Search This Blog

13.10.08

அறிவு நாணயமற்ற வி.எச்.பி.

ஒரிசா மாநிலத்தில் குறிப்பாக கந்தமால் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களான கிறித்துவர்களுக்கு எதிராக விசுவ ஹிந்துபரிசத் என்ற சங் பரிவார்க் கும்பலின் திரிசூலப்படை வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த தகவலாகும்.

அகில இந்திய அளவில் சங் பரிவார் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவை தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை பலவாறாக எழுந்துள்ள ஒரு காலகட்டத்தில், விசுவ ஹிந்துபரிஷத்தின் செயலாளராக இருக்கக் கூடிய மோகன் ஜோஷி என்பார் கூறிய கட்டுக்கதை ஒன்று, இந்து ஏட்டில் (8.10.2008) முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

கிறித்துவர்களை, அவர்களின் வீடுகளை நாங்கள் தாக்க வில்லை; இழப்பீடு கிடைக்கும் என்பதற்காக கிறித்துவர்களே அவர்களின் வீடுகளை எரித்துக் கொள்கிறார்கள் என்கிற ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

அயோக்கியத்தனத்தின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் இந்த சங் பரிவார் என்பதற்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு தேவையில்லை.

சங் பரிவார்க் கும்பலின் கடந்தகால வரலாறுகளை அறிந்தவர்களுக்கு இதுபோன்ற அபாண்டங்களை அவர்கள் சொல்லக்கூடியவர்கள் என்பது நன்கு தெரியும்.

காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக்கொன்றுவிட்டு, காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று மக்கள் நம்பி, முசுலிம் மக்களை இந்துக்கள் தாக்கவேண்டும் என்ற தந்திர நோக்கோடு, கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந் ததையும், முசுலிம்கள் செய்யும் சுன்னத் செய்து கொண்டிருந்ததையும் தெரிந்துகொண்டிருந்தால், ஒரிசா சம்பவம் குறித்து வி.எச்.பி.யின் செயலாளர் கூற்றைக் கேட்டு ஆச்சரியப்படமாட்டார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பில், யாராவது தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொண்டு செத்துப் போவார்களா என்று திருவாளர் சோ ராமசாமி எழுதினாரே - அந்த சோவைத்தான் வக்கீலாக அழைத்து இந்தப் பிரச்சினையிலும் வாதாடச் சொல்லவேண்டும்! (இதற்கு வேறு ஒரு வியாக்கியானம் செய்து சங்பரிவார்க்குச் சாதகமாக கிறுக்கினாலும் கிறுக்குவார்).


ஈரோட்டுக்குப் பக்கத்தில் சதுமுகை என்ற ஊரில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டு பழியை திராவிடர் கழகத்தினர்மீது போட்டவர்கள் இந்து முன்னணியினர் என்று காவல்துறை பிறகு கண்டுபிடித்ததையும், தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின்மீது வெடி குண்டு வீசியவர்கள் அவர்களே என்று தெரிய வந்ததையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொண்டால் அக்கூட்டத் தின் அணுகுமுறையும், திட்டமும் எந்த ரகத்தில் இருக்கும் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

ஒரிசா மாநிலத்தை ஆளும் அரசாங்கத்தின்மீது குறைகூறும் இந்த விசுவ ஹிந்துபரிசத்தின் செயலாளர், அப்படிப்பட்ட பிஜு ஜனதா தளத்துடன், பி.ஜே.பி. ஏன் கூட்டு வைத்துள்ளது? என்று செய்தியாளர்கள் கேட்ட நேரத்தில், எங்களுக்கும், பி.ஜே.பி.,க்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று கூறி நழுவிக் கொண்டிருக்கிறார்.

அது உண்மைதானா? பி.ஜே.பி.யோ, விசுவ ஹிந்து பரிசத்தின் தலைவராக இருக்கக்கூடிய சிங்காலோ, செயலாளராக இருக்கக்கூடிய தொகாடியாவோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா?

காந்தியாரைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லி தப்பிக்கக் கூடியவர்கள் தானே இவர்கள். ஆர்.எஸ்.எசுக்கு முறையான உறுப்பினர் சேர்க்கை என்பது இல்லாத நிலையில், ஏதாவது இதுபோல பழிகள், குற்றச் சாற்றுகள் வரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் இல்லை என்று சுலபமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அதற்குத்தான் இந்த முறை.

முறைகேடுகளைச் செய்வதற்கென்றே இந்த முறையினை அவர்கள் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 11-10-2008

0 comments: