Search This Blog

25.10.08

உலகமயமாகும் பெரியார்




வாசிங்டனில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

அக்.19, 2008, வாசிங்டனில் மாலை தந்தை பெரியாரின் 130-ஆவது பிறந்த நாள் விழா இனிதே நடைபெற்றது. பெரி யார் பன்னாட்டு மையம் வருடா வருடம் தந்தை பெரியாரின் விழாவை சீரும் சிறப்பாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த விழா நடப்பதற்கு இரண்டு வாரம் முன்பே விழா விவரங்களை வாசிங்டன் வட்டாரம் மற்றும் பிற மாநில தமிழர்களுக்கு தமிழ்ச் சங்கம் மூலமாகவும், தனி மின் அஞ்சல் மூலமாகவும் அறிவித்திருந்தது பெரியார் பன்னாட்டு மையம்.

விழா மதியம் மிகச் சரியாக 2 மணிக்கு முன்னாள் வாசிங்டன் தமிழ் சங்க செயலர் திரு குழந்தைவேல் இராமசாமியின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்தது.

வெர்ஜினியா, மேரிலாந்து, பென்சில்வேனியா, ஹாரிஸ்பர்க் போன்ற இடங்களில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டார்கள். விழாவின் பார்வையாளர்களை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா வரவேற் றார்.

தொடக்க உரையாக, வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் பிரபாகரன் வைக்கம் வீரர் பெரியாரைப் பற்றியும் அவரது சமுதாயச் சேவைகள் எப்படி திருவள்ளுவரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன என்பதையும் மிக அழகாக கணினி வெள்ளித்திரை மூலம் விளக்கினார். பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம், மற்றும் சமுதாய சேவை கருத்துகள் எப்படி எந்தெந்த திருக்குறளோடு ஒத்துப் போகின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவின் சிந்தனை ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர் பேராசிரியர் இன்னையா மிக ஆழமான கருத்துகளை முன் வைத்தார். குறிப்பாக குழந்தைகள் 18 வயது வரும் பொழுதுதான் தனது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஓட்டுரிமை, தன் பள்ளி படிப்பு, மற்றும் கல்லூரி படிப்பு முடிவுகள், வருங்கால துணைவரை தேர்ந்தெடுத்தல் இப்படி பல. ஆனால் ஏன் பிறந்தவுடனேயே குழந்தைகளின்மீது மதமும் சாதியும் திணிக்கப்படுகின்றன என்கிற கேள்வியை எழுப்பினார். கல்வி கற்ற மிக சிறந்த ஆராய்ச்சியாளர்கள் கூட இன்னமும் மூட நம்பிக்கைகளைக் கொண் டிருப்பது வருத்தத்தை தருகிறது என்று ஆதங்கப்பட்டார். தந்தை பெரியாரின் கொள்கைகளை பள்ளிகளில், கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று சொன்னார். மேலும் அமெரிக்க சிந்தனை ஆய்வு மையத்தைச் சேர்ந்த டான் (Don) மற்றும் கென்னத் (Kenneth) அவர்களும் பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கைகள் பற்றி பேசினார்கள். இந்த விழாவில் அமெரிக்கர்கள் கலந்துகொண்டு அவர்கள் கருத்துகளை முன் வைத்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது!

விழாவில் மேலும் சிறப்பாக பெரியார் பன்னாட்டு மையத்தின் நிர்வாகி மருத்துவர் இளங்கோவன் மற்றும் மருத்துவர் சரோஜா இளங்கோவன் கலந்து கொண்டு பெரியாரின் கருத்துகள், பெரியார் கல்வி நிறுவனங்கள் செயல்படும் விதம், பெரியாரின் பெண் விடுதலைக்கான காரணங்கள் எல்லாவற்றையும் மிக எளிமையான ஆங்கிலத்தில் பகிர்ந்துக் கொண்டார்கள்.

விழாவில் மற்றொரு சிறப்பம்சம் செல்வி மாதவி சங்கர், தந்தை பெரியாரைப்பற்றி கணினி மூலம் வினாடி வினா நடத்தினார். இதன் மூலம் பார்வையாளர்கள் பல புதிய செய்திகளை அறிந்தார்கள். செல்வி காவ்யா சுந்தர், செந்தமிழ் தேன்மொழியாள் பாடலுக்கு மிக அருமையாக நடனம் ஆடினார்! வாசிங்டன் தமிழ்ச் சங்க செயலாளர் திரு. ஜான் பெனடிக்ட் பெரியாரைப் பற்றி சிறப்பாக கவிதை வாசித்தார்! தமிழ்மொழியும் பெரியாரும் என்ற தலைப்பில் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு கோபிநாத் உரையாற்றினார்.

உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் திரு பீட்டர் பெரியார் ஓர் சமூகப் போராளி என்றார். பெரியாரின் கருத்துகள் மிக ஆழமானவை ஆகையால் தான் தமிழ் நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும் தந்தைபெரியாரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

மேலும் விழாவில் முனைவர் மீனா செல்லையா, முனைவர் சங்கரபாண்டி மற்றும் பேரவை முன்னாள் செயலாளர் மணிகுமரன் தமக்கு ஈடுபாடு உள்ள பகுத்தறிவு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.

விழாவை மிகச் சிறப்பாக தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் கல்பனா மெய்யப்பன் தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில் வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் மயிலாடுதுறை சிவா நன்றி பாராட்டியதோடு, குறிப்பாக இந்த விழாவை மிக அருமையாக நடத்த பெரிதும் உதவிய முனைவர் அரசு செல்லையாவை வெகுவாக பாராட்டினார்.

மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த விழா மிகச் சரியாக அனைவரும் பாராட்டும் வண்ணம் மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. விழாவிற்கு வந்த பலரும் சொன்னது அடுத்த ஆண்டு முதல் தந்தைபெரியாரின் பிறந்த நாள் விழாவை ஒரு முழு நாள் விழாவாக கொண்டாட வேண்டும் மற்றும் இன்னும் பெரிய அரங்கத்தில் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இதுவே விழாவின் வெற்றியாக கருதலாம்!

விழா ஏற்பாடு: முனைவர் அரசு செல்லையா.

கட்டுரை தொகுப்பு: மயிலாடுதுறை சிவா

------------------நன்றி: "விடுதலை" 25-10-2008

0 comments: