணின் ஒருமைப்பாட்டைவிட
மக்களின் ஒருமைப்பாடு முக்கியம்


மண்ணின் ஒருமைப்பாட்டைவிட, மக்களின் ஒருமைப் பாட்டைபற்றி நாம் நினைக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். காஷ்மீரிலே எல்லை தாண்டிய பயங்கரவாதம் அடிக்கடி நிகழவில்லையா? அதற்காக நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது வெளியுறவுத்தறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ அல்லது இராணுவ அமைச்சராக இருக்கின்ற ஏ.கே. அந் தோணி அவர்களோ அல்லது அமைச்சரவையினரோ கூடி முடி வெடுத்து காஷ்மீரிலே குண்டு மழை பொழியலாம் என்று எங்காவது முடிவெடுத்து குண்டுமழை பொழிந்தார்களா?

பனி லிங்கத்திற்காக எவ்வளவு பெரிய போராட்டம்?

காஷ்மீரிலே மதவாதிகள் திட்டமிட்ட செயல். அங்கு உருகக் கூடிய பனி லிங்கம் - அது பனிகாலத்திலே லிங்கமாகும். பிறகு அந்த லிங்கம் உருகும். இதை வைத்து எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினார்கள் - காஷ்மீரிலே. அதை வைத்து ஜம்முவிலே இருக்கக் கூடிய பண் டிதர்கள் - பார்ப்பனர்கள் - அய்யோ, காஷ்மீரத்திலே இருக்கக் கூடிய பண்டிதர்களின் கதி என்ன? என்று கேட்கிறார்கள். நீ ஆடாவிட்டாலும் உன் சதை ஆடுகிறதே...!

நீ ஆடாவிட்டாலும் உன் சதை ஆடுகிறதே (கைதட்டல்). உனக்கே அவ்வளவு உணர்வு இருந்தால் காலம் காலமாக இந்த மண்ணுக்குரிய தமிழர்களுக்கு எங்களுக்கு இந்த உணர்வு இருக்காதா? (கைதட்டல்).

காஷ்மீருக்கு ஒரு நீதி? கன்னியாகுமரிக்கு ஒரு நீதியா?

காஷ்மீருக்கு ஒரு நீதி, கன்னியாகுமரிக்கு ஒரு நீதியா? கேட்க மாட்டோமா? கேட்கக் கூடிய கட்டத்திற்குத் தமிழர்கள் வந்தி ருக்கிறார்கள். இப்பொழுது கேட்காவிட்டால் பின் எப்பொழு தும் தமிழர்களால் கேட்கமுடியாது (கைதட்டல்). இதுதான் அருமையான தருணம்.
சொந்த நாட்டின்மீது குண்டு வீசுகிறார்கள்

எந்த நாட்டில் தீவிரவாதம் என்ற பெயரில் சொந்த நாட் டின்மீதே குண்டு போடுவான்? நீயே அந்நியப்படுத்தி விட்டாயே? அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்லுகின்ற மத்திய அரசின் காதுகள் இங்கே இருக்கின்றன. என்னுடைய பேச்சுகள் எல்லாம் மத்திய அரசுக்கு போகின்றன.
மத்திய அரசே! இன்றைக்கு இருக்கின்ற அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசே, உங்கள்மீதுதான் என்னுடைய கடைசி நம்பிக்கை இருக்கிறது.

கடைசி நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள்

தயவு செய்து அந்த கடைசி நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள். நீங்கள் ஓரளவுக்குத் தமிழ்நாட்டினுடைய உணர்வு களைப் புரிந்து கொண்டு செயல்பட ஆம்பித்திருக்கிறீர்கள். அதற்காக எங்களுடைய அச்சார நன்றியை முதலிலே தெரி வித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். நம்பிக்கையோடு இருக்கின்றோம். ஏனென்றால் கலைஞர் நம்பினால் அந்த நம்பிக்கை வீண் போகாது

கலைஞருக்கு விடியல் தெரிந்தால், அந்த வெளிச்சம் தாராளமாக எல்லோருக்கும் தெரியும். காரணம், சூரியனையே அவர் சின்னமாகக் கொண்டிருக்கின்றவர். அவருக்கு வெளிச்சம் எப்படி எப்பொழுது கிளம்புகிறது என்பது தெளிவாகத் தெரியும்.

இந்திராகாந்தியே இனப்படுகொலை என்று சொன்னாரே

எப்படி குண்டு போடுகிறார்கள்? அதுவும் சாதாரண குண்டு அல்ல. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை. இந்திரா காந்தி அவர்கள் சொல்லவில்லையா? அங்கே நடைபெறுவது (Genocide) இனப்படுகொலை என்று. ராஜீவ்காந்தி அவர்கள் சொல்ல வில்லையா?
அதற்கு முன்னாலே இன ஒதுக்கல் நடைபெற்றது. இன ஒழிப்பு இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

அவர்கள் தமிழ் ஈழம் என்று கேட்கவேண்டிய நிர்பந்தம் என்ன? ஈழத் தமிழர்கள் எல்லாவிதக் கொடுமைகளையும் அனுபவித்துவிட்டுத்தான். இந்த நிலைக்கு அவர்கள் வந்தார்கள், துரத்தப்பட்டார்கள். இந்த எல்லைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களை இப்படி நெருக்கிய காரணத்தால்தான் இப்பொழுது அவர்கள் வேறு நிலையான சூழ்நிலைக்கு ஆளாகியிருக் கின்றார்கள்.


----------------------------- "விடுதலை" 25-10-2008


நெல்சன் மண்டேலாவுக்காக, பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கிற இந்திய அரசு - தமிழினம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?
சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உணர்ச்சிகரப் பேச்சு


சென்னை, அக்.26- நெல்சன் மண்டேலாவுக்காகக் குரல் கொடுக்கின்ற அரசு, பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கின்ற இந்திய அரசு தமிழக மக்களின் வாழ்வுரிமையைப்பற்றிக் கவலைப்படவில்லையே, தமிழர்கள் செத்து மடிவதைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் - பற்றி எரிகிறதே ஈழம் எனும் தலைப்பில் அக். 20 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும் என்றால்

எனவே பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த பயங்கரவாதிகளுக்கு மக்கள் ஆதரவளிப் பார்களா? அவர்களால் எப்படி சமாளிக்க முடிகிறது? உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் யாராவது இவ்வளவு காலத்திற்குப் போரை நடத்த முடியுமா? நாக்கிலே நரம்பு இல்லாமல், நெஞ்சிலே நேர்மையில்லாமல் பேசுகிறார்களே.

நீங்கள் பயன்படுத்திய கேடயங்கள்

மனிதர்களைக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்து கின்றார்களாம். புலிகளுக்குக் கேடயம் எது என்பது உனக்குத் தெரியுமா? (கைதட்டல்). அதே நேரத்தில் நீங்கள் எதை எதை யெல்லாம் கேடயமாகப் பயன்படுத்தினீர்கள் என்ற வரலாற்றை நாங்கள் மேடை தோறும் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? (கைதட்டல்) தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

எங்கள் தரத்திற்கு அது உகந்தது அல்ல

உங்கள் கேடயங்கள் வெளிச்சத்திற்கு வராதவைகள் (கை தட்டல்). உங்கள் கேடயங்கள் வேறு வகையானவைகள். அது எங்கள் தரத்திற்கு சொல்லக் கூடியதும் அல்ல. எனவே அதை நாங்கள் சொல்லவும் மாட்டோம். (கைதட்டல்).

அந்த அடிப்படையிலே தெளிவாக எண்ணிப் பார்க்க வேண்டாமா? எவ்வளவுதான் நாங்கள் பொறுமை காப்பது? எவ்வளவுதான் நாங்கள் எங்கள் இனத்தைக் காப்பது?
நெல்சன் மண்டேலாவுக்கு நாம் ஆதரவு கொடுக்கவில்லையா? இனத்தை மறந்துவிடுங்கள். மனிதநேயம் சுயமரியாதை இயக்கம் என்றாலே மனிதநேயம் இயக்கம். பகுத்தறி வாளர்கள் என்றாலே மனிதநேயம் கொண்டவர்கள்.நெல்சன் மண்டேலா வுக்கு நாம் ஆதரவு கொடுக்கவில்லையா? நம்முடைய ஆதரவு எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பது வேறு செய்தி.

பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கவில்லையா?

மனித நேயத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கவில்லையா? அதே போல பாலஸ்தீனத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கவில்லையா? உலகத்தில் எங்கே அநீதிகள் நடந்தாலும், அநீதிகள் கூடாது என்பதற்கு குரல் கிளம்பவில்லையா? அப்படிப் பார்க்கிற நேரத்தில்தான் நண்பர்களே தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயராலே, தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைத்தான் நாம் இப்பொழுது அடையாளம் காண வேண்டும்.
தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமானால்...!

தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமானால், நீ தீவிரவாதிகளோடு சண்டை போடு. முடிந்தால் வெற்றி பெற்றுப் போ. அது உனக்கும், அவர்களுக்கும் இருக்கின்ற பிரச்சினை.
ஆனால் தமிழர்களை ஏன் ஓட ஓட விரட்டுகிறாய். அப்பாவித் தமிழ் மக்களை ஏன் கொல்லுகிறாய்?

குண்டுமழை பொழிந்து அழிக்கிறார்கள்


குண்டுமழை பொழிந்து தமிழர்களை அழிக்கிறாய். உணவு அனுப்பாதே. பொருள்களை அனுப்பாதே என்று சாலைகளை மூடி - தமிழ் மக்களை சிங்கள இனவெறி பட்டினியால் கொல்லுகிறது. அங்கே மின்சாரம் இல்லை. மழையில், காடுகளில் சதுப்பு நிலங்களில் சிக்கிப் பட்டினியால் எம் தமிழர்கள் சாகின்றார்கள்.

இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் காட்டிலே இருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் தலையங்கத்திலே வந்திருக்கிறது.

அவ்வளவு கொடுமையான சூழ்நிலை அங்கே நிலை கொண்டிருக்கின்றது. இதற்கு ஒரு பரிகாரம் தேட வேண்டாமா? என்று துடித்துக் கிளம்புகிற நேரத்திலே அதுவும் காலம் தாழ்ந்து துடித்துக் கிளம்புகிற நேரத்திலேகூட இன்றைக்கு இங்கே இருக்கிறவர்கள் என்ன பேசுகிறார்கள்?
கொச்சைத்தனமான பேச்சல்லவா?

திசை திருப்புகிறார் கலைஞர் - மின்வெட்டுக்காக இந்த ஈழப் பிரச்சினையை நடத்துகிறார் என்று எவ்வளவு கொச்சைத் தனமாக பேசுகிறார்கள்.

இப்படிப் பேசுகிறவர்களை வரலாறு மன்னிக்குமா? தமிழர் கள்தான் மன்னிப்பார்களா? ஏதோ இன்றைக்குக் கொஞ்சம் போதையில் இருக்கின்றார்கள். மயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று கருதாதீர்கள். போதையிலே இருப்பவன் என்றைக்குமே போதையிலே இருப்பானா? (கைதட்டல்).

பொழுது விடிந்தால் போதை தீரும். பொழுது விடிந்தால் விடியல் ஏற்படும். எனவே இதே போன்ற நிலை எப்பொழுதும் தமிழர்களுக்கு இருக்கும் என்று நினைக்காதீர்கள். அவனை உலுக்குகின்ற கரங்கள்தான் இங்கே இருக்கின்ற கரங்கள். ஆயிரம் ஆயிரம் கரங்கள். அந்த கரங்கள்தான் கைகோத்து நிற்கக் கூடிய கரங்கள். அதை மறந்து விடாதீர்கள்.

