Search This Blog

29.10.08

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்


ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்ற
கண்ணோட்டத்தில் இது தேவையான ஒன்றே!

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நடக்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, "ஜாதி” (Caste) என்ற கலத்தில் (Column) அதைக் குறிப்பிடுவது ஒடுக்கப்பட்டவர்களது வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய கண் ணோட்டங்களில் மிகவும் தேவையான ஒன்றாகும்!

நீதிபதிகளின் தீர்ப்பு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சமூகநீதி பெற்றிட, ஜாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் படவேண்டியது அவசியம்; இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபெ தர்மாராவ் மற்றும் எஸ். தமிழ்வாணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவாகக் கூறியிருப்பதும் (26.10.2008) வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளனர் என்பதும் நல்ல செய்தியே!

சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படவில்லை

இன்று நாட்டில் உள்ள நிலையில், ஜாதியை ஒழிக்க நாம் கடுமையான முயற்சிகளை, பிரச்சாரங்களை, வேலைத் திட்டங்களை - ஜாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகிறோம் என்றாலும்கூட,

நமது நாட்டில் ஜாதிமுறை - சட்டப்படி ஒழியவில்லையே!

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி” (Caste) என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது என்பதை கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான எல்.ஜி. ஹாவனூர் கமிஷன் அறிக்கையிலேயே மிகவும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது!

தந்தை பெரியார் கூட்டிய கடைசி மாநாட்டின் தீர்மானம்

அதனால்தான் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் தொண்டாகத் தம் மேல் போட்டுக்கொண்டு உழைத்த அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், நமது இந்திய அரசியல் சட்டத்தில் 17 ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், சட்டப்பூர்வமாக தடைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் நிலையில்,

“Untouchability is abolished and its practice in any form is forbidden by law” (Article 17) என்பதில், ‘Untouchability’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ஜாதி (Caste) - என்ற சொல்லைப் போட்டுவிட்டு, அடியில் விளக்கத்திற்காக (By way of Explanation - Caste includes “untouchability also) என்று போட்டுவிடலாம் என்று, தாம் நடத்திய கடைசி மாநாடான தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (சென்னையில் 1973 டிசம்பர் 8, 9) முக்கிய தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு வெளிச்சத்தைத் தந்தார்கள்.
அதனை இத்தனை ஆண்டுகள் - 35 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, சுதந்திர நாட்டில் சூத்திரன் இல்லை, பஞ்சமன் இல்லை; பார்ப்பான் இல்லை; மனிதர்கள் - உண்டு என்று காட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே!

பெரும்பாலும் எல்லா திருமண விளம்பரங்களில்கூட, ஜாதி - கோத்திரம் பார்க்கப்படுகின்றன; கேட்கப்படுகின்றனவே!

நெருப்புக்கோழி மனப்பான்மை வேண்டாம்!

இந்துக் கோயில் கருவறைகளில் உயர்ஜாதி பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராகி பூஜை செய்ய இயலும் என்று இதுவரை இருந்து வந்த நிலையை புதியதோர் சட்டம் கொண்டு வந்து நமது முதல்வர் கலைஞர் தலைமையில் உள்ள அரசு ஒரு சமூகச் சீர்திருத்தச் சட்டத்தை கொணர்ந்த நிலையில்கூட, அதையும் எதிர்த்து உச்சநீதி மன்றப் படையெடுப்புகள் நடைபெறாமலா இருக்கின்றன?

இந்நிலையில், சென்சஸ் - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாத்திரம் ஜாதியைக் குறிக்காமல் விடுவதால் யாருக்கு லாபம்? முன்னேறிய ஜாதியரான - ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர் போன்றவர்களுக்குத்தானே அது கல்வி, உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்க உதவிடும் - வாய்ப்புகளை ஏற்படுத்தும் மறைமுக வழியாகவிருக்கிறது?

ஜாதியை சட்டப்பூர்வமாக ஒழிக்க முன்வராத நிலையில், இப்படி ஒரு நெருப்புக்கோழி மனப்பான்மை எதற்குப் பயன்படக் கூடும்?

1931-க்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்பற்றிய வழக்கு வந்தபோது, இதை ஒரு முக்கிய காரணமாக சில நீதிபதிகள் சுட்டிக்காட்டினரே!

1931-க்குப் பிறகு சென்சஸ் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடைபெறவே இல்லை; பழைய கணக்குப்படிதான், இந்த இட ஒதுக்கீடு உள்ளது என்று கூறி நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று ஆக்கிக் கொள்ள முயற்சித்தனரே!

மார்பில் முப்புரி நூல் - பூணூல் அணிந்துகொண்டே, ஜாதி யெல்லாம் போட வேண்டாம் என்று உபதேசம் செய்வதனால் அவாள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்களாகி(?) விட்டார்கள் என்று நம்மில் பெரும்பாலோர் நம்பி ஏமாற வேண்டுமா? கூடாது! கூடவே கூடாது!


