
தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் (14.10.2008) எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்றைய தினம் (24.10.2008) மனிதச் சங்கிலிப் பேரணி கொட்டும் மழையிலும் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
மனிதச் சங்கிலியான சங்கற்பச் சங்கிலி அறிவிக்கப்பட்டது பிற்பகல் 3 மணி என்றாலும், இரண்டு மணியிலிருந்தே கடுமையான மழை கொட்டத் தொடங்கிவிட்டது.
அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழின உணர்வாளர்கள் கட்சிகளை மறந்து சென்னையில் அணிவகுத்து நின்ற அந்த எழுச்சியும், கம்பீரமும் சாதாரணமான ஒன்றல்ல.
கொந்தளிக்கும் எரிமலையின்மீது கொட்டும் மழை பெய்தால் என்ன? அது போன்ற உணர்ச்சியை மனிதச் சங்கிலிப் பேரணி வெளிப்படுத்தியது. முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தொடக்க முதல் இறுதிவரை பயணித்து அணிவகுத்து நின்றவர்களை உற்சாகப்படுத்திச் சென்றார்கள்.
அணிவகுப்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழர்கள் திரண்டனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும், அமைச்சர் பெருமக்களும், கலையுலகினரும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் அணிவகுத்து நின்று கொடுக்கப்பட்ட முழக்கம் மத்திய அரசின் காதுகளுக்குக் கண்டிப்பாக எட்டியிருக்கும்.
ஜனநாயக முறையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்திய இந்த உணர்வை மத்தியில் உள்ள ஜனநாயக அரசு புரிந்துகொண்டு, தன் ஜனநாயகக் கடமையைச் செய்யவேண்டியது அதன் முக்கிய கடமையாகும்.
இது ஒரு கட்சியைச் சார்ந்த, நடவடிக்கையல்ல; மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைக்காகவும், ஒரு இனத்தின் தேசிய எழுச்சிக்காகவும் நடத்தப்பட்ட மகத்தான அறவழி வெளிப்பாடாகும்.
இந்த 2008 இல் ஒரு அரசு பேரினவாதத் தன்மையில், ஒரு இனத்தையே அழிக்கும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் முப்படைகளையும் கொண்டு மூர்க்கத்தனமாக ஈடுபடுகிறது; அதனை உலக நாடுகளும் கண்டுகொள்ளாது - அய்.நா. மன்றமும் செயலற்று இருக்கும் என்கிற நிலைப்பாடு மனித குலத்துக்கே மாபெரும் தலைக்குனிவாகும்.
அழிக்கப்படும் அந்த இனத்தின் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் வாழும் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பது - அந்த இனத்தின் சுயமரியாதைக்கு இழுக்காகும்.
இந்த நிலையில், இந்தியாவின் மத்திய அரசு கையில்தான் இதற்கு ஒரு முடிவு கட்டும் ஆயுதம் இருக்கிறது. வேறு நாடுகளில் தங்கள் நாட்டு மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்களேயானால், அந்த நாட்டு அரசு கைகட்டி வாய்ப் பொத்தி மவுன சாமியார்களாக இருப்பதில்லையே!
திபெத் உரிமைப் பிரச்சினைக்காக பீஜிங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எட்டு அமெரிக்கர்களை சீன அரசு கைது செய்தது என்றவுடன், உடனடியாக அமெரிக்க அரசு தலையிடுகிறது. தமது தூதுவர் மூலமாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
லண்டனில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதில் பஞ்சாப்பியர்களுக்கு ஒரு பிரச்சினை என்கிறபோது கூட இந்தியப் பிரதமர் தலையிடும் நிலை எல்லாம் உண்டே! இந்த நிலையில் இதைவிடவெல்லாம் மிகப்பெரிய பிரச்சினை இலங்கையில் அந்த நாட்டுக்குரிய தமிழர்கள் முற்றிலும் அழிக்கப்படும் (Genocide) கேவலமான செயல்பாடாகும்.
கடந்த 25 ஆண்டுகாலமாக தமிழின அழிப்புப்பணி அங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் ஒவ்வொரு அங்குல நடவடிக்கையும் இந்திய அரசுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அப்படியிருக்கும்பொழுது இந்திய அரசு இப்பிரச்சினையில் மெத்தனமாக இருப்பது வேதனைக்குரியது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயவாதிகளும் இந்தியாவின் இந்த மெத்தனத்தைக் கண்டு ஆச்சரியப்படத்தான் செய்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் தலையிட்டும், இலங்கை அதிபரோடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகும், தமிழினத்தின்மீது அங்கு நடத்தப்படும் போர் நிறுத்தப்படவில்லையென்றால், அடுத்த கட்டம் என்ன?
இதற்கான பதிலை உலகம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் தலைநகரில் நடத்தப்பட்ட மனிதச் சங்கிலி, இந்திய அரசின் நடவடிக்கைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் - ஏற்படுத்தவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும்.
---------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 25-10-2008
0 comments:
Post a Comment