தமிழர்களே இனஉணர்வோடு இருங்கள்


எனவே தமிழர்களே! தமிழர்களே இன உணர்வுவோடு இருங்கள். இங்கே பேசிய சுப. வீரபாண்டியன் அவர்கள் தெளிவாகச் சொன்னார், தமிழன் என்று உன்னைக் காட்டுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு. கடைசி வாய்ப்பு. அந்த வாய்ப்பை தமிழனாக இருக்கின்ற நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இல்லாவிட்டால் பின் எப்பொழுது? Now or Never இதுதான் மிக முக்கியமான கேள்வி.

அந்த உணர்வுகள் வர வேண்டாமா? எனவேதான் அடுத்த கட்டத்தைப் பார்க்க வேண்டும்.
மனிதாபிமானம் வேண்டாமா?

உலக ரீதியாக மனிதாபிமானம் காட்ட வேண்டிய பிரச்சினை. மனிதாபிமான உரிமையுடன் நடந்து கொள்ள வேண்டிய பிரச்சினை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தானே இருக் கின்றன அதனால் எம்.பி.க்கள் பதவி விலகுவது கண்துடைப்பு நாடகம் என்று பேசுகிறார்கள். ஏனப்பா இப்படி பேசுகிறாயே இதைவிடக் கேவலம் வேறு ஏதாவது உண்டா?

மானங்கெட்ட பிழைப்பு வேறு இருக்க முடியுமா?

இதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறு ஏதாவது இருக்க முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண் டாமா?அன்றைக்கு அனைத்துக் கட்சிகளையும் கேட்டு முடி வெடுத்து, கொஞ்சம்கூட பின் வாங்காமல், ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதற்கு என்ன பொருள்? உடனே இன்னும் சில பேர். மைனாரிட்டி அரசு உடனே ராஜினாமா செய்து விட வேண்டும். உடனே தேர்தல் வையுங்கள். தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். நம்முடைய நாட்டிலே பழமொழியாகச் சொல்லுகின்றார்கள்.

அண்ணன் எப்பொழுது சாவான்?


அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று சில பேர் நினைக்கிறார்கள். தம்பி, அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது. (கைதட்டல்). அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (கைதட்டல்). அதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் நீண்ட காலத்திற்கு முன்னாலே சொன்னார். திண்ணை வைத்து வீட்டைக் கட்டாதே, அது சோம்பேறிகளுக்கானது என்று தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் (கைதட்டல்). இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை. எனவே நம்முடைய உணர்வுகள் திண்ணமாக இருக்கின்றன. தெளிவாக இருக்கின்றன. நம்முடைய இலட்சியம்.

அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் தமிழர்கள் இந்தப் பிரச்சினையிலே மிகத் தெளிவாக - உண்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்ன இறையாண்மை?

இறையாண்மை, இறையாண்மை என்று சொல்லுகின் றார்கள். எங்களுக்கெல்லாம் இறையாண்மை என்பது தெரி யாதா? ஏனென்றால் நாங்கள் அரசியல் சட்டம் படிக்க வில்லையா? நாங்கள் அரசியல் சட்டத்தையே கற்காத தற்குறிகள் அல்லவா? மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்கள் எல்லாம் மிகப் பெரிய மேதைகள் அல்லவா? இறையாண்மை என்ன ஆவது? என்னய்யா இறையாண்மை? ஒருத்தருடைய இறையாண்மை என்ன?

இன்னொரு நாட்டில் தலையிடலாமா?


இன்னொரு நாட்டிலே இவர்கள் தலையிடலாமா? என்று கேட்கிறார்கள். சாதாரணமாக எளிய மக்களாக இருக்கிற வர்களுக்குக் கூடத் தெரியும். கொச்சை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் - சில முண்டங்களுக்குக் கூடப் புரிகிற மாதிரி என்று சொல்லுவார்கள். முண்டம் என்றால் தலையில்லாதவன் என்று அர்த்தம்? அது தவறான சொல் அல்ல! கோபத்தோடு சொன்னாலே அதில் பொருள் வருகிறது. தலையில்லை என்பது அர்த்தம்.

அண்ணா சொன்ன உதாரணம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். கணவன், மனைவி இரண்டு பேர் இருக்கிறார்கள். அந்த வீட்டிற்குப் பக்கத்திலே பக்கத்துப் பக்கத்து வீடு இருக்கிறது.

கணவன், மனைவி மகிழ்ச்சியாக வாழும் பொழுது அதில் தலையிடுவதில் நமக்கு உரிமை இல்லை. அகம் நடக்கட்டும். அது அகத்துப் பிரச்சினை. அண்ணா அவர்கள் அடுத்து ஒரு உதா ரணம் சொன்னார். சரி அவர்கள் விசயத்தில் தலையிட மாட்டேன். அவர்கள் வீட்டில் என்ன சாப்பாடு செய்ய வேண்டும்? என்னக் குழம்பு வைக்க வேண்டும் என்று அவர்களுக்குள் சண்டை வந்தால் அது அவர்களுடைய பிரச்சினை. அதே நேரத்திலே மனைவியின் கழுத்தை கணவன் நெரித்தால் அய்யோ கொல்லுகிறானே! கொல்லுகிறானே! என்று சத்தம் போட்டால், அதைக் கேட்டுக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரன் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்று சொன்னால் சும்மா இருக்க முடியுமா? எனவே தொலைந்திருப்பது மனிதாபிமானம். இதை அண்ணா அவர்கள் அந்தக் காலத்திலே சொன்னார்கள். எல்லை இருக்கிறது. இதையும் தாண்டி நமக்குள்ளே இருக்கிற உறவை மறந்து விடக் கூடாது. எனவே இறையாண்மை இறையாண்மை என்று பேசுவது இருக்கிறதே அது தெளிவில்லாத ஒரு நிலை.

சிங்கள வெறித்தனம் உச்சக்கட்டத்தில்

நம்முடைய இறையாண்மைக்கே கேள்விக்குறி சிங்கள வெறித்தனம் உச்ச கட்டத்திற்குப் போகுமேயானால், ஆபத்து ஏற்படுகிறது. ஒன்றுமில்லை இன்று காலையிலே வந்திருக்கின்ற ஒரு செய்தி. முழுக்க, முழுக்க தினமணி ஏட்டைப் பற்றிச் சொன் னார்கள் அல்லவா? அதே தினமணி ஏட்டிலே வந்திருக்கின்ற ஒரு செய்தி. இலங்கைப் பிரச்சினையில், இந்தியா தலையிட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை இப்படி ஒரு நிலை. அதாவது இலங்கைத் தமிழ் எம்பிக்களின் கோரிக்கை என்று எழுதியிருக்கின்றார்கள். தினமணி, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவைகள் எல்லாம் முழுக்க முழுக்க தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான பத்திரிகைகள்தான்.

இங்கே இவ்வளவு பிரச்சினைகளைப்பற்றிப் பேசுகிறோம். ஒரு செய்தி வருமா என்றால் மற்ற பத்திரிகைகளில் ஒரு செய்திகூட வராது.ஊடகங்களை நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் தினந்தோறும் மக்களை சந்தித்துக் கொண்டிருக் கின்றவர்கள். அண்ணா அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னாலே இந்து பத்திரிகையைப் பற்றிச் சொன்னார்கள்.

அண்ணாதுரையும் பேசினார்

கூட்டத்திற்கு எங்கேயாவது செய்தியாளர்கள் வருவார்கள். கூட்டத்தில் பன்றி ஓடினால் - மாடு குறுக்கே ஓடினால் அதை பெரிதுபடுத்திப் போடுவார்கள். அல்லது கல் விழாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். கல் விழுந்தால் கூட்டத்தில் கல் விழுந்தது என்று செய்தி போடுவார்கள்.

அதுவும் போடவில்லை என்று சொன்னால் Annadurai also spoke என்று போடுவார்கள். அதாவது அண்ணாதுரையும் பேசினார் என்று போடுவார்கள் என்று சொல்லிவிட்டு, அண்ணா அவருக்கே உரிய நகைசுவையான ஒரு செய்தியைச் சொன்னார்.