போர்க்களத்தில் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது? என்பதை நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்ற மாவோவின் பொன்மொழிதான் நமக்கு இப்போது நினைவிற்கு வருகிறது!

1962 இல் தந்தை பெரியார் சொன்னது...

1962 ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிகழ்த்திய பேருரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள், ஜாதிப் பட்டத்தை நீக்கிவிட்டு, கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் அனுபவிக்க ஒரு முற்போக்கு வேஷம் போடுகிறார்கள் என்றால், அதைப் புரிந்துகொண்டோம் நாம் என்று காட்ட, நீங்கள் ஜாதிப் பட்டத்தையும் போட்டுக் கொள்ளத் தயங்காதீர்கள் என்று சொல்லவேண்டிய அவசியமும் கூட வரக்கூடும் என்று தெளிவாகச் சொன்னார்கள்!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதில் எவ்வித முரண்பாடோ, பின்னடைவோ கிடையாது!

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் புதுடில்லியில் பலரையும் கூட்டி எடுத்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்க முயற்சி! நாம் காலங்காலமாக எடுத்துச் சொன்ன கருத்துகளின் உருவாக்கமே அது!

எனவே, மற்ற அரசியல், சமூக இயக்கங்களும், எவ்விதக் குழப்பத்திற்கும் ஆளாகாமல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜாதியைக் குறித்தாகவேண்டும் என்பதை வலியுறுத்திட முன்வரவேண்டும்.

ஜாதி ஒழிப்பு சட்டப்பூர்வமானால், பிறகு இப்படி ஒரு நிலைப்பாடு தேவைப்படாது என்பதையும் ஜாதி ஒழிப்பு ஆர்வலர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

------------------ "விடுதலை" 29-10-2008

2 comments:

Anonymous said...

காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி!
கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்லா கட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பற்றியும், அரசாங்கம் தரும் ஆதாயத்திற்காக ஆளும் கட்சிகளிடம் வளைந்து குனிந்து அவர் ஒத்து ஊதி வருவதை பற்றியும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஜெயலலிதா 5 லட்சம் ரூபாய் கொடுத்தவுடன் அவரை 'சமூகநீதி காத்த வீராங்கனை' ஆக்கியவரும் அவர்தான். ஜெயலலிதா அவருக்கு ரூ 1 லட்சமும் விருது தருவதாக அறிவித்தவுடன் "எனது ஆயுள் உள்ளவரை உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்" என்று விசுவாசத்துடன் ஜெ.யின் காலைச் சுற்றிவந்தவரும் அவர்தான். இன்று ஆளும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பெரியார் விருது கொடுத்து கெளரவித்துக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

பெயரை சொல்லிக் கொண்டு இப்படி தொடர்ந்து குரங்காட்டம் ஆடிவந்த வீரமணி கும்பல் பெரியாரின் சொத்துக்களுக்கு மட்டுமல்ல அவரது
எழுத்துக்களூக்கும் பேச்சுக்களுக்கும் கூட நாங்கதான் அத்தாரிட்டி என்று வலம் வந்தது.இன்று காசு வரும் என்றவுடன் பெரியாரையும் தூக்கி கடாசிவிட்டு மேடைதோறும் பெரியாரை கேவலமாக திட்டிவந்த சாதி வெறித் தலைவன் முத்துராமலிங்கத்தின் குருபூஜை விளம்பரத்தை விடுதலையில் வெளியிட்டிருக்கிறது வெட்கம் கெட்ட வீரமணி கும்பல்.
தமது கல்வி நிறுவனங்களிலும் மற்றைய பொறுப்புகளிலும் கள்ளர் சாதியினருக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கள்ளர்களின் கட்சியாக சீரழிந்திருக்கும் திராவிடர் கழகம், முத்துராமலிங்க தேவனின் பிறந்த நாளுக்கு விளம்பரம் வெளியிட்டிருப்பது பொருத்தமானதுதான் என்றாலும், யார் இந்த முத்துராமலிங்கம் என்ற வரலாற்றை நாம் பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்ப்பதாகவும் பெரியாரை உயர்த்தி பிடிப்பதாக பசப்பித் திரியும் திராவிடர் கழகத்தை நாம் இனங்கான முடியும்.

யார் இந்த முத்துராமலிங்கம்..

1. முத்துராமலிங்கம் பெரியாரை "பிரிட்டிஷ்காரனின் கைக்கூலி", "சின்னப்பிள்ளைகளைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வரும் கிழவன்", "சுடுகாட்டுக்குப்போகும் வயதில் சின்னப்பொண்ணைக் கல்யாணம் முடித்தவன்", "வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்" என்றெல்லாம் ஏசியவர்.

2. தி.க. விதந்து போற்றும் அண்ணாதுரையை மதுரையில் பொதுமேடையிலேயே "தேவடியா மகன்" என்று சொன்னவர்

3. காமராசரை "கீரை விற்றவன்லாம் முதலமைச்சர்", "தற்குறி", "ஒரு அணாவுக்குக் கூட பிரயோசனமில்லாதவன்", "கள்ளநோட்டுப் பேர்வழி", "இங்கிலீசு தெரியாமல் நமது மானத்தை வாங்குபவன்" என்றெல்லாம் இழித்துப் பேசி தன் சாதித் திமிரை காட்டியவர்

4. முசுலிம்களுடன் சமரசம் செய்துகொள்ளவும், அகிம்சையை இந்துக்களுக்குப் போதிக்கவும் செய்த காந்திக்கு இழிவான சாவுதான் கிடைக்கும் என்றவர். காந்தியைக் கொன்ற கும்பலின் தலைவர் கோல்வர்க்கருக்கு விழா எடுத்துப் பணமுடிப்பு தந்தவர்.

5. முதுகுளத்தூரில் முசுலிம்களுக்கு எதிராக கலவரத்தை விதைத்தவர்

6. இந்துமகாசபைக்கு கமுதியில் அமைப்பு கட்டி தலைவராக இருந்தவர்

7. தாழ்த்தப்பட்டோர் தலைவர் இம்மானுவேலைக் கொல்லத் தூண்டியவர்

8. திமுக திக வை தேசத்துரோகக் கும்பல் என்று வாழ்நாள் முழுக்க வசைபாடியவர்

9. காமராசர் கல்வியைப் பரவலாக்கியபோது அதற்கு முதுகுளத்தூர் வட்டாரத்தில் முட்டுக்கட்டை போட்டவர். "பள்ளிக்கூடம் எல்லாம் வந்திட்டா எல்லோரும் படிச்சிடுவான். நமக்கு எவனும் பயப்பட மாட்டான்" என்று கருத்து சொன்னவர்.

10. பெரியாரே முத்துராமலிங்கத்தையும் அவரது அரசியலையும் "தேர்தல் வரும்போது மட்டும் கொடியை ஏற்றிக்கொள்ளும் கட்சி" என்றும் "நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது மட்டும் ஒரு கொள்கையா?" என்றும் நக்கல் செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த, இந்துத்துவத்தை வேரூன்றி வளர்த்த, சாதி ஒழிப்பிற்கென பாடுபட்ட பெரியாரையும் மற்ற தலைவர்களையும் தனது விரோதியாய் கருதி செயல்பட்ட முத்துராமலிங்கத்திற்குத்தான் பெரியார் தொடங்கிய பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிட்டு காசு பார்த்திருக்கிறது வீரமணி கும்பல். முத்துராமலிங்கத்தின் குருபூஜை விழாவுக்கு விளம்பரம் வெளியிடுமாறு அரசு கொடுத்தால் அதனை மறுக்கவே முடியாதா? முடியும், அரசு விளம்பரங்களில் சிலவற்றை நிராகரிக்கவும் இயலும். வெளியிட்டே ஆகவேண்டிய கட்டாயமில்லை. நிராகரித்தால் சில ஆயிரங்கள் நஷ்டமாகும். அவ்வளவுதான். ஆனால் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய வீரமணி கும்பல் அதை நிராகரிக்க துணியுமா? ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பெரியார் நினைவு மலரில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, அறந்தாங்கி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.விடமே விளம்பரம் வாங்கி மலரில் சேர்த்திருந்தவர்கள் இந்த விளம்பரத்தை மறுப்பார்கள்என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?


அரசு காசு தருவதால் முத்துராமலிங்கத்துக்கு விளம்பரம் செய்யும் வீரமணி, காசு தந்தால்
குத்தூசி குருசாமி விழாவுக்கு விளம்பரம் செய்வாரா? செய்யமாட்டார்.. துரோகிகளுக்கு இடமில்லை என்பார். பெரியார் கொள்கையைப் பரப்பும் வாலாசா வல்லவனை பெரியார் திடல் நூலகத்துக்குள்ளேயே வரவிடாமல் தடுக்கும் இக்கும்பல் பெரியாரின் எதிரியும், சாதிவெறித்தலைவருமான முத்துராமலிங்கத்தை விடுதலையில் ஏற்றுகிறது. மானமுள்ளவர்கள் வீரமணியை விட்டு விலக வேண்டும். பெரியாரின் சாதி ஒழிப்பு சிந்தனையை ஆதரிப்பவர்கள் வீரமணியின் பித்தலாட்டத்தை முறியடிக்க முன்வரவேண்டும்.

தேவருக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்கிறது.. புரிகிறது நமக்கு.

ஓட்டுப் பொறுக்க அனைத்து ஓட்டுக்கட்சிகளும் சமாதிக்கு ஓடுகின்றன..

எதனைப் பொறுக்க இவர்கள் தேவரை 'விடுதலை'யில் தூக்கி வைக்கிறார்கள்?

காசுக்காகச் சோரம் போகும் இவர்களுக்கெல்லாம் 'மானமிகு' பட்டம் எதற்கு?

தமிழ் ஓவியா said...

தோழர் நன்நிலா
உங்களின் கருத்தில் காழ்ப்புணர்வுதான் தென்படுகிறது.