ஏன் அண்ணாதுரை ஆல்சோ ஸ்போக் என்று போடுகிறார்கள் என்று சொன்னால் - எங்கே அண்ணாதுரை பாடினார் என்று நினைத்துக் கொள்வார்களோ என்பதற்காக - பேசினார் என்று போடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொன்னார்.

அரசியல் தீர்வுக்கு ராஜபக்சே அரசு வருமா?

அதுபோல இன்று காலை வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஒரு செய்தி.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு அரசியல் தீர்வுக்கு ராஜபக்சே அரசு வருமா? என்றால் அது உறுதி இல்லை. சந்தேகப்படுகிறார்கள் தமிழர்கள் என்று இவர்களே எழுதக் கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில் அக்கறை இருக்கிறதா? நம்பிக்கை இருக்கிறதா?
எனவேதான் மத்திய அரசு இதில் தெளிவாக உறுதியாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வை நீங்கள் காணுங்கள். உடனடியாக போர் நிறுத்தம் செய்யுங்கள்.

அய்.நா. அதிகாரிகள் திரும்பி விட்டார்கள்

தமிழர்களுக்கு உணவு போவதில்லை. தமிழர்களுக்கு உணவு கொண்டு போன அய்.நா. அதிகாரிகள்கூட, அங்கே குண்டுச் சத்தம், வேட்டுச் சத்தம் இருக்கிற காரணத்தால் திரும்பி விட்டார்கள் என்ற செய்தியும் குறுக்கே ஊடாலே நடுவிலே இருக்கிறது. ஆகவேதான் மனிதநேய அடிப்படையிலே நம் முடைய கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை களுக்கு நல்ல அளவுக்கு அழுத்தத்திற்குப் பலன் ஏற்பட்டி ருக்கிறது. மத்திய அரசோ இப்போது கேளாக்காதாக இல்லை. மாறாக அவர்கள் வற்புறுத்த வேண்டியவர்களை அழைத்து அவர்கள் வற்புறுத்துகின்றார்கள்.

கின்னஸில் இடம் பெறும்


என்னதான் நீங்கள் பேசினாலும், நடக்க வேண்டியவைகள் நடக்கும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் தரப்பட வேண்டிய நிலையிலே இருக்கிறது. எனவே நல்ல முடிவுகளை நம்பிக்கையோடு நாம் எதிர்பார்க்க வேண்டிய கட்டத்திலே இருக்கின்றோம்.
எனவே தமிழர்களே உறுதியாக நில்லுங்கள். உணர்வோடு நில்லுங்கள். ஒற்றுமையோடு நில்லுங்கள். மனிதச் சங்கிலியில் பங்கேற்கிறவர்களுக்கு கட்சி இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை. இதுவரை உலக வரலாற்றிலே கின்னஸ் புத்தகத்திலே இடம் பெறக் கூடிய அளவுக்கு இந்த சங்கற்பச் சங்கிலி இருந்தது என்பதற்காக வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு வணக்கம் கூறி முடிக்கிறேன். (பலத்த கைதட்டல்).

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------- “விடுதலை” 26-10-2008

1 comments:

bala said...

திராவிட முண்டம்.கருப்பு சட்டை பொறிக்கி தமிழ் ஓவியா அய்யா,

அங்கே ஈழம் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது;எம் மக்கள் சொல்லொணா துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.அங்கே சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபடாமல்,மானமிகு,தமிழ் ஓவியா போன்ற கருப்பு சட்டை வெறி பிடித்த சொறி நாய்கள் இங்கே கூட்டம் போட்டுக்கொண்டு தீயின் மீது பெட்ரோல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.இதைவிட கீழ்த்தரமாக நம்ம தாடிக்கார தீவிரவாதி கூட போகவில்லையே.தலைவனை மிஞ்சிய சிஷ்யர்களாக இப்படி சீரழிந்து,மதி கெட்டு,இழி பிறவிகளாக ஆகிவிட்டார்களே ஓசி பிரியாணி கருப்பு சட்டை நாய்கள்.

பாலா